எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!

This entry is part 6 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஐந்தாம் பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)

நான் சென்ற பகுதியில் “மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஊழியர்களின் நண்பரா அல்லது வில்லனா” என்று கேட்டிருந்தேன். இதற்கான பதிலை நீங்கள் சற்று யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பகுதியை படித்து முடித்த பிறகு உங்கள் பதில் சரிதானா என்று சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

நிர்வாகம் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்கும் போது அந்தப் பெண் அதிகாரியின் தனிப்பட்ட தவறு என்ற எண்ணத்தை உருவாக்காமல், அது அவருடைய தவறு இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

டெக் மகிந்த்ரா எச்.ஆர் உரையாடல் வைரல் ஆனது ஏன்?

நாம் பகுதி-1ல் டெக் மகிந்த்ரா நிறுவனத்தில் ஊழியரை வெளியேறச் சொல்லி எச்.ஆர் அதிகாரி ஒருவர் மிரட்டும் ஒரு தொலைபேசி உரையாடலைக் கொடுத்து இருந்தோம். அந்தத் தொலைபேசி உரையாடலைப் போல பல உரையாடல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதைவிட மோசமாக பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட உரையாடல்கள் அவற்றில் கேட்கக் கிடைக்கின்றன. மேலும், இத்தகைய மிரட்டல்கள் பல்வேறு தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் தினம் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி இருக்கும் போது இந்த உரையாடல் மட்டும் எப்படி இணையத்தில் இவ்வளவு வைரலாக ஆனது? முதல் கட்டத்தில் உத்தேசமாக இந்த உரையாடல் வாட்ஸ்-ஆப் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஐ.டி துறையில் பணிபுரியும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மேல் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பலனாக தொலைக்காட்சி ஊடகங்களில் பேசப்பட்டு உலகம் முழுவதும் பிற துறையினர் மத்தியிலும் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தொலைபேசி உரையாடல் மட்டும் எப்படி இத்தனை மக்களை சென்றடைந்தது?

அந்த உரையாடலை உற்றுக் கேட்டால் பாதிக்கப்பட்ட நபர் அந்த அதிகாரியின் பெயரை கேட்கிறார். அதிகாரியும் தனது பெயரை சொல்கிறார். பலர் தொலைபேசி உரையாடலுடன் அந்த எச்.ஆர் அதிகாரியின் புகைப்படத்தையும் சேர்த்து பரப்பியிந்தார்கள். அந்தப் பெண் எச்.ஆர் அதிகாரியின் படத்துடன் கூடிய இணைப்பை மக்கள் அதிகமாக ஷேர் செய்யத் தொடங்கினார்கள். அதாவது, அந்த உரையாடல் பரப்பப்பட்டதற்கு எச்.ஆர் அதிகாரிகள் மீது ஐ.டி ஊழியர்கள் பொதுவாக கொண்டிருக்கும் வெறுப்பும் அவர் பெண் என்பது ஒரு கூடுதல் காரணமாகவும் இருக்கலாம்.

டெக் மகிந்த்ரா விஷயத்திலிருந்து எச்.ஆர் அதிகாரிகள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்பொழுது இந்த விஷயத்தை சற்று நெருங்கி பார்க்கலாம். இந்த நிகழ்வு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்ட பிறகு டெக் மகிந்த்ரா மேல்மட்ட நிர்வாகம் இதற்கு வருத்தம் தெரிவித்து இனிமேல் இது போல நடக்காது என்று உறுதி அளித்தது.

எச்.ஆர் அதிகாரிக்கு பணிநீக்கம் ஒரு டார்கெட் மட்டுமே. ஆனால் ஊழியருக்கு அது வாழ்க்கை.

இதை அந்தப் பெண் அதிகாரியின் இடத்தில் இருந்து இந்த விஷயத்தை நினைத்துப் பாருங்கள். அவர் தன் மேலிடம் தனக்கு என்ன சொல்லி இருக்கிறதோ அதைச் செய்திருக்கிறார். அந்த ஊழியரை ஒரே நாளில் வெளியேற்றுவதால் அவருக்கு நிச்சயமாக எந்த லாபமும் இல்லை, அவருடைய புகைப்படம் உலகம் முழுவதும் பரப்பப்பட்டதால் உளவியல் ரீதியாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவருடன் பணிபுரிபவர்கள், உற்றார், உறவினரும் கூட பணிபுரியும் அலுவலர்களும் அவரை வில்லியாக, மிகப்பெரிய தவறு இழைத்தவராக பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் நிர்வாகம் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்கும் போது அந்தப் பெண் அதிகாரியின் தனிப்பட்ட தவறு என்ற எண்ணத்தை உருவாக்காமல், அது அவருடைய தவறு இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறையில் scapegoat (பலிகடா) என்று ஒரு கூற்று உண்டு. ஏதாவது தவறு நடந்தால் அந்த தவறிற்காக ஒரு நபரை மட்டும் தண்டிப்பது அவரை scape goat ஆக்குவது என்று சொல்லப்படுகிறது.

பாவம் அந்த பெண் அதிகாரி, உயர் மேல்மட்ட நிர்வாகத்தின் முடிவை அமல்படுத்தியதற்காக பலிகடா ஆக்கப்பட்டு விட்டார். நிர்வாகம் ஏதோ தமக்கு தெரியாமல் தவறு நிகழ்ந்து விட்டது என்றும் இது தனிப்பட்ட ஒரு நிகழ்வு, குறிப்பிட்ட எச்.ஆர் அதிகாரி தவறிழைத்து விட்டார் என்றும் பொருள் கொள்ளும்படி நடந்து கொண்டது. இதிலிருந்து எச்.ஆர் அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டியது, “மேலிடத்தின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக அல்லது இன்னும் மோசமாக முழுத் திறமையையும் காட்டி அமல்படுத்தும் போது, தவறுகளின் பொறுப்பு அமல்படுத்துபவர்கள் மீதுதான் சுமத்தப்படும்” என்பதை.

இதன் மூலம் சில விஷயங்களை எச்.ஆர் புரிந்து கொள்ள வேண்டும். பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்த ஊழியர் தன்னுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ள முழு உரிமையும் உடையவர். எச்.ஆர் அதிகாரிக்கு பணிநீக்கம் ஒரு டார்கெட் மட்டுமே. ஆனால் ஊழியருக்கு அது வாழ்க்கை.

ஒரு மானை புலி துரத்துகின்றது என்றால் புலிக்கு அது ஒரு வேளை உணவு, மானுக்கோ அதன்  வாழ்க்கை பிரசனை. ஆனால், அந்த மான் முடிந்த அளவு ஓடித் தப்பிக்கப் பார்ப்பதைப் பார்த்து கோபம் கொள்வதைப் போல மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். ஊழியர்கள் தமது வேலையை காப்பாற்றிக் கொள்ள போராடுவதை எதிர்த்து மூர்க்கமாக நடந்து கொள்கின்றனர்.

நான் ஏற்கனவே சொன்னது போல அனுபவம் அதிகமுடைய ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பல நிறுவனங்களில் குறைந்து விட்டது. அதனால் 40 வயதில் பணி இழப்பு என்பது ஒரு ஊழியரை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கக் கூடிய நடவடிக்கை ஆகும். இதைப் புரிந்து கொண்டு எச்.ஆர் அதிகாரிகள் கொலைக்கள ஊழியர் போல நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று அனுபவம் வாய்ந்த தேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (அவர்கள்தான் மேற்படி நடத்தைகளை கற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லாதீர்கள். சரியான நடத்தையை கற்றுக் கொள்ளுங்கள்)

எச்.ஆர் அதிகாரிகள் பொதுவாக என்ன தவறுகள் செய்கிறார்கள்?

எச்.ஆர் அதிகாரிகள் செய்யும் பொதுவான தவறுகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

  1. எப்படியாவது எதிரில் இருக்கும் ஊழியரை ராஜினாமா செய்ய வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் “உங்கள் ரெசியூமை எனக்குக் கொடுங்கள், நான் இதை விட நல்ல சம்பளத்தில் என் நண்பர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருகிறேன்” என்பது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.
  2. “ராஜினாமா கடிதம் கொடுக்க முடியாது என்றால் உங்களை black list செய்வோம்”, “clean exit இருக்காது. relieving letter, gratuity/PF பெறுவதில் பிரச்சனை வரும்” என்று பொய்யான மிரட்டல்களை தொடுப்பது. ராஜினாமா செய்தால் ஒருவர் நல்ல ஊழியர், இல்லாவிட்டால் அவர் கெட்ட ஊழியர் என்பது நிறுவனத்தின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. மேலும், “நீங்கள் சட்ட உதவியை நாடினால் எங்கள் நிர்வாக சட்ட வல்லுனர்கள் உங்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்” என்று ஒரு அதிகாரி மிரட்டுகிறார்.

எச்.ஆர் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

  1. ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று அனுபவம் வாய்ந்த தேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (அவர்கள்தான் மேற்படி நடத்தைகளை கற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லாதீர்கள். சரியான நடத்தையை கற்றுக் கொள்ளுங்கள்)
  2. நீங்கள் பேசுவது சட்டரீதியாக சரிதானா என்று தெரிந்து கொள்ளுங்கள். நிர்வாக மேலிடம் கொடுக்கும் உத்தரவு சட்டரீதியாக தவறு என்றால் நிர்வாகத்திடம் அதை எதிர்த்து குரல் கொடுங்கள்.
  3. மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி என்பவர் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பாலமாக இருக்கக் கூடியவர். நிர்வாகம் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கக் கூடியவர் அல்ல. அதனால் உங்கள் கருத்துக்களை நிர்வாகத்திடம் தைரியமாக வெளிப்படுத்துங்கள்.
  4. தவறான மிரட்டல்களை ஊழியர்களிடம் எப்போதும் கூறாதீர்கள். இது போன்ற ஆடியோ உரையாடல் வெளியில் வந்தால் நிர்வாகத்தையும் உங்களையும் நிச்சயம் பாதிக்கும்.
  5. கடைசியாக, வேலை இழப்பு நடவடிக்கை உட்படுத்தப்படும் ஊழியரின் பார்வையில் இந்த விஷயத்தை அணுகுங்கள்.

இப்போது, ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு எனது பதிலாக இதன் வாயிலாக கூறுவது என்னவென்றால் எச்.ஆர் என்பவர் நம்முடன் பணிபுரியும், தம்முடைய உழைப்பு சக்தியை விற்று பிழைக்கும் சக ஊழியரே என்பது என் கருத்து. அவர்கள் டார்கெட்டுக்காக நிர்வாகத்தின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயல்படுகிறார்கள். அவர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்வது ஊழியர்களின் வெறுப்பை வெகுவாகக் குறைக்க இயலும்.

கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட சில ஊழியர்கள், தம்மை மிரட்டிய எச்.ஆர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இதற்கு எடுத்துக் காட்டாக சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “நீயா நானா” நிகழ்ச்சியை குறிப்பிட விரும்புகிறேன். அதில் எச்.ஆர் துறையில் வேலை செய்த அதிகாரிகள் கூறியதை கீழே பட்டியல் இடுகிறேன்.

  1. இதுபோல தொடர்ந்து பணிநீக்கம் செய்வது தன்னை மனரீதியாக பாதிப்பதாக ஒருவர் சொல்கிறார்.
  2. மற்றுமொருவர் இந்த பாவம் தனது குடும்பத்தையும் பாதிக்கும் என்று குறிப்பிடுகிறார்.
  3. தனக்கு மிகப்பெரிய எதிர்மறை (negative) நினைவுகள் ஏற்படுத்துவதாக ஒருவர் கூறுகிறார்.

இதன் மூலம் எச்.ஆர் அதிகாரிகள் தம் பணி நிமித்தமாக செய்யும் செயல்கள் காரணமாக அவரை வில்லனாக பார்ப்பது தவறு என்று அறிய முடிகிறது. நாங்களும் அந்தக் காரணத்தினால்தான் டெக் மகிந்த்ரா அதிகாரியின் புகைப்படத்தை இங்கு பிரசுரிக்கவில்லை.

கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட சில ஊழியர்கள், தம்மை மிரட்டிய எச்.ஆர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இன்னும் சிலர் தமது மேலாளரை குறை சொல்கிறார்கள்.

சில பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மேல்பட்ட மேனேஜர்களிடம் நான் பேசி இருக்கிறேன். நிர்வாகம் கீழ்மட்ட பணியாளர்களையாவது workman என்று வேலையை விட்டு terminate செய்வது இல்லை. மிகவும் சீனியர் மேனேஜர்கள் தொழில் தவா சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று நிர்வாகம் கருதுமானால் அவர்களை 2 மாதம் நோட்டிஸ் கொடுத்து உடனடியாக டெர்மினேட் செய்து விடுகிறது. அதனால் அவர்களின் நிலை எல்லோரையும் விட மோசம்.

மியூசிக்கல் சேர் விளையாட்டு போல உயர உயர சேர்கள் குறைந்து கொண்டே வரும். சீனியர் மேனேஜர்களுக்கு சேர்கள் வேகமாக எடுக்கப்படுகின்றன. அதனால் மேனேஜர்களையும், எச்.ஆர் அதிகாரிகளையும் குறை கூறுவதை குறைத்துக் கொள்வோம். “எனக்கு மட்டும் நல்ல மேனேஜர் கிடைத்திருந்தால் நான் தப்பியிருந்திருப்பேன்.” “என் மேனேஜர் என்னை குறி வைத்து பழி வாங்கி விட்டார்” போன்ற கருத்துக்களை கைவிட்டு இது பல ஆயிரம் பேருக்கான பிரச்சனை, ஐ.டி துறையின் ஒட்டு மொத்த கட்டமைப்பு தோற்றுவித்த பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

எச்.ஆர் – ஊழியர் பிரச்சனையை சித்தரிக்கும் இந்த வீடியோவை பாருங்கள்.

நான் அடுத்த பகுதியில் சேம் சைடு கோல் போடப் போவதாக நீங்கள் கருதலாம். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் செய்யும் தவறுகளை அடுத்த பகுதியில் பேசலாம்.

– சியாம் சுந்தர்

(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 21-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)

Series Navigation<< முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-5/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!

அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை...

பன்றி தொழுவத்திற்கு பன்னீர் தெளிக்கும் அருமை அங்கிள் வைத்தி – தினமணி தலையங்கம்

இப்போதிருக்கும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பூஜை செய்யும் தரகர்களால் நடத்தப்படுகிறது, ஆகவே அது அப்படித்தான் இருக்கும்!  நமக்குத் தேவை, மக்களால் மக்களுக்காக...

Close