மனித வரலாற்றின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவரான காரல் மார்க்ஸ், மார்ச் 14, 1883 அன்று லண்டனில் உயிரிழந்தார். காரல் மார்க்சின் கல்லறையின் அருகில் அவரது வாழ்நாள் நண்பரும் சக செயல்பாட்டாளரும் ஆன பிரெடரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது
மார்ச் 14-ம் தேதி பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு இன்றைய உலகின் மகத்தான சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் போய் இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம். ஆம், அது நிரந்தரமான உறக்கம்.
இந்த மேதையின் மரணம் ஐரோப்பிய, அமெரிக்க போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று அறிவியலுக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான வாழ்வின் முடிவினால் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நாம் விரைவில் உணர்வோம்.
உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்:
அதுவரை சித்தாந்தங்களின் புதர் போன்ற வளர்ச்சியினால் மறைக்கப்பட்டிருந்த
* மனித குலம் முதலில் உண்ண உணவு வேண்டும், குடிக்க வேண்டும், இருப்பிடமும், உடைகளும் பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகே அது அரசியல், அறிவியல், கலை, மதம் போன்ற துறைகளில் முன்னேற்றம் காண முடியும்.
* உடனடி தேவைக்கான பொருள் ஆதாரங்களை உற்பத்தி செய்தலும், அதன் மூலம் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் அல்லது குறிப்பிட்ட காலகட்டம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சியின் அளவும் அந்த மக்கள் கூட்டத்துடன் தொடர்புடைய அரசு நிறுவனங்கள், சட்ட கருத்துக்கள், கலை ஆகியவற்றுக்கு மட்டுமின்றி சமய சிந்தனைகள் கூட பரிணாம ரீதியில் வளர்ச்சியடைவதற்கான அடித்தளமாக அமைகின்றன.
* இந்த ஒளியில் பார்க்கும் போது அரசு நிறுவனங்கள், சட்ட கருத்துக்கள், கலை, மதம் ஆகியவற்றை உற்பத்தி முறையிலிருந்தும், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் விளக்க வேண்டுமே தவிர, உற்பத்தி முறையையும், பொருளாதார வளர்ச்சியையும் அரசு, சட்டம், கலை, மதம் போன்றவற்றின் அடிப்படையில் விளக்க முடியாது.
என்ற உண்மையை மார்க்ஸ் வெளிப்படுத்தினார்.
ஆனால் மார்க்சின் பணி இத்தோடு நின்று விடவில்லை. இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ சமூகத்தையும் இயக்கும் தனிச்சிறப்பான விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பை கண்டுபிடித்தது எந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலாளி வர்க்க பொருளியலாளர்களும், சோசலிச விமர்சகர்களும் ஆகிய இரு தரப்பினரும் அதுவரை செய்த அனைத்து ஆராய்ச்சிகளும் இருட்டில் தடுமாறிக் கொண்டிருந்தனவோ அந்தப் பிரச்சினையின் மீது திடீரென அறிவு ஒளியைப் பாய்ச்சியது.
ஒருவரது வாழ்நாளில் அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதுமான சாதனைகள்தான். அத்தகைய ஒரே ஒரு கண்டுபிடிப்பைக் கூட சாதித்த ஒரு மனிதர் மனிதர் நிறைவடைந்து விடலாம். ஆனால் மார்க்ஸ் தான் ஆய்வு செய்த ஒவ்வொரு துறையிலும், கணிதவியல் ஆராய்ச்சியில் கூட அவர் சுயேச்சையான முடிவுகளை வந்தடைந்தார். அவர் பல துறைகளில் ஆய்வு செய்தார், எந்தத் துறையிலும் மேம்போக்கான ஆய்வு செய்யவில்லை.
அறிவியலைப் பொறுத்தவரையில் மார்க்சின் பங்களிப்பு இத்தகையது. ஆனால், அது அவரது வாழ்வில் பாதி பங்கு கூட வகிக்கவில்லை. மார்க்சை பொறுத்தவரை அறிவியல் என்பது வரலாற்று ரீதியில் உயிர்த்துடிப்பான ஒரு புரட்சிகர [மனித சமூகத்தை மாற்றியமைக்கக் கூடிய] சக்தி. ஏதோவொரு அறிவியல் துறையில் கோட்பாட்டு ரீதியிலான புதிய கண்டுபிடிப்பு, அதற்கான நடைமுறை பயன்பாடு என்னவென்று புரிந்து கொள்வது உடனடியாக சாத்தியமில்லாமல் இருந்தாலும் கூட அதை பெருமளவு மகிழ்ச்சியுடன் மார்க்ஸ் வரவேற்றார். ஆனால், அத்தகைய கண்டுபிடிப்பு தொழில்துறையிலும் பொதுவான வரலாற்று வளர்ச்சியிலும் உடனடியா புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாக இருக்கும் போது அவர் அடைந்த மகிழ்ச்சி முற்றிலும் வேறு விதமானது. உதாரணமாக, மின்சார இயலில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தை அவர் மிக கவனமாக பின்தொடர்ந்து வந்தார். சமீப காலங்களில் மார்சல் டெப்ரேயின் ஆராய்ச்சி [மின்சாரத்தை நீண்ட தூரங்களுக்கு கடத்துவது தொடர்பான தொழில்நுட்பங்களில் டெப்ரே ஆய்வு செய்தார்] தொடர்பான விபரங்களை ஆர்வமாக கவனித்து வந்தார்.
ஏனென்றால் மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புரட்சியாளர். அவரது வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள், முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கி வைத்திருக்கும் அரசு நிறுவனங்களையும், தூக்கி எறிவதற்கும் நவீன பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் ஏதாவது ஒரு வழியில் பங்களிப்பு செய்வதாகும். நவீன பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நிலைமையையும், தனது தேவைகளையும், தனது விடுதலைக்கான சூழல்களையும் புரிந்து கொள்ளும்படி செய்த முதல் நபர் அவரே.
போராட்டமே மார்க்சின் தனிச்சிறப்பு. வேறு யாரும் விஞ்ச முடியாத அளவுக்கு உணர்ச்சிகரமாகவும், உறுதியாகவும் வெற்றிகரமாகவும் அவர் போராடினார். முதல் ரைன் நாளிதழ் (1842), பாரிஸ் முன்னேற்றம் (1844), ஜெர்மன்-பிரஸ்ஸல்ஸ் நாளிதழ் (1847), புதிய ரைன் நாளிதழ் (1848—1849), நியூயார்க் தினசரி டிரிபியூன் போன்றவற்றில் அவருடை படைப்புகள், இவற்றுடன் வரிசையான போர்க்குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் லண்டன் ஆகிய இடங்களில் பல்வேறு நிறுவனங்களில் அவரது பணி, இறுதியாக இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல சர்வதேச தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது – வாழ்வில் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்த ஒரு சாதனையை பற்றி மட்டுமே அதை நிறுவியர் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
இவை அனைத்தின் விளைவாக மார்க்ஸ் அவரது காலத்தில் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். சர்வாதிகார அரசுகளும் சரி, குடியரசுகளும் சரி அவரை தமது நாடுகளில் இருந்து நாடு கடத்தின. பழமைவாதிகளாக இருந்தாலும் சரி, அதிதீவிர ஜனநாயகவாதிகளாக இருந்தாலும் சரி முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு அவர் மீது அவதூறுகளைக் குவித்தனர். இவை அனைத்தையும் அவர் படிந்திருக்கும் ஒட்டடை போல ஒதுக்கித் தள்ளினார், புறக்கணித்தார்: தவிர்க்கவே முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அவற்றுக்கு பதிலளித்தார்.
ஆனால், சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களால் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, அவரது இறப்பினால் அவர்கள் துயரடையும் வகையில் மார்க்ஸ் மரணமடைந்தார். அவருக்கு பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அவருக்கு ஒரு தனிப்பட்ட விரோதி கூட இருந்ததில்லை என்று நான் துணிந்து கூறுவேன்.
அவரது பெயர் காலங்காலமாக நிலைத்திருக்கும், அவருடைய பணிகளும் நீடித்திருக்கும்.
(மார்ச் 17, 1883 ல் லண்டன், ஹைகேட் இடுகாட்டில் பி.எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை)