ஐ.டி துறை : வேலையே மாயம்!

கார்ப்பரேட்டுகள், குறிப்பாக இந்திய ஐ.டி/ஐ.டி.ஈ.எஸ் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு புதிய சவால்கள் எழுந்திருக்கின்றன. ஜனவரி 20-ம் தேதி அதிபராக பதவி யேற்ற டிரம்ப் அமெரிக்க நிறுவனங்கள் வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியும், வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு தருவித்தும் செய்வதை தடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவின்படி அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படும் ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் தற்போது ஆண்டுக்கு $60,000-லிருந்து $130,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் குறைந்த செலவில் இந்திய ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கி லாபம் ஈட்டும் ஐ.டி முதலாளிகளின் லாப வேட்டைக்கு சிக்கல் ஏற்படும்.

ஏற்கனவே ஐ.டி துறையில் டெஸ்டிங், வாடிக்கையாளர் சேவை, கணினி பராமரிப்பு போன்ற வேலைகளில் ஆரம்பித்து, ஆலைகளில் பொருட்களை உற்பத்தி செய்வது, சாலைகளின் வாகனங்களை ஓட்டுவது வரை ஆட்டமேஷன் என்ற அலை சுனாமியாக அடித்து ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டி எந்திரங்களை ஈடுபடுத்தி வருகிறது.

இந்தியாவில் ஐ.டி நிறுவனங்கள் வளர்ந்த பின்னணி!

2013-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்கள் சார்பாக 1.4 கோடி ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலை வாங்கப்பட்டு வந்தனர். தொழில்நுட்பம், கால் சென்டர்கள், உற்பத்தித் துறை, மனித வளத்துறை ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல கால் சென்டர்கள் ஆங்கிலம் பேசும் மக்கள் தொகையை பெருமளவு கொண்ட இந்தியாவுக்கும், பிலிப்பைன்சுக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வேலை இல்லாமல் இருக்கும் 74 லட்சம் பேர், பகுதி நேர வேலை மட்டும் செய்யும் 56 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன. சொந்த நாட்டில் வேலையின்மை தலைவிரிதாதடும் தருணத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழிலை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஆனால், இந்தியாவில் ஒரு ஆரம்ப நிலை ஐ.டி ஊழியரின் ஆண்டு ஊதியம் சராசரியாக $8,400 ஆகவும், சீனாவில் $7,000 ஆகவும் உள்ளது. இதுவே அமெரிக்க ஊழியருக்கு குறைந்தது ஆண்டு ஊதியம் $70,000 வரை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வேறுபாட்டை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய ஐ.டி நிறுவனங்களும் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பறித்து இந்தியாவில் ‘வளர்ச்சி’யைத் தோற்றுவித்தன.

கொடுத்தவனே பறித்துக் கொண்டான்

2008 பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அமெரிக்கா பத்தாண்டுகளான பின்னரும் கரைதேற முடியாமல் இந்திய ஐ.டி துறையை தீவிரமாக தாக்கியுள்ளது. அதுதான் டிரம்பின் அறிவிப்பாக வெளிப்பட்டுள்ளது. அதை ஐ.டி துறை முதலாளிகள் எப்படி எதிர்கொள்கின்றனர்?

இந்திய ஐ.டி முதலாளிகளின் சங்கமான நாஸ்காமின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குச் சென்று அரசியல் வாதிகள் மீது அழுத்தம் கொடுக்கப் போவதாக அதன் தலைவர் சந்திரசேகர் கூறியிருக்கிறார். சுமார் 2,400 தொழில்நுட்ப நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாஸ்காமின் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், டெக் மகிந்த்ரா, மைன்ட் ட்ரீ ஆகியவை எச்1பி விசா வசதியை பெருமளவில் பயன்படுத்துகின்றன.

மைக்ரோசாஃப்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள சத்ய நாதெல்லா “தேவைப்படும் போதெல்லாம் வெளிநாட்டிலிருந்து ஆள் எடுப்பது அவசியம்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்க-இந்திய வணிகக் குழுமமும் இந்திய எஞ்சினியர்கள் மீதான தடைகளை நீக்கும்படி அமெரிக்க அரசிடம் முறையிடவிருக்கிறது. இது தொடர்பாக இந்திய நிறுவனங்களின் கவலையை அமெரிக்க அரசிடம் தெரிவிப்பதாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. மோடி ஜூன் மாதம் டிரம்பை சந்திக்கும் போது இந்த விஷயம் பற்றி பேசுவார் என்று நாஸ்காம் தலைவர் அறிவித்திருக்கிறார்.

அடிமேல் அடி, வர்க்க அரசியலைப் படி

டெக் மகிந்த்ரா நிறுவனம் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான அப்ரைசல் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 2016-ல் முடிவடைந்த காலாண்டில் டெக் மகிந்த்ராவின் நிகர லாபம் 31.3% அதிகரித்து ரூ 845 கோடியை எட்டியிருக்கிறது. ஆனாலும், வருடாந்திர சம்பள உயர்வை நிறுத்தி வைத்து, ஊழியர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
2016-ம் ஆண்டில் 9,000 ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பியதாக இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கிறது. ஆட்டமேஷன் காரணமாக புதிய ஊழியர்களை சேர்ப்பதும் கணிசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இன்ஃபோசிஸ் 5,700 ஊழியர்களை மட்டும் வேலைக்கு எடுத்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் 17,000 எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கு ஆகும்.

முதலாளிகளுக்கு இழப்பை ஏற்படுத்தப் போகும் எச்1.பி விசா விவகாரத்தில் அமெரிக்காவிடம் முறையிடப் போவதாக முனைந்து நிற்கும் மோடி அரசு, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பற்றி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஐ.டி நிறுவனங்களின் முதலாளிகளும், மேலாளர்களும் அமெரிக்க நெருக்கடியை காரணம் காட்டி சம்பளக் குறைப்பு போன்ற தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதற்கு முன்னர் ஊழியர்களுக்கு அற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்து விட்டு பெருமளவு இலாபத்தை கொள்ளையடுத்தி வந்தனர். இப்போது அதை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்ரைசல் பேண்ட் என்ற பெயரில் ஊழியர்களின் ஊதியத்தை வெட்டி நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும் இவர்கள் அந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்?

நமக்கு வேலைபறிப்பு : முதலாளிக்கோ தொழில் விரிவாக்கம்!

இன்ஃபோசிஸ்-ம், சி.டி.எஸ்-ம் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை பயன்படுத்தி பங்குச் சந்தையில் தத்தமது நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் அவற்றின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளன. சென்ற ஆண்டு விப்ரோ ரூ 2,500 கோடி செலவில் பங்குகளை வாங்கப் போவதாக அறிவித்தது. இன்ஃபோசிஸ், ரூ 1,200 கோடி மதிப்பில் பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பான $11,600 கோடியில் 60% டி.சி.எஸ் உடையது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருவாயில் 70% டி.சி.எஸ்-ல் இருந்து பெறப்பட்டது. 2014-15ல் டாடா சன்ஸ்-ன் பண வரவில் 90% டி.சி.எஸ்-டமிருந்து பெறப்பட்டது. இந்தப் பணத்தை வைத்துதான் பிரிட்டனின் ஜாகுவார் – லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தையும், கோரஸ் உருக்கு நிறுவனத்தையும் வாங்கியது. அதே நேரத்தில் 2014 டிசம்பர் மாதம்தான் 25,000 டி.சி.எஸ் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக முடிவெடுத்து அமல்படுத்த ஆரம்பித்தது.

தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு! அதிகாரிக்கோ வெகுமதி!

டி.சி.எஸ் சம்பளவெட்டு, ஆட்குறைப்பு என 3.5 லட்சம் டி.சி.எஸ் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி டாடா குழுமத்துக்கு பணத்தை குவித்ததற்கு பரிசாக அதன் தலைவர் சந்திரசேகரன் டாடா சன்ஸ் சேர்மனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வேலையை வீட்டு நீக்கப்பட்ட பன்சால் என்ற உயர் அதிகாரிக்கு (சட்டப்படி நடக்கிறோமா என்பதை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவருக்கு) 5 கோடி டாலர் போனஸ் தொகை கொடுத்திருக்கிறார்கள். நிறுவனத்தை விட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட தலைமை சட்ட அலுவலர் டேவிட் கென்னடிக்கு சுமார் ரூ 6 கோடி விடைகொடுக்கும் போனஸ் அளித்துள்ளது இன்ஃபோசிஸ். ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்த தொகை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ்.

இன்ஃபோசிஸ்-ன் ஆண்டு வருமானத்தை 2020-ம் ஆண்டில் இரண்டு மடங்காக்கி $2,000 கோடியாகவும், லாப வீதத்தை 30% ஆகவும், ஒரு ஊழியருக்குக் கிடைக்கும் லாபத்தை $80,000 ஆகவும் உயர்த்தப் போவதாக திட்டமிட்டு அறிவித்துள்ளார் விஷால் ஷிக்கா. நெருக்கடியான வணிகச் சூழலில் இதன் பொருள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைப்பதும் ஆகும். இதற்கு வெகுமதியாக விஷால் ஷிக்காவின் 2015-16 ம் ஆண்டு ஊதியம் ரூ 49 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. டி.சி.எஸ் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரன் ரூ 25.6 கோடியும், விப்ரோ தலைவர் அபிதாலி நீமுச்வாலா ரூ 12 கோடி ஊதியமும் பெற்று வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

கப்பல் கவிழ்ந்து கொண்டிருக்கிறது! என்ன செய்யப் போகிறோம்!

1990-களில் இந்தியாவை உலகின் மென்பொருள் வல்லரசாக ஆக்குவதாக அறிவித்த தகவல் தொழில்நுட்பத் துறை என்ற கப்பல், 37 லட்சம் ஊழியர்களை சுமந்து கொண்டு பனிப்பாறையின் மீது மோதி நிற்கிறது. இன்னும் கோடிக்கணக்கான இளைஞர்கள் ஐ.டி துறை கனவில் கடன் வாங்கி தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுத்து படித்து விட்டு வேலை இல்லாமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். சூட்டும் கோட்டும் போட்ட முதலாளித்துவ கனவான்கள் தமது சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டு ஊழியர்களையும், இளைஞர்களையும் நடுக்கடலில் விடுகின்றனர்.

இந்த சுனாமி 300 ஆண்டுகால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை முதலாளித்துவம் தனது லாப குவிப்புக்காக திருப்பி விட்டதன் விளைவு. மனித குலத்தையும், இந்த பூமிப்பந்தையும் நீடித்து, வளமாக வாழ்விப்பதற்காக அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் மனித சக்தியையும் நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே நம் முன்னே இருக்கும் சவால்.

– குமார்

புதிய தொழிலாளி, பிப்ரவரி 2017 இதழிலிருந்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-sector-hits-ice-berg-employees-stranded/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அவரைப் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பார்ப்பன ஊடகங்கள், ஜெயலலிதா யோக்கியம் போலவும் கூட இருந்தவர்கள் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரிக்கின்றன. இன்று மட்டுமல்ல...

வேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு

இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.  

Close