கடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது!

டுவட்டி கோடிக்கணக்கான மக்களின் கழுத்தில் கட்டப்பட்ட கல்லாக வதைக்கிறது. தேவைப்படும் போது பணம் கொடுத்து உதவும் பரோபகாரியாக கடுவட்டிக்காரன் பார்க்கப்படுகிறான்.

ஆனால், உண்மையில் அவன் யார்?

தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களை, பைத்தியம் பிடித்து திரியும் சிறு வணிகர்களை, ஓட்டாண்டியாகிப் போன விவசாயிகளை கேட்டுப் பாருங்கள். அவர்கள் எல்லோரும் நேரடியாக கடுவட்டிக்காரன் பழி சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களது வாழ்க்கையை அழித்தது கடுவட்டிதான்.

16-ம் நூற்றாண்டின் கிருத்துவ மதச் சீர்திருத்த (புராட்டஸ்டண்ட்) தலைவர் மார்ட்டின் லூதர் கடுவட்டி குறித்து சொல்வதை படித்துப் பாருங்கள். இது “மூலதனம்” நூலில் மார்க்சால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. கடுவட்டிக்காரன் என்ற இடத்தில் முதலாளி என்று மாற்றியும் வாசித்துப் பார்க்கலாம்.

முதலாளிகளின் ஒரு வகை மாதிரியாக, பழைய பாணியிலான ஆனால், திரும்பத் திரும்ப புதிய வடிவில் வரும் கடுவட்டிக்காரனை எடுத்துக் கொள்கிறார் மார்ட்டின் லூதர். பணம் குவிக்கும் ஆசையின் ஒரு காரணியாக அதிகார மோகம் உள்ளது என்பதை கடுவட்டிக்காரனை வைத்து தெளிவாக விளக்குகிறார்.

கடுவட்டிக்காரன் திருட்டுக் குணம் ஊறிப் போன கொள்ளைக்காரனும், கொலைகாரனும் என்று நாகரீகம் இல்லாத மக்கள் கூட பகுத்தறிவை பயன்படுத்தி புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களது பணத்துக்காக அவர்களை கௌரவப்படுத்துகிறோம், வழிபடுகிறோம்.

சக மனிதன் உயிர் வாழத் தேவையானதை தான் உண்டு தீர்ப்பவனும், கொள்ளை அடிப்பவனும், திருடுபவனும் ஒரு மனிதனை பட்டினி போடுபவனுக்கும், அல்லது முழுமையாக அழிப்பவனுக்கும் இணையான கொலையை செய்கிறான். அப்படிப்பட்டவன்தான் கடுவட்டிக்காரன். தூக்கு மரத்திலிருந்து தொங்க விடப்பட வேண்டியவன் அவன்; எத்தனை நாணயங்களை திருடினானோ அத்தனை காக்கைகளால் கொத்தித் தின்னப்பட வேண்டியவன் அவன்; அவனது உடலில் அவ்வளவு சதை இருந்தால் அத்தனை காக்கைகள் தமது அலகுகளை கொத்தி பகிர்ந்து தின்னப்பட வேண்டியவன். ஆனால், இதை எல்லாம் செய்து விட்டு அவன் தனது இருக்கையில் பத்திரமாக உட்கார்ந்திருக்கிறான்.

அதே நேரம், நாம் சிறு திருடர்களை தூக்கிலிடுகிறோம், கழுமரத்தில் ஏற்றுகிறோம்; பெரிய திருடர்கள் தங்கத்தையும் பட்டாடையையும் மினுக்கிக் கொண்டு திரிகின்றனர். அனைத்து மனிதர்கள் மீதும் கடவுள் போல ஆதிக்கம் செலுத்த விரும்பும் இந்த கடுவட்டிக்காரனை  விட மனித குல விரோதி இந்த உலகில் வேறு யாரும் இருக்கிறார்களா? (சாத்தானுக்கு அடுத்தபடியாக)

துருக்கியர்களும், இராணுவ வீரர்களும், கொடுங்கோலர்களும் மோசமானவர்கள்தான், ஆனால் அவர்கள் மக்களை வாழ விட வேண்டியிருக்கிறது, தாங்கள் மோசமானவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது; அவர்கள் அவ்வப்போது, சிலரிடம் இரக்கம் காட்டுகின்றனர், இல்லை இல்லை காட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால், கடுவட்டிக்காரன் பணவெறி பிடித்தவன்; ஒட்டு மொத்த உலகமும் பட்டினியிலும், தாகத்திலும் அழிய வேண்டும்; துயரத்திலும், இல்லாமையிலும் வாட வேண்டும்; அதன் மூலம் எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் கடவுளிடம் பெறுவது போல அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும், அவனது அடிமையாக இருக்க வேண்டும்.

நளினமான உடை உடுத்திக் கொண்டு, தங்கச் சங்கிலிகளையும், மோதிரங்களையும் அணிந்து கொண்டு, வாயை துடைத்துக் கொண்டு, ஒரு மதிப்புள்ள, பக்திமானாய் தன்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். கடுவட்டிக்காரன் ஒரு பெரிய கொடு மிருகம்; மனித ஓநாய் போல அனைத்தையும் அளித்து ஒழிப்பவன், காக்கஸ், ஜெரியன், ஆந்தஸ் போன்றவர்களை விட கொடுமையானவன். எருதுகள் எங்கு போயின என்பதை மக்கள் தெரிந்து கொள்ளாத வண்ணம் பின்பக்கமாக அவற்றை இழுத்துச் சென்றிருக்கிறான். தன்னை எல்லோரும் புனிதமானவன் என்று கருத வேண்டும் எறு நினைக்கிறான்.

ஆனால், குகைக்குள்ளிருந்து எருதுகளும் கைதிகளும் எழுப்பும் ஓலம் ஹெர்குலிசின் காதை எட்டுகிறது. அவன் மலை உச்சிகளிலும் பாறைகளின் நடுவிலும் ஏறிச் சென்று காக்கஸைத் தேடுவான். அந்த வில்லனிடமிருந்து எருதுகளை விடுவிப்பான்.

காக்கஸ் என்றால் பக்திமானாக தோற்றமளிக்கும் கடுவட்டிக்காரன்; அனைத்தையும் திருடி, கொள்ளை அடித்து சாப்பிடுபவன். ஆனால், தான் அதைச் செய்ததாக ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனை யாரும் கண்டுபிடித்து விட முடியாது என்று நினைக்கிறான், ஏனென்றால், எருதுகளை அவை வெளியில் அனுப்பப்பட்டு போல அவற்றின் பாதச் சுவடுகள் தோன்றும்படி வாலைப் பிடித்து பின்னுக்கு இழுத்து தனது குகைக்குள் கொண்டு சென்றிருக்கிறான்.

இவ்வாறாக, தான் உலகக்கு பலன் அளிப்பவனாக, எருதுகளை உலகுக்குள் அனுப்பியவனாக தோற்றம் உருவாக்கி ஏமாற்றுகிறான். ஆனால், அவற்றை அடித்து தானே தனியாக தின்று விடுகிறான்.

வழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும், தலையை வெட்டி வீச வேண்டும் (மார்ட்டின் லூதர்)

“மூலதனம்” முதல் பாகத்தில் “உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது” என்ற அத்தியாயத்தில் (அத்தியாயம் 24) காரல் மார்க்ஸ் மேற்கோள் காட்டுவது

Permanent link to this article: http://new-democrats.com/ta/martin-luther-on-usury-capital-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தனியார்மய ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம் : ஓலா, ஊபர் வேலை நிறுத்தம்

தனியார் சேவைதான் சிறந்த சேவை, அரசு எதிலும் தலையிடக் கூடாது என்று ஓலா, ஊபரை வரவேற்றவர்களை நோக்கி நெதர்லாந்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் பற்றி...

புதிய தொழிலாளி – பிப்ரவரி – மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

அடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே - துரை சண்முகம் மேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை - சமர்வீரன் கண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை - ராஜதுரை...

Close