ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?

This entry is part 10 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் பத்தாவது இறுதி பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)

டந்த 9 பகுதிகளில் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசி இருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு பணி பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்ட போது என்னைத் தற்காத்துக் கொள்ள எதுவும் விஷயங்கள் இருக்கிறதா என்று வலை தளங்களில் தேடத் தொடங்கினேன். பணிநீக்க பிரச்சனையைப் பற்றி சில கட்டுரைகள் இருந்தாலும் ஐ.டி ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பிட்டு பேசும் பொதுவான தகவல் தொகுப்பு எங்கும் கிடைக்கவில்லை.

இந்த காலக் கட்டத்தில் நான் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பல நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். அவர்களின் சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு தேடி பார்த்து பணிநீக்க நடவடிக்கையை ஒரு ஊழியர் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற பார்வையில் ஒரு கட்டுரை எழு வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். இனி வரும் ஆண்டுகளில் பணிநீக்க நடவடிக்கைக்கு யார் உட்படுத்தப் பட்டாலும் அவர்களை தற்காத்துக் கொள்ள இந்தக் கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது நாம் “தகவல் தொழில்நுட்ப ஊழியரின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சனைகளா” என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.

பணி பாதுகாப்பின்மை, 40 வயதிலேயே பணி ஓய்வு பெறும்படி கட்டாயம், அதிக வேலைப்பளு, இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகள்.

உயர் ஊதியம், வெளிநாட்டு பயண வாய்ப்பு போன்றவை இந்தத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் சாதகமான விஷயங்கள்.

பிரச்சனைகள் எல்லா துறைகளிலும் இருக்கக் கூடிய விஷயம் தான். ஆனால், அவற்றை பிற துறை ஊழியர்கள் எப்படி கையாள்கிறார்கள்?

நாங்கள் சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அலுவகத்தில் விப்ரோ நிர்வாகத்திற்கு எதிராக தொழில் தகராறு சட்டம் பிரிவு 2-K -ன் கீழ் மனு தாக்கல் செய்யும் போது தொழிலாளர் அலுவலர் குறிப்பிட்ட சில விஷயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

போராடும் ஆலைத் தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

பிற துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெரும் அளவு உயர் கல்வித் தகுதி இருப்பது வழக்கம் இல்லை. ஆனால் அவர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டால் மிகவும் கோபம் கொண்டு தங்களுக்கு நியாயம் வேண்டி உரிமைகளுக்காக சண்டை போடுவார்கள். நேராக தொழிலாளர் துறை ஆணையரிடம் சென்று முறையிடுவார்கள். தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடுவார்கள்.

ஆனால் உயர் கல்வி பயின்ற பல லட்சம் பேர் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் தமது உரிமைகள் பற்றிய சட்ட அறிவை வளர்த்துக் கொள்வதில்லை, சட்டப் படி வேலை நீக்கம் எளிதானதல்ல என்று படித்து இருந்தாலும் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவது இல்லை. நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு பயந்து பணியை ராஜினாமா செய்து விடுகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு எந்த நியாயமும் கிடைப்பது இல்லை.

இத்தனை லட்சம் பேர் வேலை செய்யும் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சில (இரண்டு) நபர்களைத் தவிர யாரும் தொழிலாளர் துறையில் தமது பிரச்சனைகள் குறித்து முறையிட வில்லை என்பதில் இருந்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் போராட்ட குணத்தை தெரிந்து கொள்ளலாம்.

என்று அவர் குறிப்பிட்டார்.

நம்மில் பலர் நாம்தான் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு பல விடயங்களை அணுகிறோம்.

பல ஐ.டி ஊழியர்கள் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை Computer தான் உலகம் என்ற வாழ்க்கை முறைக்கு தம்மை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் தான் அந்த Project-ன் அச்சாணி முக்கியம் எனவும், தங்களால் தான் அந்த Project நடந்து கொண்டிருக்கிறது எனவும், தங்களால் தான் அந்த Projectஐ வெற்றிகரமாக நடக்கிறது எனவும் நினைத்து முழுநேரமும் வேலையில் முழுகிக் கிடக்கின்றனர்.

எனக்குத் தெரிந்து பல நபர்கள் பல ஆண்டுகளாக சராசரியாக 12 மணிநேரம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்குச் சென்ற பிறகும் குடும்பம், குழந்தைகளிடம் நேரம் செலவு செய்யாமல் வேலையே கதி என்று இருக்கின்றனர்.

இது போல தொடர்ந்து உழைப்பது செக்கு மாடு போன்ற மனநிலைக்கு இவர்களை கொண்டு விடுகிறது. தயவு செய்து இந்த வார்த்தைக்கு என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும், நான் ஒரு சட்ட வல்லுனரிடம் பேசிக் கொண்டு இருந்த போது அவர், தமது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாது உழைக்கும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களை இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 4 மாத அனுபவத்தை வைத்து யோசித்து பார்க்கும் போது அவர் குறிப்பிட்டது உண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு வெளிஉலகம் தெரியாமல் அலுவலக வேலையே வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருக்கும் இத்தகையவர்களுக்கு வெளி உலகம் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் நிர்வாகம் மிரட்டி ராஜினாமா செய்யச் சொல்லும் போது பயந்து போய் சின்ன எதிர்ப்பு கூட காட்டாமல் பணியை ராஜினாமா செய்து விடுகின்றனர்.

தொகுப்பாக,

  • விப்ரோ ஊழியர்கள்

    தமது உரிமைகளுக்காக போராடும் விப்ரோ ஊழியர்கள் (கோப்புப் படம்)

    தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பது உண்மை.

  • ஆனால். ஊழியர்கள் வெளி உலக விடயங்களைத் தெரிந்து கொண்டு பணி நீக்க நிர்ப்பந்தங்களுக்கு எதிராகவும், பணியிட உரிமைகளுக்காகவும் போராட முன்வர வேண்டும்.
  • செக்கு மாடு போன்ற மனநிலையில் உழைப்பதை விட்டு தனது குடும்பத்திற்காக நேரம் செலவு செய்வதை அதிகரிக்க வேண்டும்.
  • தெளிவாக நிதி நிலை முடிவுகளை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால நலன்களுக்கு சேர்த்து தனது முதுமை கால நிதித் திட்டமிடலை வகுத்துக் கொள்ள வேண்டும்.
  • பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டாலும் தனது குடும்பத்தை நிதி இடர்ப்பாடுகளில் இருந்து காத்துக் கொண்டு பணிநீக்கத்துக்கு எதிராக போராடும் வகையில் தெளிவான திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
  • தகவல் தொழில் நுட்பத்துறையில் தொழிற்சங்கம் அமைப்பது சட்டப்படியாக அனுமதிக்கப்பட்ட உரிமை என்பதை கணக்கில் கொண்டு தாமாக முனவந்து NDLF – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயல்கள் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளில் இருந்து நிச்சயம் காக்கும்.

மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு விடாமல் எதிர்த்து போராடினால் நம் வாழ்க்கை ஜாலி தான் என்று இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

ந்தப் பதிவு உங்களுக்கு பலனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். முதன் முறையாக எழுதுவதால் ஏதாவது தவறாக கருத்துகள் கூறி எவர் மனமேனும் புண்பட்டு இருந்தால் இதன் மூலம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக எச்.ஆர் அதிகாரிகளையோ, நிர்வாகத்தையோ, ஊழியர்களையோ புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரையை எழுதவில்லை.

நான் இக்கட்டுரை வாயிலாக NDLF (பு.ஜ.தொ.மு) நண்பர்களை அறிமுகம் செய்கிறேன்.

  • பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் யூனியனாக அணிதிரளும்படி ஐ.டி ஊழியர்களை அழைத்து பிரச்சாரம்

    இந்த ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக, ஜனவரி 2015-ல் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் யூனியனாக அணிதிரளும்படி ஐ.டி ஊழியர்களை அழைத்து பிரச்சாரம் செய்தார்கள்.

  • அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளராக 2 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பது வரை யூனியனை வழி நடத்திச் சென்றவர் நம் கற்பக விநாயகம். பு.ஜ.தொ.மு மாநில குழுவின் வழிகாட்டலின் கீழ், சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வது போன்ற சங்கத்தின் நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைத்து சங்கத்தை வளர்த்துச் சென்றார். அவரது ஒருங்கிணைப்பில் ஊன்றப்பட்ட விதையை இனி வரும் ஆண்டுகளில் பெரிய மரமாக வளர்க்க தகவல் தொழில் நுட்ப ஊழியர்களாகிய நாம் பாடுபட வேண்டும். நிச்சயமாக வரும் காலங்களில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஊழியர்களுக்கான சங்கம் பெரிய அளவில் வளரும். அதற்குக் காரணமாக, அதில் பெரும் பங்கு வகிப்பதாக நம் NDLF (பு.ஜ.தொ.மு) இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • நான் இந்தக் கட்டுரையில் பல சட்ட விவரங்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவற்றை எனக்குக் கொடுத்து இந்தக் கட்டுரையின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் NDLF சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், அவரது சக வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் முகமது ஆகியோருக்கு எனது நன்றிகள். சுரேஷ் சக்தி முருகன் பல நகரங்களுக்கு சென்று ஊழியர்களின் ஐயங்களை போக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறார்.
  • NDLF கடைப்பிடிக்கும் கம்யூனிச சித்தாந்தத்தின்படி தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் குணம், பம்பரமாக சுழன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரையும் சந்திப்பது பேசுவது, கோவை, பெங்களுர், ஹைதராபாத் நகரங்களுக்குச் சென்று சங்கத்தினை வளர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது என இந்த 4 மாதங்களில் பு.ஜ.தொ.மு தோழர்கள் குமார், பிரவீன் போன்றவர்களின் செயல்பாடுகளை நான் பார்த்திருக்கிறேன்.
  • காகிதத்தில் நான் எழுதிய கட்டுரையை தட்டச்சு செய்து, எழுத்துப் பிழைகளை சரி செய்து, பொருத்தமான படங்கள், வீடியோக்கள் இணைத்து வெளியிடுவது என்று பல்வேறு யூனியன் உறுப்பினர்களின் பங்களிப்பில் இந்தக் கட்டுரைத் தொடர் வெளியானது. அவர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையின் வாயிலாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் அனைவரின் சார்பாக நன்றியை பதிவு செய்கிறேன்.

இந்த கட்டுரையை தமது குழு நண்பர்களுக்குக் கொண்டு சென்று சேர்க்கவும், சங்க செயல்பாடுகளிலும் இடையறாது பாடுபடும் நம் சங்க உறுப்பினர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

– சியாம் சுந்தர்

(நிறைந்தது)

(முந்தைய பகுதிகளை படிக்க )

Series Navigation<< நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-10/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?

இந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது? 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த...

நீட் தேர்வு : தமிழக எதிர்ப்பு பொய் பிரச்சாரத்துக்கு பதில்

கல்வி தனியார் மயத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர மாணவர் அமைப்புகள். அவர்கள் இன்று தனியார் கல்விக் கொள்ளையை காரணம்...

Close