“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”

“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்

இப்படி சொல்வது யார்?

 • இந்தியன் எக்ஸ்பிரசின் முன்னாள் ஆசிரியரும் ThePrint இணைய இதழின் இப்போதைய தலைமை ஆசிரியருமான சேகர் குப்தா சொல்கிறார்
 • இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சொல்கிறார்
 • புளூம்பெர்கின் மிகிர் ஷர்மாsays
 • முதலாளிகளின் ஊதுகுழல் டைம்ஸ் ஆஃப் இந்தியாசொல்கிறது
 • முதலாளிகளின் கூட்டடமைப்பு அசோசேம் சொல்கிறது

விஜய் மல்லையா, நீரவ் மோடி முதலான பல பணக்கார முதலாளிகள் வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்திருக்கிறார்கள். ஆகவே, வங்கிகளையும், பொதுப் பணத்தையும் அவர்களைப் போன்ற தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதுதான் இந்த முதலாளித்துவ அடிவருடிகளின் தர்க்கம்.

முதலாளிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கும், பொதுமக்களை மோசடி செய்வதற்கும் பல வழிகளை வைத்திருக்கின்றனர்.

1. வங்கிக் கடனை கட்டாமல் நாமம் போடுவது, வங்கிப் பணத்தை மோசடி செய்வது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் பிராண்ட்

2012-13 முதல் 2016-17 வரை ரூ 69,770 கோடி மதிப்பிலான மோசடிகள் இந்திய வங்கித் துறையில் நடத்தப்பட்டது அம்பலமாகியிருக்கின்றது. 6 ஆண்டுகளில் வாராக் கடன்களின் அளவு ரூ 8 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. எனவே, கடந்த ஆண்டு மோடி அரசு ரூ 2.11 லட்சம் கோடி நிதியை வங்கிகளுக்கு வழங்கியது, உண்மையில் தனியார் கார்ப்பரேட்டுகள் கட்டாமல் ஏமாற்றிய கடனை ஈடுகட்ட வழங்கப்படும் மீட்பு நிதியே ஆகும்

நீரவ் மோடி – நியூயார்க் கடைத் திறப்பு விழா

2. பிராண்டுகளை கடனுக்கு அடமானமாக கொடுப்பது

 • ஆப்பிள் நிறுவனத்தின் பொருளை 5 மடங்கு அதிக விலை கொடுத்து ஏன் வாங்குகிறோம்?
 • பிற விமான சேவையை விட கூடுதல் கட்டணம் கொடுத்து கிங் ஃபிஷர் விமானத்தில் ஒருவர் ஏன் பயணித்தார்?
 • நீரவ் மோடி இந்திய மக்களிடம் திருடிய பணத்திலிருந்து பிரியங்கா சோப்ராவுக்கும், ஹாலிவுட் நடிகர்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தனது வைர நகைகளை விளம்பரப்படுத்தியது ஏன்?

இது எல்லாவற்றுக்கும் பதில் “பிராண்ட்” என்பதுதான். பிராண்ட் மூலமாக சந்தைப் படுத்துகின்றனர், நம்மிடமிருந்து கூடுதல் விலையை கறக்கின்றனர். உண்மையில் பிராண்டுகள் என்பவை தமக்குள் போட்டி போடவும், பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பிடுங்கவும் முதலாளிகள் உருவாக்கி பயன்படுத்தும் மாயை மட்டுமே. எந்த விதமான பிராண்ட் தூதரும் இல்லாமலேயே, தமிழ்நாட்டில் “ஆவின்” பாலை தரமானதாக அனைவரும் வாங்குகின்றனர்.

உண்மையில் பல நூறு கோடி செலவில் கட்டியமைக்கப்படும் பிராண்டுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விஷயத்திலும், நீரவ் மோடி பிராண்டிலும் அம்பலமானது.

திவாலாகிப் போன கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டிய சுமார் ரூ 9,000 கோடி கடனுக்கு தனது பிராண்ட் மதிப்பை ஈடாக காட்டியிருந்தது. ரூ 4,100 கோடி என்று 2011-12ல் மதிப்பிடப்பட்டிருந்த அந்த பிராண்ட் மதிப்பு 2013-ல் ரூ 200 கோடியாக வீழ்ந்தது. 2015-ல் இன்னொரு மதிப்பீடு அதற்கு ரூ 100 கோடி மட்டுமே மதிப்பு கொடுத்தது. உண்மையில் அந்த பிராண்டுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

நீரவ் மோடியோ தனது நிறுவனத்தின் மதிப்பு ரூ 6,000 கோடி என்கிறார். அதில் பெரும்பகுதி நீரவ் மோடி பிராண்டின் மதிப்பு. பஞ்சாப் தேசிய வங்கி, தனது மோசடியை அம்பலப்படுத்தி விட்டதால், தனது பிராண்ட் மதிப்பு பாதிக்கப்பட்டு தன்னால் கடனை கட்டுவது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது என்கிறார். தொடர்ந்து இயங்க அனுமதித்திருந்தால் பொதுப் பணத்தை தொடர்ந்து ஆட்டையைப் போட்டு, தனது பிராண்ட் மதிப்பை பயன்படுத்தி கடனை கட்டியிருப்பாராம்.

பஞ்சாப் தேசிய வங்கி பங்கு விலை ஏற்ற இறக்கம் – யார் லாபம் பார்த்தது?

3. பங்குச் சந்தை சூதாட்டம்  (Was there an insider trading in PNB?)

பஞ்சாப் தேசிய வங்கியின் பங்குகள் ஜனவரி – பிப்ரவரியில் குறிப்பிடும்படியான ஏற்ற இறக்கத்தை கண்டன. நீரவ் மோடியின் மோசடி அம்பலமான தேதிகளையும், பஞ்சாப் வங்கி பங்கு விலை மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

பஞ்சாப் தேசிய வங்கியின் பங்கு விலை

 • ஜனவரி 16-ம் தேதி ரூ 165.55 ஆக இருந்தது. அன்றுதான் மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக பஞ்சாப் வங்கி சந்தேகிக்கிறது.
 • ஜனவரி 24-ல் ரூ 194.65 ஆக உயர்கிறது. ஜனவரி 29 அன்று பஞ்சாப் வங்கி ரூ 287 கோடி மோசடி குறித்து சி.பி.ஐ-ல் புகார் தெரிவிக்கிறது.
 • பங்கு விலை பிப்ரவரி 12 அன்று ரூ 161.65- ஆக வீழ்கிறது. அன்றைய தினம் மோசடியின் மொத்த மதிப்பு ரூ 11,000 கோடிக்கும் மேல் என்று தெரிகிறது
 • பிப்ரவரி 16-ம் தேதி ரூ 125.55 ஐ தொடுகிறது. பஞ்சாப் வங்கி 13-ம் தேதி புதிய புகாரை பதிவு செய்கிறது.
 • இப்போது பங்கு விலை ரூ 116.5 அளவில் உள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கி பெருமளவு மோசடி பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இது வெளியில் கசியும் போது பங்கு விலை பெருமளவு வீழ்ச்சி அடையும். செய்தி வெளியாவதற்கு முன்பு தம் கைவசம் இருக்கும் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிக விலைக்கு விற்று விடுவது. அதற்கு ஏற்ற வகையில் பங்கு விலையை செயற்கையாக உயர்த்துவது. பங்கு விலை உயரும் போக்கில் அதில் ஏதோ இருக்கிறது என்று வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் இழப்பை சந்திப்பார்கள்.

ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை பங்குகளை வாங்கி, செய்தி வெளியாகி விலை குறைவதற்கு முன்பு விற்றவர்கள், அல்லது futures முறையில் குறைந்த விலைக்கு விற்பதாக பந்தயம் கட்டியவர்களைப் பற்றி விசாரணை நடத்தினால், உள் விபரத்தை தெரிந்து கொண்டு பங்குச் சந்தையில் சம்பாதித்த முதலாளிகள் பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

1960-களில் அனைத்து பெரிய வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன

இவற்றிலிருந்து பொதுவாக முதலாளிகள், அதிலும் குறிப்பாக இந்திய முதலாளிகள் மோசடியிலும், ஊழலிலும் ஊறித் திளைப்பவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவர்களது பிரச்சாரர்களோ, வங்கிகளை அதே தனியார் கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து விட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் தனியார் மயக் கொள்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டிருந்தால் இன்றைக்கு விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஆளுக்கொரு வங்கி நடத்திக் கொண்டிருந்திருப்பார்கள்!

வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்ற அசோசேம்-க்கு பதிலளிக்கும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, “அசோசேம் தனது உறுப்பினர்களை ஒழுங்காக வங்கிக் கடன்களை திருப்பிக் கட்டச் சொல்லட்டும். கோடீஸ்வர நகை வியாபாரி நீரவ் மோடி வங்கிகளை ஏமாற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கட்டும்” என்கிறது.

மேலும், “சமீபத்திய பஞ்சாப் தேசிய வங்கி மோசடியைத் தொடர்ந்து வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று முதலாளிகளின் ஊதுகுழலான அசோசேம் கூறியிருப்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. நமது நாட்டில் தனியார் வங்கிகளின் முந்தைய செயல்பாட்டை அவர்கள் வசதியாக மறந்து விட்டிருக்கிறார்கள். தனியார் வங்கிகள் திறமையாக செயல்பட்டால் அவற்றை இழுத்து மூடி பொதுத்துறை வங்கிகளோடு இணைக்க வேண்டியது ஏன் வந்தது. திவாலாகும் தனியார் வங்கிகளை விழுங்கி செரிக்கும் நீலகண்ட மகாதேவனாக பொதுத்துறை வங்கிகள் இருந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் அசோசேம் வங்கிகளை தனியார்மயமாக்க ஓருகிறது. அவர்களது பேராசையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தனியார் வங்கிகளின் திறன் உயர்ந்தது என்று அவர்கள் சொல்ல முடியாது”

2004-ல் திவால் ஆன தனியார் குளோபல் டிரஸ்ட் வங்கி

1947-க்கு முன் இந்தியாவில் வங்கிகள் திவாலாவது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. 1913-க்கும் 1936-க்கும் இடையே 481 வங்கிகள் திவாலாகின. 1949 வங்கித் துறை ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்ட பிறகும் நிலைமை மேம்படவில்லை.

1951-ல் இந்தியாவில் 566 வணிக வங்கிகளும் 4,151 கிளைகளும் இருந்தன. 1947-க்கும் 1955-க்கும் இடையே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 40 வங்கிகள் திவாலாகின. 1954 முதல் 1959 வரையிலான கட்டத்தில் 106 வங்கிகள் திவாலாக்கப்பட்டன. பொதுமக்களின் சேமிப்புகளை பாதுகாக்க, அவற்றை இழுத்து மூடுவது அல்லது பிற வங்கிகளுட்ன இணைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இறுதியில் 1960-களில் அனைத்து பெரிய வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.(Bank failures in India).    1948 முதல் 1968 வரையிலான 20 ஆண்டுகளில் 736 தனியார் வங்கிகள் திவலாகின.

1969-க்குப் பிறகு எஞ்சியிருந்த தனியார் வங்கிகளும் 1990-களுக்குப் பிறகு புதிதாக அனுமதிக்கப்பட்ட தனியார் வங்கிகளும் திவாலாவது தொடர்கதையாக உள்ளது. இந்த 30 ஆண்ட காலத்தில் 36 தனியார் வங்கிகள் இழுத்து மூடப்பட்டன அல்லது வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. (உதாரணம், குளோபல் டிரஸ்ட் வங்கி)

(அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செய்தி பத்திரிகை – in english)

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் திவாலானது, ஏ.ஐ.ஜி திவாலானது. ஏ.பி.என் ஆம்ரோ, பியர் ஸ்டெர்ன்ஸ், மெரில் லிஞ்ச், வாச்சோவியா, ராயல் ஸ்காட்லாந்து வங்கி, லாய்ட்ஸ், யூ.பி.எஸ் மற்றும் பல வங்கிகள் திவால் நிலைக்கு அல்லது மறு சீரமைப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இவை அனைத்தும் தனியார் கையில் கார்ப்பரேட் நிர்வாகத்தில் இருந்தன, தனியார் நிர்வாகமும், திறனும்தான் அவற்றை திவாலுக்கு தள்ளின.

உண்மையில் வங்கிகள் யார் கையில் இருக்கின்றன என்பது பிரச்சனை இல்லை. பிரச்சனை, பொருளாதாரத்தின் மீதான தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம்தான். ஊழலும், மோசடியும் முதலாளித்துவத்தின் உயிரணுவிலேயே இருப்பவை. முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டாமல் அவற்றை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்?

முதலாளிகள் தமது சக முதலாளிகளுடன் போட்டி போடுவதற்கு (கொள்ளை அடிப்பதற்கு) சட்ட ரீதியாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் புதுப்புது வழிகளை கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள், வங்கி திவால்களும், நெருக்கடிகளும் ஏற்படுகின்றன.

ஆனால், நமது அறிஞர்கள் தனியார் முதலாளிகள் கையில் அதிகாரத்தை கொடுக்கச் சொல்கிறார்கள்.

“Why the women live in their houses? if all are under the landlord’s control then there will be no abduction.”

கிராமத்துப் பண்ணையார் பெண் பித்தனாக இருந்து பெண்களை கடத்தி சீரழித்து வருகிறார் என்றால், இதை சரி செய்வதற்கு, “பெண்கள் ஏன் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும். எல்லோரையும் பண்ணையார் பாதுகாப்புக்கு அனுப்பி விட்டால் கடத்தல் நடக்காதே” என்று தீர்ப்பு சொல்கிறார்கள் இந்த நாட்டாமைகள்.

இந்த புத்திசாலிகள்தான் அரசாங்கத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆள்பவர்கள், ஊடகத்தில் நமக்கு கருத்து சொல்பவர்கள்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/let-nirav-modis-manage-banks-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்!

ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன!

இன்ஃபோசிஸ் பணமூட்டைகளின் குடுமி பிடிச்சண்டை – ஊழியர்கள் நடுக்கடலில்

நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்த தொகை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ். முறைகேடுகளை மறைப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணமூர்த்தி.

Close