அன்பார்ந்த ஐடி துறை நண்பர்களே.
சில நாட்களாக நடந்து வருகிறது போக்குவரத்து தொழிலாளிகளது போராட்டம்
இந்தப் போராட்டம் சம்பள உயர்விற்கான போராட்டம் மட்டுமல்ல. வயது முதிர்ந்து வேலையை விட்டு செல்லும்போது எதிர்கால தேவைக்காக தமது மாதாந்திர சம்பளப் பணத்தில் சிறுகச் சிறுக சேமித்த ஓய்வூதிய சேமிப்பிற்கும், LIC பணத்திற்கும் உத்திரவாதம் இல்லாமல் போனதாலும் அரசே அதனை கையாடல் செய்திருப்பதாலும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் முடிவு எட்டப்படாத நிலையில் எழுந்த போராட்டம்.
அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாயில் தமது பயணச் செலவை முடித்துக் கொள்ளக்கூடிய மக்கள் தற்போது 100 ரூபாய் வரை ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த 100 ரூபாய் என்பது அவர்களது தினசரி வருவாயில் பெருந்தொகையாகும்.
இதற்கு போக்குவரத்து தொழிலாளிகளை பொறுப்பாக்க முடியுமா?
தொழிலாளிகள் பல வகைகளில் சட்டப்படியாக தமது உரிமைகளுக்காக பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகுதான் இந்த போராட்டத்தை கையிலெடுத்தார்கள். தொழிலாளிகளின் இந்த நிலைமைக்கும் மக்களின் அதிகப்படியான செலவிற்கும் காரணம், துறைசார்ந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான். இவர்களுக்கு எதிராகத்தான் தொழிலாளிகள் போராடுகிறார்கள். ஆனால் குற்றவாளிகளான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நீதித்துறையையும், காவல் துறையையும், ஊடகங்களையும் இணைத்துக்கொண்டு போராடும் தொழிலாளிகளை ஒடுக்கிவருகின்றனர்.
நண்பர்களே!

இந்தப் போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கம் அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டம்
இந்தப் போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கம் அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டம். இதை நாம் புரிந்து கொள்ளா விட்டாலும் அரசு நன்கு புரிந்து கொண்டிருக்கிறது.
எனவேதான், நியாயமான காரணங்களுக்காக, குறைந்த பட்ச கோரிக்கைகளுக்காக ‘வேலை நிறுத்தம் செய்த காலகட்டத்திற்கு சம்பளப் பிடித்தம் செய்யா விட்டால், நாடெங்களிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒழுங்கின்மை அதிகரித்து விடும்’ என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.
- போக்குவரத்து தொழிலாளியின் ஒழுங்கு என்பது தொழிலாளி அதிகாலை 4 மணிக்கு பேருந்தை எடுத்து ஓட்டுவதில் வெளிப்படுகிறது.
- போக்குவரத்து நெரிசலிலும், மழையிலும், புயல் காற்று அடித்த போதும் ஓட்டுவதில் தொழிலாளி வர்க்கத்திடம் ஒழுங்கும் பொறுப்புணர்வும் வெளிப்படுகிறது.
- வேலை நிறுத்தம் செய்வதில் கூட தொழிலாளர்கள் ஒழுங்கையும், பொறுப்புணர்வையும் கடைப்பிடித்ததை உழைக்கும் மக்கள் அனைவரும் கண்ணுற்றார்கள்.
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் (வெர்ஷன் 1-ல்) ஓட்டுக்கு பணம் வினியோகித்ததாக பிடிபட்ட எடப்பாடி அரசுக்கு தொழிலாளர்களின் ஒழுங்கின்மையை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.
இப்போது பிரச்சனை தொழிலாளர்களின் ஒழுங்கு பற்றியது அல்ல.
- ரூ 7,000 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை மடை மாற்றிய அதிகாரிகளின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து?
- முந்தைய சம்பள ஒப்பந்த காலம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் போடுவதற்கு இழுத்தடித்து அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து?
- பெரும்பான்மை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்களின் முதுகுக்குப் பின்னால், அடிமை சங்கங்களுடன் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து?
- அதற்கு உடந்தையாக இருந்த தொழிலாளர் துறைக்கு என்ன ஒழுங்கு இருக்கிறது?
இந்த ஒழுங்கின்மைக்கு பரிசாகத்தான் சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நீதிபதிகளின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்வு, எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்வு வழங்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒழுங்கின்மைக்கு பரிசு சம்பள உயர்வு, ஒழுக்கத்தின் இலக்கணமான தொழிலாளி வர்க்கத்தின் சட்டபூர்வமான போராட்டத்துக்கு சம்பள வெட்டு என்பதிலிருந்து தெரிகிறது அரசின் வர்க்கத் தன்மை.
தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக குற்றவாளிகள் இணைந்து விட்டார்கள், போராடும் தொழிலாளிகளுடன் நாம் இணைய வேண்டாமா?
இதில் நாம் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம். தொழிலாளிகளுக்கு நமது ஆதரவை தெரியப்படுத்த வேண்டும். அதற்கு போராட்ட களங்களையும், சமூக ஊடகங்களையும் நமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தலாம்.
- போராட்டம நடக்கும் இடங்களுக்கு நண்பர்களுடன் நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பது.
- கருப்புச்சட்டை அணிந்து அரசுக்கு எதிர்ப்பையும் தொழிலாளர்களுக்கு ஆதரவையும் தெரியப்படுத்துவது.
- டீமில் இதுபற்றி சிறிய விளக்கக் கூட்டம் நடத்துவது,
- குழுவாக புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வது
என்று சாத்தியமான அத்தனையையும் செய்யலாம்.
உங்களது பகுதியில் நண்பர்களுடன் இணைந்து இதுபோல திட்டமிட்டு நடத்துங்கள் நமது சங்கத்திற்கும் தெரியப்படுத்துங்கள்.