- ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்
- நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
- கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்
- எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?
- முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!
- எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!
- ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
- அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
- ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
- நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!
- ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – 2
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் தலைவர் சியாம் சுந்தர் தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டு அனுபவம் உடையவர். அவர் எழுதும், “ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா” கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி.
சென்ற கட்டுரையின் முடிவில் 2 கேள்விகளை முன் வைத்து முடித்து இருந்தேன். முதலில் அதில் 2-வது கேள்விக்கு நாம் இப்பொழுது விடை தேடுவோம்.
“appointment letter-ல் எந்த நேரத்திலும் வேலையை விட்டு போகச் சொல்லலாம் என்று இருக்கிறது”. அதனால் நிறுவனத்திற்கு ஊழியரை எந்த நேரத்திலும் ஊழியரை வேலையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறதா?

எப்போதும் இவ்வாறு இயற்றப்படும் நாட்டின் சட்டம் (‘Law of Land’) தான் தனி ஒப்பந்தங்களை விட முதன்மையானது ஆகும். அதனால், இரண்டு தனிநபர்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தக் கேள்விக்கான விடையை இந்த சிறிய கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.
அமுதன் என்பவருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அந்த நகரத்தில் வசந்தன் என்பவர் வட்டிக்கு பணம் தருகிறார் என்று அமுதன் கேள்விப்படுகிறார். அவர் வசந்தனிடம் சென்று ரூ 1 லட்சம் வட்டிக்கு கடன் தருமாறு கேட்கிறார்.
வசந்தன் ஒரு பத்திரம் தயாரித்து தான் ரூ 1 லட்சம் அமுதனுக்குத் தருவதாகவும், அமுதன் அந்தப் பணத்திற்கு வட்டியாக ஆண்டுக்கு 120% (10 வட்டி) தர வேண்டும் என்றும் எழுதி அமுதனிடம் கையெழுத்து பெறுகிறார். இந்த ஒப்பந்தம் இரு தரப்பும் கையொப்பம் இடப்பட்ட பிறகு வசந்தன் அமுதனுக்கு ரூ 1 லட்சம் பணம் தருகிறார்.
ரூ 1 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின்படி மாதம் ரூ 10,000 வட்டியாக தர வேண்டும். பல மாதங்கள் வட்டி கட்டிய பிறகும் அமுதனால் கடனை அடைக்க முடியவில்லை. சில மாதங்கள் தொடர்ந்து வட்டி கட்ட முடியாததால், வசந்தன் அமுதனிடம் பணம் வசூலிப்பதற்காக நீதிமன்றத்தை நாடுகிறார். இதற்கு சாட்சியாக தாங்கள் இருவரும் போட்ட ஒப்பந்ததைக் காட்டுகிறார்.
நீதிமன்றம் யார் பக்கம் நிற்கும் என்று ஊகிக்க முடிகிறதா? சந்தேகம் இல்லாமல் நீதிமன்றம் அமுதன் பக்கம்தான் இருக்கும். வசந்தன் சமர்ப்பித்த ஒப்பந்தம் அவருக்கே வினையாகும். இதற்குக் காரணம் அரசாங்கம் அதிக வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்க இயற்றிய கந்து வட்டி தடை சட்டம்.

ஒரு ஊழியரின் உரிமைகளை பேணுவதற்கான இந்திய தொழிற்தாவா சட்டம் – 1947-ன் படிபணி நியமனக் கடிதத்தில் போட்டு இருக்கிறது என்ற காரணத்திற்காக எந்த நிறுவனத்தாலும் ஒரு ஊழியரை வெளியேற்ற முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அல்லது மாநில பிரதிநிதிகள் மூலம் சட்டம் இயற்றி அது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டம் அமலுக்கு வருகிறது. எப்போதும் இவ்வாறு இயற்றப்படும் நாட்டின் சட்டம் (‘Law of Land’) தான் தனி ஒப்பந்தங்களை விட முதன்மையானது ஆகும். அதனால், இரண்டு தனிநபர்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
அதாவது, தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் உண்மையில் சமூக அளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவையாகவும், சமூகத்தால் முறைப்படுத்த வேண்டியவையாகவும் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது பணி நியமனக் கடிதத்தில் (appointment letter) சேர்க்கப்பட்ட நிர்வாகம் பணியாளரை வேலையை விட்டு அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று பார்க்கலாம்.
இந்திய சட்டங்கள் நிச்சயமாக ஒரு நிறுவனத்திற்கு அத்தகைய அதிகாரத்தை அளிக்கவில்லை. ஒரு ஊழியரின் உரிமைகளை பேணுவதற்கான இந்திய தொழிற்தாவா சட்டம் – 1947-ன் படிபணி நியமனக் கடிதத்தில் போட்டு இருக்கிறது என்ற காரணத்திற்காக எந்த நிறுவனத்தாலும் ஒரு ஊழியரை வெளியேற்ற முடியாது. வேறு புதிய கொள்கைகள் (பாலிசி) போட்டும் ஊழியரை வெளியேற்ற முடியாது. இந்தபணி நியமனக் கடிதமும், புதிதாக போடப்பட்ட கொள்கைகளும் சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்றால் நிச்சயமாக ஒரு நிறுவனத்தால் ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது.
இதனை மீறி ஒரு நிர்வாகம் தனது ஊழியரை பணி நீக்கம் செய்தால் அந்த ஊழியர் தொழிலாளர் ஆணையத்திடமோ, தொழிலாளர் நீதிமன்றங்களிலோ முறையிடலாம். தொழிற்தாவா சட்டத்தின்படி ஒரு நிறுவனம் தனது ஊழியரை வேலையை விட்டு நீக்குவதற்கு இயற்றப்பட்டுள்ள விதிமுறைகளை நாம் அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.
தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்

The graph above shows how unemployment in the region has affected growth prospects for the future, as shown through the movement from Eq to Eq1. The shift in aggregate demand inwards is a result of unemployment, as when people do not have a salary their effective demand is further restricted.
ஒரு பேச்சிற்காக நிர்வாகத்திற்கு நினைத்த நேரத்தில் ஊழியரை வெளியேற்றும் அதிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த அதிகாரம் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?
இந்த விஷயம் ஏதோ தனிப்பட்ட ஒப்பந்தம், அதற்கும் நாட்டு நலனுக்கும், சமூக வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் ஒரு நிறுவனத்திற்கு தமது ஊழியர்களை தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டும் வெளியேற்றுவதற்கு நிச்சயமாக அதிகாரம் அளிப்பது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் குழி தோண்டி புதைக்கக் கூடியதாகும்.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள். விவசாயம் ஏற்கனவே பல சுரண்டல்களாலும், கார்ப்பரேட் படையெடுப்புகளாலும் படுத்து விட்டது.
- தொழிலாளர்களும் பணி பாதுகாப்பு இன்மை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தின் மீது உள்ள பயம் காரணமாக எந்த பெரிய நிதி முடிவுகளையும் எடுக்க மாட்டார்கள்.
- வீடு, வாகனம் மற்றும் பல அவசிய பொருட்களுக்கும் செலவு செய்யத் தயங்குவார்கள். இதனால் இந்தத் துறைகள் பெரிய வீழ்ச்சி அடையும்.
- பணி பாதுகாப்பின்மை இல்லாத காரணத்தால் வங்கிகளும் தொழிலாளர்களுக்கு பெரிய கடன்களை வழங்காது. வாராக் கடன்களும் மிக அதிக அளவு ஏற்படத் தொடங்கும். இது வங்கித் துறையையும், பிற நிதித் துறைகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.
- தகவல் தொழில்நுட்பத் துறையாவது அறிவு சார்ந்த துறை. பல தொழில்துறைகள் இளவயது ஊழியர்களை மட்டும் வேலைக்கு சேர்க்கும். அவர்கள் உடல் உழைப்பு குறையும் பொழுது அவர்களின் 40 வயதில் வேலையை விட்டு நீக்கும்.
இப்படி நாம் எடுத்துக் கொண்ட அனுமானம் ஏற்கனவே ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சி ஊழியர்கள், தொழில் பழகுனர்கள் என்று பல்வேறு வடிவங்களில் பல துறைகளில் சட்டபூர்வமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் பின்பற்றப்படுகிறது என்பதும், அதனால் நமது நாட்டு பொருளாதாரமும், மனித வளமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்பதும் நாம் இன்று கண்கூடாக பார்த்து வரும் நடைமுறை யதார்த்தம்.
ஐ.டி துறையில் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஊழியர்கள் தாமாகவே முன் வந்து தமது பணியை ராஜினாமா செய்யவில்லை என்றால்பின் வரும் மிரட்டல்களை செய்யப் போவதாக கூறுகிறார்கள்.
- உங்களுக்கு நிர்வாகத்திடம் நிலுவையில் இருக்கின்ற பாக்கி தொழிலாளர் வைப்பு நிதி (PF), gratuity கிடைக்காது.
- உங்களுக்கு பணி விடுப்பு கடிதம் (relieving letter) தர மாட்டோம்.
- உங்களை பணி நீக்கம் (terminate) செய்தல் உங்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது.
இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் என்று யோசித்து வையுங்கள்.
தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த அதிரடி பணி நீக்க விவகாரத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் சட்டம் பற்றிய புரிதலையும் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கோயில் பிச்சைக்காரராக நடிப்பார் நடிகர் செந்தில். அவர் நடிகர் மணிகண்டனை பல கோயில்களுக்கு அனுப்பி அன்னதானம் வாங்கி வரச் செய்து, தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அந்த உணவை உண்பார். மணிகண்டன், “நான் மட்டும் ஏன் அலைந்து உணவு வாங்கி வர வேண்டும்” என்று கேட்கும் போது “எந்த நேரத்தில் எந்த நாளில் எந்த இடத்திற்கு சென்றால் அங்கு அன்னதானம் கிடைக்கும் என்றதற்கு அட்டவணையே போட்டு வைத்திருக்கிறேன். அந்த நேரத்தை கடந்து அந்த இடங்களுக்குச் சென்றால் எதுவும் கிடைக்காது. Information is wealth (தகவல் சொத்து போன்றது)” என்று பதில் சொல்வார்.
“நீயெல்லாம் ஒரு முதலாளி, நான் ஒரு தொழிலாளி!”
இது போல ஐ.டி ஊழியர்கள் மத்தியில் சட்டரீதியான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதை பயன்படுத்திதான் நிறுவனங்கள் தமக்கு சாதகமாக நம்மிடம் வேலை வாங்கி, தேவை இல்லாத போது வேலையை விட்டு அனுப்பவும் செய்கின்றன. எனவே, இந்த பணிநீக்க பிரச்சனையை தடுப்பதற்கு நிச்சயமாக சட்ட அறிவை வளர்த்துக் கொள்வது முக்கியமான தேவையாகும்.
– சியாம் சுந்தர்
(தொடரும்…) அடுத்த பகுதி வியாழக்கிழமை 10-08-2017 அன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்.