விவசாயிகளுக்கான, உழைக்கும் மக்களுக்கான தலைவர் எப்படி இருப்பார்?

புதிய தொழிலாளி ஏப்ரல் 15 – மே 14, 2017 இதழில் வெளியான கட்டுரை

லெனின் நமக்காகக் காத்திருக்கிறார்….!

1917-ம் ஆண்டு… ரசிய நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஆட்சி தொடங்கி 10 நாட்கள்தான் ஆகியிருந்தன. “உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற உத்தரவுப்படி பணக்கார விவசாயிகள், பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது. இந்தப் புதிய ஆட்சி வீழ்ந்து பழைய எஜமானர்கள் மீண்டும் வந்து விட்டால் செமத்தியாக உதைத்து, கொடுத்த நிலத்தையும் பிடுங்கிக் கொள்வார்களோ என சில விவசாயிகளுக்குப் பயம் இருந்தது. அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ஒரு கிராமத்து விவசாயிகள் தங்கள் பிரதிநிதியை, நாட்டின் ஆட்சித் தலைவரிடம் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ள முடிவு செய்தார்கள். அவர் தலைநகரத்திலுள்ள ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து விவசாயம் – நிலம் சம்பந்தமான அதிகாரிகளைப் பார்த்தும் திருப்தி அடையாமல், “தலைவரைத்தான் பார்க்க வேண்டுமென்று ஊரார் சொல்லியிருக்கிறார்கள், வேறு வழியே கிடையாது, பார்த்தாக வேண்டும்” எனக் கூறி, பார்த்துப் பேசி விட்டும் சென்றார்.

லெனின்

மார்க்சியம் என்னும் உழைக்கும் மக்கள் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டா மாபெரும் தலைவர் லெனின்.

விவசாயிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதும், அவர்களது வாழ்க்கை நிலைமை, புதிய சோசலிச அரசு பற்றிய அவர்களது கருத்துக்கள், என்ன உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு உடனடியாக செய்து கொடுப்பதும்தான் அத்தலைவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருந்தது. தனக்கு நேரமில்லையென எப்போதும் சொன்னதே இல்லை. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் அவரை நேரில் சந்திக்க எப்போதும் வந்து கொண்டே இருந்தார்கள். அந்தத் தலைவர்தான் ஏழைப்பங்காளன் தோழர் லெனின்.

ஆனால், நமது நாட்டில் என்ன நடக்கிறது. தென்கோடி தமிழகத்திலிருந்து, வயதான விவசாயிகள் நாட்டின் தலைநகரத்திற்குச் சென்று பனியிலும், வெயிலிலும் வாடுகிறார்கள். சரியான உணவும், உறங்க இடமும் இன்றி சாலைகளில் கிடக்கிறார்கள். விதவிதமான போராட்டங்களை நடத்துகிறார்கள். எதற்காக?

“நாட்டு விவசாயிகளின் நிலைமை மோசமாக இருக்கிறது, விவசாயத்துக்குக் கொடுத்த கடன்களை ரத்து செய்யுங்கள், முறையான வறட்சி-வெள்ள நிவாரணம் கொடுங்கள், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமையுங்கள், விவசாயத்தை மேம்படுத்த நதிகளை இணையுங்கள்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள். அவர்களை சந்திக்க மத்திய அரசிலிருந்து யாரும் வரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மூலம் சில அமைச்சர்களையும், குடியரசுத் தலைவரையும் போய்ப் பார்த்து மனு கொடுத்தார்கள்.

“எப்படியாவது பிரதமரைப் பார்த்து மனு கொடுத்து பேசிவிட வேண்டும், கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே கிடப்போம், முடியா விட்டால் சாவோம்” என்கிறார்கள். ஆனாலும், அவர்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை.

மோடி ஏன் விவசாயிகளைப் பார்க்க வரவில்லை என்று கேட்டால், ‘நாடு முழுவதையும் ஆள்பவருக்கு இதற்கெல்லாம் நேரமிருக்குமா? எல்லாவற்றையும் அவரே பார்க்க முடியுமா, அமைச்சர்களைப் பார்த்தார்களே, போதாதா’ என்கிறான், எச்சில் ராஜா.

நாட்டின் தண்ணீர் வளத்தைக் கொள்ளையடித்து, நம்மிடமே விற்றுக் கோடிகளில் டாலர்களைக் குவிக்கும் பெப்சி நிறுவனத் தயாரிப்புக்களை குடிக்க மாட்டோம் எனத் தமிழர்கள் புறக்கணிக்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பெப்சி கம்பெனி தலைவர் இந்திரா நூயி உடனடியாக மோடியைப் பார்த்து பேசுகிறார். அடுத்த நாளே வர்த்தக அமைச்சர், பெப்சி-கோக் புறக்கணிப்பு ஜனநாயக விரோதம் என்ற அறிக்கை விடுகிறார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையோ காய்ந்து கிடக்கும் தாமிரபரணியிலிருந்து ஆழ்துளை போட்டேனும் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ள அனுமதி கொடுக்கிறது. சினிமா நடிகர்- நடிகர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் பார்த்து பாதசேவை செய்வதற்கு நேரமிருக்கிற பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைப் பார்க்கவே நேரமில்லை. இதுதான் மக்களாட்சியா?

****

லெனின் விவசாயிகளுடன்

அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் மக்களை விட சலுகைகள் பெற எந்தத் தனித்தகுதியும் கிடையாது; மக்களைப் போல, அவர்களை விடவும் கீழ்நிலையில் வாழ்வதுதான் சரியென்பது லெனினின் கண்ணோட்டமாக இருந்தது.

1919-ம் ஆண்டு ரசியா முழுவதும் மிகப்பெரிய உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ரேசன் முறை கொண்டு வரப்பட்டு, சாதாரண மக்கள் முதல் அதிபர் லெனின் வரை ஒரே அளவிலான ரொட்டிதான் கொடுக்கப்பட்டது. ரொட்டி விநியோகிப்பவர்கள் ஒரு நாள் லெனின் அலுவலகத்தில் சமையல் பொறுப்பில் இருந்த பெண் தோழரிடம் லெனினுக்கான ரொட்டியைக் கொடுக்கும் போது மறதியாக வழக்கமாகக் கொடுப்பதை விடக் கூடுதலாகக் கொடுத்து விட்டார்கள். அந்தப் பெண் தோழரோ இன்றைக்காவது லெனினுக்குக் கொஞ்சம் கூடுதல் ரொட்டியைக் கொடுத்து விடலாம் என்று நினைத்து கூடுதல் அளவு ரொட்டியை தட்டில் வைத்து விட்டு லெனின் தன்னை பாராட்டுவார் என்ற காத்திருந்தார். ரொட்டி வழக்கத்தை விட அதிகமாக இருப்பதைப் பார்த்த லெனின், “ரொட்டி அதிகமாக இருக்கிறதே, யார் கொடுத்தார்கள்? எதற்காக முறையை மீறி எனக்கு மட்டும் சலுகை காட்டுகிறீர்கள்?” எனக் கடுமையாகக் கேட்டார். இனி ஒருபோதும் இப்படி செய்யாதீர்கள் எனக் கடிந்து கொண்டார்.

லெனின் மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுகிறார், மிகவும் மெலிந்து போய் விட்டார் என்பதை அறிந்த விவசாயிகள் உடனடியாகத் தமது கிராமக் கூட்டத்தைக் கூட்டி, உடனே லெனினுக்கு உணவு அனுப்ப வேண்டுமென முடிவு செய்து, தங்களிடம் இருந்த மாவில் ஆளாளுக்கு பங்கு கொடுத்து, மிகவும் சிறப்பான உணவுப் பண்டங்களைத் தயார் செய்து அனுப்பினார்கள். இது போல பல ஊர்களில் இருந்தும் வண்டி வண்டியாக வந்த உணவுப் பொருட்களைக் கண்டு திகைத்துப் போன லெனின், “குழந்தைகள் எல்லாம் பட்டினி கிடக்கிறார்களே எனக் கவலையாக இருந்தது… இதையெல்லாம் பள்ளிகளுக்கு அனுப்பி விடுங்கள்” என உத்தரவிட்டார்.

அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் மக்களை விட சலுகைகள் பெற எந்தத் தனித்தகுதியும் கிடையாது; மக்களைப் போல, அவர்களை விடவும் கீழ்நிலையில் வாழ்வதுதான் சரியென்பது லெனினின் கண்ணோட்டமாக இருந்தது. பல நாட்களாக சரியாக சாப்பிடாத காரணத்தால் கூட்டத்திலேயே மயங்கி விழுந்த விவசாயத் துறை அமைச்சரும் லெனினோடு இருந்தார். தலைவர் எவ்வழி, பிறரும் அவ்வழி என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தனர் அத்தோழர்கள்.

இந்திய மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுக் கூடம்தான் நாட்டிலேயே மிகவும் விலை குறைவான, ஆனால் உயர்தரமான உயர்வகை உணவு கிடைக்குமிடம். ஆனால், நமது நாட்டில் பாதி மக்கள் இராப்பட்டினி கிடக்கிறார்கள். குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இரத்த சோகையோடு இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து நாசமாகின்றன. எலிகளும், புழு பூச்சிகளும் தின்று கொழுக்கின்றன. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மக்களது உணவு உரிமையே பறிக்கப்படுகிறது. இதுதான் மக்களாட்சி எனக் காதில் பூ சுற்றுகின்றனர். மக்களோடு மக்களாகப் பட்டினி கிடந்த லெனினும், பிற தோழர்களும், மக்கள் சேவகர்கள் என்ற கருத்தோடும் எப்படியாவது மக்களை நன்றாக வாழவைப்பதே தமது இலட்சியம் என்றும் நினைத்தார்கள். காரணம், மார்க்சியம் என்னும் உழைக்கும் மக்கள் தத்துவம் அவர்களை வழிநடத்தியது. இங்கோ முதலாளிகள் கொள்ளையடிக்க வழிதிறந்து விடுவது தமது லட்சியம் என்று கருதும் மோடி போன்றவர்களை சுரண்டலையே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவம் வழிநடத்துகிறது.

லெனின்

“வறுமையில் இருக்கின்ற நம் நாட்டு மக்கள் செல்வம் படைத்தவர்களாக ஆனபின், நான் எனக்கு ஒரு புதிய ஆடையை வாங்கிக் கொள்கிறேன்.” – லெனின்

10 லட்ச ரூபாய்க்கு உடை தைத்து ஒரு முறை மட்டும் போடுகிறார் பிரதமர் மோடி. மக்களும், தோழர்களும் நல்ல துணியுடுக்க வேண்டுமென அக்கறை காட்டிய லெனினின் நிலைமையைப் பாருங்கள். நாட்டை ஆள்பவர் ஒரு புதிய உடை கூட வாங்காமல் இருக்கிறாரே என மிகவும் நைந்த நிலையில் இருந்த லெனினது உடையை சுத்தம் செய்த பணியாளர் வருத்தப்பட்டார். “வறுமையில் இருக்கின்ற நம் நாட்டு மக்கள் செல்வம் படைத்தவர்களாக ஆனபின், நான் எனக்கு ஒரு புதிய ஆடையை வாங்கிக் கொள்கிறேன். உங்களுக்கும் தொந்தரவு இருக்காது” என்றார் லெனின். மக்கள் தலைவர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்…

பகை வர்க்கமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டும் வல்லமை படைத்த ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சிஐத் தொடங்கியபோது கட்சி உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாக தானே நடந்து காட்டியவர், மற்றவர்களையும் தன்னைப் பின்பற்றச் செய்தவர் லெனின். புரட்சிக்குப் பிறகு ஆட்சியதிகாரம் பட்டாளி வர்க்கதிடம் வந்ததும், அதன் பிரதிநிதிகள் மக்களிடம் எப்படி அதிகார வர்க்க மமதை இல்லாமல், அன்போடும், பணிவோடும் மக்களின் தேவைகளை முதன்மையாகவும் கருதி செயல்பட வேண்டும் என்பதற்கும் தானே முன்மாதிரியாக நடந்து செயல்படுத்திக் காட்டியவர் லெனின்.

மக்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைக்கின்ற சோசலிசத்தை படைக்கப் போராடிய லெனின், எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கத் தயாராக இருந்த மாபெரும் தலைவர் லெனின், மார்க்சிய – லெனினியம் என்னும் தத்துவமாக நமக்காகக் காத்திருக்கிறார். வாருங்கள் லெனினைப் படிப்போம், லெனின் கனவை நனவாக்க, சுரண்டலே இல்லாத உலகத்தை உருவாக்குவோம்…

– (ஏப்ரல் 22 : லெனின் பிறந்தநாள்)

புதிய தொழிலாளி ஏப்ரல் 15 – மே 14, 2017 இதழில் வெளியான கட்டுரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/lenin-birthday-april-22nd/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகள் மாநாட்டில் ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

நம்மில் பலருக்கு விவசாயிக்கு என்ன நிகழ்கின்றது என்று தெரியாது. விவசாயம் அழிகின்றது என்று மட்டும் தெரியும். இந்த கருத்தரங்கம் விவசாயம் ஏன் அழிகின்றது என்ற காரணத்தை தெரிந்து...

ஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்

முன்பெல்லாம் மக்களிடம் பிரச்சனை பற்றிய முழுமையான விழிப்புணர்வு இருந்ததில்லை. தன் புருசன் கேன்சரில்தான் செத்தார் என்று தெரியாது. "ஏதோ இருந்தாரு செத்து போயிட்டாரு, என் புள்ள செத்து...

Close