வணக்கம்,
நான் சுகுமார் . சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன்.
ஜனவரி மாத ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பலவேறு இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மீத்தேன் / ஹைட்ரோ கார்பன் எதிரப்புப் போராட்டம்,மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி வேண்டி போராட்டம், பூரண மதுவிலக்கு வேண்டி போராட்டம் என்று மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். அரசும், போலீசும் இப்போராட்டங்களை முடக்கி வருகின்றன.
கதிராமங்கலம் என்னும இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் தஞ்சையிலிருந்து 30 மைல் தொலைவில் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது. இது விவசாய கிராமம். இவ்வூர் மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கிறார்கள். ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீத்தேன் எடுக்க இந்த மண்ணில்தான் குழாய் பதித்துள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இது நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மண்ணில் மீத்தேன் திட்டத்தை ஒருபோதும் அனுமதியோம் என்று உறுதியளித்திருந்தார். இப்போதும் அவரது ஆட்சி தொடர்வதாகத்தான் சொல்லிக் கொள்கிறார்கள்.
மாநில அரசின் உறுதிமொழியும் , மத்திய அமைச்சர் பொன்னாரின் உறுதிமொழியும் எங்கே போனது?
மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, மக்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சொந்த மண்ணிலேயே அம்மக்களை அகதிகளாக்கிவிட்டு இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசு , போலீஸ் என அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு எதிரான இத்தகைய சதி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
மேலும் 23 இடங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி கோரியுள்ளது மத்திய அரசு. விவசாயத்திற்காகப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டிய காவிரி டெல்டா பகுதியில் இத்திட்டம் நிறைவேறுவது வருந்தத்தக்கது. பல்வேறு நாடுகளும் மீத்தேன் திட்டத்தின் தீமைகளை அறிந்து கைவிட்டு விட்டன.
மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும் எந்தவொரு திட்டமும் மக்களுக்குப் பயன்படாத திட்டமேயாகும். இதனால் பயனடையப் போவது பல கார்ப்பரேட் நிறுவனங்களும் , அதன் கைக்கூலியாகச் செயல்பட்டு வரும் அரசும், அரசியல்வாதிகளுமே.
கதிராமங்கலத்
கதிராமங்கலத்திலும், 68 வது நாளாக நெடுவாசலிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
எந்த ஊடகமும் இது குறித்த செய்திகளை ஓளிபரப்புவதில்லை. செய்தித்தாள்
இளைஞர்கள் முகநூல் மூலம் கதிராமங்கலம் பற்றிய செய்தியைப் பகிர்கின்றனர். தஞ்சை மண்ணில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் மறுக்கும் மத்திய அரசு அம்மண்ணிண் மீத்தேன் எரிவாயுவை மட்டும் எடுத்து அம்மண்ணை சுடுகாடாக்கத் துடிக்கிறது. பாஜக அரசு தமிழகத்துக்குக் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்துமே அழிவுத்திட்டங்கள் தான். இவ்வாறு தமிழகத்தை இவர்கள் ஒடுக்குவதே அனைத்துப் போராட்டங்களுக்கும் காரணம்.
காவிரி மேலாண்மை அமைக்க நீதிமன்றத் தீர்ப்பு வந்தும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதாக இப்போது புதிய கதையைச் சொல்கிறார்கள். கடன் தள்ளுபடி கோரி போராடிய விவசாயிகளை மோடி சந்திக்க மறுக்கிறார். இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா ? கார்ப்பரேட் ஆட்சியா?
கதிராமங்கலம் பற்றிய செய்திகளை முகநூலில் பகிருங்கள். இது நமது பிரச்சனை. வரும் தலைமுறைக்கு வீடு, கார், நகை, பணம் சேர்த்து வைத்துப் பயனேதும் இருக்கப்போவதில்லை. சுவாசிக்கச் சுத்தமான காற்று, குடிக்கத் தண்ணீர், செடி, கொடி மரம் ஏதும் இருக்காது. அவற்றைப் பாதுகாப்போம்.
காவிரியில் நீர் வராவிட்டால் விவசாயம் செய்ய முடியாது. அப்படி நேருமானால் நாம்தான் கடைசித் தலைமுறையாக இருப்போம். உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது.
இப்படி நம்மைச் சுற்றி சமூகத்தில் பல பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் ஏனோ தானோ என்று இருப்பது ஆபத்து. நெற்களஞ்சியமான தஞ்சை கீழவாசலில் நெகிழி அரிசி வந்துவிட்டது. இன்னும் நெகிழி முட்டை, முட்டைகோஸ், உருளைக் கிழங்கு என்று நெகிழி உணவுப் பொருட்கள் வரத் துவங்கிவிட்டன. வரும் தலைமுறைக்கு நாம் சேர்க்கும் சொத்து இயற்கை, தண்ணீர், விவசாய நிலங்களைப் பாதுகாப்பது ஆகியவையே. இவ்வாறு பாதுகாப்பதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
அங்கு செல்ல முடியாவிட்டாலும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே போராடுங்கள்.கதிராமங்கலத்தில் என்ன நடக்கிறதென்று யாருக்குமே தெரியவில்லை. ஒரு குழாய் வெடித்தால் 100 மைல்களுக்கு ஆபத்து. நிலம் பிளந்துவிடும். மண்ணும், நிலத்தடி நீரும் மாசுபடும். மக்கள் நோய்வாய்ப்படுவர். புற்றுநோய் உண்டாகும். நாம் எல்லோரும் ஒற்றுமையாகப் போராடி மீத்தேன் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
இது அந்த கிராமத்தின் பிரச்சனை அல்ல. தமிழகத்தின் பிரச்சனை. கிராமத்திலிருந்துதான் நகரத்துக்கு விளைபொருட்கள் வருகின்றன. விவசாயிகளுக்கு உறுதுணையாக நின்று இத்திட்டத்தை முறியடிப்போம் !
எழுத்தாக்கம் – பிரியா