யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர் கைது – ஐ.டி ஊழியர்கள் கண்டனம்

ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ ஆட்டோமோட்டிவ் மற்றும் யமஹா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் சென்னை ஒரகடம் பகுதியில் நடந்து வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி நாம் ஏற்கனவே நமது இணையதளத்தில் எழுதியுள்ளோம். (பத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு, யமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்)

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 23-10-2018 அன்று ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ ஆட்டோமோட்டிவ் மற்றும் யமஹா ஆலைகளைச் சேர்ந்த 2500 தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தமது பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் நடைபயணமாக சென்று தெரிவிப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரகடம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நடைபயணம் செய்ய திரண்டனர். இந்த நடை பயணத்தை டபிள்யு.பி.டி.யு.சி-ன் தோழர் குசேலர் மற்றும்  சி.ஐ.டி.யு-சங்கத்தின் சார்பில் தோழர் சவுந்தர்ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஆனால், ராயல் என்ஃபீல்டு ஆலையில் இருந்து தொடங்கிய பேரணியை போலீஸ் தடுத்து நிறுத்தியது. அமைதியாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் கூட நடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழிலாளர்கள் போக்குவரத்துக்கோ, வேறு பொது நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் நடை பயணம் மேற்கொள்வதை கூட போலீஸ் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்காக ஒன்று திரண்டதுதான். தொழிற்சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கில் தொழிற்சங்க நிர்வாகிகளை யமஹா நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது. இந்தப் பிரச்சனையை தீர்க்க தொழிலாளர் அலுவலர், மாவட்ட ஆட்சியர், மற்றும் நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட யமஹா ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கையை நிறைவேற்ற தொழிலாளர் அலுவலர் எழுத்து பூர்வமாக நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார். என்றாலும், யமஹா நிர்வாகத்தால் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கொண்டு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொண்டால் தொழிற்சங்கம் வலுவடைந்து விடும் என்ற தீயநோக்கில் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. எனவே, யமஹா தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை.

ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கூறிய தொழிலாளர் அலுவலரின் அறிவுறுத்துலை ஏற்றுக் கொண்டு அக்டோபர் 2-ம் தேதி பணிக்குத் திரும்பினர். நிர்வாகம் பழி வாங்கும் நடவடிகையில் ஈடுபடக் கூடாது என்றும், எந்த மிரட்டல் ஒப்பந்தத்தையும் தொழிலாளர் மேல் திணிக்கக் கூடாது என்றும் தொழிலாளர் அலுவலர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இதை மீறிய நிர்வாகம். பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களை, “அவர்களின் செல்ஃபோனை செக்யூரிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் “நன்னடத்தை பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும்” என்றும் நிர்ப்பந்தித்தது. நிர்வாகத்திற்கு ஒவ்வாத எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் குறைபாடுகளை தொழிற்சங்கத்தின் மூலமாக அல்லாமல், நிர்வாகமே உருவாக்கிய உள்கமிட்டியின் மூலம் தீர்த்துக் கொள்வோம் என்றும், அந்தப் பிரகடனத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த பிரகடனம் தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைத்து தொழிற்சங்கத்தை வேரறுக்க முயற்சிக்கும் நிர்வாகத்தின் சூழ்ச்சி என்று தொழிலாளர்களுக்கு எளிதில் புரிந்தது. அதனால், தொழிலாளர்கள் அதனை ஏற்க மறுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

எனவே, அக்டோபர் 5-ம் தேதி முதல் ராயல் என்ஃபீல்டில் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இந்த வேலை நிறுத்தத்திலும் போலீஸ் அழைக்கப்பட்டு திரண்டிருந்த 300 தொழிலாளர்களை கைது செய்தனர்.

இவ்வாறு அமைதி வழியில் தமது உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை நிர்வாகம் காவல்துறையை ஏவி ஒடுக்குவது வாடிக்கையாக போயிருக்கிறது. நமது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கூட ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் உப்பு சத்தியாகிரகம் போன்ற நடைப் பயணங்களை அனுமதித்தனர். அந்த அளவு கூட அனுமதிக்க முடியாத அளவுக்கு தொழிலாளர்களின் ஒற்றுமை இப்போது அரசை அச்சுறுத்துகிறது.

அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் தொழிலாளர் நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. இதற்கு உதாரணமாக ஜாலியன் வாலாபாகில் காலனிய ஆட்சியாளர்கள் கூட்டத்தைப் பார்த்து சுட்டு படுகொலை செய்தது போல, இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் பொதுமக்களை சுட்டுத் தள்ளுகிறது.

நடக்கும் நிகழ்வுகள் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானதா அல்லது மக்களுக்கானதா என்ற பலத்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை காத்துக் கொள்ள தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமையை பெற்றிருக்கின்றனர். தங்கள் நலனுக்காக தொழிற்சங்கம் அமைப்பதை எதிர்த்து தொழிலாளர்களை பழிவாங்க நினைக்கும் யமஹா நிறுவனத்தை அரசு ஏன் கேள்வி கேட்க மறுக்கிறது. நாம் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொழிலாளர்களின் நிலைமைக்கு திரும்பக் கூடிய சூழலை உருவாக்கி வருகின்றன அரசும் கார்ப்பரேட்டுகளும்.

அரசுக்கு உண்மையில் தொழிலாளர் நலனில் அக்கறை இருந்தால் இந்தப் பிரச்சனையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும். கார்ப்பரேட்டின் நலனுக்காகத்தான் அரசு செயல்படுகிறது என்பதை காட்டும் நடவடிக்கைகளை தொடராமல் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.

இந்த வேலை நிறுத்தம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது. 1990-களுக்குப் பிறகு புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி தொழிற்சங்க உரிமையை மறுத்து மறைமுக தடையை கொண்டு வருவதை அரசும் கார்ப்பரேட்டுகளும் பல்வேறு வழிகளில் செய்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தகவல் தொழில்நுட்பத் துறையை கூறலாம். எனவே, தொழிலாளர்களும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் அனைத்துத் துறைகளிலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு அடுத்த படியாக பெரும் எண்ணிகையில் இருப்பது தொழிலாளி வர்க்கமே. தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரள்வதே நிர்வாக சீர்கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தொழிலாளர் நலனை பேணவும் சரியான வழி. இந்த ஒற்றுமையை குலைக்க ஆளும் வர்க்கம் காவல்துறையை ஏவி விடுகிறது. ஆனால், காவல் துறையின் கீழ்நிலை காவலர்களும் கூலிக்கு வேலை செய்து சுரண்டப்படுபவர்களே. போலீஸ் துறையிலும் சங்கம் அமைத்து அவர்களது உரிமைகளுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் போராடுவது இன்றைக்கு அவசியமானதாகியிருக்கிறது.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு யமஹா-எம்.எஸ்.ஐ-ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் போலீசின் அடகுமுறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது. அனைத்துத் துறை தொழிலாளர்களும், அனைத்துத் தொழிற்சாலை தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தமது உரிமைகளை பாதுகாக்க அணிதிரண்டு போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

– சியாம் சுந்தர், தலைவர்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

படங்கள் : நன்றி தொழிலாளர் கூடம்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய  “ஐ.டி ஊழியர்கள் வாழ்க்கை – ஜாலியா, பிரச்சனைகளா?” என்ற நூலை வாங்கி படிக்கவும்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-condemns-yamaha-royal-enfield-msi-workers-arrest/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
செவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற "எடப்பாடி" அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது! நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில்...

இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. நமது பொருளாதார சுயேச்சையையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்! டெல்லி அதிகாரத்தை...

Close