செய்தி : மத்திய பிரதேசத்தில் போராடும் விவசாயிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பலி.
கண்ணோட்டம் : அரசு தன் உண்மையான முகத்தை சில சமயங்களில் வெளிப்படையாக காண்பிக்கும், பல சமயங்களில் மக்கள் நலன் சார்ந்த மாதிரி போலியாக காண்பித்து கொள்ளும். மோடி அரசு தன் கோரமுகத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொள்கிறது.
போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார். மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிக் கொண்டிருக்கும் போது விவசாயத் துறை அமைச்சர் உடல் நலம் பேண யோகா செய்கிறார். மாநில அமைச்சர் ‘அவர்கள் விவசாயிகளே அல்ல குண்டர்கள்’ என்கிறார்.
வரலாற்றில் ஒரே மாதிரியான சம்பவங்கள் பல முறை நடந்தேறியுள்ளன. இடமும், காலமும், மனிதர்களும் தான் வேறு. ஆனால் விளைவுகள் ஒரே மாதிரியாகத்தான் நடந்துள்ளன. அன்றைய ரசியாவில் தன்னிடம் கோரிக்கைகளுக்காக மனு கொடுக்க வந்த தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஜார் மன்னனை முதலில் மக்கள் நம்பினார்கள். ஆனால், அவனோ மகிழ்ச்சி கொண்டான் மக்களின் மரணத்தை பார்த்து.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உழைக்கும் மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. சமுக வளர்ச்சிப் போக்கில் அரசுகளின் வர்க்க இயல்பு மாறியிருக்கிறது, ஆனால், சுரண்டப்படும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக வன்முறையை ஆயுதமாக உபயோகிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமுகத்தின் இயக்கத்தை நடத்திச் செல்லும் உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகத்தான் வன்முறை அதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. உழைக்கும் மக்களை தீண்டத்தகாதவர்களாக இழிவாக பார்த்த பார்ப்பன மனு தர்மாக இருக்கட்டும், நெசவாளர்களையும், விவசாயிகளையும் அழித்த பிரிட்டிஷ் காலனி அரசாக இருக்கட்டும், படி நெல்லுக்காக மொத்தமாக எரித்த சுதந்திர இந்தியாவாக இருக்கட்டும், போராடும் விவசாயிகளையும், பழங்குடி இனத்தவரையும், சிறுபான்மையினரையும் குறி வைத்து கொல்லும் மோடி அரசாக இருக்கட்டும் இவர்கள் வன்முறையை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அதில் மிகப் பெரிய ஆனந்தம் அடைகிறார்கள்.
இன்று இந்தியாவை ஆளும் மகராஜா, விவசாயத்தையும் உழைக்கும் மக்களையும் நெருக்கடியில் தள்ளி விட்டு நாடு முன்னேறுகிறது என்று மகிழ்ச்சி கொள்கிறார், மகிழ்ச்சி கொள்ளட்டும். மழை மேகங்கள் சூழ்ந்த வானத்தில் ஒரு நாள் வெடித்துக் கிளம்பும் இடி மின்னல். அந்த வசந்த காலத்தின் இடி மின்னலை யாராலும் தடுக்க முடியாது. அந்த இடி முழக்கம் ஆளும் வர்க்கத்துக்கு சாவு மணி அடிக்கும் தொழிலாளி, விவசாயிகளின் உரத்த குரலாக இருக்கும்.
– ராஜ்