ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்

This entry is part 1 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

னது பெயர் சியாம் சுந்தர். நான் இந்தியாவில் உள்ள முன்னணி 5 நிறுவனங்களில் ஒன்றில் கடந்த 16 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏறக்குறைய  20 ஆண்டுகள் அனுபவம் ஈட்டியுள்ளேன். அமெரிக்கா, துபாய், லண்டன், சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் பல வருடம் வேலை செய்த அனுபவம் பெற்று உள்ளேன்.

கடந்த 6 மாதங்களாக தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக எண்ணிக்கையில் நடந்து வரும் பணிநீக்க நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு தொழிற்சங்கமாக அணிதிரள்வதே ஒரே தீர்வு என்று பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் சேர்ந்தேன். இச்சங்கத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகளை செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் வெளி உலகத்திற்கு சரியாக தெரிவதில்லை. இதனை வெளிஉலகிற்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தொடரை எழுதுகிறேன்.

முதலில் இப்போது பணிநீக்கங்கள் எப்படி நடந்து வருகின்றன என்பதற்கான ஒரு சான்றை பார்ப்போம். இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி, ஊடகங்களிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி ஐந்து நிறுவனங்களில் ஒன்றான டெக் மகிந்த்ராவில் வேலை செய்பவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அவருக்கு அலுவலகத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரியிடம் இருந்து ஒரு மாலை நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அந்த அதிகாரி கீழ்க்கண்ட செய்தியை கூறுகிறார்.

“நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் உங்கள் பெயரும் உள்ளது. அதனால் உங்கள் பணியை நீங்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தீர்கள் ஆனால், உங்களுக்கு பதவி விலகல் சான்றிதழ் நல்ல முறையில் தரப்படும். நீங்களாக பதவி விலகவில்லை என்றால் நிர்வாகம் நாளை உங்களை பணி நீக்கம் செய்யும் அப்படி செய்தால் உங்களால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாது”.

சங்கர், “எப்படி தன்னால் ஒரே நாளில் வேலையை விட்டுச் செல்ல முடியும்? தனக்குக் குடும்பம், பல நிர்வாகக் கடமைகள் இருப்பதாகவும், ஒரே நாளில் வேலை இழப்பு என்பது பெருமளவு பாதிக்கும்” என்றும் கூறுகிறார். மேலும் “இந்த முடிவை மாற்றுவதற்கு என்னால் வேறு யாரிடமாவது முறையிட முடியுமா?” என்று அந்த மனித வள அதிகாரியிடம் பரிதாபமாகக் கேட்கிறார்.

“இந்த முடிவானது தலைமை நிர்வாகிகளிடமிருந்து வருகிறது. அதனால் இந்த முடிவை மாற்றுவதற்கு நிறுவனத்தில் வேறு யாரிடம் முறையிட்டாலும் உங்களது கோரிக்கை நிறைவேறாது. அதனால் இன்று நாள் முடிவதற்குள் உங்கள் பணி ராஜினாமா கடிதம் கொடுப்பதுதான் உங்களுக்கு நல்லது” என்று மிரட்டும் தொனியில் கூறுகிறார் அதிகாரி. அதற்கு சங்கர், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறுகிறார்.

இந்த உரையாடல் இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதாகும்.

அந்த உரையாடல் வீடியோ இதோ

இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவியதன் விளைவாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் இது போன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இது போல் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவது அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

வெளி உலகைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்றால் அதிக ஊதியம் பெறுபவர்கள், அதிகம் பார்ட்டி செய்பவர்கள், பல நாடுகளில் ஜாலியாக ஊர் சுற்றுபவர்கள் என்ற எண்ணம்தான் உள்ளது. ஆனால் உண்மையில் எங்கள் பிரச்சனைகள் வேறுவிதமாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம், வெளிநாட்டு பயணம், இன்னும் பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த சம்பளத்தை வைத்து ஒரு ஊழியர் திருமணம் முடிந்து, குழந்தை பெற்றுக் கொண்டு, கடனில் வீடு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகும் போது பணிநீக்கம் என்ற பேரிடி அவரைத் தாக்குகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இப்பொழுது பணிநீக்கம் என்ற அச்சம் அதிகமாக பரவி இருக்கிறது.

இதற்கு ஒரு உதாரணமாக கோபி கிருஷ்ணாவின் தற்கொலை இருக்கிறது. அவருடைய வாக்குமூலத்தில் இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

“எனது குடும்பத்தை என்னால் சரியாக பார்த்துக் கொள்ள முடியாது என்ற அச்சம் இப்போது எனக்கு அதிகமாகி உள்ளது. என்னுடைய குடும்பத்தை தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி பாதுகாப்பு என்பது இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”.

அவருடைய வாக்குமூலம் நன்றாக வாழ்ந்த குடும்பம் நொடிந்து விடும் என்ற பயம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது ஆகும்.

இது போன்ற முடிவுக்கு யாரும் வர வேண்டிய தேவையில்லை. மேலே சொன்ன உரையாடல் பதிவில் எச்.ஆர்  அதிகாரியால் சொல்லப்பட்ட  விபரங்கள் சரிதானா?

1. நிறுவனத்தின் தலைமை அதிகாரியை முடிவு செய்து விட்டார். அவருக்கு மேல் யாராவது இருக்கிறார்களா? என்று எச்.ஆர் அதிகாரி கேட்கிறார். ஊழியர்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?

2. “appointment letter-ல் எந்த நேரத்திலும் வேலையை விட்டு போகச் சொல்லலாம் என்று இருக்கிறது. அதை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று எச்.ஆர் அதிகாரி கேட்கிறார். அது செல்லுபடியாகுமா?

அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

(தொடரும்)

– சியாம் சுந்தர்

Series Navigationநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆசிரியர்கள்/அரசு ஊழியர்கள் மட்டுமில்லை, ஐ.டி ஊழியர்களும் ஒடுக்கப்படுகின்றனர்

இவ்வாறு நூற்றுக் கணக்கான ஊழியர்களின் சட்ட விரோதமான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக திரு ராஜ் மேத்தா இருக்கிறார்.

விவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்?

விவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார்? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன? அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன?

Close