நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இசக்கிமுத்து 23-10-17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பா.ஜ.க கட்சித் தலைவர்களை தவிர்த்த தமிழக மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியது. வாங்கிய கடனை விட இரு மடங்கு திருப்பிக் கட்டிய பிறகும் கடன்கொடுத்தவர்கள் போலீஸ் துணையுடன் மிரட்டியிருக்கின்றனர். அது பற்றி மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமில் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காமல் போலீஸ் மூலம் நெருக்கடி அதிகமான நிலையில் என்ன செய்வது, யாரை நம்புவது என்று தெரியாமல இந்த அரசு அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து அவர் தன்னையும், மனைவி, குழந்தைகளையும் மாய்த்துக் கொள்ளும் துயர முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பா.ஜ.க கட்சித் தலைவர்களை தவிர்த்த தமிழக மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியது.
கந்துவட்டியை கட்டுப்படுத்த 2003-ல் தமிழக அரசு கொண்டு வந்த கந்துவட்டி தடை சட்டம் எந்த வகையிலும் பயன்படாமல், அதை அமல்படுத்த வேண்டிய காவல்துறை பயிரை மேயும் வேலியாக கொடுமைப்படுத்துகிறது.
வங்கிகள் மூலமாக கடன் கொடுப்பதை தீவிரப்படுத்தினால் இந்தப் பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை பிரதமரின் “முத்ரா திட்டம் பற்றி இசக்கிமுத்துவுக்கு தெரிந்திருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்” என்று கூறியிருந்தார். இசக்கி முத்து தொழில் தொடங்கவோ, ஏற்கனவே இருக்கும் தொழிலை நடத்தவோ கடன் வாங்க வில்லை. குடும்பத்தின் அன்றாட தேவைக்காக கடன் வாங்கியிருக்கிறார். ரேஷன் கடை ஒழிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கல்விக்கு காசு, மருத்துவத்துக்கு கொள்ளை கட்டணம் என்று மக்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தனியார் முதலாளிகளின் வேட்டைக்கு பலியாக்கியிருக்கும் மோடியின் மத்திய அரசைப் பற்றி பேசாமல் தமிழிசை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட்டிருக்கலாமே” என்று பிரெஞ்சு அரசி போல முத்ரா திட்டம் பற்றி பேசுகிறார்.

வங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது
அப்படியே இசக்கி முத்து போன்ற ஏழைகள் தொழில் தொடங்குவதற்காக வங்கிகளை நாடினாலும் வங்கிகள் கடன் வாங்க பல வகைகளில் அலைய விடுவது கண்முன்னே தெரியும் உண்மை. கடன் என்பது ஏழைகளுக்கு கிடைக்காத ஒன்று, மல்லையா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும், அதுவும் குறைந்த வட்டிக்கு.
அப்படியே கடன் வாங்கி விட்டாலும் விவசாயிகளும், உழைக்கும் வர்க்க மாணவர்களும் இறப்பது கந்துவட்டி மூலம் மட்டுமா நடக்கிறது? விவசாயி டிராக்டர் வாங்க வங்கிக் கடன் வாங்கியதற்கு அவரை காவல்துறையைச் சேர்ந்த நபர்கள் அடித்து துன்புறுத்தினர்; அவர் வாங்கிய டிராக்டரை கைப்பற்றினர். அதே போல எஸ்.பி.ஐ வங்கியிடம் கல்விக்கடன் வாங்கிய மாணவர் லெனின் அதனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
வங்கிக் கடன் வாங்கும் மக்கள் பிரிவினரில் முக்கியமானவர்கள் ஐ.டி ஊழியர்கள். ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாங்கும் கடன் பெரும்பாலும் அவர்கள் சம்பளத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. வீட்டு கடன், வண்டிக் கடன், கடன் அட்டைக்கடன் என்று பல வடிவில் அவர்கள் சுமக்கும் கடன்களை கட்ட முடியாமல் திணறுகிறார்கள். கடன் தவணையை மனதில் வைத்தே மன உளைச்சலில் வீழ்கிறார்கள். பணியிடத்தில் பல அவமானங்களை சகித்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழிசை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட்டிருக்கலாமே” என்று பிரெஞ்சு அரசி போல முத்ரா திட்டம் பற்றி பேசுகிறார்
எனவே, வங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது. வங்கிக் கடனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது மூலதனமிட்டு லாபம் சம்பாதிக்கும் முதலாளிகளால் மட்டுமே முடியும்; வங்கி முதலாளிகளும், வணிக/தொழில் முதலாளிகளும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எனவே தொழில் நொடித்துப் போய் கார்ப்பரேட் முதலாளிகள் கடனை கட்டத் தவறினாலும் அதை தள்ளுபடி செய்வது, மன்னித்து மறந்து விடுவது என்று நடந்து கொள்கின்றன, வங்கிகள்.
உழைக்கும் வர்க்கத்துக்கு கடன் கொடுப்பவர்கள் – அது அமைப்புசார் கந்து வட்டிக்காரர்கள் ஆகட்டும், சேட்டுக் கடையாகட்டும், நுண்கடன் வடிவிலான வங்கி கடன் ஆகட்டும் – ஈவு இரக்கமின்றி உயிரையும் பறிக்கின்றனர். கந்து வட்டிக்கு பதிலாக வங்கிக் கடன் என்பது கள்ளச்சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் சாராயம் என்பது போலத்தான். மக்களைப் பொறுத்தவரை இரண்டுமே ஆட்கொல்லிகள்தான். அரசியல்வாதிகள், போலீசு, கலெக்டர், நீதிமன்றம் அடங்கிய இந்த அரசுக் கட்டமைப்பு இந்த ஆட்கொல்லிகளுக்கு தீனி போட்டு பராமரித்து சேவை செய்கிறது.
ஆதலால், தீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து போன்றவர்கள் அல்ல இந்த அரசுக் கட்டமைப்புதான்.
– மணி, ஹரி
இந்து நாளிதழில் வெளியான இந்த ஆங்கில செய்தித் தொகுப்பு கந்து வட்டி சாவுகள் பற்றிய பல விபரங்களை தருகிறது