சும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை?

திருவள்ளூர் மாவட்டம் ஒதப்பை கிராமத்தில் இருக்கின்ற டி.எம்.சி ஆட்டோமோடிவ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க முயன்ற ‘குற்றத்துக்காக’ முன்னணி தொழிலாளர்கள் 3  பேரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலைநீக்கம் செய்துள்ளது, நிர்வாகம். சங்கம் அமைப்பதை குற்றமாக அறிவித்து வேலைநீக்கம் செய்யப்படுகின்ற தொழிலாளர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய நாட்டு தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையை காலனி ஆதிக்க காலத்திலேயே அடைந்துவிட்டனர். அந்த உரிமைகூட சும்மா கிடைக்கவில்லை. எத்தனையோ உயிரிழப்புகள், வேலை இழப்புகள், கடுமையான அடக்குமுறை-சிறைவாசம்! இத்தனைக்குப் பிறகுதான் தொழிற்சங்க உரிமையை பெற்றனர், இந்தியத் தொழிலாளர்கள்.

ஆசியாவின் முதல் தொழிற்சங்கம் என்றறியப்படுகின்ற சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union – MLU) 100 ஆண்டுகளுக்கு முன்னர் (27.04.1918) அமைக்கப்பட்ட போது சந்தித்த இன்னல்களும், இழப்புகளும் இந்த தருணத்தில் நினைவுகூரத்தக்கவை.

காலனியாதிக்கவாதிகள் நடத்திய முதல் உலகப்போரின் சுமைகளும் நெருக்கடிகளும் அவர்களது காலனி நாட்டு தொழிலாளர்கள் மீது இடியாய் இறங்கியது. அந்த வகையில் பிரிட்டன் படைவீரர்களுக்குத் தேவையான சீருடைகளை தயாரிக்க இரவு-பகல் பாராமல், ஒய்வும் இல்லாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள், சென்னை பெரம்பூர் பகுதியில் இயங்கி வந்த பின்னி ஆலையில் (பக்கிங்காம் & கர்னாடிக் மில்ஸ், பி&சி மில் என்றெல்லாம் அறியப்பட்ட மில்) வேலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள். அவர்களுக்கு சீரான வேலைநேரமோ, சம்பளமோ, வாராந்திர விடுமுறையும் கிடையாது.

இதே நிலைமைதான் இந்தியாவில் ஆங்காங்கே முளைத்து வந்த பல்வேறு ஆலைகளிலும் இருந்தது. அந்த ஆலைகளில் சில நேரங்களில் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டும், தாங்களாகவே ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கியும் போராடி வந்தனர். அந்த போராட்டங்கள் எல்லாம் நீர்த்துப் போயும், அடக்குமுறைக்குள்ளாகியும் பலனற்றுப் போனதை உணர்ந்த பின்னி ஆலைத் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க முறையான தொழிற்சங்கம் அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தார்கள். 1917-ல் ரசிய நாட்டில் வெடித்த மகத்தான நவம்பர் புரட்சி அவர்களுக்கு உத்வேகமளித்தது.

பெரம்பூர் படாளத்தில் உள்ள டிமெல்லோஸ் சாலையில் துணிக்கடை வைத்திருந்த செல்வபதி ரெட்டியாரும், அரிசி மண்டி வைத்திருந்த இராமாஞ்சலு நாயுடுவும் தான் சென்னை தொழிலாளர் சங்கம் துவங்குவதற்கு வித்திட்டவர்கள். இவர்களது கடைக்கு வருகின்ற தொழிலாளர்கள் தாங்கள் படுகின்ற துயரங்களை பேசிக்கொள்வதைக் கேட்ட இந்த வணிகர்கள் கொதிப்போடு இருந்தனர். இந்தச் சூழலில் ஒரு தொழிலாளி கழிப்பறைக்கு செல்ல அனுமதி கேட்டபோது கங்காணி அனுமதியளிக்க மறுத்துவிட்டதால், வேலையிடத்திலேயே மலம் கழித்துவிட்டார், அந்தத் தொழிலாளி. அவரது மலத்தை அவரே கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. இது கொந்தளிப்பை அதிகப்படுத்தியது. இதனால் சங்கம் துவங்கியே தீர வேண்டும் என்கிற உத்வேகம் தீவிரமாகியது. இவர்களில் யாரும் கம்யூனிஸ்டுகளோ, அரசியல் மேதைகளோ அல்ல. வாழ்நிலைதான் அவர்களை தொழிற்சங்கத்தை நோக்கி துரத்தியது.

2, மார்ச், 1918 முதல் பொதுக்குழு துவங்கியது. சுமார் 10,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த மறுநாளே செல்வபதி செட்டியார் வீட்டுக்கு போலீசு போனது. ஆலை மேலாளரும், போலீசு உதவி ஆணையரும் கொடுத்த உத்தரவின் பேரில் போலீசு களமிறங்கியது. முதலாளிகளின் அடியாள்படைதான் போலீசு என்பது காலம் காலமாக இருக்க்கூடியதுதானே! அடுத்தடுத்து தொழிலாளர்கள் சந்தித்த நெருக்கடிகள் அவர்களை உறுதிப்படுத்தவே செய்தன. இறுதியாக 27.04.1918 அன்று பி.பி வாடியாவை தலைவராகவும், திரு.வி.க உள்ளிட்ட சிலரை துணைத்தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு ஆகியோரை செயலாளர்களாவும் கொண்டு “சென்னை தொழிலாளர் சங்கம் ” ஆசியாவின் முதல் தொழிற்சங்கமாக வரலாற்றில் இடம் பிடித்தது. இதற்கு முன்பு இருந்த சங்கங்களைப் போல் அல்லாமல், உறுப்பினர் சேர்க்கை முதல் நிர்வாகி தேர்வு வரை தனக்கென சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு செயலாற்றத் துவங்கியதால் தொழிற்சங்க இயக்கத்துக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது.

சங்கம் துவக்கப்பட்டாலும், முதல் உலகப்போர் ஏற்படுத்திய உத்தரவாதமற்ற சூழல் காரணமாக எவ்விதமான போராட்டங்களிலும் ஈடுபடாமல் வாரந்தோறும் ஆன்மிக கூட்டங்கள், சமூக நல நடவடிக்கைகள் என்றுதான் செயல்பட்டு வந்தது. ஆனாலும், தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து விட்டாலே முதலாளிகளுக்கும் அவர்களது அடியாள்படையான அரசுக்கும் கலக்கம்தான் என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டினர். ஆன்மீக கூட்டமாக இருந்தாலும், தொழிலாளர்கள் கூட்டம்தானே என்று உளவு பார்த்தது, போலீசு. அன்றைய சென்னை மாகாண ஆளுநரே நேரடியாக தலையிட்டு வாடியாவை எச்சரிக்கை செய்தார். தொழிலாளர்களது கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்றித் தருமாறு கோரினார், வாடியா. கோரிக்கைகளை நிராகரித்தது, நிர்வாகம்.

தொழிலாளர்களோ வேலைநிறுத்தம் செய்யலாம் என நிர்பந்தித்தனர். தொழில் அமைதியை சீர்குலைக்க முயன்றால் அபராதத்துடன் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் இந்திய பாதுகாப்பு சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்திருந்ததால் சிறை செல்வதை தவிர்த்தார், வாடியா.  வேலைநிறுத்தம் நடத்தப்படாவிட்டாலும் ஓவர்டைம் புறக்கணிப்பு போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. போலீசின் தலையீடும் தொடர்ந்தது. தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக கதவடைப்பையும் அறிவித்தது, நிர்வாகம். சங்கத்தின் நடவடிக்கைகளே கதவடைப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியது, நிர்வாகம். தாமத வருகை, ஓவர்டைம் புறக்கணிப்பு, உற்பத்தி நிறுத்தம் ஆகிய எதையும் செய்ய மாட்டோம் என்று சங்கம் எழுதிக் கொடுத்தால் மீண்டும் ஆலையைத் திறப்போம் என்று மிரட்டியது, நிர்வாகம். வேறு வழியின்றி எழுதிக் கொடுத்தது, தொழிற்சங்கம். இதிலும்  ஆறுதல்படத்தக்க விசயம் என்னவென்றால் தொழிலாளர்களது பிரதிநிதியாக தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டது.

நவம்பர் 1918-ல் முதல் உலகப்போர் முடிந்தது. இனிமேல் கெடுபிடி இருக்காது; இழந்தவற்றை மீட்கலாம் என்றெண்ணி மகிழ்ந்தனர், தொழிலாளர்கள். இந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. தொழிலாளர்களை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வாழவிடக்கூடாது என்பது தானே முதலாளிகள் கற்றுக்கொண்ட பாலபாடம்! பக்கிங் ஆலையின் மேலாளரும், கணக்குப்பிள்ளையும் திடீரென ‘அடையாளம்’ தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொழிற்சங்கத்தின் மீது பழியும் சுமத்தப்பட்டது. இதனை சாக்காக வைத்து மீண்டும் கதவடைப்பு. மேற்படி தாக்குதலில் ஈடுபட்டவர்களை ‘காட்டிக் ‘ கொடுத்தால் மட்டுமே தொழிலாளர்களுக்கு கிராஜூவிட்டி தரப்படும் என அறிவித்தது. தொழிலாளர்களை பிளவுபடுத்தி சங்கத்தை உடைத்துவிடலாம் என்பது நிர்வாகத்தின் மனக்கணக்கு. ஆனால் நீண்ட போராட்டத்துக்கு தயாரானார்கள், தொழிலாளர்கள். நெசவுப்பிரிவைத் தவிர ஏனைய பிரிவுகளை திறப்பதாக அறிவித்தும், 6 மணிநேர வேலைக்கு (பாதிநாள் வேலைக்கு) முழு சம்பளம் தரப்படும் என அறிவித்தும் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதில் குறியாக இருந்தது, நிர்வாகம்.

இழப்புகள் ஒருபுறம்; ஒற்றுமை சீர்குலைவு மறுபுறம். பல்வேறு வகையில் விட்டுக்கொடுத்த பின்னர் டிசம்பர் 1918-ல் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் மனதில் கொந்தளிப்பு நீடித்தே வந்தது. தலைவர்களைவிட தொழிலாளர்களே போர்க்குணம் மிக்கவர்களாக இருந்தனர். சங்கத்தில் புதிது, புதிதாக உறுப்பினர்கள் சேரந்ததே இதற்கு சான்று. 1919, 1920 ஆம் ஆண்டுகளில் பின்னி ஆலையில் நடந்த பல வேலைநிறுத்தங்களை தலைவர்கள் தடுத்த பின்னரும் ஒட்டுமொத்த தொழிலாளர்ளும் பங்கேற்று தங்களது போர்க்குணத்தை காட்டினர். இந்த மனநிலை கிட்டத்தட்ட சென்னையில் இயங்கிய அனைத்து ஆலைகளிலும் வேலை செய்த தொழிலாளர்கள் மத்தியில் இருந்தது.

சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்படுதல் என்கிற போக்கும் அதிகரிக்கத் துவங்கியது. தொழிற்சங்க சட்டம் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய பழிவாங்குதல்களை தடுக்கவும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1920-ல் மீண்டும் ஒரு வேலைநிறுத்தம் வெடித்தது. சங்கத்தின் தலைவர்கள் 11 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வேலைநிறுத்தத்தால் நிர்வாகத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ரூ.75,000/- வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது நிர்வாகம். போராட்டம் தீவிரமானதால் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தி 2 தொழிலாளர்களை கொன்றது. ஆனாலும், தொழிலாளர்கள் அஞ்சவில்லை. தலைவர்கள்தான் பின்வாங்கினர். பி.பி.வாடியா நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டு வெளிநாட்டுக்கு போய்விட்டார். மூன்று மாத வேலைநிறுத்தம் வீணாகிப் போனது. மீண்டும் நெசவு, நூற்பு பிரிவுகளை மூடியது நிர்வாகம்.

பக்கிங்காம் ஆலை, கர்னாடிக் ஆலை என இரு பிரிவாக இருந்தாலும் பின்னி என்கிற ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குவதால் சங்கமும் ஒன்றாகவே இருந்தது. இதையும் பிளவுபடுத்த முற்பட்டது. கர்னாடிக் மில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் அதிகரித்தது. இந்த பிளவுபடுத்துதலை தொழிலாளர்கள் உடைத்தனர். கர்னாடிக் மில் தொழிலாளர்களது போராட்டத்துக்கு ஆதரவாக பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்துக்கு நாள் குறித்தனர். இறுதியாக 1921, சூன் 20-ல் துவங்கியது அந்த வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தப் போராட்டம். ஆண்டு இறுதிவரை நீடித்த இந்த வேலைநிறுத்தப் போராட்டம்தான், அதற்கடுத்த சில ஆண்டுகளில் – 1926-ம் ஆண்டில் -தொழிற்சங்க சட்டம் உருவாக காரணமாக இருந்தது.

1921-ம் ஆண்டின் இறுதிவரை நீடித்த இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பல்வேறு அடக்குமுறைகள், சதிகள், இழப்புகளை சந்தித்த பின்னரும் உறுதிபட நின்றது. தொழிலாளர்களை சாதிரீதியாக பிளவுபடுத்த முயன்றபோதும், சாதி இந்துக்கள் – இசுலாமியர் என மதரீதியாக பிளவுபடுத்த முயன்றபோதும் தமது ஒற்றுமையால் அவற்றை முறியடித்தனர், தொழிலாளர்கள். வாடியாவுக்குப் பின்னர் தலைவர் பொறுப்பேற்றிருந்த திரு.வி.க மீது அவதூறு செய்து சில பத்திரிக்கைகள் செய்தியும் வெளியிட்டன. அவற்றையும் எதிர்கொண்டனர், சங்கத்தலைவர்கள். சிங்காரவேலர் போன்ற சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தனர். இறுதியாக தொழிலாளர்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிட்டு, அதன் பழியை சங்கத்தின் மீது சுமத்தவும் செய்தது, நிர்வாகம். குறிப்பாக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போராட்டக்களத்திலிருந்து பிரிப்பதற்கு பல்வேறு சதிகளை செய்தனர், முதலாளிகள்.  அவர்களது குடிசைகள் மர்மமான முறையில் எரிந்தன. நாட்டுவெடிகள் கூட வீசப்பட்டன. இறுதியில் தொழிலாளர்கள் சாதிரீதியாக, மதரீதியாக பிளவுபடத் துவங்கினர். கருங்காலிகளது வேலை கச்சிதமாக காரியமாற்றியது. ஆனாலும், உழைக்கும் மக்களுக்கேயுரிய நன்றியறிதலுடன் துரோகிகளை கருவறுத்து மீண்டும் சங்கத்தை வலுப்படுத்தினர்.

பதட்டம், குழப்பம், வன்முறை ஆகிய அனைத்துக்கும் தொழிற்சங்கமே காரணம் என குற்றம் சாட்டியது, வெள்ளை அரசு. அப்போதைய தலைவர்களான திரு. வி.க., சக்கரை செட்டியார், இ.எல். அய்யர், சலீம் கான் உள்ளிட்டோரை ஆளுநர் நேரில் அழைத்து எச்சரிக்கையும் செய்தார். இதைத் தொடர்ந்து வில்லியம் எயிலிங்கு என்பவர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்குழு முன்பாக ஆஜராகி சான்று பகிர தொழிற்சங்கமும் மறுத்துவிட்டது. தொழிலாளர்களும் மறுத்துவிட்டனர். சென்னை மாகாண சட்டமன்றத்திலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இறுதியில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் அடிமை சாசனம் எழுதித்தர தொழிற்சங்கம் உடன்படாததால் பேச்சுவார்த்தை தோற்றது. பல மாதங்கள் நீண்டிருந்த வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு தொழிலாளர்களை சோர்வடைய வைத்தது. வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது. ஆனால், இந்த வேலைநிறுத்தம்தான் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய வெளிச்சத்தை கொடுத்தது.

சென்னை தொழிலாளர் சங்கம் விதைத்தவற்றை இந்திய தொழிலாளி வர்க்கம் 1926-ல் அறுவடை செய்தது. அந்த ஆண்டு போடப்பட்ட இந்திய தொழிற்சங்க சட்டத்தின் முன்னுரையில் இப்படி குறிப்பிட்டப்பட்டது:

“இப்படி ஒரு சட்டத்தின் தேவை 1921 ஆம் ஆண்டில் உணரப்பட்டது. பக்கிங்காம் & கர்னாடிக் மில்களின் தொழில் நடவடிக்கைகளில் சென்னை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கம் தலையிடக் கூடாது  என சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. தொழிற்சங்கம் போராட்டக் களத்தில் இருந்தது. தொழிற்சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம் இல்லாமல் தொழிலாளர்கள் தங்களது குறைகளுக்காக குரல் கொடுக்க முடியாது என்கிற கருத்தின்மீது பொதுமக்களது கவனம் குவிக்கப்பட்டது. இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டு இறுதியில் சட்ட வடிவமும் பெற்றிருக்கிறது.”

காலனியாதிக்கத்தின் கீழ் தொழிற்சங்க சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதை சாத்தியமாக்கியது, தொழிலாளர்களது ஒற்றுமையே அன்றி வேறல்ல. முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்தால் ஏற்படக்கூடிய நட்டத்தை சங்கத்தின் தலைவர்களே ஈடுகட்ட வேண்டும் என்பதோடு கிரிமினல் வழக்கையும் சந்திக்க வேண்டும் என்றிருந்த நிலையை ஒழித்துக் கட்டியது, பின்னி ஆலைத்தொழிலாளர்கள்தானே? தியாகம் செய்யக்கூடிய தலைமையும் அந்த தலைமையை பாதுகாக்கின்ற தொழிலாளர்களும் கொண்ட அமைப்புதான் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வழிநடத்தும் ஆற்றல் பெற்றது என்பதை பின்னி தொழிலாளர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். போராட்டக்காலங்களில் ஏற்படுகின்ற எந்த இழப்பையும் கூட்டாக எதிர்க்கொண்டு முறியடிக்க வேண்டும் என்பதையும் கற்றுத்தந்துள்ளனர், பின்னி தொழிலாளர்கள்.

இந்த சம்பவங்களை பட்டியலிட்டு இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாளி வர்க்கமும், அரசும் எப்படி இருந்ததோ அதே அணுகுமுறை தானே இப்போதும் இருக்கிறது. பின்னி தொழிலாளர்களால் சாதிக்க முடிந்ததை நம்மால் சாதிக்க முடியாதா?

– உமர்

புதிய தொழிலாளி – மார்ச் 2018 இதழில் வெளியான கட்டுரை

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/madras-workers-struggle-for-union-rights/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
Modi - Harvard or Harwork or ...
5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

அம்மணமாக பவனி வரும் பேரரசர், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து "என்ன தப்புத் தப்பாக உளர்றீங்க. என்னோட அரசவை புலவர்கள், நான் முழு உடை உடுத்திருக்கிறேன் என்று நிரூபித்து...

யூனியன் உறுப்பினர் சந்திப்பு – “ஆணவக்” கொலைகள் பற்றிய விவாதம்

நிகழ்ச்சி நிரல் : சங்க நடவடிக்கைகள் - அக்டோபர், நவம்பர் அப்டேட்கள் ஐ.டி துறையில் பணி நீக்கம் / சட்ட விரோத ஆட்குறைப்பு - அடுத்த கட்ட...

Close