நமது சமூகத்தின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் காணவேண்டிய ஆவணப்படம் கக்கூஸ். இது தமிழ்நாட்டின் மலக்குழி மரணம் மற்றும் கழிவுகளை அகற்றும் மக்களுக்கு ஏற்படும் துயரம் ஆகியவைப் பற்றி சொல்லும் காணொளிப் பதிவு. இயக்குனர் திவ்யா மற்றும் குழுவினர் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2016 டிசம்பர் வரை இந்த ஆவண காணொளியை பதிவு செய்துள்ளனர்.
நமது கழிவுகளை நம்மோடு வாழும் மனிதர்களே அள்ளுகின்றனர் என்பது நமக்கு தெரியும், இருந்தும் அவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு குறித்தோ அல்லது அவர்கள் நிலை குறித்தோ நாம் அக்கறை கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் இந்த இழிநிலையில் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே இல்லை என்று தமிழக அரசு பொய் பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அது உண்மையல்ல. இன்னும் பல தொழிலாளிகள் கையால் மலம் மற்றும் கழிவுகளை அள்ளும் நிலையில் உள்ளனர்.
தமிழக அரசிடம் சாக்கடை அடைப்பு நீக்குவதற்கு நவீன கருவிகள் இருந்தும் கையால் அடைப்பு நீக்கும் நிலைமையை மாற்ற இயந்திரங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி மறுத்துவிட்டது. காரணம் அதன் மோட்டார் இயந்திரத்தின் விலை 1 லட்சம் ஆகும். சரி, இவர்களுக்கு சம்பளமாவது ஒழுங்காக கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை என்பது தான் எதார்த்தம். இவர்களில் 90% பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக தான் இருக்கின்றர்கள். இவர்கள் பாதுகாப்பு பொருட்கள் ஏதேனும் கேட்டால் அதைக்கூட கொடுப்பது இல்லை, இந்த தொழிலாளர்களில் 60%க்கும் மேல் பெண்கள் ஆகும். ஏனெனில் அவர்கள் அதிகம் எதிர்த்து பேசுவதில்லை. எனவே பெண்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த பெண்களில் பலர் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களில் பலருக்கு மருத்துவ வசதிகள் கூட கிடைப்பதில்லை.
இந்தியாவில் சாதி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான சாட்சி தான் இந்த ஆவண காணொளி. சாதாரணமாக தமிழ்நாட்டில் சாதி ஒழிந்து விட்டது, மக்கள் சாதி பார்ப்பதில்லை என்ற கருத்து சென்னை வாழ் படித்த மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த ஆவண காணொளி அந்த எண்ணத்தை அழிக்கின்றது. ஒரு சிலர், அவர்கள் ஒழுங்காக படித்திருந்தால் இந்த வேலைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் படித்திருந்தால் கூட இந்த சமூகம் அவர்களை இந்த வேலைக்கு தள்ளுகின்றது. இவர்களால் வேறு தொழில் செய்ய முடிவதில்லை. காரணம் அவர்கள் அப்படி அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வேறு இடத்தில் வேலைக்கு சென்று கேட்கும் போது, அவர்களை முதலாளிகள் “நீ வேலைக்கு வந்தால் வியாபாரம் நடக்காது” என்று கூறி மறுக்கின்றனர். அந்த அளவு மக்கள் மனதில் இந்த தொழில் குறித்த இழிநிலை பதிந்து உள்ளது.
இந்தக் காணொளியில் கடைசியில் வரும் பாட்டிலிருந்து சில வரிகளோடு இந்த அறிமுகத்தை முடிக்கலாம்.
“ஆள மட்டும் நீங்களா? செத்து மாள மட்டும் நாங்களா?
வந்து அள்ளுங்கடா.. ஆள மட்டும் நீங்களா? சொல்லுங்கடா?
மூக்க பிடிச்சி ஒதுங்கி போகும் அய்யா, அம்மாமரே..”
– வீரன்