“இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்!” – ஐ.டி ஊழியர்களின் மே தினச் செய்தி

1. இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்!

“உழைப்பது மட்டுமே உழைப்பாளிகளின் வாழ்க்கை” என்ற விதியை “வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே உழைப்பு, ஓய்வும் உறக்கமும் உழைப்பாளிகளின் உரிமை” என்று மாற்றியதே மே தினத்தின் ஒரு வரி வரலாறு.

பல போராட்டங்களின் விளைவாக நிகழ்ந்த இந்த மாற்றத்தை காத்தும், மேம்படுத்தியும் செல்ல வேண்டிய சமூகத்தை உறங்கச் செய்ததே ஐ.டி. துறையின் 30 ஆண்டு கால சாதனை என்று சொல்லலாம்.

திரும்பிய பக்கமெல்லாம் வறுமையும், ஏழ்மையும் பரவிக்கிடக்க, உயர்ந்த ஊதியதோடு நம்மைத் தேடி வந்த ஐ.டி துறை பணி வாய்ப்பினை வரமாக மட்டுமே பார்த்த நமக்கு அதனாலான பாதிப்புகளை பார்க்கவோ, பகிர்ந்துகொள்ளவோ மனம் வரவில்லை.

அழுத்தம் காரணமாக புத்தி பேதலித்தவர்களையும், வேலை இழந்து உயிர் இழந்தவர்களையும், அவரவர் விதி என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு நம்மையும், நம் வேலையும் பாதுகாத்துக் கொண்டோம். இந்த இறுக்கத்தின் விளைவுதான் இன்று ஆயிரக்கணக்கான ஆள் குறைப்புகளை அதிகாரபூர்வமாக பெருநிறுவனங்கள் அறிவிக்கும் அவலம்.

இந்த இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும், ஒன்று கூடவேண்டிய தருணமிது. உடன் வேலை பார்ப்பவர் colleague அல்ல comrade என்று உணரவேண்டிய தருணமிது.

இழப்பு எனதாயினும் நான் போராடுவேன், எனது சக தொழிலாளியினதாயினும் நான் போராடுவேன் என்று உரக்கச் சொல்லுவோம்.

எழுதியவர் – செல்வா

2. சங்கமாக திரள்வதற்கு வேறு மாற்றோ, குறுக்கு வழியோ இல்லை

ல்லாயிரம் தொழிலாளர்களது அயராத போராட்டத்தாலும் , அவர்கள் சிந்திய குருதியிலும் ஈன்றெடுக்கப்பட்ட 8 மணி நேர வேலை , தொழிலாளர் நலச் சட்டங்கள் , பணிப்பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் இன்று கழிவறைக் காகிதங்களாகி விட்டன. அனைத்துத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் சக்கைகளாக்கப்பட்டு தூக்கியெறியப்படுவது கார்ப்பரேட் நியதியாகிவிட்டது. தமது அடிப்படை வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டியிருக்கிறது.

நிதி மூலதனமும், முதலாளித்துவ ஏகபோகமும் பல்கிப் பெருகியுள்ள அளவுக்குச் சுரண்டலும், ஒடுக்குமுறைகளும் அதிகரித்துள்ளன. கடந்த 20-25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி காட்டிய ஐ.டி துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. 5 இலக்க ஊதியமும், எளிய கார் மற்றும் வீட்டுக் கடன்களும் இன்ன பிற சலுகைகளையும் ருசித்த இத்தரப்பினரையும் , பணிப்பாதுகாப்பின்மையும், வேலை இழப்புகளும் இன்று அச்சுறுத்துகின்றன. 2015-ல் டி.சி.எஸ் நிறுவனம் 25000 ஊழியர்களை வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து ஐ பி எம் நிறுவனமும் இதையே செய்தது. இப்போது சி.டி.எஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக வேலை நீக்க நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டு பல ஆயிரம் ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு, நீதிமன்றம், போலீசு போன்று அனைத்து நிறுவனங்களும் ஒன்றாய நின்று நிகழ்த்தும் இந்தத் தாக்குதலை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே நின்று எதிர்கொள்ள இயலாது. மேலும் முதலாளிகள் தங்களுக்கென கூட்டமைப்புகளை வைத்துக்கொண்டு சங்கமாக ஒன்று சேரும் உரிமைகளை நமக்கு மறுத்து வருகின்றனர். இந்த அநீதிக்கும் , சுரண்டல் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நாமும் ஓரணியில் நின்று போராடி வெற்றி பெறவும், நமது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு வலிமையான சக்தியாக இணைந்து வளரவும் நாமும் சங்கமாக ஒன்று திரள்வது இத்தருணத்தில் அத்தியாவசியமாகிறது. அறிவுக்குப் புலப்பட்ட வரையிலும் இதன்றி வேறு மாற்றோ, குறுக்கு வழியோ நம்முன் இல்லை. நமது சக ஊழியர்களுக்கு இன்று நேர்ந்தவை நாளை நம் கதவுகளையும் தட்டும். அதுவரை தாமதிக்காமலும், காத்திருக்காமலும் ஒன்றிணைவோம் !

எழுதியவர் – பிரியா

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/mayday-messages-from-it-employees/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

"நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும்...

உலகத் தொழிலாளர் போராட்டங்கள் – 2019 – செப்டம்பர் 8 முதல் 14 வரை

தென் ஆப்பிரிக்காவில்  சுரங்கத் தொழிற்சங்கத்தின் சார்பில்  சுரங்க தொழிற்நிறுவனங்களுக்கு எதிராக நடைப்பெற்ற  போராட்டம் ஆட்குறைப்புக்கெதிராக பங்களாதேசில் நடைப்பெற்ற தொழிலாளர்களின் போராட்டம் பெருவில் தாமிர சுரங்கத்திற்கு எதிராக விவசாய,...

Close