ராபர்ட் கால்டுவெல் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருவது என்ன?

ண்பர்களே,

1814-ல் அயர்லாந்தில் பிறந்த ராபர்ட் கால்டுவெல்லின் 203-வது பிறந்தநாள் இன்று. தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தனித்த, சுயேச்சையான மொழி பாரம்பரியம் கொண்டது என்று நிறுவிய “திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்” என்ற கால்டுவெல்லின் நூல் இந்திய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்று

கிறித்தவ மதப் பிரச்சாரத்துக்காக தமிழகத்திற்கு வந்த கால்டுவெல் தாழ்த்தப்பட்ட சாதியினராக ஒதுக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களோடு வாழ்ந்து அவர்கள் கல்வி கற்கவும், அவர்கள் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டிருக்கிறார்.

21-ம் நூற்றாண்டில் இன்னமும் சாதிய பிற்போக்கும், மத மூடநம்பிக்கைகளும் கோலோச்சி வரும் இந்த நேரத்தில் வரலாற்றையும், சமூகத்தையும் எப்படி அணுக வேண்டும் என்று படித்த, அறிவுத் துறையினர் கற்றுக் கொள்வதற்கான ஒரு முன்மாதிரியானது கால்டுவெல்லின் வாழ்க்கை. ஐ.டி துறையினரான நாம் கால்டுவெல்லின் ஆய்வுப் பணி கண்டறிந்த உண்மைகளை  வளர்த்துச் செல்வதற்கு ஆதரவு அளிப்போம்.

அந்த வகையில் கால்டுவெல்லின் 200-வது  பிறந்தநாள் ஆண்டில் புதிய ஜனநாயகம் பத்திரிகையின் ஜூன் 2014 இதழில் வெளியான கட்டுரையை வெளியிடுகிறோம்.

ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம் ! பார்ப்பன எதிர்ப்பு தமிழ்மரபை மீட்டெடுப்போம் !!

ராபர்ட் கால்டுவெல்பார்ப்பன பாசிசம் ஆட்சியைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், தமிழ் மொழியின் இருப்பைக் காலி செய்திடும் அதிகாரத் திமிர் எல்லாத் தளங்களிலும் கோலோச்சுகின்றது. உயர் கல்வியில் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளிலும் இனி தமிழ் இல்லை என்றாக்கிட ஜெயலலிதா ஆங்கிலக் கல்வியைத் திணிக்கின்றார். இன்று சமஸ்கிருதப் பண்பாடும், ஆங்கில மோகமும் வெறிகொண்டு ஆடுகின்றன. தமிழை உயர்த்திப் பிடிப்போரைக் கேவலமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வை சகலரிடமும் விதைக்கப்படும் சூழலில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-வது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.

1814-ல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்பிற்காகத் தமிழகத்திற்கு வந்தார். சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது. அதுவரை, ‘இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும், அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான்’ என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

முன்னதாக, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளந் தெளிவாக நிரூபித்தது.

1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி.

3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல.

4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது. அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், ‘திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது’ என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். ‘தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது’ என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ். எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர் .எஸ். எஸ்.-ஐ வளர்க்கின்றனர்.

இன்று மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் பாசிச ஆட்சி வந்துள்ள சூழலில் மீண்டும் சமஸ்கிருத மேலாக்கம், சமஸ்கிருதப் பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட உள்ளது. மக்களிடமும் சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டின் பேரில் கூடுதலான பற்று விதைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர்விளங்கா வழிபாடுகளைக் கொண்டுவருவது வரை பார்ப்பனிய மீட்சி நடந்து வருகின்றது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார் – என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொருபுறம், தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கின்றது. தாய்மொழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழியைக் கொண்டுவந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது. இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், ”பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

– அழகு
புதிய ஜனநாயகம், ஜூன் 2014 இதழிலிருந்து

____________________________________

Permanent link to this article: http://new-democrats.com/ta/learning-from-the-life-of-robert-caldwell/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி

இந்த அரசும் அரசு நிறுவனங்களும் ஏற்கனவே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து அவர்களை வஞ்சித்து வருகின்றன. தம்மால் வகுக்கப்பட்ட விதிகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு தோல்வியைத் தழுவியுள்ளன.

ஈமச் சடங்கு – ரசிய மே தினக்கதை

ஜாரின் எதேச்சதிகார ரஷ்யாவில், தொழிலாளிகள் தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தினர். மே தினத்தைக் கொண்டாடக் கூடாதென்று தொழிலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் கூட்டமாகச் சேருவதற்கோ,...

Close