ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?

This entry is part 9 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)

சென்ற பகுதியின் இறுதியில் தொழிற்சங்கத்தில் சேர்வது பற்றி எழுதி இருந்தேன். தகவல் தொழில் நுட்ப ஊழியர்களிடம் தொழிற்சங்கம் பற்றி என்ன மாதிரியான புரிதல் இருக்கின்றது என்று நான் பலரிடம் பேசியவற்றின் அடிப்படையில் கூறுகிறேன்.

 1. தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு அனுமதி இல்லை.
 2. தொழிற்சங்கத்தில் சேர்ந்தால் நிர்வாகம் நம்மை பிளாக் லிஸ்ட் செய்து விடும். இது தனக்கு பிற வேலைகளை பெற்றுத் தருவதற்கு பாதகமாக அமையும்
 3. தொழிற்சங்கம் வேலை இழப்பு நெருக்கடிகளுக்கு மட்டும் உதவக் கூடியது.
 4. தொழிற்சங்கம் அரசியல் சம்பந்தப்பட்டது. இது தகவல் தொழில் நுட்பத் துறைக்கு தேவையில்லை.
 5. எனக்கு வேலையிழப்பு பயமில்லை. நான் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு தொழிற்சங்கம் தேவை இல்லை.
 6. என் நிறுவனம் தொழிற்சங்கத்தை அனுமதிக்காது. தகவல் தொழில் நுட்பத் துறையில் எந்த பெரிய கம்பெனியிலும் தொழிற்சங்கம் இல்லை.

மேலே சொன்ன கருத்துகள் தான் பெரும்பான்மையான ஊழியர்களின் கருத்துகளாக இருக்கின்றன. இப்பொழுது மேலே சொன்ன கருத்துகள் உண்மைதானா என்று ஆராய்வோம்.

 1. “தகவல் தொழில் நுட்பத் துறைக்கு தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் பொருந்தும்” என்றும், “தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்கலாம்” என்று தமிழ்நாடு அரசு 2016-ம் ஆண்டு NDLF IT Employees Wing-க்கு எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அத்தகைய விலக்கு ஒருபோதும் கொடுக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தை அனுப்பியிருந்த தொழிலாளர் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தெளிவுபடுத்தியிருந்தார்.
 2. தொழிற்சங்கம் என்பது ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். வங்கி, ஆசிரியர், போக்குவரத்து, மின்துறை, ரயில்வே போன்ற அனைத்து துறைகளிலும் தொழிற் சங்கங்கள் உள்ளன. ஊழியர்களின் நலனைப் பேணுவதில் தொழிற்சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் தொழிற்சங்கத்தில் சேர்வதை காரணம் காட்டி எந்த ஊழியரையும் நிர்வாகம் மிரட்ட முடியாது. தொழிற்சங்கம் அமைப்பது என்பது இந்திய அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலாளரின் அடிப்படை உரிமை ஆகும்.
 3. தொழிற்சங்கம் ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவக் கூடியது. பல துறைகளில் தொழிலாளரின் சம்பள உயர்வுக்கும், தனிப்பட்ட ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் தொழிற்சங்கம் மூலமாகத் தான் தீர்வு காண்கின்றனர். அதனால் தான் பிற துறைகளில் ஒரு அப்ரைசல் மூலம் ஊழியரை வேலையை விட்டு அனுப்ப முடிவதில்லை.
  தகவல் நுட்பத்துறை கம்பெனிகள் தங்களுக்குள் NASSCOM என்று சங்கம் அமைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் சலுகைகளையும் பல உதவிகளையும் பெறுகின்றன. ஆனால் ஊழியர்கள் சங்கம் அமைத்தால் தமக்கு பிரச்சனை ஏற்படும் என்று நினைத்து அவை தொழிற்சங்கம் அமைப்பதை ஊக்குவிப்பது இல்லை, மாறாக அதற்கு எதிரான கருத்துக்களை பரப்புகின்றன. ஆனால் அனைத்து பெரிய கம்பெனிகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆதரிப்பது போல் பாலிஸி வைத்து இருக்கின்றன.
  மேலும், பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள மட்டும் தொழிற்சங்கத்தின் உதவி தேவை என்று இல்லை. ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் ஊழியர்களின் சார்பில் நிர்வாகத்துடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்கமே சிறந்த தீர்வு ஆகும். நாம் ஏற்கனவே டெக் மகிந்த்ரா விவகாரத்தில் பார்த்து போல நிர்வாக மேலிடம் முடிவு செய்தாலும் தொழிலாளர் சங்கத்தின் உதவியுடன் collective bargain என்ற உரிமை மூலம் நாம் அதை எதிர்த்து முறையிட முடியும்.
 4. தொழிற்சங்கத்துக்கு அரசியல் பின்னணி உள்ளது என்பது உண்மைதான். ஆனால், நாம் வேலை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும், சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளும் அரசியல் பின்னணி கொண்டிருக்கும் போது ஊழியர்கள் மட்டும் எந்த அரசியல் அடிப்படையும் இல்லாமல் தனியாக போராட முடியாது இன்ற நிலையில் இந்த அரசியல் புரிதலுடனான போராட்டம்தான் நமக்கு உதவ முடியும்.
 5. நானும் சில மாதங்களுக்கு முன்பு வேலை இழப்பு பற்றி பயமில்லை என்ற நிலையில் தான் இருந்தேன். ஆனால் இப்போது நடக்கும் விடயங்கள் அப்படி இல்லை. வேலை இழப்பு என்பது ஒவ்வொருக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை உணர்த்துகின்றன. அதனால் வருமுன் காக்க வேண்டும்.
 6. தொழிற்சங்கம் அமைப்பதற்கு நிர்வாகத்தின் அனுமதி தேவையில்லை. ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு துறையில் 7 ஊழியர்கள் சேர்ந்து ஒரு தொழிற்சங்கத்தை தொடங்க முடியும். 100 உறுப்பினர்களை சேர்த்ததும் அதை சட்டரீதியாக பதிவு செய்து கொள்ள முடியும். சட்டரீதியாக நிர்வாகம் தொழிற்சங்கம் அமைவதை தடுக்க முடியாது.

அதனால் பணியில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் தாமாக முன்வந்து தொழிற்சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும் பணியிடத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தொழிற்சங்கம் மூலம் கூட்டு பேச்சுவார்த்தை முறையே தீர்வு என்பதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் முன் வர வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல நீங்கள் உங்கள் விவரங்களை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு எழுதினால் எங்கள் குழு நண்பர்கள் உங்களுக்கு சங்கத்தில் சேர்வதற்கு உதவி செய்வார்கள். உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தால் 9003178376 என்ற மொபைல் நம்பரில் பேசி உங்கள் ஐயங்களை தீர்த்துக் கொள்ளலாம். அதனால் அனைவரும் முன்வந்து சங்கத்தில் உறுப்பினர் ஆக சேர்ந்து கொள்ளுங்கள்.

பணிநீக்க நடவடிக்கையை தடுக்க தொழிற்சங்கம் என்ன செய்ய முடியும்? தொழிற்சங்க நடவடிக்கை மூலம் பணிநீக்க நடவடி்க்கையை எப்படித் தடுக்க முடியும் என்பதை விரிவாக பார்போம்.
தொழில் தாவா சட்டம் தொழிற்சங்கத்துக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது.

 • ஒரு நிறுவனத்தில் 100 தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கத்தை நிறுவ முடியும் என்பதை ஏற்கனவே கூறி இருந்தேன். தொழிற்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் என்று சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவர். பிறகு தொழிலாளர்களின் பிரதான பிரச்சனைகள் சங்கக் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படும். சங்க உறுப்பினர்களின் பிரச்சனைகள் எப்படித் தீர்க்கப் பட வேண்டும் என்றும் விரிவாக விவாதிக்கப்படும். தேவைப்படும் போது சட்ட வல்லுனர்களின் உதவியும் கோரப்படும்.
 • இவ்வாறு ஊழியர்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு அப்பிரச்சனைகளை தீர்க்க சம்பந்தப் பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். அப்படி நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பாக நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் அனுப்பப்படும் அக்கோரிக்கைகள் நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ள படாவிட்டால், தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் ஆணையரிடம் தொழில்தாவா தாக்கல் செய்யப்படும்.
 • தொழில் தாவாச்சட்டம் பிரிவு 2K-ன் படி தொழிலாளரின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஆணையத்திடம் மனு அளிக்கப்படும். இதன் மூலம் பணிநீக்க நடவடிக்கையைத் தடுக்க முடியும்
 • IDA பிரிவு-2K மூலம் நாம் தொழிலாளர் சங்கத்தின் மூலம் ஆணையரிடம் முறையிட்டு தொழில்தாவா தாக்கல் செய்த பிறகு பின்வரும் பாதுகாப்புகள் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
  இந்த தொழில்தாவா நிலுவையில் இருக்கும் வரை பிரிவு 33-ன்படி நிர்வாகம் பாதிக்கப் பட்ட ஊழியரின் பணி நிலையை (service condition) மாற்ற முடியாது. இந்த முறையீடுடன் தொடர்புடைய சம்பளம், பதவி, பணிபுரியும் அலுவலகம் போன்ற எந்த நிலையையும் நிர்வாகம் மாற்ற முடியாது. இதன் மூலம் உடனடி பணி நீக்க நடவடிக்கையில் இருந்து பணியாளர் காப்பாற்றப்படுவர்.
 • நிர்வாகம் தொழிற்சங்கத்தை முடக்க அதில் பிரதான உறுப்பினர்களை நீக்கக் கூடாது என்று நம் இந்திய சட்டம் இப்பாதுகாப்பை தொழிற் சங்க நிர்வாகிகளுக்கு கொடுத்து உள்ளது. இதன் மூலம் 100 உறுப்பினர்கள் வரை பணி பாதுகாப்பு உறுதி ஆகும்.
 • ஒரு குழுவாக நம் வாதங்களை முன் வைப்பதால் நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்கும். முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல என்று ஒரு பழமொழி உண்டு. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலை இழப்பு இல்லை என்று NASSCOM முதல் அனைத்து நிர்வாகங்களுக்கு கூறி வருகின்றன. ஒரு குழுவாக நாம் இப்பிரச்சனைகளை அணுகும் போது நிறுவனங்கள் இது போல வேலை இழப்பு இல்லை என்று கூற முடியாது.
 • தொழிலாளர் ஆணையரிடம் இப்பிரச்சனை தீர்க்கப் படவில்லை என்றால் அடுத்தகட்டமாக  சங்கம் சார்பாக நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும்.  இதை கூட்டு பேச்சுவார்ததை  உரிமை (COLLECTIVE bargaining rights) என்று சொல்லுவார்கள். அதனால் நிர்வாகமும் சட்டச் சிக்கலுக்கு பதில் தொழிலாளர் மீண்டும் வேலையில் வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தொழிற்சங்கங்களில் சேர்வதனால் என்ன நன்மை என்று பார்ப்போம்.

 • ஊழியர்கள் ஒன்று சேரும் போது ஊழியர்களுக்கு மனரீதியாக தெளிவு ஏற்படுகிறது. நாம் முதல் பகுதியில் பார்த்தது போல பணி இழப்பு சூழ்நிலையால் தற்கொலை போன்ற தவறான முடிவுகளில் இருந்து ஊழியரை பாதுகாக்கிறது.
 • சட்ட உதவிகளை எளிதாக பெற முடிகிறது.
 • பணி இழப்பு மட்டுமின்றி ஊழியர்களின் பிற பிரச்சனைகளையும் ஒரு குழுவாக தொழிற்சங்கம் மூலம் முறையிட முடியும்.
 • ஒரு நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தொழிலாளர்களுக்கு எதிராக என்ன பாலிஸி போட்டாலும் தொழிற்சங்கம் மூலம் நாம் அதனை தடுக்க முடியும்.

இவ்வளவு உரிமைகளை உடைய தொழிற் சங்கத்தில் சேர்வதற்கு நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். இளம் ஊழியர்கள் ஒரு குழுவாக சேர்ந்து எங்கள் NDLF அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு சேர முன் வேண்டும். NDLF IT Employees Wing என்பது அனைத்து பெரிய மற்றும் சிறிய நிர்வாகங்களின் பணிபுரியும் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் நலனுக்கான சங்கம் அதனால் அனைத்து நிறுவன ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிற்சங்கத்தில் சேர முடியும்.

அடுத்த பகுதியில் நிறுவனங்களுக்கு ஐ.டி ஊழியர்களின் சார்பாக NDLF முன்வைக்கும் கோரிக்கைகளை பார்ப்போம்.

(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 31-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)

Series Navigation<< அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-8/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – கருத்துப் படம்

உருவாக்கியவர் : சரண் கிருஷ்ணா

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்

ஹஸ்ரத் மகல், காஷ்மீர், பெங்களூரு, மூணாறு, சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே, சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

Close