கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தமிழத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றன பத்திரிக்கைச் செய்திகள். என்ன காரணம்? விளைச்சல் இருந்தால் விளைபொருளுக்கு விலை கிடைப்பதில்லை. விளைச்சல் இல்லையென்றால் கடன் தொல்லை. வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.
வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும் தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலோ விவசாயிகளின் மரணத்தை காதல் தோல்வி, வயது மூப்பினால் இறந்தவர்கள் என்று அவமானப்படுத்துகிறார்கள். இன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் கொலை விளையும் நிலமாக மாற்றத் துடிக்கிறது மத்திய மோடி அரசு.
ஊடகவியலாளர் ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் டெல்டா மாவட்டங்களில், தான் பார்த்து பார்த்து வளர்த்த பயிர் கருகி நிற்பதை பார்த்து மாரடைப்பு வந்தவர்கள், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள், பணமதிப்பிழப்பால் வாழ்க்கையே தொலைத்தவர்கள் என இறந்து போன விவசாயிகளின் வாழ்க்கையை, அனாதையாகி போன அவர்களின் குடும்பங்களின் நிலையை பதிவு செய்கிறது.