இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சமயம், பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். “மாசக் கடைசியானாலே இவங்க தொல்ல தாங்கமுடியாது” என்றார் உடனிருந்த நண்பர்.
வியாபாரம் செய்பவர்களிடம், வியாபாரம் எப்படி உள்ளது என்றால், “மாசக் கடைசி…, கொஞ்சம் சுமார்தான். ஒன்றாம் தேதிக்குப் பிறகுதான் நன்றாக இருக்கும்” என்பார்கள்.
அதாவது, மாதக் கடைசியில் சம்பளப் பணம் வந்து சேருவதை வைத்து பல துறைகள் இயங்குகின்றன.
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் வங்கிகணக்கில் பணம் வந்து சேரும் தேதியை வைத்து, எவ்வளவு பணம் வரும் என்பதை வைத்தும் பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள். (இப்போதோ கடன் கொடுத்த வங்கிகள், நமக்கு முன் கணக்கை திறந்து மாதத் தவணையை கறந்து கொள்கின்றன).
“சம்பளம் எவ்வளவு வரும்”, “எப்போது வரும்”, “பணமாக வருமா, பொருளாக வருமா?”, அதெல்லாம் விடுங்கள் “சம்பளம் வருமா வராதா” என்றே தெரியாது என்ற ஒரு நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்..
“ஒரே நிறுவனத்தில் ஒரே வேலை செய்பவர்களுக்கு வெவ்வேறான சம்பளம்; முதலாளி விருப்பப்பட்டால் தருவார்; எப்போது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது” – இப்படிப்பட்ட ஒரு நிலைமையை எண்ணி பாருங்கள்.
“ஜோர்” படத்தில் சத்யராஜிடம் வேலை செய்யும் வடிவேலு, “சம்பள உயர்வு வேண்டும்” என்று கேட்பார், கால்குலேட்டரை கையில் கொடுத்து கணக்கு போடச்சொல்லும் சத்யராஜ் “கடைசியில் நீதான் எனக்கு 25 ரூபாய் பணம் தரவேண்டும்” என்பார்.
அது நகைச்சுவையாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு பல இடங்களில் நடந்திருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதன் விளைவுதான் சம்பள பட்டுவாடா சட்டம் 1936.
இந்தச் சட்டத்தின் அறிமுக உரை இப்படிச் சொல்கிறது. “இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சியை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தபட்ட தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகள் மோசமாகிக் கொண்டே வந்தன. தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒழுங்கான கூலி வழங்காத நிலை இருந்தது. இந்தச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது”
“1926-ம் ஆண்டு அப்போதைய காலனிய அரசு, சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் பற்றியும் அபராதங்கள் விதிக்கப்படுவது பற்றியும் தகவல் திரட்டும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதியது. விசாரணையின் போது இரண்டு வகைகளிலும் முறைகேடுகள் நடப்பதை தெரிய வந்தது.”
இதைத் தொடர்ந்து “சம்பள பட்டுவாடா மசோதா, 1935” சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 23, 1936-ல் ஒப்புதலை பெற்றது. அது சம்பளம் பட்டுவாடா சட்டம் 1936 என்று அழைக்கப்படுகிறது.

பி.எஃப் விதிகளில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தங்களை திரும்பப்பெற வைத்த பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்
இந்த சட்டத்தில் யார் தொழிலாளி, சம்பளம் வழங்கும் முறை, எந்தமாதிரியான தவறுகளுக்கெல்லாம் முதலாளி, தொழிலாளியின் சம்பளத்தை பிடித்தம் செய்யலாம், எதற்கெல்லாம் பிடித்தம் செய்யக்கூடாது போன்ற விவரங்கள் உள்ளன.
தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்தகராறு சட்டம் 1947 முதலான 44 மத்திய சட்டங்களும் கூடுதலான மாநில சட்டங்களும் உள்ளடக்கிய தொழிலாளர்களின் போராட்டத்தால் வென்றெடுக்கப்பட்ட இதுபோன்ற சட்டங்கள்தான் தொழிலாளி வர்க்கத்துக்கு குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பை தந்துள்ளன என்பது வரலாறு. தொழில்துறையின் ஆரம்ப காலங்களில் இருந்த சுரண்டல் முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களின் வியர்வையும், இரத்தமும் ஈட்டிய வெற்றிகள்தான் இந்த தொழிலாளர் சட்டங்கள்.
இன்று கடந்த 25 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளால் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் நீர்த்துப் போக வைத்து விட்ட நிலையில், சட்டப் புத்தகத்திலும் இவற்றை மாற்றி எழுதி, ரத்து செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. இதன் விளைவுதான் இன்று தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும், வேலை நேர அதிகரிப்பு, திடீர் பணிநீக்கம், ஒப்பந்தத் தொழிலாளர் முறை முதலான சுரண்டல் முறைகள்.
காலனிய ஆட்சியாளர்களே தொழிலாளர் போராட்டங்களுக்கு பணிந்து இயற்றிய சட்டங்களை, தொழிலாளி வர்க்கத்தின் செயலின்மையால் இன்றைய காலனிய ஆட்சி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மாற்றுவதை நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?
தனி நபராக சிந்திக்கும் போது கார்ப்பரேட்டுகளின் தொழிலாளர் விரோத போக்குகளை எதிர்த்து முறியடிக்க முடியுமா என்று நமக்கு தோன்றுவது இயல்புதான். வர்க்கமாக இணைந்து சட்டப் போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் உணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் நமது உரிமைகளுக்காக போராடும் போதுதான் வென்ற உரிமைகளை தக்க வைத்துக் கொண்டு, மேலும் உரிமைகளை பெறுவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்தை சுரண்டல் தளையிலிருந்து விடுவிப்பதற்கான பாதையை சமைக்க முடியும்.
– பிரவீன்