- ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்
- நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
- கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்
- எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?
- முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!
- எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!
- ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
- அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
- ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
- நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!
- ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)
நாம் சென்ற பகுதியில் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பற்றி பேசி இருந்தோம். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டு, மனித வள (எச்.ஆர்) அதிகாரிகளால் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டால், வேறு வேலை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வது மிகப் பெரிய தவறாகும். அத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று முந்தைய பகுதிகளில் விரிவாக பார்த்து இருந்தோம். அதாவது, நாம் சட்ட அறிவை வளர்த்து கொண்டு பு.ஜ.தொ.மு (NDLF) போன்ற ஊழியர் சங்கங்களில் இணைத்துக் கொண்டு பணிநீக்க நடவடிக்கு எதிராக போராட வேண்டும்.

அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன.
சென்ற வார இறுதியில் அப்ரைசல் பற்றி பேசலாம் என்று கூறி இருந்தோம். நிறுவனங்கள் அப்ரைசலில் வழங்கல் படும் ரேட்டிங்-ஐ வைத்துத் தான் ஊழியரின் திறனை ஆய்வு செய்து பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவது போலக் காட்டிக் கொள்கின்றன.
அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும் பழமொழி “பாம்பு சாப்பிடும் ஊருக்கு சென்றால் நடுக்கண்டம்” என்று. நிச்சயமாக அப்ரைசல் என்பது பல தவறுகளுக்கு காரணமாக இருக்கின்றது. ஆனால் அதனை உடனடியாக முழுவதுமாக இல்லாமல் ஆக்க முடியாது. அதனால் நாம் அப்ரைசலில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு, அதனால் பாதிக்கப்பட்டு பணிநீக்க நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டால், பயப்படாமல் போராடுவதே சிறந்தது ஆகும்.
எனவே அப்ரைசலில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசலாம்.
திறன் குறைபாட்டை கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பும் பயிற்சியும் அளிப்பது
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் Bottom 5, Bottom 10 என்று பணிபுரியும் ஊழியர்களின் திறனுக்கு ஏற்ப நூறு ஊழியர்களில் கடைசி 5 அல்லது 10 ஊழியர்களை அப்ரைசல் மூலம் கண்டறியும் முறை உள்ளது. இது போல கண்டறிந்த ஊழியர்களுக்கு நிறுவனம் முன்னேறுவதற்கு வாய்ப்பு வழங்கி, தேவை ஏற்பட்டால் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு அளித்து (PIP) அவரின் திறனை மெருகேற்ற முயற்சிக்கும். இதன் மூலம் ஒரு ஊழியர் தன் திறனை மெருகேற்றி முன்னேறி அடுத்த ஆண்டுக்குள் நன்றாக செயல்பட முடியும் ஒரு ஊழியர் அடுத்த ஆண்டும் கடைசி இடங்களை பிடிப்பாரே ஆனால் அவரை நிறுவனம் ராஜினாமா செய்யக் செல்லும். இது தான் சென்ற ஆண்டு முன்பு வரை இருந்த நிலை.
இதன்படி ஒரு நிறுவனத்தில் 2 லட்சம் நபர்கள் வேலை செய்தால் 10,000 ஊழியர்கள் கடைசி 5-ல் வருவார்கள். இதில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முன்னேற்றம் காணாத 2000 நபர்களை நிறுவனம் வெளியேறச் செய்யும் என்று வைத்துக் கொள்வோம்.
அப்ரைசல் முறையை முறைகேடாக ஆட்குறைப்புக்கு பயன்படுத்துவது
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை நீக்க அப்ரைசல் முறையை பயன்படுத்தப் பார்க்கின்றன. ஒரு புராஜக்ட் (project)-ல் 200 நபர்கள் வேலை செய்தால் 10 நபர்கள் கடைசி 5-ல் வருவார்கள். அந்த 10 நபர்களில் 7 பேராக அதிக பணி அனுபவம் உடைய ஊழியர்களை இப்பொழுது நிறுவனங்கள் இலக்கு (டார்கெட்) வைக்கின்றன.
200 நபர்கள் கொண்ட ஒரு புராகஜ்க்டில் 40 ஊழியர்கள் சராசரியாக 10 வருடத்துக்கு மேற்பட்ட அனுபவம் உடையவர்கள். இந்த 40 ஊழியர்களில் 7 பேரை கடைசி 5-ல் சேர்த்து இலக்கு வைக்கின்றது நிறுவனம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 வருட அனுபவம் உடையவர்களை 15 முதல் 20 சதவீதம் வரை வெளியேற்ற முயற்சிக்கின்றன.
மேலும், 2 வருடங்கள் எல்லாம் காத்திருப்பதற்கு பொறுமை இல்லாமல் இருக்கின்றன, நிறுவனங்கள். இலக்கு வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு எந்த பணித் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படாமல் உடனடியாக பணி ராஜினாமா செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்காக நிறுவனங்கள் பாலிஸிகளை (கொள்கைகளை) பலமுறை மாற்றி ஊழியர்களை வெளியேற்றுவதற்கு தோதாக புதிய கொள்கைகளை போட்டுக் கொள்கின்றன. ஊழியர்களிடம் புதிய பாலிஸிகளைக் காட்டி ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துகின்றன.
நாம் ஏற்கனவே சொன்னது போல, இந்திய சட்டங்களின்படி ஒரு நிர்வாகம் ஊழியரை வெளியேற்ற வேண்டுமானால் பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல புதிய கொள்கைகள் உருவாக்கினாலும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் இந்த கொள்கைகள் (பாலிஸிகள்) செல்லாதது ஆகிவிடும். அதனால் நிறுவனம் அப்ரைசல் ரேட்டிங் (appraisal rating) மற்றும் புதிய கொள்கைகளை காட்டி வெளியேறச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால் நாம் பயந்து ராஜினாமா செய்து விடக்கூடாது.
சீனியர் ஊழியர்களின் தொழில்நுட்ப, திறன்சார் பணிக்கான அப்ரைசல்

உயர் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் அப்ரைசலை நிரப்பும் போது அவர் தொழில்நுட்ப (technical) மற்றும் திறன் சார் (skilled) பிரிவில் என்ன செய்தார் என்று தெளிவாக நிரப்ப வேண்டும். (படம் மாதிரிக்காக மட்டும்)
இப்பொழுது அப்ரைசலை நிரப்புவது எப்படி என்பதைப் பார்ப்போம். மிக சீனியர் வேலையில் உள்ள ஊழியர்களை “தொழிலாளி (Workman) என்ற வரையறைக்குள் கீழ் வரமாட்டார்” என்ற சட்ட ஓட்டையை உருவாக்கி பணிநீக்க நடவடிக்கை உட்படுத்த முயற்சிக்கின்றன சில நிறுவனங்கள்.
என்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் பிரேம்குமார் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இது போல பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டார், அவருடைய தரப்பு வாதங்கள் எதையும் கேட்காமல் நிறுவனத்தால் பணிநீக்கம் (terminate) செய்யப்பட்டார். அவர் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பதால் workman என்ற வரையறையின் கீழ் வர மாட்டார் என்று நிறுவனத்தால் கணக்கு போடப்பட்டு அவர் terminate செய்யப் பட்டார்.
ஆனால், இந்திய தொழில்தாவா சட்டம் 1947-ன்படி திறன்சார் அல்லது நுட்ப (skilled or technical) பணியாற்றும் ஊழியர்கள் அந்த சட்டம் வரையறுக்கும் தொழிலாளர் என்ற வகையில் அடங்குவார்கள். அதனால் உயர் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் அப்ரைசலை நிரப்பும் போது அவர் தொழில்நுட்ப (technical) மற்றும் திறன் சார் (skilled) பிரிவில் என்ன செய்தார் என்று தெளிவாக நிரப்ப வேண்டும்.
ஒரு கட்டிடத் தொழிலில் வெறும் மேஸ்திரியாக, மேற்பார்வை நிர்வாகம் மட்டும் பார்த்தால் அவர் சூப்பர்வைசர். ஆனால், தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொல்லித் தருவது, தானே இறங்கி டெக்னிக்கல் ஆக வேலை செய்வது புராஜக்ட்டில், உள்ள ரிஸ்க்-களை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, வாடிக்கையாளர்களிடம் புராஜக்ட் நிலைமை (project status) பற்றி விளக்குவது போன்றவை திறன்சார், நுட்ப அறிவு (skilled technical category) வகையில் வரக் கூடியவை. அதனால் உயர் பதவி வகிக்கும் ஊழியர்கள் தமது அப்ரைசலை நிரப்பும் போது இது போன்ற வேலைகளை கவனமாக பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நிறுவனம் உங்களை பணிநீக்கம் செய்தாலும் அதை எதிர்த்து தொழில்தாவா சட்டத்தின் கீழ் தொழிலாளர் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் முறையிட முடியும்.
அப்ரைசல் விபரங்களை திரட்டி சேமித்தல்

ஒவ்வொரு ஊழியரும் தனது அப்ரைசல்களில் அவர் பெற்ற நற்சான்றுகளை தவறாமல் உடனுக்குடன் சேமித்து வைக்க வேண்டும்.
மேலும் இப்பொழுது நிறுவனங்கள் ஒரு வருட அப்ரைசல் ரேட்டிங் முடிந்தவுடன் அது தொடர்பான விபரங்களை அதை மறைத்து (block செய்து) விடுகின்றன. உதாரணமாக, ஊழியர் ஒருவர் கடந்த 15 வருடங்களாக நல்ல ரேட்டிங் பெற்று இருக்கிறார், அவரது 16 வது ஆண்டில் நிறுவனம் அவரை வேலையை விட்டு வெளியேற்ற முற்பட்டு அவரது ரேட்டிங்-ஐ குறைக்கிறது. இந்த சூழ்நிலையில் நிறுவனம் அவரது கடந்த 15 வருட நல்ல ரேட்டிங் பற்றிய விபரங்களை மறைத்து விடுகிறது. எனவே, ஊழியர் தனது பழைய அப்ரைசல்ஐ பார்க்க முடிவதில்லை. இந்த பழைய முந்தைய வருட அப்ரைசல்களில் அந்த ஊழியர் பல நற்சான்றுகளை பெற்று இருக்கலாம், அதனை நிறுவனம் வேண்டும் என்றே மறைக்க முடியும்.
அதனால் ஒவ்வொரு ஊழியரும் தனது அப்ரைசல்களில் அவர் பெற்ற நற்சான்றுகளை தவறாமல் உடனுக்குடன் சேமித்து வைக்க வேண்டும். இந்த நடவடிக்கை பிறிதொரு நாளில் பணி நீக்கம் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் போது உபயோகமாக இருக்கும். அதனால் ஊழியர்கள் இவ்விடயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
“ஆகாத மாமியார் கைப்பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்”, “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” போன்றவை நம் கிராமங்களில் உள்ள பழமொழி ஆகும். அதன்படி ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நிறுவனம் பல வழிகளில் குறை கண்டுபிடிக்க முயற்சி செய்யும். அதனால் ஒவ்வொரு ஊழியரும் தம் பணி தொடர்பான தகவல்களை கண்டிப்பாக சேகரித்து வைக்க வேண்டும். இவை நமக்கு நிச்சயம் உதவும்.
அப்ரைசல் ரேட்டிங்-ஐ நம் மேனேஜர்கள் தான் வழங்குகின்றனர். ஆனால், நம் மேனேஜர் நிர்வாகத்தின் உத்தரவைத்தான் நிறைவேற்றுகிறார். அதனால் மேனேஜர் மற்றும் எச்.ஆர் அதிகாரியின் மீது தனிப்பட்ட வெறுப்புகளைக் காட்ட வேண்டாம்.
ஒரு நிறுவனத்தில் அப்ரைசல் ரேட்டிங் -ஐ ஊழியர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மேல்முறையீடு செய்ய முடியும். இணையத்தில் வெளியாகி நாம் அனைவரும் கேட்ட ஆடியோ பதிவில் டெக் மகிந்த்ரா எச்.ஆர் அதிகாரி சொன்னது போல மேலிடம் முடிவு செய்து விட்டதால் உங்களுக்கு இந்த மேல் முறையிடுகளின் நியாயம் கிடைப்பது சிரமம் தான். ஆனால் நீங்கள் மனம் தளராமல் உள்ள அனைத்து வழிகளிலும் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்யுங்கள். இந்த மேல்முறையிட்டு முறைகளில் உங்களுக்கு நியாயம் கிடைக்கா விட்டாலும் நீங்கள் வெளியே சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் அத்தகைய முறையீடுகள் தொடர்பான விபரங்கள் உதவிகரமாக இருக்கும்.
நாம் அடுத்த வாரத்தில் தொழிற் சங்கங்களைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.
(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)