- ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்
- நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
- கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்
- எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?
- முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!
- எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!
- ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
- அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
- ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
- நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!
- ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் நான்காம் பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)
சென்ற இதழில் நிறுவனமோ, மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியோ உங்களை மிரட்டினால் எக்காரணம் கொண்டும் ராஜினாமா கொடுக்கக்கூடாது என்று பார்த்தோம். சென்ற இதழில் கில்லி படத்தில் இருந்து ஒரு உதாரணம் தந்து இருந்தோம். இதையே அஜித்தின் விவேகம் பாணியில் சொன்னால், “ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து நபர்களும் வந்து உங்களை ராஜினாமா செய் என்று கூறினாலும் நீங்களே உங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஒரு நிறுவனத்தால் நினைத்த மாத்திரத்தில் வேலையை விட்டுத் தூக்க முடியாது. so never ever give up!”
மேலும் சென்ற பகுதியின் இறுதியில் “நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியாக போராடி உரிமையை நிலைநாட்ட முடியாது என்று நீங்கள் கருதினால் அதற்கு பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டிருந்தேன். இந்தக் கேள்விக்கு பதிலாக ரமேஷாவின் வழக்கை கூறலாம்.
ரமேஷா எச்.சி.எல் நிறுவனத்தில் 2010-ம் ஆண்டு முதல் புரோக்ராமராக வேலை பார்த்து வந்தார். 2013-ம் ஆண்டில் அவரை பணித்திறன் சரியாக இல்லை என்று காரணம் கூறி வேலையை விட்டு நீக்கி விட்டது, எச்.சி.எல். அந்த நேரத்தில் (2013) தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் சட்டங்களுக்குள் வரும் என்பதை நிரூபிப்பதற்கு முன் உதாரணமாக எந்த நீதிமன்றத் தீர்ப்புகளும் இல்லை.
ஏனென்றால் தொழில் தாவா சட்டம் என்பது 1947-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதற்கு பல பத்தாண்டுகளுக்கு பின்னர் உருவான தகவல் தொழில் நுட்பத் துறைக்கு அந்தச் சட்டம் பொருந்துமா என்பதை உறுதி செய்யும் எந்த விதமான நீதிமன்ற தீர்ப்புகளோ, அரசு உத்தரவுகளோ அதுவரை இல்லை. மாறாக, ‘தகவல் தொழில் நுட்பத் துறைக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது’ என்று ஐ.டி நிறுவனங்களால் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
எனவே “தொழில்தாவா சட்டத்தின் workmen என்ற வரையறையின் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள் வருவார்களா” என்பதற்கு எந்த விடையும் அப்போது இல்லை.
ரமேஷா தொடர்ந்த வழக்கில் எச்.சி.எல் நிறுவனம் ரமேஷா சூப்பர்வைசராக வேலை செய்ததாகவும் தொழில் தாவா சட்டம் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு பொருந்தினாலும் ரமேஷாவுக்கு பொருந்தாது என்று வாதிட்டது.
நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு ரமேஷாவின் வேலையை ஆய்வு செய்து அவர் செய்யும் வேலை skilled மற்றும் technical அறிவைக் கோரும் வேலை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு இந்தத் தகுதிகள் வேண்டி இருப்பதால் ரமேஷா workmen என்ற வரையறையில் பொருந்தக் கூடியவர். எனவே, அவரை பதவி நீக்கம் செய்வதற்கு தொழில் தாவா சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும் என்றது.
அதன்படி அவருடைய பணித்திறன் குறைவாக இருந்தால் ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று நிறுவனத்தின் standing order-ல் இல்லை. மேலும் அவ்வாறு நிறுவனத்தால் பணித்திறன் குறைவானதாக சொல்லப்படும் ரமேஷாவின் திறனை மேம்படுத்துவதற்கு முறையான பயிற்சி திட்டம் கொடுத்ததாகவும் நிறுவனத்தால் நிரூபிக்க முடியவில்லை. அதனால் “ரமேஷாவை எச்.சி.எல் நிறுவனம் மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும். அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்துக்கான ஊதியத்தை கணக்கிட்டு அவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 2016-ம் ஆண்டு வழங்கியது. சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை முன் உதாரணமாகக் கொண்டு சென்னையில் பணிபுரியும் நாம் நமது உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும்.
இன்னொரு பக்கம் ஜனவரி 2015-ல், ஐ.டி நிறுவனங்களுக்கு தொழிற்தகராறு சட்டம் 1947 பொருந்தும் என தமிழ்நாடு அரசை அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில்பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு பொது நல வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஒரு முடிவினை உடனடியாக எடுக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு, மே 30, 2016 அன்று அரசு சங்கத்துக்கு பதில் அளித்தது.
அதன்படி
- ஐ.டி. ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள எந்த விதத் தடையும் கிடையாது.
- அனைத்து தொழிலாளர் சட்டங்களும் ஐ.டி. நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
- தொழிற்தகராறு சட்டம் 1947-ன் கீழ் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இப்போது இந்த உத்தரவின் அடிப்படையில்தான் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தொழிலாளர் சட்டங்களின் கீழ் உரிமைகளுக்காக போராட உதவ முடிகிறது.
ரமேஷா வழக்கைத் தவிர, சசிரேகா எதிர் டி.சி.எஸ், ஷ்ரேயா உக்கில் எதிர் விப்ரோ ஆகியவை ஐ.டி ஊழியர்கள் தாம் வேலை செய்த நிறுவனத்துக்கு எதிராக தொடுத்த வழக்குகள் ஆகும். இந்த வழக்குகளும் ஊழியர்களுக்கு சாதகமாகவே முடித்து வைக்கப்பட்டன.
இதைப் போன்று எந்த வித முன்உதாரணமும் இல்லாமலேயே போராடி வென்ற இந்த ஊழியர்களைப் போல அவர்களது முன் உதாரணத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் சங்கமாக அணி திரண்டு உரிமைகளுக்காக போராட வேண்டும். அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தங்களை இணைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தில் இறங்க வேண்டும்.
தொழிலாளர் சட்டங்களினால் ஒரு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை வேறொரு பகுதியில் நாம் விரிவாக பேசலாம்.
இப்போது நாம் மேலும் சில கேள்விகளுக்கு விடை தேடலாம். “எமது நிறுவனத்தின் தலைவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சட்ட வல்லுனர் குழு இருக்கிறது. என்னால் எப்படி இதனை எதிர் கொள்ள முடியும்?”
ஒரு நிறுவனமோ, தனி மனிதர்களோ பதவி, பணம், புகழ் இருக்கும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்து இந்த செயலால் தண்டனை விதிக்கப்பட்ட பல உதாரணங்களை நாம் பார்த்து இருக்கிறோம். நாடாளும் அரசியல்வாதிகள் முதல், திரை உலக நட்சத்திரங்கள், பெரும் பணக்காரர்கள் மக்கள் போராட்டங்களாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்த்து இருக்கிறோம். அதனால் நாம் தவறை தட்டிக் கேட்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து அமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராட்டத்தை கையில் எடுத்தால் நம்மால் நிச்சயம் வெல்ல முடியும். நாம் “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டோம்”.
மேலும் ஒரு நிறுவனம் தோராயமாக 3000 நபர்களை வேலையில் இருந்து நீக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நபர்களில் 500 பேர் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையிட்டால் அந்நிறுவனத்தின் நிலைமை மோசமாகி விடும்; நிறுவனத்தின் பெயர், பங்குதாரர்களின் நம்பிக்கை போன்றவை பாதிக்கப்படும்; மேலும் பணிபுரியும் ஊழியர்களின் நம்பிக்கையையும் ஒரு நிறுவனம் இழக்கும். மகிழ்ச்சியான ஊழியர்களே நிறுவனத்தின் தூண்களாக செயல்படுவார்கள். எனவே, இத்தகைய போராட்டங்கள் மூலம் சட்டத்தை பின்பற்ற நிறுவனங்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதிலும், வேலை வாங்குவதிலும், வேலையை விட்டு நிறுத்துவதிலும் அவர்களது உரிமைகளை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
எனவே, தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக அணி திரண்டு தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, சக ஊழியர்கள், தொழிற்சங்கம் மற்றும் சட்ட உதவியுடன் அதை எதிர்த்து துணிந்து போராட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் அடுத்த கேள்விக்கு விடை தேடலாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் தாம் வேலை இழந்ததற்கு தமது மேலாளர்களையும், மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளையும் குறை கூறுவதைக் கேட்டு இருப்போம். ஊழியர்களை வெளியேற்றுவதில் இவர்களின் பங்கு என்ன? எச்.ஆர் என்பவர் மிகப் பெரிய வில்லனா அல்லது நமது சக ஊழிய நண்பனா? இதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
– சியாம் சுந்தர்
(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி வியாழக்கிழமை ஆகஸ்ட் 17-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)