இன்று காலை 11 மணிக்கு போரூர் வரை சென்று சில பொருட்களை வாங்கி விட்டு மதியம் குன்றத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது குன்றத்தூரில் ஒரு முக்கிய சாலையில் தார் ரோடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.அப்போது வெயில் மிகமிக கடுமையாக இருந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
ரோடு போடுவதற்கு முன்பு ரோட்டை சுத்தம் செய்து பின்பு தார் போன்று ஒரு அடர்த்தி நிறைந்த ஒரு திரவத்தை ரோட்டின் அனைத்து பகுதிகளிலும் ஊற்றுவார்கள். அதை ஊற்றிய பிறகே சிறிய ஜல்லி கற்களாலான கலவையை சாலையின் மீது கொட்டுவார்கள். அப்பொழுதுதான் அது மிகவும் நன்றாக கிரிப்பாக இருக்கும் என்பதால்.
அப்பொழுது ரோடு போடுவதற்கு முன்பு,அந்த தார் போன்ற அடர்த்தியான திரவத்தை ஒரு தொழிலாளி காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தலையில் வெயிலை மறைப்பதற்கு ஒரு தொப்பி கூட அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு மிகுந்த விரக்தியுடனும் வேறு வழி இல்லாமலும் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார்.
வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. சாதாரணமாக கானல் நீர் என்பது சற்று தொலைவிலேயே தெரியும். ஆனால் அந்த வெயிலின் அதிகரிப்பால் மிகப் பக்கத்திலேயே கானல் நீரை பார்க்க முடிந்தது. ஏனென்றால் வெயிலின் அளவு மிகவும் அதிகமாகவும் அனல் காற்று அதிகமாகவும் வீசிக்கொண்டிருந்தது. இந்தக் கடுமையான வெயிலிலும் அவர் வேலை செய்யும்படி அவருடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நினைக்கும்போது வேதனையாக இருந்தது.
போனவாரம் எனது நண்பரொருவர் வீட்டை காலி செய்வதற்கு உதவிக்கு என்னை அழைத்தார். நானும் சென்று அந்தப் பொருட்களை டாட்டா ஏசி என்ற வாகனத்தில் வெயிலில் நின்று ஏற்றினேன். பிறகு வேறு வீட்டுக்கு சென்று பொருட்களை இறக்கும்போது வெயிலில் ஒரு மணி நேரம் நின்று கொண்டே இறக்கினேன். அந்த ஒரு மணி நேரத்திலேயே எனக்கு மயக்கம் வருவது போலிருந்தது. ஆனால் அந்தத் தொழிலாளி அசராமல் தொடர்ச்சியாக அந்த உக்கிர வெயிலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
எனது நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று அவரது வீட்டிற்கு ஒரு மெத்தை வாங்கியதாக சொன்னார். அந்த மெத்தையை டெலிவரி செய்ய வந்த ஓட்டுனர் அவருடன் பேசும்போது இந்த 40 நாளில் ஊரடங்கு காரணமாக வீட்டில் நன்றாக ஓய்வு எடுத்தோம். ஆனால் அந்த நாற்பது நாளின் ஓய்வை இந்த நாலு நாள் வெயிலில் ஒரேடியாக எடுத்துக் கொண்டுவிட்டது. வெயில் தாங்க முடியவில்லை. வண்டி ஓட்டவோ, பொருட்களை ஏற்றவோ,இறக்கவோ மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறினார்.
எப்படி பண மதிப்பிழப்பு திட்டமிடப்படாமல் செய்ததால் பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஏடிஎம் வங்கி வாசல்களில் நின்று அல்லல் பட்டார்களோ அதேபோல்தான் இந்த ஊரடங்கும் திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு. இதன் காரணமாய் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடைபயணம் மேற்கொண்டு 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள்.
ஊரடங்கு ஆரம்பத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்து 800 கிலோமீட்டர்,ஆயிரம் கிலோமீட்டர்,1500 கிலோமீட்டர் தாண்டியுள்ள தங்களது சொந்த ஊரை நோக்கி நடை பாதையாக செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்குத் தேவையான ரயில் வண்டியை, போக்குவரத்து வசதியை செய்து கொடுக்க இந்த அரசுக்கு வக்கு இல்லாத காரணத்தால் நடந்து செல்ல ஆரம்பித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் மும்பை அருகே இந்த மாதிரி குடும்பம் குடும்பமாக நடந்துசெல்லும் தொழிலாளர்களுடன் அவரும் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று அவர்களிடம் பேசி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.அவர் சொன்னது என்னவெனில் முன்பெல்லாம் ரோடுகளில் இருமருங்கிலும் மரங்கள் இருக்கும். இப்பொழுது இவர்கள் தேசிய நெடுஞ்சாலை என்று போட்டு டோல்கேட்டில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக சாலையின் இருபக்கத்திலும் சுத்தமாக மரங்கள் இல்லை. இந்த கடுமையான வெயிலிலும் அந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக கிட்டத்தட்ட ஆயிரத்து 500 பேர்கள் ஒன்றாக நடந்து கொண்டிருந்தார்கள் என்று அந்த நிருபர் தெரிவித்தார்.அவர்களுக்கு அடுத்தவேளை உணவு,நீர் கையில் இல்லை. கையில் மொத்தமாக ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அல்லது 500 ரூபாய் மட்டுமே வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த கொடுமையான வெயிலில் நடப்பதே மிகவும் கொடுமையாக இருந்ததாக அந்த பத்திரிக்கை நிருபர் தெரிவித்திருந்தார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே 40 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டிவி விவாதத்தின்போது 2 மருத்துவர்கள் கொரானாவில் இருந்து எவ்வாறு தப்பிப்பது ?அதை எவ்வாறு சரி செய்வது? என்பது போன்ற தலைப்புகளில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நிருபர் கேட்கிறார். மருத்துவரிடம் மக்கள் கொரானாவுடன் வாழ பழகிக் கொண்டார்கள் என்று?
அதற்கு அந்த மருத்துவர் சரியாக சொன்னார். வேறு வழியில்லாமல் தங்கள் குழந்தை குட்டிகளை பட்டினி போட விரும்பாமல் தங்களின் குடும்பத்தின் பசியைப் போக்க மட்டுமே வெளியில் வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி கொரானாவுடன் வாழ விரும்பவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த அரசுதான் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். அதை செய்யாமல் தவறும் பட்சத்தில் மக்களிடம் நீங்கள் கொரானாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று பேசுகிறார்கள் என்று அந்த மருத்துவர் சொன்னார்.
நடுத்தர மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு நினைப்பு உண்டு. தன்னைப்போல் தான் மற்ற அனைவரும் இருக்கிறார்கள் என்று.தற்போது இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டிவிட்டது இதில் வருமான வரி தாக்கல் செய்து கட்டுபவர்கள் வெகுசில லட்சம் பேர் மட்டுமே. மாதச் சம்பளம் பெறுபவர்கள் சேர்த்தால் ஒரு ஐந்து கோடி பேர் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த நடுத்தர மக்கள்தான் கொரானாவை கட்டுப்படுத்த விளக்கு போடுவதையும்,கை தட்டுவதையும், ராமாயணம் போடுவதையும் பெருமையாகவும் அவசியமாகவும் பார்க்கிறார்கள்.மீதி உள்ள பெருவாரியான மக்கள் கட்டட வேலை செய்து கொண்டும், விவசாய வேலை செய்து கொண்டும், ரோடு போட்டுக் கொண்டும், ஆட்டோ ஓட்டுனர் ஆகவும், தினக்கூலிகளாகவும் உள்ளனர்.
இதுதான் இந்தியாவின் உண்மை நிலை.
- ராமசாமி
1 ping