லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது.
அரசு என்ற நிறுவனம் எப்போதும் இருந்து வந்திருக்கிறதா? அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? ‘வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு’ என்கிறார் லெனின். அரசு என்பதே ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்கான கருவி. ‘சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது’ என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர்.
அரசு என்ற நிறுவனத்தின் தன்மை என்ன? அதன் கட்டமைப்பு உறுப்புகள் எப்படிப்பட்டவை? ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், போலீசும், அதிகார வர்க்கமும் இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது.
அரசு சம்பந்தமாய் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமை என்ன? புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள்.
அரசு என்றென்றைக்கும் இருக்குமா? அரசு இல்லாமல் மக்கட்சமுதாயம் வாழ முடியாதா? பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். ‘உலர்ந்து, உதிர வேண்டியதுதான்’ என்கிறார் லெனின்.
அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானதா? ஜனநாயகம் என்றால் என்ன? எல்லாருக்கும் ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன? அது சாத்தியமா? இல்லை என்றால் அது ஏன்? பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு எப்படிப்பட்டதாய் இருக்கும்?
ரஷ்யாவில் புரட்சிகள் (பிப்ரவரி&நவம்பர்) நடைபெற்ற கால கட்டத்தில், 1916/17-ல் தலைமறைவாய் இருந்த லெனின் எழுதிய இந்தப் புத்தகம் இதைதான் பேசுகிறது. மேலும் அரசு பற்றிய மார்க்சியக் கருத்துகளை திரித்துக் கூறும் சந்தர்ப்பவாதிகளை அமபலப்படுத்தும் லெனின் அரசு பற்றியும் புரட்சி பற்றியும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை துலக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
புத்தகம் கிடைக்குமிடம் : கீழைக்காற்று & பாரதி புத்தகாலயம்
1 ping