அன்பார்ந்த ஊடகத்துறை நண்பர்களே.
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு என்ற ஐ.டி ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் துவக்கப்பட்டு கடந்த மூன்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ஐ.டி ஊழியர்களுக்கெல்லாம் தொழிற்சங்கமா? நன்றாக சம்பாதிக்கும் இவர்களுக்கு எதற்கு தொழிற்சங்கம் என்றெல்லாம் பலரும் நினைக்கக்கூடும். ஆனால், நமது நாட்டின் பிற தொழிலாளர்களைப் போலவே, பிற தொழிற்சாலைகளைப் போலவே எங்களது துறையிலும் ஊழியர்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர் கொள்கின்றனர். தற்சமயம் அது மேலும் அதிகரித்து வருகிறது.
வேலை பறிப்பு, அதிக நேரம் வேலை செய்யச் சொல்வது, பெண்களை குறி வைத்து வேலையை விட்டு நீக்குவது என்று எண்ணற்ற நீண்ட கால பிரச்சினைகளுடன், பல புதிய புதிய பிரச்சினைகளும் உருவாகி வளர்ந்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்ற ஊதியமும் தற்சமயம் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கு எங்களது சங்கம் பல்வேறு வகைகளில் வழிகாட்டியாக, உற்ற நண்பனாக செயல்பட்டு வருகிறது.
அத்துடன் சமூகப் பிரச்சினைகள் பற்றி ஐடி ஊழியர்கள் அக்கறைப்படுவதில்லை என்று மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை உடைத்து செவிலியர் போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பிற தொழிற்சாலை ஊழியர்களது பிரச்சினை உட்பட பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறாக தங்களது வேலை பிரச்சினைகள் என்று மட்டும் இல்லாமல் எங்களது சக்திக்கு உட்பட்டு பிற பிரச்சினைகளையும் மக்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுத்துச் சென்ற எங்களது சங்க நிர்வாகிகளது பதவிக்காலம் கடந்த வாரத்துடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து புதிய சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது (25/08/2018). அன்றையதினம், ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டாக சங்கம் சார்பாக தாங்கள் ஆற்றிய பணி, புதிதாக சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல தாங்கள் முன்வைக்கும் திட்டங்களை முன்வைத்தனர். இதன் பிறகு உறுப்பினர்கள், சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.
நடந்து முடிந்த தேர்தலின் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை உங்களுக்கும் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தலைவர் சியாம் சுந்தர்
துணைத் தலைவர்கள் காசிராஜன், வாசுகி சீனிவாசன்
செயலாளர் சுகேந்திரன்
இணைச் செயலாளர்கள் ஓம் பிரகாஷ், தமிழ் செல்வன்
பொருளாளர் ராஜதுரை
செயற்குழு உறுப்பினர்கள்
சரவணன்
ரவிசங்கர்
பூங்கொடி
பூபதி
ஹரிகரன்
கமால்
ஸ்ரீநிவாசன்
சையது
மேற்கண்ட இந்த செய்தியை தங்களது ஊடகங்களில் பிரசுரித்து ஐடி துறை தொழிலாளர்களது ஒற்றுமைக்கும் உரிமைக்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.