ஆட்டோ மொபைல் துறையின் மந்த நிலையால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்:
ஆட்டோ மொபைல் துறையில் நிலவும் மந்த நிலை மற்றும் நெருக்கடியால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகி வருகின்றனர். இது பல துறைகளில் சங்கிலித் தொடர் விளைவுகளை உருவாக்கி வருகிறது. அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை செய்யும் மற்றொரு துறையான டெக்ஸ்டைல் துறையும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அரசு உடனடியாக தலையிட்டு வேலை இழப்பு அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்துறையைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. வடகிழக்கு ஜவுளி மில்கள் சங்கம் (Northern India textile Mills Association –NITMA) அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத், இராஸ்தான், மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் சுமார் நாற்பதாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலையை இழந்துள்ளதாக டிரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இதன் மேலாண் இயக்குநர் வருண் பெர்ரி இந்த குறியீடுகள் நமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டதைக் காட்டுகின்றன என்று கூறுகிறார்.
ஆயுதத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தம்:
41 ஆயுத தளவாடத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் சுமார் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட 20-ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். ஆயுத தளவாடங்கள் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் அரசின் முடிவே வேலைநிறுத்ததிற்கு காரணமாகும். ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தத்தின் முதல் நாளன்று ஒட்டு மொத்தமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதாக போராட்டத்தில் பங்கெடுத்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்திய இரயில்வேக்கு முற்பட்ட ஆயுத தளவாட தொழிற்சாலையை கார்ப்பரேட் கையில் கொடுப்பதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதன் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் சார்பு தொழிற்சங்களே குற்றம் சாட்டும் நிதி ஆயோக்கின் தொழிலாளர் விரோதக் கொள்கை:
ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம், மத்திய அரசின் முக்கிய நோக்கமே இந்திய பொருளாதாரத்தை முதலாளித்துவ பொருளாதாரமாக மடைமாற்றுவது தான், வளர்ச்சி எல்லாம் அரசுக்கு இரண்டாம் பட்சம் என்று குற்றம் சுமத்தி மத்திய அரசின் தவறான பொருளாதர மற்றும் தொழிலாளர் கொள்கையை தன்னுடைய 144-வது தேசிய கமிட்டி கூட்டத்தில் கண்டித்துள்ளது. மோடி அரசு எவ்வளவு தூரம் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-ன் பி.எம்.எஸ் கண்டித்ததே சாட்சி.
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்வு:
2013-ல் 14,505 ஆக இருந்த கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2018-ல் 41,420 ஆக உயர்ந்துள்ளது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை தடை செய்வதாக 2013-லேயே சட்டம் கொண்டு வரப்பட்டது. நிதி மற்றும் மேம்பாட்டு என்ற மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழே இயங்கும் தேசிய சபாய் கரம் சாரிஸ் என்ற அமைப்பானது 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் நடத்திய கணக்கீட்டின் படி 86,528 பேர் தங்கள் வேலையை கையால் மலம் அள்ளும் செய்யும் பணியாளர்கள் என்று பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசு அதை சதித்தனமாக41,420 என்று கணக்கீடுகிறது.