ஜெர்மனியில் 1898-ம் ஆண்டு பிறந்தவர் பிரெக்ட். இவர் பின்னாட்களில் பிரபல நாடகக் கலைஞராக, நாடகக் கம்பேனியைச் சேர்ந்தவராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அறிவியலில் ஆர்வம் கொண்டவரான இவர் நாடகத் துறையில் நுழைந்த பிறகும் அறிவியலை, அறிவியலாளர்களை முன்வைத்து பல அறிவியல் பூர்வமான நாடகங்களை இயற்றியுள்ளார். அவ்வாறு இயற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றான “கலிலியோ கலிலி” என்ற நாடகத்தின் திரைக்கதைதான் இந்த நூல். அறிவியலில் ஆர்வம் கொண்டவரான பிரெக்ட்டிற்கு கலிலியோ மீது ஆர்வம் வந்தது இயல்பானது. ஆனால் அந்த ஆர்வத்தை நமக்கும் தூண்டும் விதமாக திரைக்கதை எழுதி கலிலியோ மீது நமக்கும் காதல் மலரச் செய்வதே இந்நூலின் சிறப்பு.
பிரெக்ட் இவற்றை எளிதாக செய்து விடவில்லை. இதற்காக ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரின் நாஜி ஆட்சியின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி உள்ளார். நாட்டை விட்டே வெளியேறும்படி நேர்ந்தது. ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஜெர்மனியில் முன்னாள் நாஜிக்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டதைப் பார்த்து வெறுத்துப் போய் கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்ட ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் தனது வாழ்நாளை கழித்தார்.
கலிலியோவின் வாழ்க்கை என்ற பிரெக்ட்-ன் நாடக நூலைப் பற்றி பார்க்கலாம்.
கலிலியோ தீவிரமாக நேசித்தது தரவுகளிலிருந்து உண்மையை கண்டறிவதே, 18-ம் நூற்றாண்டில் கிருத்தவ திருச்சபையோ அரிஸ்டாடில் எழுதி வைத்தவற்றை மட்டுமே உண்மையாக அங்கீகரித்தது. அவற்றை கேள்விக்குள்ளாக்கும் எந்த கருத்துக்களையும், பரிசோதனைகளையும் தெய்வ குற்றம் என்று நிந்தித்தது.
கலிலியோ வானியல் சார்ந்த பதிவுகளையும், பொருட்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் செய்வதில் ஈடுபட்டார். ஆனால் வாழ்வதற்குத் தேவையான பொருளீட்டுவதற்காக அவ்வப்போது சில சின்ன சின்ன கருவிகளையும் கண்டுபிடித்து வழங்குகிறார். அதை பயன்படுத்தி ருசித்தவர்கள் அவரை அக்காலத்திலேயே வெகுவாக கொண்டாடுகிறார்கள். அதேநேரம் வானியல் சார்ந்த அவரது ஆய்வுகளை கிறிஸ்தவ மத போதகர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏனென்றால் அவர்களது பைபிள் வாசகங்களின் படி மனிதன் வாழும் பூமிதான் உலகத்தின் மையம், பூமியை சூரியன் சுற்றி வருகிறது. மாறாக, கலிலியோ சூரியனை மையமாகக் கொண்டுதான் பூமி சுற்றி வருகிறது. பூமி பல கோள்களில் ஒன்றுதான். சந்திரன் பூமியை சுற்றி வருவதைப் போல, வியாழனை 3 நிலாக்கள் சுற்றி வருகின்றன, எனவே பூமிக்கு தனிச்சிறப்பான இடம் எதுவும் இல்லை என்று கண்டுபிடித்து முன்வைக்கின்றார். இது கடவுளின் படைப்பையே கேள்வி கேட்பதாகவும், இதுநாள் வரை ஜெபக்கூட்டங்களில் சொல்லி வந்தவற்றை பொய்யாக்குவதாகவும் உள்ளது என்று கூறி அவரது ஆய்வுக்கும் தடைவிதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அன்றைய கால கொலைக் கருவிகளை, சித்திரவதை கருவிகளை காட்டி கலிலியோவை மிரட்டி பணியவும் வைக்கின்றனர்.
“தங்களது குருவான கலிலியோ எதற்காகவும் தலைவணங்க மாட்டார். உண்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்” என்ற நம்பிக்கையில் அவரோடு உறுதுணையாக இருந்த அவரது சீடர்கள் கலிலியோ திருச்சபைக்கு பணிந்து தனது அறிவியல் கருத்துக்களை கைவிடுவதாக அறிவித்ததை கடுமையாக நிந்திக்கின்றனர். அவரை விட்டு விலகி தத்தமது வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
அதன் பிறகு கலிலியோ அரசின், மதகுருமார்களின் கட்டுப்பாட்டில் எழுதுவது, பிறரை சந்திப்பது என்று தனது வாழ்நாளை வீட்டுச் சிறையில் கழிக்கிறார். அவர் எழுதியவற்றை ஒவ்வொரு பக்கம் முடிந்ததும் வாங்கி பூட்டி வைக்கிறது திருச்சபை.
தனது அறிவியல் ஆர்வத்தையும், அதை உலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமையையும் உணர்ந்த கலிலியோ யாருக்கும் தெரியாமல் கூடவேயிருந்த தன் மகளுக்குக்கூட தெரியாமல் தனது கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்புகளை தனியாக எழுதுகிறார். கலிலியோவின் கடைசிக் காலத்தில் அவரது மாணவர்களுள் ஒருவரான ஆந்திரியோ அவரை சந்திக்க வருகிறார். தான் இன்னமும் அறிவியலை கைவிட்டு ஓடாமல் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கலிலியோவிடம் சொல்கிறார். இப்போது ஹாலந்துக்கு போகப் போவதாக கூறுகிறார். கலிலியோ மீது தமக்கிருக்கும் கோபத்தை கொட்டுகிறார். தனது குறிப்புகள் பற்றி கலிலியோ சொன்னதும் உற்சாகமாகிறார் ஆந்ரியோ. அவற்றை இத்தாலியில் இருந்து மறைத்து எடுத்துச் சென்று வெளிநாட்டுக்குச் செல்கிறார்.
இத்துடன் நாடகம் நிறைவடைகிறது. இன்றைக்கு நாம் பார்க்கும் அறிவியல் கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் இதுபோல எவ்வளவோ போராட்டங்களை உயிரிழப்புகளை சந்தித்துதான் வந்துள்ளது. நவீன அறிவியலுக்கு அடித்தளம் இட்டவர்களின் முக்கியமானவர் கலிலியோ. தனது வாழ்வையும், சுதந்திரத்தையும் அடகு வைத்து, அறிவியல் ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும் செய்யும் வாய்ப்புகளை வாங்கியவர். அதன் அருமைகளை இந்த நூல் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. மேலும் நாம் இன்று செய்யும் எந்தவொரு காரியமும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு பின்னாளில் ஏதோவொரு விளைவை ஏற்படுத்தும் என்பதையும் சொல்கிறது.
184 பக்கங்கள் போன வேகமே தெரியவில்லை. அவ்வளவு ஈர்ப்பாரவராக கலிலியோவை அறிமுகப்படுத்துகிறார் பிரெக்சிட் அத்துடன் அவரது அறிவியல் பணிகளையும்தான்.
சமீபத்தில் நமது நாட்டிலும் சில அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களது மரணம் மூலம் உண்மையை மறைத்துவிட முடியும் என்று சிலர் நினைக்கலாம். இல்லை, இல்லவே இல்லை என்பதற்கு கலிலியோ ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
பூமிக்கும் நிலவுக்கும் வெளிச்சம் சூரியனிலிருந்துதான் கிடைக்கிறது. 1600 களில் இதைச் சொன்னால் கொலை அல்லது சிறை!
- பெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !
- பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!