மாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு

மாருதி மானேசர் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கொடூரமாக தண்டிக்கும் கார்ப்பரேட்/அரசு ஒடுக்குமுறை குறித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பத்திரிகை செய்தி

மாருதி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சிறை! தொழிலாளி வர்க்கத்துக்கு அச்சுறுத்தல்!

13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை; 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். இந்தத் தண்டனை எப்படி அநீதியானதோ அதே போல இந்த வழக்கு நடந்த விதமும் அநீதியானதாக இருந்தது.

மாருதி மானேசர் - பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

பழி வாங்கப்படும் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னை ஆவடியில் பு.ஜ.தொ.மு நடத்திய ஆர்ப்பாட்டம்

மாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்கள் செய்த குற்றம் என்ன?

  • அவர்கள் இந்திய நாட்டு சட்டப்படி தொழிற்சங்கம் துவங்கினார்கள்!
  • அவர்கள் காண்டிராக்ட் என்கிற கொடூரமான சுரண்டல் முறையை எதிர்த்தார்கள்!
  • அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமும், சட்டப்படியான ஓய்வும் கேட்டார்கள்!
  • அவர்கள் தங்களை மனிதர்களாக நடத்துமாறு கேட்டார்கள்!
  • எல்லாவற்றுக்கும் மேலாக, நிரந்தரத் தொழிலாளர்கள்-காண்டிராக்ட் தொழிலாளர்களது ஒற்றுமையைக் கட்டியமைத்தார்கள்!

இதுதான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முக்கிய காரணம்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய தொழிலாளிகளை ஒடுக்கும் பொருட்டு, ஜூலை 2012-ல் மனேசரில் உள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலை நிர்வாகம் திட்டமிட்டு ஒரு வன்முறை நாடகத்தை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் குவித்து, ஆலையின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி, தொழிலாளிகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவனேஷ் குமார் தேவ் என்ற மனித வள அதிகாரியை எரித்துக் கொன்றுவிட்டு, பழியை தொழிலாளிகளின் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். 2300 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக பிணை மறுக்கப்பட்டது. நான்கு ஆண்டு விசாரணைக்குப் பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் 13 பேரை கொலையாளிகளாகவும், 18 பேரை கலவரக்காரர்களாகவும் குர்கான் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் போலீசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டாக நடத்தி இருக்கின்றன. இந்த வழக்கை நடத்துவதற்காக அரியானா மாநில அரசு பல கோடிகளை செலவழித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட மார்ச் 10-க்கு முன்னதாகவே மனேசர்- குர்கான் தொழிற்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆயுதப் போலீசார் எஸ்.பி ஒருவரது தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.

மாருதி மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவு

வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையானது சிறை வைக்கப்பட்டிருந்த 148 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்த நாள் முதல், சட்டம் – நீதி என்பதெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை பட்டவர்த்தனமாக்கிக் காட்டியது. 4 ஆண்டு சிறைக்குப் பின்னர் 117 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கும் நீதித்துறை நிரபராதிகளைத் தண்டித்திருக்கும் மாருதி நிர்வாகத்துக்கும் அதற்கு அடியாள் வேலை செய்த போலீசுக்கும் என்ன தண்டனை வழங்கியிருக்கிறது?

2012 வன்முறை மாருதி நிர்வாகமும், அரியானா அரசும் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே என்பது விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பலமானது. அப்போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது? குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது. அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன? சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா? ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா? தொழிலாளி வர்க்கம் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

அரசும், முதலாளிகளும் மாருதி தொழிலாளர்களது போராட்டத்தை வெறுமனே கூலி அல்லது வேறு சலுகைக்கான போராட்டமாகப் பார்க்கவில்லை. அந்நிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகவே இந்தப் போராட்டத்தை பார்த்தனர். இதை அனுமதித்தால் மொத்த அந்நிய மூலதனத்துக்கும் ஆபத்து என்று அஞ்சினார்கள்.இதன் விளைவுதான் இத்துணை கொடூரமான தண்டனை.

2012 சம்பவத்தின்போது மாருதி சுசுகியின் கொடுங்கோன்மையும் சுரண்டலும் நாடு முழுவதும் அம்பலமாகியிருந்த சூழ்நிலையில், அன்று குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, ஜப்பானுக்கு ஓடினார். சுசூகி அதிபரை சந்தித்து, “மானேசரில் தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், குஜராத்தில் உங்கள் ஆலையைத் தொடங்குங்கள். போராட்டமோ பிரச்சினையோ இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வெட்கங்கெட்ட முறையில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் இன்று நம் நாட்டின் பிரதமர். அவரது கட்சிதான் அரியானாவையும் ஆள்கிறது.

நான்தான் குண்டு வைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தாவை சாட்சியமில்லை என்று விடுவிக்கும் நீதித்துறை, செட்டப் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும், நாடே குர்கானாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் மோடியின் உ.பி வெற்றியை கொண்டாடுகிறது கார்ப்பரேட் முதலாளிவர்க்கம்.

என்ன செய்யப்போகிறது, தொழிலாளி வர்க்கம்? மாருதி தொழிலாளிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, இந்தியத் தொழிலாளிகள் அனைவரின் உரிமைக்காகவும் போராடியிருக்கிறார்கள். இந்த அநீதியை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம், இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.

தோழமையுடன்
சுப.தங்கராசு
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/maruti-workers-persecuted-by-the-corporate-state/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு

இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.  

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Close