கடந்தவாரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதுபற்றி உழைக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சிலர் ஓ.எம்.ஆர் பகுதி ஒன்றுக்கு சென்றிருந்தோம்.
முதலில், சந்திக்கும் மக்களிடம் எவ்வாறு பேசலாம் என்று எங்களுக்குள் விவாதித்துவிட்டு கிளம்பினோம். முன்கூட்டியே தயாரித்த கேள்விகளை கேட்காமல் பொதுவாக என்ன நடந்தது என்று செய்தியைச் சொல்லி விட்டு அவர்கள் விருப்பம் போல பேசச் சொல்லி கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.

“ஐ.பி.எல்.லா, காவிரி போராட்டமா எனக்கு எதுவும் தெரியாதுப்பா. காலைல 8 மணிக்கு வருவேன், இரவு 11 மணிக்கு வீட்டுக்கு போவேன். இந்த நிலமையில் இதெல்லாம் எங்கு பார்க்க நேரமிருக்கிறது”
நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகிலேயே ஸ்விகி (Swiggy) என்ற தனியார் நிறுவனத்தில் (உணவகங்களில் தொலைபேசிகளில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டில் கொண்டு கொடுக்கும் டெலிவரி வேலை) வேலை செய்யும் ஊழியர்கள் சிலர் நின்றிருந்தனர். அவர்களிடம் பேசினோம்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். இந்த சமயத்தில் ஐபிஎல் என்று அலைவதை விட காவிரிக்காக போராடுவது மிக மிக அவசியம். இருந்தாலும், இதையும் மீறி ஐ.பி.எல்-ஐ பார்க்கச் சென்றவர்களை தடுப்பது, அடிப்பது எல்லாம் தவறு. அவர்களது விருப்பத்தை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று சொன்னார் பாலா என்பவர்.
அவர் பேசும் போதே இடைமறித்த கார்த்திக் என்ற அவரது நண்பர், “காவிரியில் தண்ணீர் என்பது நமது வாழ்வாதார பிரச்சினை, அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு வாழ்வாதார பிரச்சினைக்காக போராடிக்கொண்டிருக்கும் போது அதற்கு மதிப்பு கொடுக்காமல், அந்த உணர்வுகளை உணர்ந்துகொள்ளாமல், சமூகத்தின்மீது அக்கறையுமில்லாமல், தன்னுடைய விருப்பம்தான் பெரிதென்று நினைத்தவரை அடித்ததில் ஒன்றும் தவறில்லை” என்றார். “இதனை எப்படி அவர்களது உரிமை என்று விடமுடியும்” என்று கேள்வி கேட்டார்.
அந்த 5-6 இளைஞர்கள் மத்தியில் சூடான விவாதம் ஆரம்பித்தது. அவர்கள் விவாதத்தை தொடரட்டும் என்று விலகிச் சென்றோம்.
சாலையோரமாக நிறுத்தியிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் பெருமாள். “என்னண்ணே, இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டதும், அமைதியாக பேசத்துவங்கினார்.
“காவிரியில் தண்ணீர் என்பது நமது உரிமை, வாழ்வாதார பிரச்சினைக்காக போராடிக் கொண்டிருக்கும்போது ஐ.பி.எல் என்பது தேவையில்லை. விவசாயிகளின் நலனுக்காக போராடிக்கொண்டிருக்கும் போது விளையாட்டுதான் முக்கியம் என்று சென்றவனை ஒரு தட்டு தட்டியதில் தவறில்லை. குழந்தைகளைக் கூட அடித்து வளர்த்தால்தான்தான் திருந்துவார்கள் அதனால் அடித்ததில் ஒன்றும் தவறில்லை” என்றார்.
அடுத்ததாக நாம் சந்தித்தது பழக்கடை வைத்திருக்கும் அக்கா ஒருவரை. விழுப்புரத்திலிருந்து வந்து இங்கு பழக்கடை வியாபாரம் செய்வதாக கூறினார். இங்கேயே தங்கியிருக்கிறார்.
“ஐ.பி.எல்.லா, காவிரி போராட்டமா எனக்கு எதுவும் தெரியாதுப்பா. காலைல 8 மணிக்கு வருவேன், இரவு 11 மணிக்கு வீட்டுக்கு போவேன். இந்த நிலமையில் இதெல்லாம் எங்கு பார்க்க நேரமிருக்கிறது” என்று சலித்துக் கொண்டார்.
எதிரில் தனியாக நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த ஒருவரை அணுகினோம். அவர் செக்யூரிட்டி யூனிபார்ம் அணிந்திருந்தார். ‘வெய்யில் ஏறி விட்டது. எல்லோரும் வாழ்க்கை போராட்டத்துக்காக ஓடிக் கொண்டிருக்கையில், புகை பிடித்துக் கொண்டிருக்கும் இவர் புகைபிடித்து முடிக்கும்வரை பேசுவார்’ என்று அவர் அருகில் சென்றோம்.
அவர் ஆரணியைச் சேர்ந்தவர், பெயர் முனுசாமி.

“ஐ.பி.எல்.லை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதையும் பார்த்துதான் கிரிக்கெட் ரசிகனான நான் இந்த தடவை எந்த போட்டியையும் டிவியில கூட பார்க்க கூடாதுன்னு நினைச்சு பார்க்கலை. தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை ரொம்ப முக்கியம்.அதுக்காக நாம இதைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று நான் நினைத்துப் பார்த்தேன்.”
“காவிரி பிரச்சனை மிக முக்கியமானது, காவிரியில் தண்ணியில்லைனா எப்படி விவசாயம் செய்யமுடியும், விவசாயத்தை எப்படி பாதுகாக்க முடியும். பெரிய போராட்டம் நடக்கவேண்டும். இன்னொருபக்கம் காவிரியில் தண்ணி வந்ததும் விவசாயிகள் பிரச்சனை மொத்தமும் தீர்ந்துவிடுமா?” என்று நம்மைப் பார்த்து கேட்டார்.
“விவசாயி உற்பத்தி பண்ற பொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை, விவசாயி விளைவிக்கும் நெல்லை சந்தைக்கு கொண்டுபோனா குறைவான விலை கொடுக்குறாங்க. அதே அரிசியாகி கடைக்கு வரும்போது அதிக விலை வைக்கிறாங்க. நெல்லு மூட்டைக்கு 700, 800 ரூபாய்க்கு வாங்குறாங்க அரிசி கிலோ 40, 50 ரூபாய் சொல்றாங்க. மாட்டுக்கு தீவனம் வாங்க போனாக்கூட தவுடு, புண்ணாக்கு விலையெல்லாம் ஏறிப்போச்சு. இதெல்லாம் சரிசெய்யாம தண்ணி மட்டும் வந்ததும் எல்லாம் சரியாகிரும்னு சொல்லமுடியாது.”
“விளையாட்ட தடைசெய்யச் சொல்லி போராடுனது சரிதான். ஆனால் விளையாட்டை பார்க்க சென்றவர்களை அடிக்கிறது தேவையில்லாதது. அவங்க சட்டையை பொது இடத்துல வச்சு கழட்டச் சொல்றது அவங்களுக்கு அசிங்கமா இருக்காதா? அவங்க சுயமரியாதைக்கு பங்கமில்லையா” என்றார்.
“நானும் விவசாயிதான், ஊரில் நிலம் இருக்கு. ஊருக்கு போய்ட்டு போனவாரம்தான் வந்தேன். நிலத்துல கொஞ்ச வேலைகளை முடிச்சிட்டு வந்தேன், மீதியை வீட்டில் பார்த்துப்பாங்க. இரண்டு பசங்க இருக்காங்க. கொஞ்ச காலம்தான் இங்க இருப்பேன். 9,000 சம்பளம் வாங்கி செலவு போக 4,000, 5,000 ரூபாய் வீட்டுக்கு அனுப்புவேன். வீட்டுக்கு தேவையான காய்கறியெல்லாம் ஓரளவுக்கு தோட்டத்துலயே கிடைச்சுரும். அதனால பிரச்சனையில்லை.”
“சுத்தியிருக்கவங்கயெல்லாம் நிலத்தை வித்துகிட்டேயிருக்காங்க. விவசாயம் பண்ணுனா நட்டம்தான் ஆகுது, அதுக்கு நிலத்தை வித்துட்டா நல்ல விலை கிடைக்கும். அதை வச்சு ஏதாச்சும் செய்யலாமுன்னு நினைக்கிறாங்க. எனக்கு நிலத்தை விற்க மனசு இல்லை. அது எங்க அப்பா சம்பாதிச்சது. அதை அனுபவிக்கத்தான் எனக்கு உரிமை இருக்கு, அதை வித்து என்ன பன்றது, 30, 40 லட்சம் கிடைக்கும். அவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்ண?”

“நாங்கூட இன்னும் 10 வருசத்துல காத்து நஞ்சாயிரும்னு நினைச்சேன், இப்போ இருக்க நிலைமைக்கு 5 வருசம் கூட தாங்காது. கொஞ்ச வருசத்துல பாருங்க விவசாயம் பன்றதுக்கு ஆள் இல்லாம போகும்போதுதான் மக்களுக்கு விவசாயத்தோட, விவசாயியோட அருமை புரியும்”
பேன்டு பாக்கெட்டிலிருந்து ஒரு போனை எடுத்து காட்டியவாறு, “வீட்டுக்கு பேசுறதுக்கு போன் வேண்டும், அதுக்கு இந்தா இந்த போன் போதாதா? ஆன்டிராய்டு போன் வாங்கி என்ன பன்ன? முந்தியெல்லாம் ஆட்டோ ஸ்டாண்டுல உக்காந்திருக்க டிரைவருங்க சவாரியில்லைனா தாயம்,சீட்டுகட்டு இல்லாட்டி எதாவது விளையாடுவாங்க, இப்ப பாருங்க ஆளுக்கொரு போனை கையில வச்சுகிட்டு நோண்டிகிட்டு இருக்காங்க.”
“ஓவர் டியூட்டி பார்த்தாதான் கொஞ்சம் காசு மிச்சம் பண்ண முடியும். சில நேரம் கடைக்கு போவேன் 100 ரூபாய்க்கு சரக்கு வாங்குவேன், 50 ரூபாய்க்கு சைடிஷ் வாங்குவேன் குடிச்சிட்டு போய் ஓரமா தூங்கிருவேன். நிலத்தை வித்து பணம் இருந்தா, ஏசி பார்ல சரக்கடிப்பேன். பணம் இருக்க திமிர்ல சலம்புவேன், வேற என்ன செய்யப்போறேன். இதுக்கு எதுக்கு நிலத்தை விக்கனும். பணம் அதிகமா இருக்கக் கூடாதுப்பா.”
“என் பக்கத்து வீட்டுக்காரர் பிள்ளைகளை பணம் கட்டி தனியார் ஸ்கூல்ல படிக்க வைக்கிறார், அதுபோதாதுனு டியூசன் வேற அனுப்புறாரு. என் பசங்களும் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களும் அதே டியூசனுக்குதான் போனாங்க. டியூசன் டீச்சர் என்ன கூப்பிட்டு 6ஆம் வகுப்புக்கு மேலடியூசன் சேர்த்து விடுங்க உங்க பசங்க நல்லாதான படிக்கிறாங்க டியூசன் வேண்டாம்னு சொல்றாங்க. என் பிள்ளைங்க இங்கிலீஸ்கூட வாசிக்கும்”
“நிலத்துல 48 பனைமரம் இருக்கு. ஊர்ல யாராவது நொங்கு வேணும்னா வெட்டி தின்னுக்குவாங்க, நான் எதுவும் சொல்றதில்லை. வெட்டி விக்கிறதுக்காக ஊருக்கு போகணும், இல்லாட்டி வெட்டுக்கூலி கொடுக்கணும், அதெல்லாம் கொடுத்தா கட்டுப்படியாகாது. அதனால விட்டுட்டேன். ஊருக்குப் போகும்போது பனங்காய சைக்கிள்ல எடுத்துகிட்டு கம்மாய் கரையில போய் குழிய தோண்டி வச்சிட்டு வந்துருவேன். 10 வச்சா ஒண்ணாவது முளைச்சு வராதா? வண்டியெல்லாம் கிடையாது சைக்கிள்தான் நமக்கு எல்லாமே.”
“இந்த ரோடு கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இப்படியில்லை” என்று நாங்கள் நின்றிருந்த சாலையை காட்டினார். “சுத்தியிருந்த எடமெல்லாம் கட்டிடத்தை கட்டிவச்சுருக்காங்க. நாங்கூட இன்னும் 10 வருசத்துல காத்து நஞ்சாயிரும்னு நினைச்சேன், இப்போ இருக்க நிலைமைக்கு 5 வருசம் கூட தாங்காது. கொஞ்ச வருசத்துல பாருங்க விவசாயம் பன்றதுக்கு ஆள் இல்லாம போகும்போதுதான் மக்களுக்கு விவசாயத்தோட, விவசாயியோட அருமை புரியும்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசத்துவங்கும் போதே சிகரட்டை கீழே போட்டுவிட்டார், அவர் பேசுவதை வாய்பார்த்துக்கொண்டே அனைவரும் நின்றிருந்தோம். அவரிடம் பேசி முடித்து விட்டு போகும் போது, “இவருக்கு என்ன தெரியுமென்று யாரையும் சொல்லமுடியாது என்று எனக்கு நன்றாக புரியவைத்துவிட்டார். சரளமாக எவ்வளவு விசயத்தை கொட்டிவிட்டார் பாருங்கள். தோற்றத்தை வைத்து ஒருவரது அறிவை முடிவுசெய்யக்கூடாது” என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொருவர் “மரம் நடுவது என்பதை ஏதோ சாதனை போல நம்ம ஐ.டி துறை ஆட்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால் இவர் அதைச் செய்வதை மிகச் சாதாரண விசயமாக சொல்லிச் சென்றுவிட்டார்” என்றார்.
எதிரில் நடந்துவந்து கொண்டிருந்த இளைஞர், பார்ப்பதற்கு ஐ.டி துறையில் வேலை செய்பவர்போல் இருந்தார்.
ஏதோ சிந்தனையில் சென்று கொண்டிருந்தவரை “நண்பா இரண்டு நிமிடம் பேசவேண்டும்” என்று இடைமறித்தோம். கணேஷ்குமார் என்று அறிமுகப்படுத்தியவரை ஓரமாக மரத்தடி நிழலில் நிற்கவைத்து விசயத்தை சொன்னதும்
“நானும் பார்த்தேன், போராட்டமெல்லாம் நல்லாதான் நடக்குது. போராட்ட்ங்கள் இல்லாமல் இதையெல்லாம் தடுக்கமுடியாது. ஐ.பி.எல்.லை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதையும் பார்த்துதான் கிரிக்கெட் ரசிகனான நான் இந்த தடவை எந்த போட்டியையும் டிவியில கூட பார்க்க கூடாதுன்னு நினைச்சு பார்க்கலை. தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை ரொம்ப முக்கியம்.அதுக்காக நாம இதைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று நான் நினைத்துப் பார்த்தேன். என்னைப்போல் அனைவரும் மாறவேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு நிறைய கற்றுகொண்டேன். அதுக்காக ஐ.பி.எல் பார்க்கச் செல்பவர்களை அடித்தது சரிகிடையாது, என்னைப்போல அனைவரும் தாமாக உணர்ந்து மாறவேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி பெருசா நடக்கணும்” என்றார்.
அந்த சாலையின் கடைசிகடையாகிய முத்து என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்றோம்,
“இதெல்லாமே அரசியலுங்க. இந்த போராட்டங்களெல்லாம் கட்சிகள் விளம்பரத்துக்கும், எவ்வளவு கூட்டம் சேர்த்துள்ளேன் பார்த்தீர்களா என்று மார்தட்டிக்கொள்வதற்கும் தான். இவர்களுக்கு உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்ற எண்ணமெல்லாம் கிடையாது. அடுத்த தேர்தல்ல ஓட்டு வாங்கவும், எனக்கு எத்தனை சீட்டு தருவன்னு பேரம் பேசவும்தான் போராட்டம் நடத்துறாங்க. இதை வைத்து நாம் பிளைக்க முடியுமா என்றுதான் பார்க்கிறார்கள்.”
“மக்கள் இந்த அரசியல் கட்சிகளை சாராமல் தாமாக முன்வந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும். காமராஜருக்கு பிறகு எவ்வளவு அணை கட்டியுள்ளோம், நம்ம பகுதியில் பெய்யும் மலையை அணைகட்டி சேமிக்காமல் பக்கத்து மாநிலத்துக் காரனிடம் கையேந்தி நிற்கிறோம்” என்றார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் இன்னொரு சங்க உறுப்பினரை தொலைபேசியில் அழைத்து இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.
“வீட்டில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். முடிச்சிட்டு நானும் வந்துர்றேன்” என்றார். “ஐ.பி.எல்.லுக்கு எதிரா போராட்டம் அறிவிச்சதும் போலீஸை குமிச்சிருக்காங்க, இது மக்களுக்கான போராட்டம், அதில் உனர்ச்சிவசப்பட்டு, எல்லாரும் போராடுறோம் உனக்கும் சேர்த்துதானே போராடுறோம். நீ சுயநலமா இருக்கியேன்னு வாக்குவாதத்தில் ஆரம்பித்து அடிதடியில் இறங்குவது நடக்கிறது” என்று கருத்து சொன்னார்.
வெயில் ஏறி விடவே, இது வரை பேசிய அனுபவத்தை தொகுத்துக் கொண்டோம். “ஏதோ படித்து முடித்து ஐ.டி-யில் வேலை செய்வதாலேயே நமக்கு எல்லாம் தெரியும் என்ற மிதப்பு நம்மிடம் இருக்கிறது. இது போன்ற உழைக்கும் மக்களிடம் பேசும் போது அவர்களது அனுபவங்கள், கருத்துக்கள், சரி, தவறு பற்றிய கூர்மையான மதிப்பீடுகள் ஆச்சரியப்படும்படியாக இருக்கின்றன. இது போன்று மக்களிடம் அதிகமாக பழகும் வகையில் வேலை செய்ய வேண்டும்” என்று முடிவு செய்து விட்டு கலைந்தோம்.
– பிரவீன்
படங்கள் இணையத்திலிருந்து
1 ping