இது விப்ரோ ஊழியர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல். இதில் உள்ள உணர்வுகளைப் புரிந்து கொள்ள கூடுதல் விளக்கம் எதுவும் தேவையில்லை. சில வரிகளை மட்டும் கொட்டை எழுத்தில் மாற்றியிருக்கிறோம்.
வணக்கம் புஜதொமு,
எங்களுக்கு தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பற்றி new-democrats.com தளத்தின் வாயிலாக தெரியப் படுத்தியதற்கு நன்றி.
எனக்கு ஐடி துறையில் 20 வருட அனுபவம் உள்ளது. நான் இதுவரை தொழிலாளர் நலச் சட்டம் ஐடி ஊழியர்களுக்கு உதவும் என்று நினைக்கவில்லை. நான் எப்போதும் இந்திய நீதித்துறையின் / அரசின் மீது நம்பிக்கை கொண்டதில்லை. அவர்கள் பணமுதலைகளுக்கு மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் துணை போகின்றவை. அவை எப்போதும் சாதாரண மக்களுக்கோ தொழிலாளர்களுக்கோ உதவியதில்லை.
நான் என்னுடைய L2 மேனேஜரால் வலுக்கட்டாயமாக குறைந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டேன். நான் இதுவரை 13 வருடங்களாக விப்ரோவில் வாடிக்கையாளர்ர்களிடமிருந்து எந்தவொரு புகாருமின்றி பணியாற்றி வருகிறேன். நான் தற்போதைய ஆன்-சைட் (அமெரிக்காவில்) வேலையில் வாடிக்கையாளர்களிடம் நிறைய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.
நான் எனது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களிடம் நல்ல ரேட்டிங் (HVC = High Value Contribution = உயர் மதிப்புப் பங்களிப்பு) பெற்றுள்ளேன். நான் எப்படி வேலை செய்வேன் என்பதும் புராஜெக்டில் எனது பங்களிப்பு என்ன என்பதும் அவர்களுக்கு தெரியும்.
ஆனால் என்னை MCE (More Contribution Expected = கூடுதல் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது) என்று மதிப்பிட்டவருக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. என்ன காரணம் என்றால் நான் ஒரே பேண்டில் (C1) பத்து வருடங்களாக இருந்து வருகிறேன் மற்றும் அதே வேளையில் நான் கடந்த 3 வருடங்களாக தொடர்ச்சியாக HVC யில் இருக்கிறேன்.
நான் மற்ற புராஜெக்ட்களில் தேர்வாகி சேவைப்பயனரின் (Client) நேர்காணலிலும் தேர்வாகியுள்ளேன். இருந்தாலும் என்னை ‘கடைமட்ட 10’ என்று வகைப் படுத்தப்பட்டுள்ளதால் எனக்கு கணினி கூட ஒதுக்கப் படவில்லை. (கடைமட்ட 10 என்று வகைப் படுத்தப்படுவதற்கு எந்த பிசினஸ்லும், புராஜெக்டிலும், டீமிலும், எந்த அறிவியல்பூர்வமான வழியும் பின்பற்றப் படுவதில்லை.)
நான் 3 புராஜெக்ட்களை ஆன்-சைட்டிலிருந்து கையாண்ட போதிலும், ஒவ்வொரு இரவிலும் இந்தியாவிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்து வந்த போதிலும், எந்த காரணமும் கொடுக்கப்படாமல் under performer என்று அழைக்கப்படுவது தான் மிகவும் அவமானமாக இருக்கிறது.
ஹெச்.ஆரிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று என்னுடைய L2 மேனேஜர் சொன்னார். நான் 40 வயதைத் தாண்டிவிட்டேன். அதுமட்டுமின்றி, நான் டெக்னிகல் ஆளாக இருப்பதாலும் 20 வருட அனுபவம் உள்ளதாலும் எனக்கு வெளியில் எங்கும் வேலை கிடைக்காது. நான் எப்போதும் பெஞ்சிற்கு தள்ளப்பட்டு நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டாத நிலையில் இருந்ததில்லை.
கடந்த 13 வருடங்களாக, சொந்த வாழ்க்கையில் சமரசங்களைச் செய்து கொண்டு, மிகவும் பொறுப்போடு கடினமாக உழைத்து வந்தேன்.
அதுமட்டுமில்லை, அவர்கள் நல்லவர்களையும் மென்மையானவர்களையும் பதில் வார்த்தை பேச அஞ்சுபவர்களையும், இல்லையென்றால், கேள்வி கேட்பதற்கு எந்தவித பின்புலமும் அற்றவர்களையும் தான் குறிவைக்கிறார்கள்.
• அவர்கள் எதற்கு திடீரென்று Band Inertia வைக் கொண்டு வருகிறார்கள்? தொடர்ந்து 3 வருடங்களாக உயர்வாக மதிப்பிடப்பட்டதில் என்ன குற்றம்? விப்ரோவில் சேரும் போது நான் இது போன்ற எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திட்டதில்லை.
• எந்தவித முன்னறிவிப்பின்றி விப்ரோவால் கொண்டுவரப்பட்ட முறைகேடான இதுபோன்ற Band Inertia கொள்கையை எதிர்க்க தொழிலாளர் நலச் சட்டம் எங்களுக்கு உதவிகரமாக இருக்குமா?
• நான் எப்படி என்னுடைய அப்ரைசல் ரேட்டிங்கை மாற்ற முடியும்? நான் நீதிமன்றத்தை அணுக முடியுமா?
ஏன் விப்ரோ திடீரென்று ஆண்டுக்கொருமுறையுள்ள அப்ரைசலை காலாண்டுக்கு ஒருமுறை என்று மாற்றியது. நாங்கள் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் மதிப்பிடப்பட வேண்டியிருப்பதாலும் இதற்கு வேலைநேரத்திற்கும் கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளதாலும் இது குழு உறுப்பினர்களுக்கும் மேனேஜர்களுக்கும் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாக இருக்கிறது. தொழிலாளியை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் மதிப்பீடு செய்வது சட்டப்படி நியாயமா?
அமெரிக்காவில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்த ஊழியரை வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு வரவைத்தது மட்டுமில்லாமல் மேலும் நிர்வாகம் அவரை கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் ராஜினாமா செய்யச் சொல்லப்படும் ஊழியரின் நிலையையும் மனவலியையும் நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் என் வாழ்க்கையை ஒரு வாரத்திற்குள்ளாக தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டார்கள். எப்படிப்பட்ட நெஞ்சுரம் மிக்கவர்களும் இந்த மாதிரி சூழ்நிலையை எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அவர்கள் என்னுடைய வாழ்க்கை முழுவதையும் திருடிவிட்டதாகவும் எனது நம்பிக்கையையும் எனது வாழ்வின் சாத்தியக்கூறுகளையும் நிலைகுலையச் செய்து விட்டதாகவும் உணர்கிறேன். எனக்கு வேறொரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் வருங்கால பணிநீக்கத்திற்கு நான் மிக எளிய இலக்காக இருப்பேன். காரணம் இத்துறையில் எனக்கு அனுபவம் நிறைய இருப்பதுதானே ஒழிய திறமை குறைவு அல்ல. எனவே எனது வாழ்க்கை தொடர்ந்து அபாய நிலையில் உள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு அவர்களின் அனுபவம் மற்றும் பதவியைப் பொறுத்து ஒரு தரப்படுத்தப்பட்ட சம்பளம் என்று இல்லை. புராஜெக்ட் போய்விடக்கூடாது என்பதற்காக தேவைப்படும் போது அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுப்பார்கள். அதே காரணத்தை வைத்து தேவைப்படாதபோது ‘financial drive’ என்று சொல்லி வேலையை விட்டு தூக்குவார்கள்.
நான் இதுவரை மொத்தமாக 20 இலட்சம் ரூபாய்கள் வரை வருமானவரியாக இந்திய அரசுக்கு செலுத்தியுள்ளேன். இந்திய அரசு மேற்கூறப்பட்ட முறைகேடான நெறிமுறையற்ற அணுகுமுறையை எதிர்த்துப் போராடவும் எனது வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் எனக்கு துணை நிற்குமா?