அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 – பு.ஜ.தொ.மு அழைப்பு

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

எதிர்வரும் 2019, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்துக்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

ஏன் இந்த வேலைநிறுத்தம்? இந்த வேலைநிறுத்தத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் ஏன் ஆதரிக்க வேண்டும்?

மோடி அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை எதிர்த்தே இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போதே போராடி வென்றெடுத்த பல்வேறு உரிமைகள் 44 சட்டங்களாக இருக்கின்றன. இந்தச் சட்டங்களையெல்லாம் செல்லாக் காசாக்கும் நோக்கதிதல் 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுவதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் என்கிற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையை செய்து வருகின்ற மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையூறின்றி தொழில் நடத்துவதை மேற்படி சட்ட திருத்தங்களை அமலாக்குவதன் மூலம் உத்திரவாதப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.

தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த முயற்சியாக மத்திய தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த விதிமுறைகளை மாற்றி, ஆர்.எஸ்.எஸ் சார்புடைய பி.எம்.எஸ் மட்டுமே இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக திணிக்கப்படும் நிலையை உருவாக்கி வருகிறது. ஜெர்மனியில் இட்லரும், இத்தாலியில் முசோலினியும் அந்தந்த நாட்டின் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டி, பாசிச கட்சிகளது தொழிற்சங்கத்தை ஒரே தொழிற்சங்கமாக மாற்றிய அதே உத்தியை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கையாள்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) தேசிய மாநாட்டைக் கூட்டி, மத்திய மற்றும் துறைவாரி தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களது பிரச்சினைகளை விவாதிக்கின்ற நடைமுறையை 2015-ம் ஆண்டு முதல் புறக்கணித்து வருகிறது மோடி அரசு. அதேபோல மத்திய அமைச்சர்களது குழுவுடனோ (Group of Ministers) துறைவாரி அமைச்சர்களுடனோ தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கத்தினையும் புறக்கணித்து விட்டது. அதே நேரத்தில் தினம் ஒரு கார்ப்பரேட் முதலாளியை சந்திப்பது, வாரத்திற்கொரு ஒப்பந்தம் போடுவது, மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவது என்கிற வகையில் கார்ப்பரேட் முதலாளிகளது பிரதமராக மட்டுமே செயல்பட்டு வருகிறார், மோடி.

வரம்புக்குட்பட்ட காலத்துக்கான வேலைவாய்ப்பு (FTE), குடும்பம் நடத்துகின்ற தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது போன்ற சமீபத்திய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் நிரந்தர, பாதுகாப்பான வேலைகளை ஒழித்துக் கட்டிய மோடி அரசு, சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய பென்சன் போன்றவற்றில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளையும் அமல்படுத்த மறுக்கிறது.

நாட்டின் அரைகுறை வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் துணையாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒழிப்பதில், இதற்கு முந்தைய காங்கிரசு அரசு செயல்பட்ட வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது, மோடி அரசு.

ஒருபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களை செயல்பட முடியாமல் முடக்குகிறது. உதாரணமாக, பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிறுவனம் 5ஜி செல்பேசி சேவையைத் துவங்குவதற்கு தேவையான அலைக்கற்றையை ஒதுக்கிட மறுப்பது, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்களை அதிகரிக்க வைத்து அவற்றை இணைப்பது என்கிற பெயரில் செயல்பாட்டை முடக்குவது, இலாபமீட்டும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் நிதியை கார்ப்பரேட்டுகள் திவாலாக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்ய நிர்ப்பந்திப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்து, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கயவர்களுக்கு பலியிடுவது என்கிற கயமையை செய்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ 2.09 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்த மோடியின் அரசு அந்தப் பணத்தின் பெரும்பகுதியை கார்ப்பரேட்டுகளது நலனுக்காகவே செலவிட்டுள்ளது. அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாட்டுக்கும் மேலாக ஒழுங்குமுறை ஆணையம் என்கிற அதிகார அமைப்பை உருவாக்கி கார்ப்பரேட் சேவையை தீவிரமாக்கி வருகிறது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என்கிற பெயரில் இலட்சக்கணக்கான சிறுதொழில்களை ஒழித்துக்கட்டி, கோடிக்கணக்கானவர்களை வேலையற்றவர்களாக்கிய மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுப்பதற்கு அவற்றை பலியிடுவது என்கிற போக்கை தீவிரமாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கி வந்த வேலைவாய்ப்புகளை முடக்கியதுடன், சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இல்லாமல் செய்துவிட்டது. அதற்கு உதவியாக, எல்லா வேலைகளையும் காண்டிராக்ட் மயமாக்குதல், சட்டவிரோத ஆலைமூடல்- ஆட்குறைப்புகளுக்கு அனுமதியளிப்பது போன்ற துரோகத்தனத்தை செய்து வருகிறது

இவ்வாறு கொழுக்க வைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிகளில் கூட பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா-பார்சி முதாலளிகள் அடைந்த வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த பேருண்மை புரியும். இந்த பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு அடிநாதமாக விளங்குகின்றனர். நாட்டின் அனைத்து தொழில்களையும் பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளே கைப்பற்றி உள்ளனர்.

மேக் இன் இந்தியா, தொழில் செய்வதை சுலபமாக்குவது (Ease of Doing Business), ஸ்டார்ட் அப் இந்தியா (Start up India) என்ற பல்வேறு பெயர்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துகிறது. அதே தருணத்தில், நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு இலாபமீட்டித் தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு என்பதாகவும் மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்காணிகளாகவும் இருக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளி வர்கத்தை காண்டிராக்ட்மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வேலைபறிப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத – மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி கும்பலை வீழ்த்துகின்ற வரலாற்றுக் கடமை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நமது வர்க்கக் கடமையை நிறைவேற்ற இருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தி முடிப்போம்.

தொழிலாளர் உரிமைகள் மீட்க; பாசிச RSS-BJP கும்பலை வீழ்த்த
2019 ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!

அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை RSS-BJP அரசாங்கம் செல்லாக்காசாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுகிறது

இதற்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு பு.ஜ.தொ.மு அறைகூவி அழைக்கிறது.

இப்படிக்கு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
தொடர்புக்கு 94444 42374

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/january-8-9-strike-ndlf-appeal/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

பரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்

பரியனின் இந்த உருமாற்றம் உயிரோட்டத்துடன் வளர்கிறது, அந்த வளர்ச்சியில் பார்வையாளர்களும் பரியனோடு சேர்ந்து பயணிக்கின்றனர். ஒரு தயக்கமான கேள்வியாக, ஒரு வேண்டுகோளாக ஆரம்பிப்பது, படிப்படியாக ஒரு குமுறலாக...

Close