மார்க்சைப் பார்த்து அலறும் முதலாளி வர்க்கம்

காரல் மார்க்ஸ் : உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சி

காரல் மார்க்ஸ் என்றவுடன் தவிர்க்க இயலாமல் நம் நினைவுக்கு வருவது கம்யூனிசமும், அவருடன் ஒன்று கலந்துவிட்ட தோழர் பிரடெரிக் எங்கெல்சும். இருவரும் வகுத்தளித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகையே புரட்டிப் போட்டது. வரலாறு, இயக்கவியல், வர்க்கப் போராட்டம் ஆகிய அறிவியல்பூர்வமான தத்துவ ஆய்வு முறையால் விருப்பு, வெறுப்பின்றி புதிய சமுதாயத்தின் படைப்பாளி வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தி கண்ணைக் கட்டியிருந்த முதலாளித்துவ கட்டுக்களை அவிழ்த்து உலக மக்களுக்கு ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தையும் வழங்கியது. கம்யூனிசம் என்றாலே அராஜகம், வன்முறை, அடித்துப் பிடுங்குவது என்று இன்றுவரை பொய்யுரைக்கும் எத்தர்களுக்கு 1848-லேயே பதிலடி கொடுத்து வரலாற்று வழியில் கம்யூனிசம்தான் நாகரீகமும், உயர்ந்ததுமான சமூக அமைப்பு என விளக்கிக் காட்டியது. இன்றளவும் உழைக்கும் மக்களின் இதயங்கவர் இன்னிசையாக அது நீடித்து நிற்கிறது. உலகில் அரசியல் பேசும் எவரும் சமத்துவம், பொதுவுடைமை என்னும் சொல்லை தவிர்க்க முடியாதவாறு மார்க்சியத்தின் தாக்கம் விளைந்து நிற்கிறது.

காரல் மார்க்ஸ்

உலக உழைக்கும் மக்களின் இதயங்களைப் படித்தவர், அவர்களின் இடர் நீக்கும் சிந்தனையை வகுத்தவர் என்பதுதான் மார்க்சின் மாபெரும் சிறப்பு

உலகிலேயே உழைக்கும் மனிதர்களுக்கான தத்துவத்தைப் படைத்தவர் மார்க்ஸ். அதனால்தான் மனிதகுல மாண்பெங்கும் மார்க்ஸ் இருக்கிறார். உலகின் தலைசிறந்த மனிதர்களில் தலைசிறந்தவர் என்கிறது வரலாறு. மூளைத்திறனை அதிகம் பயன்படுத்தியவர் என்கிறது ஒரு புள்ளி விபரம். தற்கால சமுதாயத்தில் அதிகம் பேர் தேடிப் படிக்கும் சிந்தனை மார்க்சியம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். மூளைத்திறனை பயன்படுத்துவது மட்டுமல்ல, யாருக்காக பயன்படுத்தினார் என்பதுதான் மார்க்சின் சிறப்பு. முதலாளித்துவம் கெட்டக் கனவாக மறக்க விரும்பும் மார்க்சியம் பரவலான மக்களுக்கு லட்சியக் கனவாக விரிவதுதான் மார்க்சியத்தின் சிறப்பு. மார்க்ஸ் மிக இளம் வயதிலேயே சட்டம் படித்தார். வணிகவியல், வரலாறு படித்தார், தத்துவத்துறையில் டாக்டரேட் வாங்கினார் என்பதெல்லாம் உண்மைதான். அதைவிட உலக உழைக்கும் மக்களின் இதயங்களைப் படித்தவர், அவர்களின் இடர் நீக்கும் சிந்தனையை வகுத்தவர் என்பதுதான் மார்க்சின் மாபெரும் சிறப்பு. ஒருவர் அறிவாளியாக இருப்பது ஒன்றும் பெரிதல்ல, அந்த அறிவு பிறருக்கும் பயன்படும் நல்லறிவாக இருக்கிறதா என்பதுதான் தேவை. திருவள்ளுவர் சொன்னது போல புல்லறிவாளர்களால் உலகுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. மார்க்சைப் போல நல்லறிவாளர்கள்தான் இறந்தும் மக்கள் மனதில் உயிர் வாழ்பவர்கள்.

நிலையற்றவற்றை – அற்பமானவற்றை நிரந்தரமானவை, நிலையானவை என்று நம்பி வாழ்வது மிகுந்த இழிவுடையதாகும் என்பதை

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்,
புல்லறி வாண்மை கடை”

என்று திருவள்ளுவர் நல்லறிவுக்கு குறள் வகுத்தார். மனிதர்களுக்காக சிந்திப்பவர்கள் ஆழமாக உணர வேண்டிய அறிவு இது.

முதலாளித்துவம் நிலையானது என்றும், அது சகல இன்பங்களையும் வழங்கும் என்றும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கி வாழ்ந்த அறிவாளிகள் மத்தியில் மார்க்ஸ் தனது பள்ளிப் படிப்புக்காலத்திலேயே 1835-ல் “ஒரு வாழ்க்கைத் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுப்பதில் ஒரு இளைஞனின் பிரதிபலிப்புகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். எல்லோரும் டாக்டர், என்ஜீனியர் ஆக விருப்பம் என்று எழுதி இருந்த போது மாணவர் மார்க்ஸ் தனது எண்ணங்களை இப்படி எழுதினார்.

“ஒருவர் தனக்காக மட்டும் வேலை செய்தால் அவர் ஒரு பெரிய படிப்பாளி என்றோ, ஒரு சிறந்த விஞ்ஞானி என்றோ, ஒரு சிறந்த கவிஞர் என்றோ பெரும் புகழ் மிக்கவராக ஆகலாம். ஆனால் அவர் ஒரு குற்றமற்ற முழுமையான உண்மையான மனிதனாக ஆக மாட்டார்” என்றார்.

மார்க்ஸ் - எங்கெல்ஸ்

மார்க்சியத்தை உருவாக்கிய மார்க்சும் எங்கெல்சும் சர்வதேச கம்யூனிச அகிலத்திலும், அமைப்பு வழியிலும் நின்று இயங்கியதால்தான் பாட்டாளி வர்க்கத்தின் சித்தத்தை ரத்தத்தில் உணர்ந்தார்கள்.

வேறு எது மார்க்சின் விருப்பம் தெரியுமா?

“ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுத்து அந்த நிலை அவர் மனிதகுலத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு இடமளிக்குமானால் அவர், தான் என்றும் தற்பெருமையுடன் கூடிய குறுகிய சொந்த சுகம், மகிழ்ச்சியைப் பற்றி அதிகம் உணர மாட்டார். அதற்குப் பதிலாக அவருடைய மகிழ்ச்சி கோடிக் கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்”. தனது மகிழ்ச்சியை மக்களுக்கான மகிழ்ச்சியில் பார்க்கும் இந்த மனிதத் தன்மைக்குப் பெயர்தான் மார்க்ஸ்.

இன்றளவும் உலகம் மார்க்சைக் கொண்டாடுவது ஏன்? மக்களை வறுமையிலும், கொடுமையிலும், தள்ளி இருக்கும் மூலதனத்தின் மூர்க்கர்களான முதலாளித்துவத்தை வரலாற்று ரீதியாக வீழ்த்தும் வலிமை கொண்ட வர்க்கம் பாட்டாளி வர்க்கம்தான் என்பதை தாம் வகுத்தளித்த தத்துவத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டவர். “பாட்டாளி வர்க்க பலனை அடைய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கு!” என்று உபதேசியாக இல்லாமல், தானே முன்னின்று இயங்கி சித்தாந்தத்திலும், நடைமுறையிலும் அறிவியல் ஆளுமையுடன் நிலைநாட்டிய அசைக்க முடியாத நம்பிக்கை மார்க்சினுடையது. அதுதான் மார்க்சின் மாபெரும் சிறப்பும் வழிகாட்டலும்.

மார்க்ஸ் முன்னறிந்து நம்பிய தொழிலாளி வர்க்கமே நீ உன்னை நம்புவதற்கான காரணங்களை கண்டறிய என்ன தயக்கம், மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரமல்ல, அது செயலுக்கான வழிகாட்டி என்று மார்க்சியவாதிகள் கூறுவது தொழிலாளி வர்க்கமே நீ தொட்டறியவும் தொடர்ச்சி கொடுக்கவும்தான். மார்க்சும், மார்க்சியமும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அனைவருக்கும் தேவைப்பட்டாலும் முக்கியமாக உழைக்கும் தொழிலாளி வர்க்கமாகிய நாம் இதனை உணர்ந்து இயங்க வேண்டிய தருணமிது. மார்க்சின் மேதைமையை வெறுமனே வியந்து பார்த்து ஒதுங்கிக் கொள்வதற்கல்ல, மார்க்சியம் முன்வைத்துள்ள வரலாற்றுக் கடமையில் நம்மை, குறிப்பாக தொழிலாளி வர்க்கமாக நாம் இணைந்து கொண்டு வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வதுதான் இன்றைய மார்க்சியத்தின் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் ஒரு மாபெரும் விஞ்ஞானி. அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு வேகம் நிறைந்த புரட்சிக்காரர். அவரும் அவரது தத்துவத்தையும் ரசிக்கும் ரசிகனாக வாழும் உரிமை தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடையாது. மார்க்சை ஒரு பொருளாதார மேதை, சமூக விஞ்ஞானி, தத்துவ மேதை என்று வரம்பிட்டு அந்த அளவுக்கு மட்டும் புரிந்து கொள்ளும்படி முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் முன்னிறுத்துவதில் தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தின் தத்துவத்தையும் செயல்திட்டங்களையும் வகுத்து உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல, அதற்காகவே வாழ்ந்து காட்டியவர் என்பதை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும். மார்க்சின் வாழ்க்கையில் முக்கிய செயல் நோக்கம், முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்கான புரட்சிப் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று நடத்தவும், சோசலிசத்தின் வெற்றியைக் கொண்டு வரவும், தொழிலாளிகளின் அமைப்பு ரீதியில் ஒன்று திரளவும், உலகக் கண்ணோட்டத்தை முன்வைத்த சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைவர் மார்க்ஸ் சொல்வதை புரிந்து கொண்டால், நமது லட்சியம் மார்க்சியத்திற்காக மார்க்சைப் போலவே விடாப்பிடியாக இயங்குவது என்பதாகும்.

காரல் மார்க்ஸ் - ஜென்னி

இல்லத் துணைவியாகவும், இயக்கத் துணைவியாகவும் மார்க்சின் மனைவி ஜென்னி, உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு தோழராக மகிழ்ந்தார்.

இந்த அடிப்படையில் தொழிலாளிவர்க்கமும், உழைக்கும் பிற மக்களும் மார்க்சியத்தை பயில உள்ள நம்பகமான உறுதியான பயிலகம் புரட்சிகர அமைப்பைத் தவிர வேறில்லை. மார்க்சியத்தை உருவாக்கிய மார்க்சும் எங்கெல்சும் சர்வதேச கம்யூனிச அகிலத்திலும், அமைப்பு வழியிலும் நின்று இயங்கியதால்தான் பாட்டாளி வர்க்கத்தின் சித்தத்தை ரத்தத்தில் உணர்ந்தார்கள். மார்க்சை விரும்பும் நாம், மார்க்சியத்தை விரும்பும் நாம், தொழிலாளி வர்க்கம் மூலதனச் சுரண்டலிலிருந்து விடுபட விரும்பும் நாம் ஒரு தொழிலாளி வர்க்க அமைப்பை விரும்புவதும், வழி நின்று வேலை செய்வதும் மறுக்க முடியாத மகிழ்ச்சியாகும்.

புரட்சிகர சித்தாந்தமும், புரட்சிகர நடைமுறையும் ஒன்றிணைந்தால்தான் உலகை மாற்ற முடியும். அப்படி மாற்றிக் காட்டியவர்கள் ரசியக் கம்யூனிஸ்டுகளும், சீனக் கம்யூனிஸ்டுகளும், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் காலத்தின் ஏன் லெனின் காலத்தில் கூட நடைமுறையில் ஒரு முன்னுதாரணமான சோசலிச புரட்சியோ, சமூக அமைப்போ இல்லாத போது கூட, இது தொழிலாளி வர்க்கத்தால் நடந்தே தீரும் என்று சலிப்பின்றி வேலை செய்து சாதித்திருக்கிறார்கள். உலகத் தொழிலாளி வர்க்கம் பல முன்னுதாரணங்களைப் படைத்திருக்கும் காலத்தில்; அதன் சாதனைகள் கண்முன்னே தெரியும் காலத்தில், ‘புரட்சியெல்லாம் நடக்காதுங்க’ என்று சலித்துக்கொள்ள நியாயம் உண்டா? புரட்சி என்பது தனியான ஒன்றல்ல, தொழிலாளி வர்க்கமாகிய நாம்தான் புரட்சிகர வர்க்கம், நாம் முன் நடக்காமல் புரட்சி நடக்குமா?

உழைப்பு என்றால் என்ன? கூலி என்றால் என்ன? வர்க்கம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம் என்றால் என்ன? உபரி மதிப்பு என்றால் என்ன? வரலாறு நெடுக ஆண்டான்-அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம். இறுதி வெற்றி சோசலிசம், கம்யூனிசம். அதன் இயக்குசக்தி பாட்டாளி வர்க்கம் – என வாழ்க்கை முழுக்க ஆய்வு செய்து, தத்துவத்தை வகுத்து நடைமுறைகளாக திட்டமிட்டு களத்தில் இயங்கிய மார்க்ஸ் இதற்கான வேலைகளையும் ஓய்வாக, உல்லாசமாகவா செய்தார். உழைக்கும் மக்களுக்கான உயிர்த்துடிப்பான வேலைகள் ஒவ்வொன்றையும் மிகுந்த நெருக்கடியில் செய்தவர் மார்க்ஸ். பிறந்து தவழ்ந்த அவரது பிள்ளைகள் சிலர் வரிசையாக வறுமையில் பராமரிப்பின்றி இறந்தனர். மார்க்சோ பிறக்காத பிள்ளையான சோசலிசத்திற்காக, கம்யூனிசத்திற்காக, உழைக்கும் பிள்ளைகளுக்காக இரத்தம் வடியும் இதயத்துடன் நமக்காக வேலை செய்தார். பெல்ஜியம், பாரிஸ், லண்டன் எனத் தொடர்ந்து முதலாளித்துவ பிற்போக்கு அரசுகளால் நாடு கடத்தப்பட்டார். நண்பர் ஏங்கல்சின் அன்பையும், உழைப்பையும் பற்றிக் கொண்டு உலக பாட்டாளி வர்க்க அமைப்பை உருவாக்கினார். தங்குவதற்கு ஒரு இடமில்லை. அரசும் வறுமையும் விரட்டின. ஆனால் மார்க்சின் கருத்துக்கள், சித்தாந்தம் தங்காத இடமில்ல. இத்தனை துயரங்களையும் தாங்கி இல்லத் துணைவியாகவும், இயக்கத் துணைவியாகவும் மார்க்சின் மனைவி ஜென்னி, உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு தோழராக மகிழ்ந்தார்.

மார்க்சின் பணி

மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தின் தத்துவத்தையும் செயல்திட்டங்களையும் வகுத்து உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல, அதற்காகவே வாழ்ந்து காட்டியவர்

இப்படி சொந்த வாழ்க்கையில் போராடிய மார்க்ஸ், நம்மிடம் கேட்பது இதுதான்! வறுமை, துயரம், தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சனைகள் என்று இந்தக் கூலி அமைப்புமுறையிலேயே கிடந்து சாவதா? இல்லை கொடிய முதலாளித்துவ சமூக அமைப்பை வீழ்த்த முன்னேறி பாட்டாளி வர்க்கமாக வாழ்வதா? செயல்பூர்வமாக பதில் சொல்லுங்கள் தொழிலாளர்களே! “மகிழ்ச்சி என்றால் போராட்டம்” என்று சொன்ன மார்க்சின் வாரிசுகளுக்கு போராடாமல் மகிழ்ச்சி ஏது?

“உலகத்தை வியாக்கியானம் செய்வதல்ல, உலகை மாற்றுவதே விசயம்” என்று மார்க்சியத்தின் மரபுரிமை பெற்ற தொழிலாளர்களாகிய நாம் உயிர்வாழ்வது உலகை மாற்றுவதைத் தவிர வேறு எதற்காம்? “சமூகத்தில் எது நடந்தாலும் தலையை குனிந்து கொண்டு அடிமைத்தனத்தில் உழலும் மோசமான பிற்போக்கு இங்கு ஆள்கிறது” என்று, இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் அன்றே எழுதினார். ஆம், இன்று அந்தப் பிற்போக்கின் பெயர் பார்ப்பன பாசிசம், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிதிமூலதன ராமனை துணைக்கழைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்குகிறது, அதன் உரிமைகளை பறிக்கிறது. அந்நிய கார்ப்பரேட் வேட்டையால் நாடே சூறையாடப்படுகிறது. மறுகாலனியாக்கம், பார்ப்பனியம் எனும் இரட்டை அநீதியை, சுரண்டலை ஒழிக்க ஒரே வழி கம்யூனிசம்.

மார்க்ஸ் இன்று இல்லை என்று முதலாளிகள் நம்பவில்லை. வீறு கொண்டு போராடும் மாருதி தொழிலாளர்களிடம் மார்க்சைப் பார்த்து அலறுகிறது, முதலாளித்துவம். அடிமைத்தனத்திற்கு அடங்க மறுக்கும் மெரினாவையும், நெடுவாசலையும் பார்த்து மார்க்ஸ் ஊடுருவி விட்டதாக கதிகலங்குகிறது, ஆளும் வர்க்கம். எங்காவது ஒரு கம்பெனி வாசலில் தொழிற்சங்கமும், சிவப்புக் கொடியும் தலைதூக்கினால் மார்க்ஸ் வந்து விட்டதா முதலாளி பதைபதைக்கிறான்.

உரிமைகளற்ற தொழிலாளி வர்க்கமே… உனக்குள்ளே இருக்கின்ற மார்க்சை உன்னால் உணர முடியவில்லையா, என்ன? சமூகத்தின் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மனம் குமுறும் உன்னிடம் உள்ள மார்க்சை யாரால் மறைக்க முடியும், மறுக்க முடியும்? மார்க்சைப் போல நம்மால் எழுத முடியாமல் இருக்கலாம், மார்க்சைப் போல நம்மால் சிந்திக்க முடியாமலும் இருக்கலாம்,

மார்க்சைப் போல நாம் ஏன் வாழக்கூடாது?
மார்க்சைப் போல ஏன் இயங்கக் கூடாது?
… நான் கேட்கவில்லை… மார்க்ஸ் கேட்கிறார்!
போராட்டக் களத்தில் பதில் சொல் பாட்டாளி வர்க்கமே!

(மே 5, 2017 காரல் மார்க்சின் இருநூறாவது பிறந்த நாள்)

– துரை சண்முகம்

புதிய தொழிலாளி ஏப்ரல் 2017 இதழிலிருந்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/karl-marx-puthiya-thozhilali-article-by-durai-shanmugam/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்வீடன் : மக்கள் நல ஜனநாயகத்திலிருந்து பாசிச ஜனநாயகத்தை நோக்கி

'முதலாளித்துவத்தை சீர்திருத்தி கட்டுக்குள் வைத்து விடலாம்' என்ற கொள்கையின்  விளைவே தீவிர வலதுசாரி அரசியல். அதாவது முதலாளித்துவத்தின் அவலநிலையின் வெளிப்பாடே வலதுசாரி அரசியல்.

முதலாளி மல்லையாவின் ஜேப்படியும், ஜேப்படி நீரவ் மோடியின் முதலாளித்துவமும் – மோடி அரசின் சாதனைகள்

மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி – சோக்சி கும்பல். ஆனால், இத்தகைய ஜேப்படி நபருடன்தான் டாவோசில் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக்...

Close