அன்பார்ந்த தொழிலாள தோழர்களே,
கடந்த 25.3.2020 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.3.2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மொத்த லாக்டவுன் காலத்துக்கும் முழு சம்பளம் அளிக்குமாறு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் உத்தவிட்டிருந்தது. இதை எதிர்த்து சில முதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். “லாக்டவுன் காலத்துக்கு சம்பளம் தர முடியாது” என்பது முதலாளிகளது வாதம்.
இந்த வழக்கில் பதில் சொல்லக்கூடிய எதிர்மனுதாரரான மத்திய அரசு, தனது பதிலை தெரிவிக்க இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தது, உச்சநீதிமன்றம். ஆனால், மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.
மீண்டும் ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில், நமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, “லாக்டவுன் காலத்துக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்” என தனது வாதத்தை பதிவு செய்தது.
முதலாளிகள் தொடுத்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டிய மத்திய அரசு பதில் அளிக்கவில்லை . மாறாக, 25.3.2020 முதல் லாக்டவுன் காலத்துக்கு முழு சம்பளம் தரவேண்டும் என 29.3.2020 அன்று போட்டிருந்த உத்தரவை 18.5.2020 முதல் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பானது 25.3.2020 முதல் 17.5.2020 வரை முழுசம்பளம் வழங்க வேண்டும் என மறைமுகமாக தெரிவித்ததாக இருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 12.6.2020 அன்று தீர்ப்பு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை.
மாறாக, ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
கூடுதலாக, லாக்டவுன் காலத்துக்கு முழு ஊதியம் தர வேண்டும் என்று வழிகாட்டுதல் தெரிவித்த மத்திய அரசின் உள்துறை அமைச்சக சுற்றறிக்கைகளை அமல்படுத்தாத நிர்வாகங்கள் மீது தற்போது (இறுதி உத்தரவு வரும்வரை) சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாது எனவும், சம்பளம் வழங்குவது குறித்து அந்தந்த நிர்வாகத்துடன், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் / தொழிலாளர்கள் பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்திவுள்ளது.
தொழிலாளி வர்க்கத்தை நீதித்துறை மீண்டும் ஒருமுறை கைவிட்டுவிட்டிருக்கிறது.