உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள சுகாதாரக் குறியீட்டு எண் பட்டியலில் கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முன்வரிசையில் இருப்பதாகவும் உ பி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகியவை கடைசி வரிசையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. “கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு மூன்றும் எழுத்தறிவு, ஊட்டச்சத்து உணவு, ஆரம்ப சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிகம் செலவழிக்கும் மாநிலங்கள் என்பதால் இவை அதிக புள்ளிகள் பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை” என்கிறது தமிழ் இந்து நாளிதழ்.

சடங்கிற்கு ஆகும் செலவிற்கு அந்த சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் பிச்சையெடுத்துள்ளனர்.

கடைசி வரிசையில் இருக்கும் மாநிலங்களின் மக்களது வாழ் நிலைமை எப்படியிருக்கும் என்பதற்கு முன்வரிசையில் இருக்கும் மாநிலங்களுடன் சற்று ஒப்பிட்டு பார்த்து புரிந்துகொள்வோம்.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப் பட்டியைச் சேர்ந்தவர்கள் காளியப்பன்- விஜயா தம்பதியர். இவர்களுக்கு மோகன் (14), வேல்முருகன் (13) என்று இரண்டு பையன்கள். மூன்றாவதாக காளீஸ்வரி என்ற பெண் குழந்தை. காளியப்பன் ஏற்கனவே 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் விஜயா கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து முன்னேற்றி விட வேண்டும் என்று உழைத்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜயாவுக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டது. வேலைக்கு செல்வது கடினமானது. மூத்த பையன் மோகனை வேலைக்கு அனுப்பினார். புற்றுநோய் நாளுக்கு நாள் முற்றி படுத்த படுக்கையான விஜயாவை சிறுவர்கள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். விஜயா பிப்ரவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.

அந்த நேரத்தில் குழந்தைகள் ஊரில் இருந்துள்ளனர். தாய் மரணமடைந்த செய்தியறிந்த மூத்த மகன் தனது தம்பியை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் செல்கிறான். பசங்களுக்கு வயது குறைவு அதனால் உடலை எப்படி ஒப்படைப்பது என்று தயங்கியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்ற சிறுவர்களின் சித்தப்பாவுக்கு தொலைபேசியில் தகவல் சொல்கின்றனர். அவரோ வந்து போவதற்கு தன்னிடம் பணம் இல்லை, தன்னால் வர முடியாது என்று முதலில் கூறியுள்ளார். பலமுறை வலியுறுத்திய பின்னர் எப்படியோ பணம் புரட்டி ஊருக்கு வந்து சேர்ந்துள்ளார். வேறு உறவினர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இறுதிச் சடங்கிற்கு ஆகும் செலவிற்கு அந்த சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் பிச்சையெடுத்துள்ளனர். விஜயாவின் உடல் திண்டுக்கல் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஊரில் இருந்த கடைசி குழந்தையான காளீஸ்வரி கடைசியாக தனது தாயின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை.

(இந்தச் செய்தி வெளியான பிறகு சில தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.)

வளர்ந்து முன்வரிசையில் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிடும் மாநிலத்தில் உழைத்து பிழைக்க வேண்டும் என்று பாடுபடும் மக்களது வாழ்க்கை நிலை நிலை இப்படித்தான் உள்ளது

அதாவது, வளர்ந்து முன்வரிசையில் இருப்பதாக மத்திய அரசு பட்டியலிடும் மாநிலத்தில் உழைத்து பிழைக்க வேண்டும் என்று பாடுபடும் மக்களது வாழ்க்கை நிலை நிலை இப்படித்தான் உள்ளது. உடன்பிறந்த அண்ணன் உயிருடனில்லை. அண்ணனின் மனைவியும் இப்போது இறந்து விட்டிருக்கிறார். குழந்தைகளுக்கு யாரும் இல்லை என்ற சூழலில் கூட, பிழைக்கப் போன இடத்திலிருந்து உடனடியாக வர முடியாத அளவுக்கு வாழ்க்கை அழுத்தியிருக்கிறது, குழந்தைகளின் சித்தப்பாவை. உழைக்கும் மக்களின் வாழ்க்கை கொடுமையை இதை விட எப்படி விவரித்து சொல்லி விட முடியும்.

இப்படி நிதி ஆயோகின் ‘முன்னேறிய’ மாநிலத்திலேயே உழைக்கும் மக்களின் நிலைமை இதுதான் என்றால், பின்தங்கிய பின்தங்கிய மாநிலங்களில் எப்படியிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

இந்நிலையில் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய அரசுகள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்!

ஹரியானாவில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, “பால் மாடு வைத்திருப்பவர்கள் பால் வற்றிய பிறகு அதனை கைவிடக் கூடாது. அந்த மாடுகளை விற்பனை செய்தால், அல்லது தெருக்களில் அனாதைகளாக திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் கறவை நின்றுபோன மாடுகளைப் பற்றிய தகவல் தெரிவித்தால் ஒரு மாட்டுக்கு ஆண்டுக்கு ரூ 5,000 பராமரிப்பு தொகையாக தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் பசுவை வைத்து மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க-வின் நாடகம். மத்தியில் ஆளும் பா.ஜ.க மக்களைப் பற்றி என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்திய முதலாளிகளுக்கோ அல்லது பன்னாட்டு முதலாளிகளுக்கோ அடிமை சேவகம் செய்யவே தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்று நடந்து கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் அந்த அடிமைத்தொழிலுக்கு கோடிகளில் கிடைக்கும் என்பதால் கார்ப்பரேட்டுகளை வலிந்து உபசரிக்கிறார்கள். தமக்கு எந்த வகையிலும் பயன்படமாட்டார்கள் என்பதனால் விவசாயிகளை சந்திப்பதுகூட இல்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் சாதி, மத கலவரத்தை வளர்க்க பசுமாடுகள் என்ற நெருப்புத்துண்டுகள் தேவை என்பதால் அவற்றிற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய்கள் வழங்குகிறார்கள்.

பெரும்பாலும் பசுமாடுகளை வளர்ப்பது, பராமரிப்பது விவசாயிகள் தான். மாடுகளை அன்றாடம் பார்த்து பார்த்து பராமரிப்பவர்கள் விவசாயிகள். ஆனால் விவசாயிகளை தெருவில் விட்டுவிட்டது இந்த அரசு. விவசாயிகள் இன்று குடும்ப செலவுக்குக் கூட போதுமான வருமானம் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் அரசுகளோ, வளர்ந்துவரும் மக்கள்தொகை, மக்களின் உணவுத்தேவை, நீர் தேவை போன்றவற்றைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி இருந்துள்ளதோடு, ஏற்கனவே இருந்த நீர்நிலைகளையும் அழித்து, பராமரிக்காமல் போட்டு வைத்திருப்பதை பார்க்கிறோம். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்காதது நேரடியாக விவசாயிகளையும், பிற மக்களையும் பாதிக்கின்றது.

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது, எப்பாடு பட்டாவது குழந்தைகளை படிக்க வைக்க பார்ப்பது, உடலுக்கு ஏதாவது வந்து விட்டால் வாழ்க்கை நாசமாகிப் போவது என்று போராடி கொண்டிருக்கிறார்கள்.

நம்மை ஆளும் அரசுகளோ, கார்ப்பரேட் சேவையிலும் பசு சேவையிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் படித்த, ஓரளவு கணிசமான சம்பளம் பெற்று, வசதியான வாழ்க்கை வாழும் நமது கடமை என்ன?

ஒருமுறை ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பரிடம் பேசும்போது, “என்ன டீம் ங்க இது, ஒருத்தன் கூட சரியில்லை” என்றார். என்னவிசயம் என்று விசாரித்தால் அவருடைய பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லையாம்.

இதுபோன்ற அற்பத்தனங்களை விட்டுவிட்டு, சமூகத்தின் ஒவ்வொரு தரப்பு மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்து சிந்திப்போம். ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.

– பிரவீன்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-working-people-cows-farmers-and-us/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சென்னை ஐ.டி சங்கக் கூட்டம் – இந்திய ஐ.டி ஊழியர்கள் ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்!

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பயம், யூனியன் சேர்வது குறித்த தயக்கம், அவர்களுக்கு யூனியன் குறித்த விழிப்புணர்வை தெளிவாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும், யூனியன் சேர்வதனால்...

டெல்லியில் ஒரு மாத காலத்தை எட்டும் விவசாயிகள் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அதை மோடி அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

Close