ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?

This entry is part 7 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஆறாவது பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)

நான் சென்ற பகுதியில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் இலக்கில் எச்.ஆர் அதிகாரிகள் செய்யும் தவறுகளைப் பட்டியல் இட்டு இருந்தேன்.

எச்.ஆர் அதிகாரிகள் மேலிடக் கட்டளையை நிறைவேற்றுவது கடமை என்று செயல்படாமல் தங்கள் சொந்தப் பொறுப்பையும் உணர வேண்டும் (படம் : நூரன்பர்க் நாஜி வழக்கு விசாரணை)

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகு போர்க்குற்றங்களில் ஈடுபட்ட நாஜி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டது. ஜெர்மனியின் நூரன்பர்க் நகரில் 1945, 1946 ஆண்டுகளில் நடந்த 24 முக்கியமான நாஜி போர்க் குற்றவாளிகள் மீதான இந்த வழக்கு விசாரணையை பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் நடத்தினார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட நாஜி அதிகாரிகள் தாங்கள் குற்றமிழைத்ததை ஒப்புக் கொண்டாலும், தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவைத்தான் நிறைவேற்றினோம் (அவர்களுக்கு தனிப்பட்ட பொறுப்பு இல்லை) என்று வாதிட்டனர். ஆனால், தலைமை ஆணையிட்டாலும் அதை அமல்படுத்தும் அதிகாரிகள் சுயபுத்தியுடன் செயல்பட்டு இருக்க வேண்டும் என்று கூறி அவ்வாறு அமல்படுத்திய அதிகாரிகள் அந்தப் போர்க்குற்றங்களை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. 12 நாஜி கிரிமினல்களுக்கு (மேலதிகாரிகளின் ஆணையை நிறைவேற்றியதாகவும் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்றும் சொன்னவர்கள்) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எச்.ஆர் அதிகாரிகள் மேலிடக் கட்டளையை நிறைவேற்றுவது கடமை என்று செயல்படாமல் தங்கள் சொந்தப் பொறுப்பையும் உணர வேண்டும் என்பதுதான்.

இப்பொழுது சென்ற வாரக் கடைசியில் கூறியபடி தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் நம்மில் பல்ர் இழைக்கும் சில தவறுகளை பற்றிப் பேசலாம்.

இந்தியாவில் ஐ.டி துறையில் வேலை கிடைப்பது என்பது ஒரு பாதுகாப்பான, ஒப்பீட்டளவில் வசதியான வாழ்க்கைக்கு வழி செய்து கொடுப்பதாகவே இருந்து வந்திருக்கிறது. வரம்பற்ற வேலை நேரம், மன அழுத்தம், திடீர் ஆட்குறைப்புகள் என்று பல நெருக்கடிகளுக்கு இடையே வேலை செய்வதற்கு ஊதியமாக பிற துறைகளை விட உயர்ந்த சம்பளம் தரப்படுகிறது.

இவ்வாறு கஷ்டப்பட்டு படித்து, வேலை தேடி, ஐ.டி துறையில் வேலைக்கு அமர்ந்து பணிபுரியும் ஊழியர்கள் வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

உங்கள் மனக் கண்ணில் எச்.ஆர் அதிகாரி உங்களை அழைத்து ராஜினாமா செய்யச் சொல்வதாக ஓட்டிப் பாருங்கள்.

அப்துல்கலாம் ஒவ்வொருவரையும் தன்னுடைய வேலையைக் காதலிக்கச் சொல்கிறார். நிறுவனத்தை அல்ல. நீங்கள் முதலில் உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக, உங்களை சார்ந்து இருப்பவர்களுக்காக, இந்த சமூக நலனை கணக்கில் கொண்டு உழைக்க வேண்டும். அனைத்துத் தரப்பின் நலன்களையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு சரியாக திட்டமிட வேண்டும்.

ஆங்கிலத்தில் “7 habits of highly effective people” என்ற புத்தகம் ஸ்டீபன் ஆர்.கோவி என்பவரால் 1988-ம் ஆண்டு எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் முதல் பத்து புத்தகங்களில் ஒன்றாகும். இந்தப் புத்தகம், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான முக்கிய 7 பழக்கங்களைப் பட்டியல் இடுகிறது.

அதில் முதல் பழக்கமாக வெற்றி பெறுபவர்கள் தமது குறிக்கோள்களை தெளிவாக கண்டறிவது என்பதை கூறுகிறது. இந்தப் பழக்கத்தை நாம் இப்பொழுது நடைபெறும் பணிநீக்க நடவடிக்கையுடன் பொருத்திப் பார்ப்போம்.

நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மனக் கண்ணில் எச்.ஆர் அதிகாரி உங்களை அழைத்து ராஜினாமா செய்யச் சொல்வதாக ஓட்டிப் பாருங்கள். அதாவது, இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுக்கு மாதா மாதம் கிடைத்துக் கொண்டிருக்கும் சம்பளம் கிடைக்கப் போவது இல்லை. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

“கடந்த ஐந்து பகுதிகளில் வேலை இழப்பு நடவடிக்கை சாத்தியமில்லை என்று கூறினீர்கள். இப்பொழுது வேலை இழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று முரணாக பேசுகிறீர்களே” என்று உங்களுக்கு கேட்கத் தோன்றினால், நெருப்பு என்றால் வாய் சுட்டு விடாது என்பதுதான் பதில். உரிமைக்காக போராடுவது என்பது ஒன்று. அவ்வாறு போராடுவதற்காக தயார்நிலையில், பேராபத்து சூழ்நிலையை எதிர்கொள்வது என்பது மற்றொன்று. நாம் இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலை இழப்பை சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கும்?

பணிநீக்கம் என்பது இப்பொழுது அதிகரித்து வருகிறது. இந்த நிலை நாளை யாருக்கும் ஏற்படலாம். அதனால் ஒவ்வொரும் வருமுன் காக்க வேண்டும். பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதிக காலம் தாக்குப் பிடித்து அதை எதிர்த்து போராடும் வகையில் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய நிறுவனம் உங்களை பணிநீக்கம் செய்யலாம். ஆனால் உங்கள் வேலையின் பால் உள்ள அறிவும் வாழ்க்கை மீதான பொறுப்புணர்வும் உங்களை காக்கும்.

வேலை இழப்பை சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள கீழ் வரும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்:

  1. வேலை இழந்த பிறகும் உங்களால் இப்பொழுது இருப்பது போல வாழ்க்கையை தொடர முடியுமா?
  2.  உங்கள் மாதாந்திர கடன்களை தொடர்ந்து செலுத்த முடியுமா?
  3.  உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை இப்போதைய திட்டத்தின் படி தொடர முடியுமா?
  4. எதிர்பாராத நிகழ்வுகள் (மருத்துவம் போன்றவை) ஏற்பட்டால் உங்களால் சமாளிக்க முடியுமா?
  5. உங்கள் நீண்ட காலத் திட்டங்களான குழந்தைகள் படிப்பு, உங்கள் வயோதிக பாதுகாப்பு எப்படி உள்ளது?
  6. வேலை இழந்த பிறகு வருமானம் இல்லாமல் எத்தனை நாட்கள்/மாதங்கள்/வருடங்களுக்கு உங்களால் தாக்குப் பிடிக்க முடியும்?

இந்தக் கேள்விகள் ஒவ்வொரு ஊழியரும் நிச்சயம் சுயபரிசோதனை செய்யக்கூடிய கேள்விகள் ஆகும். உங்களால் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று பதிலாக கூறினால் உங்களுடைய நிலைமை மோசம் என்ற முடிவிற்கே வர வேண்டும்.

அதனால் ஒவ்வொரு ஊழியரும் வேலை இழப்பு என்பது யாருடைய வாழ்க்கையிலும் சாத்தியம் என்ற கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு வகுத்துக் கொண்ட திட்டத்திற்குள் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

7 habits புத்தகத்தில், கண்களை மூடி இறப்பு நாளை கற்பனை செய்து பார்க்கும்படி கூறுவார் ஸ்டீபன் கோவி. அங்கு கூடியிருக்கும் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்கச் சொல்வார். இவ்வாறு நமது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் போது இப்போது பெரிதாக தோன்றும் பல விஷயங்கள் அற்பமானவை என்பது புரிந்து உண்மையில் முக்கியமான விஷயங்கள் மீது கவனம் செலுத்த அது உதவும் என்று சொல்வார்.

அத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் உங்கள் அலுவலகம், உங்கள் வேலை போன்றவை பிரதான இடத்தை பிடிக்கப் போவது இல்லை. நீங்கள் எப்படிப்பட்ட பொறுப்பான நபராக வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருக்கும்.

வெளிநாட்டு வாழ்க்கை தரும் வசதிகளுக்கு ஆட்படுதல்

இப்பொழுது தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யும் பொதுவான தவறுகளை பற்றி பேசுவோம்.

எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும், பிற நாடுகளிலும் வேலை செய்யப் போய் 5 முதல் 10 ஆண்டுகள் அங்கு வாழ்கிறார்கள். அவர்களில் பலர், “திரும்ப இந்தியா வந்து வாழ முடியாது” என்றும், “எப்படியாவது வெளிநாடுகளிலேயே settle ஆகி விட வேண்டும்” என்றும் தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணங்களாக, “இந்தியா வந்தால் அங்கு கிடைக்கும் அளவுக்கு உயர் சம்பளம் கிடைக்காது” என்றும், “இந்தியா வருவதற்கு தனக்கு மிக விருப்பம்தான், ஆனால் மீண்டும் இங்கு வந்து வாழ்வதற்கு பயமாக இருக்கிறது” என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவில் பெற்ற கல்வியும், நிறுவன அனுபவமும்தான் வெளிநாட்டு வாழ்க்கையை பெற்றுத் தந்துள்ளன. ஆனால் 10 வருட வெளிநாட்டு வாழ்கை உங்கள் பிறந்த நாட்டில் தங்குவதற்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு பிரதான காரணம் சரியான குறிக்கோளை வகுத்துக் கொள்ளாததும் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை நமது குறிக்கோளுக்கு செலவிடாததும் வெளிநாட்டு வாழ்க்கை தரும் வசதிகளுக்கு ஆட்பட்டு எதிர்காலத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளாததும் ஆகும்.

இதற்கு ஒரு எளிய உதாரணமாக எனது நண்பரை சொல்லலாம். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த $20,000 ( இந்திய மதிப்பில் ரூ 13 லட்சம்)-ஐ அமெரிக்க வங்கியில் வைத்து இருந்தார். அமெரிக்க வங்கியில் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு எந்த வட்டியும் கிடையாது. இந்தப் பணத்தை ஐந்து வருடத்திற்கு மேலாக அங்கு வைத்து இருக்கிறார். இந்தப் பணத்தை இந்திய வங்கியிலோ, மியுட்சுவல் நிதியிலோ போட்டிருந்தால் அது கணிசமான வட்டியை ஈட்டியிருக்கும் என்ற அளவில் கூட திட்டமின்றி வாழ்ந்திருக்கின்றார்.

மேலும் கீழே குறிப்பிடும் செயல்களை நம்மில் பலர் செய்கிறோம்.

  1. திரை அரங்கத்திற்கு சென்றால் பாப்கார்னிற்கும், நொறுக்குத் தீனிக்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்வது.
  2. 4 பேர் ஒன்றாக சேர்ந்து சூப்பில் இருந்து dessert வரை ரூ 5000-க்கு மேல் செலவில் சாப்பிடுவது.
  3. மொபைல் போனும் மேலும் பல எலக்ட்ரானிக் பொருட்களும் தேவை இருக்கிறதோ இல்லையோ, 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது.
  4. UDS என்றால் என்ன என்று கூடத் தெரியாமல் 25-வது மாடியில் sea facing view-வில் Flat வாங்குவது.

நான் மேலே கூறிய செயல்களை தவறு என்று கூறவில்லை. உங்களுடைய சம்பளத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், நமக்கு தரப்படும் உயர் ஊதியத்தை ஆடம்பர உணவு விடுதிகள் மூலமாகவும், எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமாகவும், விலை உயர்ந்த வீடுகள் மூலமாகவும் இன்னொரு பக்கம் பறி கொடுத்து விட்டால், அதனால் யாருக்கு லாபம்? தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் நிறுவனத்திற்காக கடுமையாக உழைப்பார்கள். ஆனால் அது தங்கள் குடும்பத்திற்கு, சமூகத்திற்கு இல்லை என்பதை இது காட்டுகிறது.

பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால் உங்களால் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் இருந்தால் மேலே கூறிய அனைத்தும் மிகப் பெரிய தவறுகளே.

அடுத்த பகுதியில் நாம் அப்ரைசல் பற்றியும், அதில் ஒவ்வொரு ஊழியரும் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இந்த விழிப்புணர்வு அப்ரைசல் ரேட்டிங்-ஐ காரணம் காட்டி நிர்வாகம் பணிநீக்கம் செய்தால் சட்ட ரீதியாக நம்மை பாதுகாக்கும்.

– சியாம் சுந்தர்

(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 24-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)

Series Navigation<< எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்? >>

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-6/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

உழைப்பில் தேய்ந்து வறுமையில் காய்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க போராட்டத் தீ பற்றிக்கொண்டது எங்கும் பரவட்டும் எலும்புகள் கூட விட்டு வைக்காமல் கொள்ளையர்களின் கூடாரம் உடனே சாம்பலாகட்டும் வயிற்றில்...

விவசாயிகளை காக்க சிறுசேரி SIPCOT-ல் ஐடி ஊழியர்கள் போராட்டம்.

மார்ச் 28, 2017 அன்று மாலை சிறுசேரி சிப்காட் எதிரில் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது.

Close