லெனினிடம் கற்போம் : மார்க்சியம் பற்றிய அறிமுகம்

மார்க்சியம் – அது உருவான காலத்திலிருந்தே அதை எதிர்க்கும் கோட்பாடுகளோடு மட்டுமின்றி, அதை திரித்து புரட்டும் சக்திகளோடும் தொடர்ந்த போராட்டங்களின் மூலமாகவே தனது உயிர்த்துடிப்பான பொருத்தப்பாட்டை நிரூபித்து வருகிறது.

#NDLFCelebratesLenin

கடந்த 10 ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தை பீடித்துள்ள பொருளாதார நெருக்கடி, மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையிட அனுமதிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள், அதைத் தொடர்ந்து பொருளாதார தேக்க நிலையை உடைத்து “வளர்ச்சி”யைக் கொண்டு வரப் போவதாக சவடாலோடு ஆட்சியைப் பிடித்த மோடி இன்னும் தீவிரமாக நாட்டை பேரம் பேசிக் கொண்டிருப்பது என நமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு முட்டுச் சந்தில் சிக்கியிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மார்க்சியத்தின் மீதான ஆர்வமும், அதைக் கற்றுக் கொள்வதற்கான தேடலும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் மூலதனம் நூலை படிக்க வேண்டுமா? இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை தெரிந்து தெளிய வேண்டுமா? எப்படி ஆரம்பிப்பது? மார்க்சிய கல்விக்கான வாசிப்பை நடைமுறையோடு எப்படி இணைப்பது?

இத்தகைய பல கேள்விகளுக்கான விடைகளை மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்க்கையையும், பணிகளையும், போதனையையும் குறித்து வி.இ.லெனின் எழுதிய பிரபல கட்டுரைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 1985-ம் ஆண்டில் முன்னேற்ற பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பில் வெளியான இந்தக் கட்டுரைகளின் தொகுப்பை கீழைக்காற்று வெளியீட்டகம் மறுபதிப்பு செய்துள்ளது. ரசியாவில் 1905 புரட்சிக்குப் பிந்தைய நிலைமையில், மார்க்சியத்தை திரித்து புரட்டும் முயற்சிகளை முறியடிக்க, அன்றைய அரசியல், பொருளாதார சூழலை ஆய்வு செய்ய மார்க்சிய கோட்பாடுகளை பிரயோகித்து எப்படி சரியான முடிவுகளை வந்தடைவது என்பது குறித்து லெனின் இந்த கட்டுரைகளில் விளக்குகிறார்.

இந்தக் கட்டுரைகள் கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் போதனையின் விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காட்டுகின்றன. “மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூட நம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.

ஜெர்மானிய தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் என்ற வடிவத்தில் 19-ம் நூற்றாண்டில் மனிதகுலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்”.

மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார். ஆனால் இவை வீணான முயற்சிகள்; ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத்திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்கு காட்டும் தத்துவம் என்ற வகையில் மார்ச்கியத்திற்கு மேன்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது.

இத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகிய கட்டுரைகளில் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் இளமைப் பருவக் கல்வி, வாழ்க்கை போராட்டங்கள், இருவரும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியது, பிரான்சிலும், ஜெர்மனியிலும் நடந்த புரட்சிகளில் அவர்களது பங்கு, அகில உலக தொழிலாளர் கழகத்தை உருவாக்கி வழிகாட்டி நடத்தியது, தொழிலாளர் வர்க்க இயக்கங்களில் நிலவிய பல்வேறு சந்தர்ப்ப வாத போக்குகளை முறியடித்தது என்று அவர்களது வரலாற்றை தொகுத்து அளிக்கிறார் லெனின்.

மேலும் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய பொருளாதாரம், சோசலிச அரசியல் ஆகியவற்றின் சாராம்சமும் இந்தக் கட்டுரைகளில் தொகுத்து வழங்கப்படுகின்றன. மார்க்சின் பணிகளுக்கு உறுதுணையாகவும், அவரது மறைவுக்குப் பின் அவற்றை தொடர்பவராகவும், நிறைவு செய்பவராகவும் தனது வரலாற்றுக் கடமையை செய்த எங்கெல்சின் பங்களிப்பு குறித்த சித்திரத்தையும் இந்தக் கட்டுரைகள் தருகின்றன.

நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள அடிக்குறிப்புகளும், பெயர்க்குறிப்புகளும் மார்க்சியம் பற்றிய ஒரு சுருக்கமான பார்வையை வாசகருக்கு அளிக்கின்றன.

சமகால அரசியல் பொருளாதாரத்தை புரிந்து கொள்ள விளையும் முன்னணியாளர்களும், மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஆரம்ப நூல்.

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்

– லெனின்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 60
பக்கங்கள் : 120

நன்றி : வினவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/learn-from-lenin-introduction-to-marxism/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மத்திய அரசின் விருதுகள் : பாரத ரத்னாவா, பா.ஜ.க ரத்னாவா?

மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி தனது ஆட்சிக்கு துணை நின்றவர்களில் மதம், சாதி, இயக்கம் என்று இன்னும் ஒருபடி மேலே போய் ஆராய்ந்து பட்டியல் தயாரித்துள்ளது. இது...

கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் பார்ப்பன மேலாதிக்கம்

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அதே வேளையில் தமிழர்களின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் கீழடியின் கண்டுபிடிப்புகளை பாதுகாக்கவும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் தமிழ் சமூகம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Close