- ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்
- நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
- கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்
- எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?
- முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!
- எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!
- ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
- அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
- ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
- நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!
- ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஒன்பதாவது பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)
நாம் சென்ற பகுதியில் யூனியனில் (தொழிற்சங்கத்தில்) இணைவதால் ஊழியர்கள் அடையும் நன்மைகளை பட்டியலிட்டு இருந்தோம்.
கடந்த ஞாயிறு இந்து தமிழ் நாளிதழில் பணி இடத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் பெண்கள் படும் சிரமங்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதன் சாராம்சமாக “ஆண்களுக்கு சரி நிகராக பெண்கள் நடத்தப்படவில்லை” எனவும், “ஊதிய உயர்வு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்குவது” பற்றியும் பெண்களின் இன்னல்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் “தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர் சங்கம் இல்லாததே இந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியாததற்கு முழு முதற்காரணம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பணி நீக்க நடவடிக்கைகளில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மகப்பேறு, திருமணம் போன்ற காரணங்களால் பெண்கள் தாமாக வேலையை விட்டுச் செல்வது நடக்கிறது. என்றாலும், அதை விட அதிகமாக மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பி வந்தால் அதைக் காரணம் காட்டி குறைந்த ரேட்டிங் கொடுப்பது என்ற பல விதங்களில் பெண்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. மேலும் பெண்கள் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நோக்கில் பணிநீக்க இலக்கை எட்டுவதற்கு அதிக பெண்களை தாமாகவே முன் வந்து ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றன. நிர்வாகத்தை எதிர்த்துக் கேட்க பயந்து பல பெண்கள் தமது வேலையை இழக்கின்றனர்.
நம் NDLF ஐ.டி ஊழியர்கள் பிரிவில் பல பெண்கள் இணைந்து உள்ளனர். வாசுகி சீனிவாசன் அவர்கள் துணைச் தலைவர் பதவி வகிக்கிறார். அதனால் அனைத்து பெண்களும் NDLF சங்கத்தில் இணைத்துக் கொண்டு தமது பணி பாதுகாப்புக்காக போராட முன்வர வேண்டும்.
இப்பொழுது நாம் நிர்வாகங்களிடம் வைக்க நினைக்கும் கோரிக்கைகளைப் பற்றி பேசலாம்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வளர்த்தவர் என்ற மதிப்பு உடைய நாராயணமூர்த்தி இவ்வாறு ஊழியர்கள் சார்பாக பேசியது பாராட்டுக்குரியது. ஏனென்றால் மற்ற எந்த நிறுவனத்தின் தலைவர்களும் பணிநீக்க நடவடிக்கை பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை.
அதற்கு முன்னதாக இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி பணி நீக்க நடவடிக்கைக் குறித்து TV 18 தொலைக்காட்சிக்கு கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.
“பணி நீக்க நடவடிக்கைகள் துரதிர்ஷ்டவசமானவை. நிறுவனத்தில் லாபவீதத்தை பராமரிக்க நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் தமது ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு இந்த பணிநீக்க நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்” என்று அவர் கருத்து தெரிவித்தார். மேலும், “இந்த சூழலில் நிறுவனங்கள் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்குவது மூலம் அவர்களுக்கு பணத்தை கொடுப்பது ஊழியர்களிடம் தவறான கருத்தை உருவாக்கும்” என்றும் “நிறுவனங்கள் அந்த நடவடிக்கையை தொடரக்கூடாது” என்றும் கூறினார்.
ஆனால் இப்பொழுது அனைத்து பெரிய நிறுவனங்களும், பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. விப்ரோ நிறுவனம் ரூ 11,000 கோடிக்கும், இன்போஸிஸ் நிறுவனம் ரூ 13,000 கோடிக்கும் பங்குகளைத் திரும்ப வாங்குகின்றன. இதன் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் லாபமே பிரதானம் எனவும், ஊழியர்கள் நலனை நிறுவனங்கள் முதன்மையாக நினைக்கவில்லை என்பதையும் காட்டிக் கொண்டிருக்கின்றன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வளர்த்தவர் என்ற மதிப்பு உடைய நாராயணமூர்த்தி இவ்வாறு ஊழியர்கள் சார்பாக பேசியது பாராட்டுக்குரியது. ஏனென்றால் மற்ற எந்த நிறுவனத்தின் தலைவர்களும் பணிநீக்க நடவடிக்கை பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை.
நம் வலைத்தளத்தில் சீனியர் விப்ரோ ஊழியர் (Senior WIPRO Employee ) ஒருவர் பல கட்டுரைகள் எழுதி இருந்தார். அவருடைய ஒரு கட்டுரையில் பல வருடம் வேலை செய்த ஊழியர்கள் நிரவாகத்திற்கு பெற்றுத் தந்த லாபம் பற்றியும் நிர்வாகம் அவர்களின் பல ஆண்டு உழைப்பையும் பங்களிப்பையும் பொருட்படுத்தாமல் வேலையை விட்டு நீக்குவதைப் பற்றியும் எழுதி இருந்தார்.
இப்பொழுது நடக்கும் பணிநீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை பணிநீக்க முயற்சி செய்கின்றன, நிறுவனங்கள். இதன் பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 40 வயதில் வேலையை விட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் ஊழியர்களின் உழைப்பே காரணம். ஆலைத்தொழில் நிறுவனங்களிலாவது நிர்வாகம் இயந்திரங்களுக்கு, தொழிற்சாலையை நிறுவுவதற்கு என்று நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறையில் என்பது ஊழியர்களின் உழைப்பே பிரதானமானது. இது ஒரு Service oriented industry (சேவைத் துறை). ஊழியர்களே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை.
- அதனால் நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, அவர்களின் குடும்ப, சமூக சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து ஊழியர்ளை வெளியேற்ற முயற்சிக்கூடாது. இந்த ஊழியர்கள் பல வருடங்களுக்காக நிறுவனத்துக்காக உழைத்தவர்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
- பல காரணங்களுக்காக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குறுக்கு வழியில் மிரட்டி வெளியேற்ற முயற்சி செய்யாமல் ஊழியர்களின் நலன் சார்ந்து சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அதே போல எங்கும் பணிநீக்க நடவடிக்கை நடக்கவில்லை, எல்லாமே தாமாக விலகி போவதுதான் என்று பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொண்டு உண்மை நிலைகளை கூற வேண்டும்.
- குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை தமக்கு சாதகமாக மாற்றி அதிக அனுபவம் உடைய ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது தவறு.
இப்பொழுது தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்வது அதிக ரிஸ்க் உள்ளதாக ஆகி வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் முன்பிருந்த ஐ.டி மோகம் மிகவும் குறைந்து விட்டது. கட்டாய ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் சமூக ரீதியில் இன்னும் பாதகமாக மாற்றத்தை ஏற்படுத்தி ஐ.டி துறைக்கு திறமையான இளைஞர்கள் வருவதை தடுத்து நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் யூனியனில் இணைவது இது போன்ற நெருக்கடியான காலங்களில் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட உதவும். அதனால் ஊழியர்கள் யூனியனில் சேர்வதை தடுக்க முயற்சிக்க கூடாது.
- NDLF என்பது ஊழியர்களின் நலன்களுக்கான சங்கம், நாங்கள் ஊழியர்களின் நலனிற்காக நிர்வாகத்துடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்த கோருகிறோம். அதனால் ஊழியர்கள் NDLF ஐ சில பிரச்சனைகளில் உதவ கேட்டுக் கொண்டால் எங்கள் சங்க உறுப்பினர்களை இந்த பேச்சு வார்தையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
- நாங்கள் மேலும் பல ஊழியர்களை சங்கத்தில் இணைக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். உங்கள் நிறுவன ஊழியர்களை NDLF-ல் சேர்ப்பதற்கு உதவும் வகையில் Stall கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடுத்த பகுதியில் “ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா பிரச்சனையா” என்ற முடிவினை விவாதித்து நாம் இந்தத் தொடரை முடித்துக் கொள்ளலாம்.
(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் இறுதி பகுதி செப்டம்பர் 4-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)