புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை

கோவை காக்னிசன்ட் (சி.டி.எஸ்) நிறுவனத்தில் கட்டாய பதவி விலகல் கடிதம் கொடுக்க வைக்கப்பட்ட ஒரு ஊழியர் தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 2A-ன் கீழ் கொடுத்த புகாரின் மீதான முதல் கட்ட சமரச பேச்சுவார்த்தை இந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதம் கொடுக்க வைக்கப்பட்ட ஊழியர்களில் 2 பேரும், எம்.எஸ் ரேட்டிங் கொடுத்து புராஜக்டில் இருந்து விடுவிக்கப்பட்டு ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டும் ஊழியர்களில் 5 பேரும், அவர்களுக்கு ஆதரவாக பிற ஊழியர்களும் தொழிலாளர் துறையை அணுகி முறையீடு செய்திருந்தனர்.

தொழிலாளர் ஒற்றுமை

ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்று அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் இணைத்து போராடுவதற்கு ஐ.டி ஊழியர்கள் முன்வர வேண்டும்.

அதைத் தொடர்ந்து நிர்வாகம், ஊழியர்கள், தொழிலாளர் துறை என 2-வது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜூன் 15-ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அப்ரைசல் முறை, எச்.ஆர் மிரட்டல்கள் தொடர்பாக தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 2K-ன் கீழ் புகார் அளிப்பதற்கும் நிறுவனத்துக்குள் ஊழியர்கள் எதிர் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் கூட்டாக எதிர்கொள்வதற்கும் தொழிற்சங்கமாக அமைப்பாக்கிக் கொள்வது அவசியம். எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்களும், பிற ஊழியர்களும் கூடி பேசி கோவையில் ஐ.டி ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் அமைப்பது பற்றி விவாதிக்கலாம் என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி –  – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பாக வழிகாட்டப்பட்டது.

அதன்படி 15-ம் தேதி முதலில் காலை 9.00 மணி அளவில் தொழிலாளர் அலுவலக வளாகத்தில் சி.டி.எஸ் ஊழியர்களும், விப்ரோ ஊழியர்களும், பு.ஜ.தொ.மு உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

அதில் தொழிலாளர்களுக்கு இன்று இருக்கும் தொழிற்சங்க உரிமையும்,  சட்ட ரீதியான பாதுகாப்புகளும் வென்றெடுக்கப்பட்ட போராட்ட வரலாறு குறித்து விளக்கப்பட்டது. ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியோடு தோன்றி வளர்ந்த தொழிலாளர் இயக்கம் குறித்தும் இந்தியாவில் தொழிற்சங்க வரலாறு பற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டது. வெள்ளை ஆட்சியாளர்கள் முதல் உலகப் போரின் போது தொழிலாளர்கள் மீது தீவிரப்படுத்திய சுரண்டல், 1917 ரசியாவில் நடந்த சோசலிச புரட்சி, 1920-களில் சென்னை பின்னி ஆலை தொழிலாளர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் இவற்றின் தாக்கத்தினால்தான் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் இயற்றப்பட்டது. தொழில் தகராறு சட்டம் 1947 உட்பட 44 மத்திய சட்டங்களும், பல்வேறு மாநில சட்டங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களின் விளைவாக உருவானவை என்று விளக்கப்பட்டது.

பிறகு ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் தொழில்நுட்ப அறிவில் முன்னேறிய ஐ.டி ஊழியர்கள் பிரிவினர் எதிர்கொண்டு வரும் கார்ப்பரேட் அடக்கு முறை இப்போது தீவிரமடைந்துள்ளது. எனவே இது தொடர்பான எந்த அடிப்படையும் இல்லாத பயத்தை விடுத்து தொழிற்சங்கமாக அணிதிரள வேண்டும் என்று விளக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள மொத்தம் 51 கோடி உழைப்பாளர்களில் சுமார் 4.5 கோடி பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள்; தொழிலாளர் சட்டங்களின் கீழ் வருபவர்கள். அந்த பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் இப்போதைய மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்று அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் இணைத்து போராடுவதற்கு ஐ.டி ஊழியர்கள் முன்வர வேண்டும் என்று பேசப்பட்டது.

தொழிலாளர் அலுவலர் 12.30 மணிக்கு மேல் 2A பிரிவின் கீழ் புகார் அளித்தவர்களை மட்டும் அழைத்து தனியாகவும், பின்னர் கட்டாய பதவி விலகல் தொடர்பாக புகார் அளித்தவர்களை தனியாகவும் அழைத்து பேசினார்.

2A புகார் அளித்த இருவருக்கு எச்.ஆர் உடன் சமரச பேச்சுவார்த்தை நடநதது. அவர்களது தகுதி, திறமைக்கு ஏற்ற பொருத்தமான புராஜக்டில் சேர்த்துக் கொள்ளுமாறும் அப்படி வாய்ப்பு கோவையில் இல்லை என்றால் பிற இடங்களில் வாய்ப்பு அளிக்குமாறும் எச்.ஆர் அதிகாரிகளிடம் தொழிலாளர் அலுவலர் அறிவுறுத்தினார். ஊழியர்கள் எச்.ஆரை சந்தித்து தங்கள் வேலையை திரும்பப் பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்துமாறு கூறினார். இது தொடர்பாக அடுத்த சமரச பேச்சு வார்த்தை ஜூன் 29 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பிறகு அப்ரைசல் குறித்தும், புராஜக்டில் சேர்க்கப்படாமல் வைக்கப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்த ஊழியர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அப்ரைசல் தொடர்பாக பேசும் போது, 10% ஊழியர்களுக்கு எம்.எஸ் ரேட்டிங் கொடுக்குமாறு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் பெற்றிருப்பதாக மேலாளர் கூறியதை குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து எம்.எஸ் ரேட்டிங்-ஐ முன்னிறுத்தி புராஜக்ட் மறுப்பது, பதவி விலகச் சொல்லி வற்புறுத்துவது என்று தாங்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையை விவரித்தனர். பதவி விலகுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் எம்.எஸ் ரேட்டிங் தொடர்பாக ஏதோ தனிப்பட்ட மேலாளர் தவறாக கூறியிருக்கிறார் என்று நிர்வாகத் தரப்பில் சமாளித்தனர்.

இந்தத் தகராறை நிறுவனத்துக்குள் பேசி தீர்த்துக் கொள்வதாகவும், மீண்டும் தொழிலாளர் துறைக்கு வராமல் பார்த்துக் கொள்வதாகவும் எழுதி எச்.ஆர் தரப்பும் ஊழியர்களும் கையொப்பமிட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன்படி புகார் கொடுத்த ஊழியர்கள் எச்.ஆர்-உடன் பேசி தமது அப்ரைசல் ரேட்டிங், புராஜக்ட் ஒதுக்கீடு குறித்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வழிகாட்டப்பட்டது.

தொழிலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் ஊழியர்களின் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்து விட்டால் பிரச்சனை அத்தோடு முடிந்து விடும். “லட்டு இருப்பதால்தான் ஈக்கள் மொய்க்கின்றன. லட்டை அகற்றி விட்டால் எல்லோரும் கலைந்து விடுவார்கள்” என்று நிர்வாகத் தரப்பும், தொழிலாளர் அலுவலரும் பேசிக் கொண்டதை கேட்ட ஊழியர்கள், ஊழியர்கள் ஒன்றாக திரண்டு விடுவதை எப்படியாவது தடுப்பது என்ற அவர்களது உள்நோக்கத்தை புரிந்து கொண்டனர். தொழிற்சங்கமாக அணிதிரண்டு போராடுவதுதான் நமது நலனை பாதுகாக்க ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்டனர்.

செய்தி : வீரன்

Series Navigation<< “ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/labour-department-advises-cts-to-allocate-projects-to-employees/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது!

வழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும்,...

சிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா?

பண பலம் இல்லாதவர் எந்த தவறு செய்தாலும் அவரை விடக்கூடாது சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் கோவப்படுகிறோம். ஆனால், இதே பணபலம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வது...

Close