எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?

This entry is part 4 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – 3

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சனைகளா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் மூன்றாம் பகுதி.
(பகுதி 1 பகுதி 2 )

சென்ற பகுதியில் “appointment letter”-ல் சேர்க்கப்பட்ட ஒரு விதியை காரணம் காட்டி நிர்வாகம் எந்த ஊழியரையும் நீக்க முடியாது என்று பார்த்தோம்.

இதை இப்படிப் பாருங்கள். ஒரு ஊழியரிடம் முத்திரைத் தாளில் “தானும் தனது பரம்பரையும் நிர்வாகத்திற்கு அடிமை” என்று எழுதி வாங்கி நிர்வாகம் அதனை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தாலும் நிர்வாகத்தால் ஊழியரை அடிமைப்படுத்த முடியாது. ஏனென்றால் கொத்தடிமைகள் தடை சட்டத்தின்படி அத்தகைய ஒப்பந்தம் செல்லுபடி ஆகாது.

தலைமை அதிகாரிக்கும் மேல் உண்டா?

முதல் பகுதியில், “ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி முடிவு செய்து விட்டால் அதற்கு மேல் யாராவது இருக்கிறார்களா?” என்று ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் போது எச்.ஆர் அதிகாரி ஊழியரிடம் கேட்டிருந்தார்.

தலைமை அதிகாரி நிறுவனத்திற்குத்தான் தலைவர். ஆனால், நிறுவனம் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டதாகும். அதனால் தலைமை நிர்வாக அதிகாரியின் முடிவு சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் இருந்தால் ஊழியர் அதனை எதிர்த்து தொழிலாளர் ஆணையத்திடமும் தொழிலாளர் நீதிமன்றத்திலும் முறையிட்டு அதிகாரியின் முடிவை மாற்ற முடியும்.

நிர்வாகம் சொல்வது போல தானாக ராஜினாமா செய்து விட்டால் அடுத்த வேலை தயாராக இருக்கிறதா?

சென்ற பகுதியின் முடிவில் சில கேள்விகள் கேட்டிருந்தேன். முதலில், “உங்களை கம்பெனி பணி நீக்கம் செய்தால் உங்களுக்கு எங்கும் வேலை கிடைக்காது. அதனால் நீங்களாக பதவிவிலகல் கடிதத்தை கொடுத்து விடுங்கள்” என்ற மனிதவள மேம்பாட்டுத் துறையின் மிரட்டலை பற்றி பார்க்கலாம்.

அப்படி தாமாக பதவிவிலகல் கடிதம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் உடனடியாக வேலை கிடைத்து விட்டதா?

நான் கடந்த 3 மாதங்களில் பணி நீக்க மிரட்டல்களுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் தொலைபேசியிலும், நேரிலும் உரையாடி இருக்கிறேன். அதில் இருந்து இரண்டு பேரின் நிலையை இந்தக் கேள்விக்கு பதிலாகக் கொடுக்கிறேன்.

என்னுடன் எனது அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தவர் ராமதுரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரை சென்ற நவம்பர் மாதம் கட்டாய ராஜினாமா கடிதம் வாங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. அவரிடம் இப்போதைய நிலையை பற்றி கேட்ட போது, “பல நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்கிறேன். தொடக்கத்தில் சில நிறுவனங்களிடமிருந்து பதில் கிடைத்தது. இப்போது வேலையை விட்டு நின்று 8 மாதங்கள் ஆகியதால் பெரிய இடைவெளி விழுந்து விட்டது; முயற்சிகளுக்கு எந்த பதிலும் கிடைப்பதில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

“வேறு பிசினஸ் எதுவும் செய்கிறீர்களா” என்று கேட்டதற்கு “தான் சும்மாதான் இருக்கிறேன்” என்று கூறினார். அவரின் இந்த பதில் நிச்சயமாக மனக்கஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

தன்னுடைய gratuity பணத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை ஓட்டி விட்டதாகவும், இப்பொழுது தனது பசங்களின் பள்ளி திறப்பதால் வைப்பு நிதி (PF)-ல் இருந்து செலவு செய்வதாகவும் கூறினார்.

மேலும் ஒரு உதாரணம் அப்துல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் நவம்பரில் கட்டாய ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர். எச்.ஆர் மிரட்டலைத் தொடர்ந்து வேலையில் தொடர்வதற்கு பல முயற்சிகளை செய்ததாகவும், யாரும் சரியாக வழிநடத்தாதால் பணி விலகல் கடிதம் கொடுத்து வேலையை இழந்ததாகவும் கூறினார். வேலை இழந்தவுடன் சென்னையில் இருந்து மூன்று மாதங்கள் வேலை தேடியதாகவும், ஒன்றும் நடக்காததால் சென்னையை காலி செய்து விட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்று விட்டதாகவும் கூறினார். தனது நிறுவனத்திற்காக இரவு பகலாக பல நேரங்களில் உழைத்த தான் இது போல அனுப்பப்பட்டது மிகப்பெரிய மன வேதனையை அளித்ததாகவும் கூறினார்.

இந்த இருவரின் அனுபவத்தில் இருந்து ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நடைபெறும் கட்டாய ராஜினாமா கடிதம் வாங்குதல் சராசரியாக 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவர்களை குறி வைத்து நடைபெறுகிறது. அனைத்து நிறுவனங்களும் கொள்கை முடிவு எடுத்து அதிக அனுபவம் கொண்டவர்களை நீக்குவதாக தெரிய வருகிறது. அதனால் ஒரு நிறுவனத்தில் வேலையை விட்டு விலகும் நீண்ட அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு பிற நிறுவனங்களில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

இந்த நிலையில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது?

நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது நமது நிலை இப்பொழுது பாலும் தேனும் ஓடக் கூடியதாக இல்லை. அதிகாரியின் மிரட்டலுக்கு உணர்ச்சிவசப்பட்டு பழைய நினைவில் இன்னும் இரண்டு மாதங்களில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்று நம்பி ராஜினாமா செய்வது அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைக்கு சமமாகும். புதிய வேலை கிடைக்கும் வரை எந்த காரணம் கொண்டும் உங்கள் பணியை ராஜினாமா செய்யாதீர்கள்.

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல். அதனால், உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள சட்டவிரோதமாக வேலையை விட்டு அனுப்ப முயற்சிக்கும் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து தொடர்ந்து  போராடுங்கள். நான் சென்ற பகுதியில் கூறியது போல ஒரு நிர்வாகத்தால் தனது ஊழியரை நினைத்த நேரத்தில் பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால் உங்கள் முடிவில் தெளிவாக இருந்து, எந்த சூழ்நிலை வந்தாலும் வேலையை ராஜினாமா செய்யாமல் சட்ட உதவியுடன் நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக போராடுங்கள். தொழிற்சங்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டு எதிர்ப்பை தெரிவியுங்கள். ஒருவர் தனது பிரச்சனைகளை தனி ஒருவராக கூறுவதை விட ஒரு குழுவாக முறையிடும் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதனால் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து நிறுவனத்துக்குள் மேல் முறையீடு செய்து சட்ட உதவியுடன் வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடுங்கள்.

இடைப்பட்ட காலத்தில் வேறு வேலை கிடைத்து விட்டால் பணியை ராஜினாமா செய்து விட்டு சந்தோஷமாக செல்லுங்கள்.

இப்போது சென்ற பகுதியின் இறுதியில் கேட்ட 2-வது கேள்விக்கு விடை தேடுவோம்.

ஒரு நிறுவனத்தால் தனது ஊழியரின் பொது வைப்பு நிதியையும் gratuity-ஐயும் தராமல் மிரட்ட முடியுமா?

வருங்கால வைப்புநிதி என்பது பணியாளரின் கடந்த கால சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணியாளரின் பணம் ஆகும். இதை ஒரு நிறுவனம் தர முடியாது என்று சொல்வது கிரிமினல் குற்றமாகும். அது ஊழியரின் வருங்கால வைப்புநிதி கணக்கில் கட்டப்பட வேண்டும்.

வைப்புநிதி பணத்தை கட்டுவதற்கு 2 மாதம் தாமதம் ஆனால்  5% வட்டி தர வேண்டும். 2 முதல் 4 மாதம் ஆனால் 10% அதிக வட்டியும், 4 முதல் 6 மாதத்திற்கு 15% வட்டியும், 6 மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு 25% அதிக வட்டியும் தர வேண்டும். அதனால் ஒரு ஊழியரின் வைப்புநிதியை தர மாட்டேன் என்று நிறுவனம் சொல்வது ஓடுகின்ற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை போன்றதாகும்.

மூன்றாவதாக நாம் கேட்ட கேள்வி ஒரு நிறுவனத்தால் relieving letter தராமல் இருக்க முடியுமா? என்பது.

20 வருடம் முன்பு நான் மஞ்சப் பையைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்து படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்து உள்ளேன். இந்தத் துறையில் பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு இது பொருந்தும். நம் உழைப்பை நம்பி உயர்ந்த நம் வாழ்க்கையை இந்த relieving letter தான் காப்பாற்றப் போகிறதா?

கில்லி படத்தில் விஜய் சொன்னது போல தம்மாத்தூண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள். நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் சந்தோஷமாக நீங்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததின் ஞாபகமாக அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள்.

வேடிக்கை இருக்கட்டும்.

நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் பல வருடங்களாக நாம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தது இல்லை என்று ஆகி விடுமா? நமக்கு அந்த நிறுவனம் பல வருடங்களாக சம்பளம் தரவில்லையா? நமது வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லையா?

எனவே ஒரு நிறுவனத்தால் relieving letter தர முடியாது என்று நிச்சயம் சொல்ல முடியாது.

இப்பொழுது நாம் அடுத்த கேள்விக்கு விடை தேடுவோம்.

“எனது நிறுவனம் இந்தியாவிலேயே பெரிய நிறுவனம். இதன் தலைவர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சட்ட உதவிக் குழு இருக்கிறது. நம்மால் நிறுவனத்திற்கு எதிராக நமது உரிமையை நிலை நாட்ட முடியாது.”

இதுதான் உங்கள் நிலை என்றால் இதற்கு பதில் என்னவாக இருக்கும். அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

– ரா சியாம் சுந்தர்

(தொடரும்…) அடுத்த பகுதி திங்கள் கிழமை 14-08-2017 அன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்.

(பகுதி 1 பகுதி 2 )

Series Navigation<< கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“குழி தோண்டணும்னாலே ஆதார் வேணுமாம்” – வீடியோ

https://www.youtube.com/watch?v=9WJy7E9G2mc

Verizon பணிநீக்கம், மீனவர் போராட்டம், சங்க நடவடிக்கைகள்

நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை டிசம்பர் 14,  2017 அன்று நடைபெறும். இடம்: பெரும்பாக்கம் தேதி: 16-12-2017; நேரம்: 04: 00 PM to 06:00 PM...

Close