கோலமாவு கோகிலா செய்வது தவறில்லையா?

[Spoiler Alert – படத்தின் கதை கீழே]

கோகிலாவுக்கு தன் அம்மா உயிரோடு இருக்க வேண்டும், வந்திருக்கும் நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த ரூ 15 லட்சம் தேவைப்படுகிறது. ஏற்னவே, வேலை செய்யும் இடத்தில் மேலாளர் படுக்க கூப்பிடுகிறான் என்பதால் அந்த வேலையை விட்டு விட்டு மசாஜ் மையத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறார். புதிய ஓனரிடம் அவ்வளவு கடன் கிடைக்கவில்லை. குடும்பச் சொத்தாக இருக்கும் சொற்ப நிலத்தை விற்கப் போனால் ரூ 1 லட்சம்தான் கிடைக்கும் என்கிறார்கள். சொந்தக்காரர்கள் அன்பாக அவமதித்து அனுப்பி விடுகிறார்கள். தொண்டு நிறுவனத்தில் 62 வயது அம்மாவுக்கு உதவி செய்வதற்கு முன்பு குழந்தைகள் காத்திருப்பில் இருக்கிறார்கள் என்று சொல்லி விட அங்கிருக்கும் நாமம் போட்ட ஒருவரின் வழிகாட்டலில் ஒரு பணக்காரரை சந்திக்கிறார். பீச் ஹவுசுக்கு வந்து போனால் பணம் கிடைக்கும் என்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளாமல் வந்து விடுகிறாள். அதாவது, அம்மாவின் உயிருக்காக தனது மானத்தையும், உடலையும் விற்க தயாராக இல்லாதவள் கோகிலா.

அப்பாவோ செக்யூரிட்டி வேலை பார்க்கும் “அலுவலக வாசலுக்குள் சொந்த விஷயம் பேசி விடக்கூடாது” என்ற அளவுக்கு அறம் சார்ந்த ஆள், அதனால் பிழைக்கத் தெரியாதவர். தங்கை கல்லூரியில் படிக்கிறாள். அம்மாவுக்கு நோய்.

இப்போது என்ன செய்யலாம்? அம்மா சாகக் கூடாது, தனக்கோ, தன் தங்கைக்கோ, அப்பாவுக்கோ ஒரு நகக் கீறலும் விழுந்து விடக் கூடாது. அம்மாவை காப்பாற்ற பணம் சம்பாதிக்க வழி என்ன?

ஒரு தற்செயல் விபத்தில் கொக்கெய்ன் என்ற கிராம் ரூ 5000-க்கு விற்கும் போதை பொடியை போலீசின் கண்ணில் மண் தூவி விட்டு அல்லது உள்ளே இருக்கும் போலீசின் உதவியோடு எடுத்து வந்து ஒப்படைத்து விடுகிறாள். பொடி பொதியை சாப்பாட்டு டப்பாவுக்குள், சோற்றுக்குள் புதைத்து கொண்டு வருகிறாள்.

அம்மாவின் சிகிச்சைக்கு பணம் சம்பாதிக்க வேறு வழிகள் எல்லாம் அடைபட்ட நிலையில் அந்த போதை பொடி கடத்தல் கும்பலையே தொடர்பு கொண்டு தான் கடத்தல் வேலை செய்து தருவதாக கேட்கிறாள். பழைய சம்பட வழியிலேயே பொடியை கடத்துகிறாள். போலீஸ் பொருமுகிறது. கடத்தல் கும்பல் அடியாள் ஒருவன் போலீசுக்கு போட்டு கொடுக்க இவள் போகும் பேருந்தை சோதனையிடுகிறார்கள். அங்கும் உள்ளடி போலீஸ் காரர் தப்புவித்து விட்டு, தலைவனுக்கு நடந்ததை சொல்கிறார். யார் போலீசுக்கு சொன்னது என்று விசாரணை நடத்தி கண்டு ஆளை பிடிக்க ஆலோசனை கொடுக்கிறாள் கோகிலா. இரண்டு பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து, ஒருவனை தலைவன் சுட்டுக் கொல்ல, எதற்கும் இன்னொருத்தனையும் கொன்று விட்டால்தான் பாதுகாப்பு என்று அவனையும் சுட வைக்கிறாள். தான் கடத்தும் போது தனக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ற தற்காப்பு உணர்வுதான். இரண்டு பேர் கண்ணெதிரில் ரத்தம் சிதற செத்துப் போகிறார்கள். தன்னால் செத்துப் போகிறார்கள். அது அவளுக்கு உறுத்தவில்லை, தான் மாட்டிக் கொள்ளாமல் கடத்தலை செய்ய வேண்டும், அம்மா சிகிச்சைக்கு பணம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.

கடத்தல் கும்பல் தலைவன் இவளை பாதுகாப்பாக தொழிலிலிருந்து விடுவிக்க உடலை விலையாக கேட்க அவன் தலையை திருகி விடுகிறாள். அதன் பிறகு 100 கிலோ கொக்கெய்ன் பொடியை குடும்பமாக சேர்ந்து கடத்துகிறார்கள். அதில் கோகிலாவை காதலிக்கும் எதிர் கடை சேகரும், தங்கையை காதலிக்கும் கல்லூரி மாணவனும் சேர்ந்து கொள்கிறார்கள்.

கோகிலா பல முறை டபுள் கிராஸ் செய்கிறாள். கடத்தல் கும்பல் தலைவன் ஒருத்தனை தானே சுட்டுக் கொல்கிறாள். குடும்பமாக சேர்ந்து 4 பேரை கொலை செய்கிறார்கள். இரண்டு காதலர்களும் அடித்து நொறுக்கப்படுவதை குடும்பமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்கள் மீது கீறல் ஒன்று கூட இல்லை.

கடைசியில் மும்பை கடத்தல் மன்னனையும் சிக்க வைத்து விட்டு அதைத் தொடர்ந்து தங்களை கைது செய்ய முயற்சிக்கும் போலீஸ் ஆய்வாளருக்கும் செக் வைத்து விட்டு, ஒருதலை காதலனிடம் கடைசி சேவையாக பணப்பையை கொண்டு வந்து சேர்க்க வைத்து குடும்பமாக எஸ்கேப் ஆகிறார்கள். அந்தப் பணத்தை மூலதனமாக வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் நிஜ கோலமாவு பிசினஸ் செய்து பிழைப்பதாக படம் முடிகிறது. அம்மாவையும் நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

கோகிலா பாத்திரம் ஒரே மாதிரியான அப்பாவியாகவே படம் முழுவதும் வருவது செயற்கையாக இருந்தாலும் சரண்யா பொன்வண்ணன், அப்பா பாத்திரம், தங்கை பாத்திரம், காதலர்கள், கடத்தல் காரர்கள், போலீஸ் காரர்கள் என்று ஒவ்வொன்றும் சீட்டின் நுனிக்கு கொண்டு வருகின்றன.

படம் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பொது ஜனங்கள் “குடும்பமா பார்க்கணும் சார்”, “காமெடி நன்றாக இருக்கிறது சார்”, “நயன்தாரா சூப்பரா நடிச்சிருக்காங்க”, “யோகி பாபு காமெடி பிரமாதம்” என்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டியில், “இந்தப் படத்தைப் பார்த்து நம்ம குடும்பத்துக்கு இது போல நேர்ந்தால் இப்படித்தான் செய்வோம்” என்று தோன்றினால் அது படத்தின் வெற்றி என்கிறார். அப்படித்தான் மக்களுக்கு தோன்றியிருக்கிறது, பலருக்கு தோன்றவும் செய்யும், அந்த வகையில் படம் வெற்றி பெற்றிருக்கிறது.

இயக்குனர் நெல்சன் பேட்டியில் வழக்கமாக நாம் பார்க்கும் உதவி இயக்குனர்கள் போல பேசுகிறார். விக்னேஷ் சிவன், சிவ கார்த்திகேயன், அனிருத்துடன் நட்பு, விஜய் டி.வி தொடர்புகள், இவற்றின் மூலம் படத்தை விளம்பரப்படுத்தியது, படம் எடுத்தது, நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் இவர்களைப் பற்றி பேசுகிறார்.

படத்தின் கோலமாவு கோகிலாவாகத்தான் இன்றைக்கு வாழ வேண்டியிருக்கிறது. கோகிலாவுக்கு அம்மா நோய் சிகிச்சைக்கு ரூ 15 லட்சம் என்றால், ஒவ்வொருவருக்கு குழந்தையின் படிப்புக்கு, எதிர்கால உயர்கல்விக்கு, வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவுக்கு, ஓய்வூதியத்துக்கு என்று பல லட்சங்கள், கோடிகள் தேவைப்படுகின்றன. இதை எப்படி சம்பாதிக்க வேண்டும்? அதற்கான அறம் என்ன?

கோகிலா இளைஞர்களை சீரழித்துக் கொல்லும் கோக்கேய்ன் கடத்தினால், நாம் எந்த எல்லை வரை போகலாம்? நமக்கு தனிப்பட்ட முறையில், அதாவது உடல் ரீதியில் பாதிப்போ, சீரழிவோ நடக்கக் கூடாது. பெண்ணாக இருந்தால் உடலை விற்பதையோ, ஆணாக இருந்தால் அடிதடியில் இறங்குவதோ கூடாது. நமது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்கு மேல் எல்லாமே கேம்தான். காதலிப்பதாக வந்து நிற்கும் இளைஞர்கள் அடித்து முகம் ரத்தக் களறியானாலும், கடத்தல் கும்பல்காரர்கள் சுட்டுத் தள்ளும்படி கேட்கும் போது, கடத்தல் தலைவனை சுட்டுக் கொல்வதிலும் கோகிலாவுக்கு எந்த உறுத்தலும் இல்லை. அந்தக் குடும்பமே சேர்ந்து, அப்பா அம்மா மகள்களின் உயிர், மானம் காக்க கொலை செய்கிறார்கள், தங்கை தனது பங்களிப்பை செய்கிறாள். கடைசியில் சம்பாதித்த பணத்தை வைத்து செட்டில் ஆகி விடுகிறார்கள்

கொக்கெய்னின் சர்வதேச சங்கிலி பற்றி தங்கை மூச்சு விடாமல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈரான், ஜெர்மனி, மும்பை, சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆவடி என்று பேசுகிறாள். இந்தச் சங்கிலிக்கு மத்தியில் பயங்கரவாத குழுக்கள், ஆயுத பேரங்கள், படுகொலைகள், சதி வேலைகள் இவையும் இணைந்தவை என்றும் தெரிந்திருக்கும். 100 கிலோ கொக்கெய்ன்  எத்தனை ஆயிரம் இளைஞர்களை நடைப் பிணமாக மாற்றும் என்பதும் புரிந்திருக்கும். ஆனால், அதை கடத்தி ஒப்படைத்து பணம் சம்பாதித்து விட வேண்டும், நமது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

வேறு என்னதான் செய்வது? “சமூகம் இப்படி இருக்கிறது, நாமதான் திறமையாக பார்த்து நம்முடைய நலனை காத்துக் கொள்ள வேண்டும். அதன் போக்கில் ஒரு சிலர் செத்துப் போனால், ஒரு சிலர் வதைபட்டால் நாம் என்ன செய்ய முடியும்? நமக்கு ஏதாவது என்றால் உதவி செய்ய யாராவது வருகிறார்களா என்ன? என்ன, பணம் இல்லை என்பதால் அம்மாவை சாக விட வேண்டுமா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் உயிர் வாழும் உரிமையா, என்ன?”

ஏன் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 15 லட்சம், மருத்துவக் கல்விக்கு ரூ 1 கோடி, வீடு வாங்குவதற்கு 1 கோடி, ஓய்வூதியத்திற்கு பல லட்சம் தேவை என்ற கேள்வி வருவதில்லை. கோகிலாவுக்கும் வருவதில்லை, இத்தகைய தேவைகளுக்காக பணம் திரட்ட ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களுக்கும் வருவதில்லை.

கோகிலா போல உறுத்தல் இல்லாமல் கடத்தல், கொலை என்று போவதில்லைதான். ஆனால் ஏரியை, ஆற்றங்கரையை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்கும் பில்டரிடம், உறுத்தல் இல்லாமல்தான் பலர் நிலம் வாங்குகிறார்கள், வீடு வாங்குகிறார்கள்.

ஏரியை ஆக்கிரமித்து, பல லட்சம் நன்கொடை வாங்கி கல்லூரி நடத்தும் கல்வி முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்து உறுத்தாமல்தான் சம்பாதித்து குடும்பம் நடத்துகிறோம். அத்தகைய கல்லூரியில் உறுத்தாமல்தான் குழந்தையை படிக்க வைக்கிறோம், அல்லது நாம் படிக்கிறோம்.

மருந்து விற்பனையாளராக மருத்துவருக்கு கையூட்டு கொடுத்து கூடுதல் மருந்து எழுத வைத்து உறுத்தாமல் சம்பாதிக்கிறோம்.
நமது வீட்டையோ, நாம் பயணிக்கும் மெட்ரோ ரயிலையோ, நாம் வேலை செய்யும் அலுவலகத்தையோ கட்டிய தொழிலாளி பற்றாக்குறை கூலியில் வேலை வாங்கப்படுகிறார் என்பது உறுத்தாமலேயே அவற்றை பயன்படுத்துகிறோம்.

நமது அலுவலகம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் உறுத்தாமல் அங்கு போய் அன்னிய கிளையன்டுக்கு வேலை செய்து சம்பளம் வாங்குகிறோம். புராஜக்டில் 2 பேருக்கு வேலை போகும் என்றால் சக ஊழியரை பலி கொடுத்தாவது தன் வேலையை தக்க வைக்க முயற்சிப்பவர்கள் இல்லையா? அப்படி முயற்சிக்காவிட்டாலும் நூற்றுக் கணக்கில் சக ஊழியர்கள் பலியிடப்படும் போது தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதை கோகிலாவின் தர்மத்துடன்ன் ஒப்பிட முடியாதா?

கோல மாவு கோகிலா செய்வது சரிதான் என்று தோன்றுவதன் அடிப்படை இங்கு இருக்கிறது. பணம் இருப்பவன்தான் உயிரோடு இருக்க வேண்டும் (மருத்துவ சிகிச்சை பெற முடியும்), பணம் இருப்பவன்தான் படிக்க முடியும், பணம் இருப்பவன்தான் வயதான காலத்தில் வாழ முடியும் என்ற சமூக நியதியை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொண்டு, அந்தப் பணத்தை ஈட்டுவதற்கு உறுத்தாமல் ‘கொலை’களை செய்கிறோம்.

“அம்மாவின் சிகிச்சைக்கு 15 லட்சம் ஆகும், அதை 3 மாதங்களுக்குள் செய்யா விட்டால் அதன் பிறகு உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்று அந்த மருத்துவர் எந்த உறுத்தலும் இல்லாமல்தான் கெடு விதிக்கிறார். “சாகும் நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை கொடுப்பதற்கு பணத்தை நிபந்தனையாக வைக்கிறோமே” என்று அவருக்கு உறுத்தவில்லை, அப்படி எல்லாம் யோசித்தால் அவர் குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? கொக்கெய்ன் கடத்தி வந்த பணத்தை பெற்றுக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறார்.

இவ்வாறு 21-ம் நூற்றாண்டு வாழ்க்கையின் நிதர்சனங்களை மிகைப்படுத்தப்பட்ட வடிவில் நமது மனதில் உறைக்கும்படி சொல்கிறது, கோலமாவு கோகிலா. எனவே, கோல மாவு கோகிலா குற்றவாளியா இல்லையா என்ற கேள்வியில் நாம் குற்றவாளியா இல்லையா என்ற கேள்விக்கான விடையும் அடங்கியிருக்கிறது.

– நெடுஞ்செழியன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/kolamavu-kokila-a-view/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஒன்றுபடுத்துவோம், ஒன்றுபடுவோம், சங்கமாக அணிதிரள்வோம் – ஆடியோ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவரின் ஆடியோ செய்தி. "ஐ.டி ஊழியர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் தமது பிரச்சனைகளை...

டுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்

"இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக...

Close