கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் பார்ப்பன மேலாதிக்கம்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த 5,600 பொருட்களை பெங்களூரு அருகே காட்சிப்படுத்த தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் (பிப்ரவரி 7, 2017) உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறையின் வழக்கறிஞர் என். சண்முகசெல்வம் “கீழடி ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வது பற்றிய முடிவு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். அதாவது, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை தொடர்வது குறித்து எந்த உறுதியையும் அளிக்க தொல்லியல்துறை மறுத்திருக்கிறது.

கீழடி அகழ்வாராய்ச்சி

முன் அறையைப் போல தோற்றமளிக்கும் ஒரு செங்கல் கட்டமைப்பு

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (Archaeological Survey of India – ASI) பெங்களூரு பிரிவு அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் (பள்ளிச்சந்தை திடல்) அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தனர். கீழடி மதுரையில் இருந்து 12 கி.மீ தொலைவில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதுவரையிலுமான ஆய்வில் 5600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. வட இந்தியப்பகுதிகளில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசு கீழடியில் 2017-ம் ஆண்டு ஆய்வுக்கான அனுமதியை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியை விடவும் முக்கியமானது கீழடி ஆய்வு என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். கீழடியில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 102 அகழிகள், வட்ட வடிவிலான கிணறுகள், தாழிகள், மண்பாண்டங்கள், கழிவுநீர் தொகுதிகள், சோழர் பாண்டியர் கால நாணயங்கள் மற்றும் அணிகலன்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கிட்டத்தட்ட கி.மு 2-ம், 3-ம் நூற்றாண்டு எனவும் இப்பொருட்கள் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வு

தென்னந்தோப்பில் தோண்டப்பட்ட அகழ்வு குழிகளில் மண்பாண்டம் செய்யும் முற்றம்

கீழடி கண்டுபிடிப்புகளின்படி தமிழர்கள் ஏறத்தாழ 2300 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்ட நகர வாழ்க்கையை அமைத்துள்ளனர். மேலும் அது அக்காலத்தில் நிலவிய மற்ற சமுதாய நாகரிகங்களை விடவும் வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. திட்டமிட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு முறைகள், சுட்ட கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் மற்றும் அடுப்புகள், கிணறுகள் ஆகியவை தமிழர்களின் உயர்ந்த நாகரிகத்தை பறைசாற்றுகின்றன. இவை யாவும் தமிழர்களின் சங்ககால சமூக நாகரிகம் வெறும் பாடல்கள் வழியிலான கற்பனை என்பதை பொய்ப்பித்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் தழைத்தோங்கியிருந்த தமிழர் நாகரிகத்திற்கு கிடைத்திருக்க கூடிய முக்கியமான சான்று கீழடி அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள். “தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் முக்கியமானதும் முதன்மையானதும் கீழடி” என்று குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

1930-களில் ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி நாகரிகத்தின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நாகரீகம் கி.மு 2600 முதல் கி.மு 1600 வரை உச்சத்தில் இருந்தத்தாக மதிப்பிடப்படுகிறது. அது வரையில் வேதங்களின் அடிப்படையில்தான் வரலாற்று காலகட்டத்துக்கு முந்தைய பண்டைய இந்தியா பற்றிய வரலாறு எழுதப்பட்டது. வேதங்களில் மிகப்பழமையான ரிக் வேதத்தின் காலம் கி.மு 1700-க்கும் கி.மு 1200-க்கும் இடைப்பட்டது. விவசாயம், திட்டமிடப்பட்ட நகர குடியிருப்புகள், உலகின் பிற நாகரிகங்களோடு வணிகம் என்ற அடிப்படையிலான சிந்து சமவெளி நாகரிகம், கால்நடை மேய்ச்சல், நாடோடி குழுக்களின் தற்காலிக குடியிருப்புகள் என்ற அடிப்படையிலான ஆரிய நாகரிகத்தை விட காலத்தால் முற்பட்டது, உற்பத்தி முறையில் முன்னேறியது என்று நிறுவப்பட்டது.

பல அரிய பொருட்கள் கிடைத்த குழி – கீழ்ப்புறம் இடது பக்கத்தில் – துணி துவைப்பதற்கான கல் பலகை. அதை அடுத்து செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கால்நடை நீர் தொட்டியும் நீர் வெளியேறும் ஓடையும். வலது புறமும், நடுவில் உள்ள முற்றத்திலும் செங்கல் மேடைகள். வலது பக்கம் உள்ள முற்றத்தில் அரிய இரட்டை சுவர் கொண்ட அடுப்பு.

அதே போன்று கீழடியில் கிடைத்திருக்கும் திட்டமிடப்பட்ட நகர நாகரிகத்துக்கான ஆதாரங்கள் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையேயான தொடர்புகளை தெளிவுபடுத்துவதற்கான சாத்தியங்களையும், ஆரியர்களின் கால்நடை மேய்ப்பை தொடக்கமாகக் கொண்ட வேத நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி – திராவிடர்களின் விவசாயத்தை அடிப்பபடையாகக் கொண்ட நாகரிகத்துக்கும் இடையேயான வேறுபாட்டை மேலும் விளக்குவதற்கான சாத்தியங்களையும் உள்ளடக்கியுள்ளன.

தொல்லியல் துறையில் பணியாற்றும் மேற்பார்வை தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா “சங்க காலத்தில் ஒரு நகர மையம் இருப்பதற்கு ஆதாரமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இவ்வளவு பழமையான கட்டுமானங்களை கண்டுபிடித்தது இதுதான் முதல் முறை. அனைத்து கட்டுமானங்களும் சுட்ட செங்கலால் கட்டப்பட்டிருக்கின்றன. எங்களது பெரும் அளவிலான இந்த அகழ்வாராய்ச்சி சங்க காலத்தின் நகர நாகரீகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் இன்னும் முறையான அகழ்வுகளை செய்து மேலும் விபரங்களை திரட்ட வேண்டியிருக்கிறது” எனகு கூறியிருக்கிறார்.

ஆனால், ஏக இந்தியா, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள், சிந்து சமவெளி நாகரிகமும் ஆரிய நாகரிகமே, தென்னக வரலாறும் ஆரிய நாகரிகத்துக்கு உட்பட்டதே என்று அறிவியலுக்கும் வரலாற்று ஆதாரங்களுக்கும் எதிராக கதை கட்டி வரும் இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சக்திகள் அவர்களது ‘நம்பிக்கைகளுக்கு’ எதிராக கிடைத்திருக்கும் கீழடி ஆதாரங்களை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். கீழடி ஆய்வுகளை முடக்குவது பார்ப்பன மேலாதிக்கத்தின் நோக்கமாகவும், அதை எதிர்த்து முறியடிப்பது அறிவியல் அடிப்படையிலான ஆய்வாளர்கள் மற்றும் முற்போக்கு சக்திகளின் கடமையாகவும் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களை மைசூரு கொண்டுசெல்ல தொல்லியல் துறை முடிவெடுத்த போது தமிழகத்தில் முற்போக்காளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மைசூரு கொண்டுசெல்ல தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் அவற்றை டேராடூன் கொண்டுசெல்ல அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கையான “கீழடி அகழ்வாராய்ச்சிப் பொருட்களை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும். மேலும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் பெருமையை உலகறிய கொண்டு செல்ல வேண்டும்” என்ற கோரிக்கையை ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய ஜெயா-சசிகலா-ஓ.பி.எஸ் அ.தி.மு.க அரசு எள்ளளவும் மதிக்கவில்லை. கீழடியில் இருந்து மைசூருக்கோ டேராடூனுக்கோ கொண்டு செல்லப்படும் பொருட்கள் அங்கே கிடப்பில் போடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது கீழடியில் நடைபெற்று வந்த பணிகள் மோடி அரசினால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் அரசுகள் தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுச் சிற்பங்கள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் கி.மு.2,3-ம் நூற்றாண்டுகளில் திட்டமிட்ட நகர நாகரிகம் மதுரையை ஒட்டி இருந்ததற்கான ஆதாரமான கீழடியின் கண்டுபிடிப்புகள் பார்ப்பனக் கும்பலின் “ஒரே இந்தியா” என்ற ஆதாரமற்ற கட்டுக்கதைக்கு எதிராக  வேத, ஆரிய நாகரிகத்தை விட சிறந்த புராதன நாகரீகத்துக்கான ஒரு சான்று. மத்தியில் ஆளும் பா.ஜ.க கும்பல் இந்த உண்மையை திட்டமிட்டு மறைக்கவே அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அதே வேளையில் தமிழர்களின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் கீழடியின் கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் தமிழ் சமூகம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

– மணி

செய்தி ஆதாரங்கள்

படங்கள் : நன்றி frontline

Permanent link to this article: http://new-democrats.com/ta/keezhadi-treasures-caught-in-brahminical-suppression/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!

இந்த ஊழியர்களைப் போல அவர்களது முன் உதாரணத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் சங்கமாக அணி திரண்டு உரிமைகளுக்காக போராட வேண்டும். அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் பு.ஜ.தொ.மு...

செய்தியும் கண்ணோட்டமும் – பொன்னார், கிரண்பேடி சவடால்கள்

மக்கள் இலவசத்திற்கு அடிமையாகிவிட்டதாய் பொன்னார் சொல்வதன் பொருள், எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் காசுகொடுத்து மக்கள் வாங்கி கொள்ளட்டும் என்பதுதான்.

Close