நமது உரிமைகளை நமக்கும் உணர்த்தும் மே தினம்

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

இதோ வருகிறது மே நாள். நாம் அனைவருக்கும் விடுமுறை. உலகம் முழுவதுமே மே 1 விடுமுறையாக உள்ளது.

மே நாள் விடுமுறையை ஒட்டி, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தைப் போட்டு வைத்திருப்போம். ஏனென்றால் எல்லா விடுமுறையைப் போன்று இதுவும் ஒரு விடுமுறைதான் என்பதே. இது ஏதோ தொழிலாளர்கள் அனைவரும் ஜாலியாக இருப்பதற்காக முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல , முதலாளிகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்தி போராடிப்பெற்ற உரிமை என்பதை மறந்துள்ளோம்.

யார் வந்தாலும் நம் வாழ்க்கையில் ஒன்றும் மாறப்போவது கிடையாது என்று புரிந்தாலும், இது நமது ஜனநாயகக் கடமை என்று தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் நாம், நமக்காக, உழைக்கும் மக்களுக்கான ஒரு முக்கியமான நாள் தான் மே 1 என்ற உண்மையை மறந்துதான் நிற்கிறோம். இல்லை இல்லை மறக்கடிக்கப்பட்டு நிற்கிறோம்.

 

நாம் மே 1ன் வரலாற்றை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், அது நமக்குச் சொல்லுகின்ற செய்தி என்ன என்பதையும் புரிந்துகொள்ள நாம் நமது வாழ்க்கையிலிருந்தே துவங்கலாம்.

நாம் நமது வாழ்க்கை நிலைமையைக் குறித்து கவவனமாக பார்ப்போம். ஓவ்வொரு நாளையும் நாம் எவ்வாறு கடந்து போகிறோம்? ”காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைப்பது”, ”எட்டு மணி நேரம் கடுமையாக உழைப்பது” என்பதெல்லாம் மலையேறிவிட்டது. எழுந்தது முதல் மீண்டும் உறங்கச் செல்லும் வரை, நாம் நமது முதலாளிக்காக, கார்ப்பரேட்டுகளுக்காக நமது அனைத்து சக்தியையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். உற்சாகமாக வேலைக்கு கிளம்புவோரையும், அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்வோரையும் நாம் பார்க்க முடிவதில்லை.

16ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியிலிருந்து இன்றைய செயற்கை நுண்னறிவு, ரோபோடிக் வரை அனைத்து வளங்களும், செல்வங்களும் தொழிலாளர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும்  உருவானவையே.

இதன் ஒரு பிரிவுதான் தகவல் தொழில் நுட்ப பிரிவும்.

 

தகவல் தொழில்நுட்பம் இல்லாத உலகை நினைத்தும் பார்க்க முடியாது. இதன் பல்வேறு பிரிவுகளில் கொத்தடிமையாக நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ITES மற்றும் BPO போன்ற துறைகளின் கீழ் எண்ணற்ற பிரிவுகளில் நமது உழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது கடுமையான உழைப்பிற்கு நாம் பெறுவது என்ன? நேர்மையாகப் பார்த்தால் நல்ல வீடு, நல்ல உணவு, நல்ல உடை. ஆனால் அது உயிர் வாழ்வதற்குப் போதுமான அளவாகவே இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால் நமக்கு கிடைப்பதோ மிக மிக சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே போதுமானதாக இல்லை அற்ப கூலியே என்று அனைவரும் அறிவோம். இது லட்சங்களில் சம்பளம் வாங்குபர்களைப் பற்றியதல்ல. இவர்கள் இத்துறையின் மிகச் சிறுவீதமே. ஆனால் பெரும்பான்மையான தொழிலாளர்களின் நிலை அற்ப கூலியே.

லட்சத்தில் சம்பளம் வாங்கும் சிறுவீதத்தினரின் நிலையும் மிகவும் பரிதாபகரமானதே. வங்கி கணக்கிற்கு வரும் சம்பளம் அப்படியே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், மருத்துவமனைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சென்றுவிடும். இதுதான் எதார்த்தம்.

சரி. இப்போது நாம் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதற்கு வருவோம்.

நமது முதலாளிகள், நமது சம்பள விகிதத்தைக் குறைக்கிறார்கள். அதிகமான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். எல்லா வழிகளிலும் நம்மை ஒடுக்குகிறார்கள். மேலும் நம்மீது அதிருப்தி ஏற்பட்டால், உடனே வேலையை விட்டு துரத்தவும் செய்கிறார்கள். குறைந்தபட்ச, தற்காலிக பணி பாதுகாப்பே முதலாளிகளின் அடிவருடிகளுக்கும், அவர்களுக்கு ஒத்தூதுபவர்களுக்கும் மட்டுமே என்பதை நாம் காணமுடியும்.

இத்தகைய நமது வாழ்க்கை நிலமையை மாற்றுவதற்கும்,  நமது உரிமையைப் போராடிப்பெறுவதற்கும்,  நாம் அதற்கான கல்வியைக் கற்க வேண்டும். ஆனால் முதலாளிகள் நம்மை சிந்திக்க இயலாதவாறு பயத்தில் வைத்திருக்க நினைக்கிறார்கள். ஏதாவதொரு சாக்குப்போக்கில் நம்மை வெளியேற்றுவது, அடக்குமுறையை எதிர்ப்பவர்களை  வேலையை விட்டு நீக்குவது, ப்ளாக் மார்க் கொடுத்து வேறு வேலை கிடைக்காமல் செய்வதாக சட்டத்திற்கு புறம்பாகவே மிரட்டுவது,  போராடுவதற்கே தடை செய்வது என்று அவர்கள் நம்மை அடிமைத்தனத்தில் வைத்திருக்கிறார்கள்

அறியாமையும் – அடிமைத்தனமும் – இவைதான் முதலாளிகள் நம்மை கீழ்ப்படிய வைப்பதற்குப் பயன்படுத்தும் கருவிகள். இதை தங்கு தடையின்றி நிறைவேற்ற முதலாளிகளுக்கு சேவை செய்வதே அரசின் தலையாய பணி.

நமது நிலைமைகளை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? நமது ஊதியத்தை உயர்த்துவதற்காகவும், நமது வேலை நாளின் அளவைக் குறைக்கவும், துஷ்பிரயோகத்திலிருந்து  நம்மை பாதுகாக்கவும், அறிவார்ந்த மற்றும் பயனுள்ள புத்தகங்களைப் படிப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்? எல்லோரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள் – முதலாளிகளும் (நாம் அடிமையாக இருப்பதால், அவர்கள் வாழ்கிறார்கள்), அவர்களை அன்டிப்பிழைக்கும் அவர்களது எடுபிடிகளும்  நம்மை அறியாமையிலும் அடிமைத்தனத்திலும் வைத்துள்ளனர்.

நாம் நமது சொந்த கரங்களாலேயே அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைய முடியும், வேறு யாருடைய உதவியாலும் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நம்மை சுரண்டுபவர்களுக்கு எதிரான விடாப்பிடியான , வலிமையான போராட்டங்களே நம்மை விடுதலைக்கு இட்டுச்செல்லும். அதற்கான அடிப்படைத் தேவை நமது ஒற்றுமையே. அதுவே நமது வலிமை.

இதை நன்றாகப் புரிந்து கொண்டதால்தான் அவர்கள் நம்மை பல வழிகளில் பிரித்து , ஒற்றுமையை குலைத்து நம்மை நமது பொது நலனை சிந்திக்கவிடாமல் தடுக்கின்ற வேலையைச் செய்கிறார்கள்.

நாம் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் நம்மை வேலையை விட்டு அனுப்பாமல், ஒவ்வொருவராக வெளியேற்றுகிறார்கள். ஆனாலும் தற்போது கொத்து கொத்தாக வேலையை விட்டு துரத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றனர்.

அவர்கள் நமக்கு மேல் ஒரு கண்கானிப்பாளரை (கங்காணி) வைத்து, நமக்கு வேலைகளை கொடுப்பதும், நாம் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் குதூகலிப்பதும், கூலியைச் சிறிது சிறிதாகக் குறைப்பதும் தொடர்ச்சிடாக முடிவில்லாமல் நடைபெற்றுவருகிறது. ஆனாலும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

இத்தகைய அடிமைத்தனத்தை, முதலாளிகளிகளின் உழைப்புச் சுரண்டலுக்கெதிரான  உறுதிமிக்க தைரியமாக மாற்ற முடியும் என்பதை நமது முன்னோர்கள் உலகம் முழுவதிலும், பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளனர். குறிப்பாக ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 

 

அவர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு நகரங்களில் பல வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர். இத்தகைய வேலை நிறுத்தங்கள் மூலம், தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு பய பீதியை உருவாக்கி மிரட்டினார்கள், பெரும் இழப்புகளை ஏற்படுத்தினர்கள் (இலாபத்தில், உற்பத்தியில்), மேலும் இத்தகைய வேலை நிறுத்தங்கள் மேலும் நடக்காத அளவுக்கு சில பல சலுகைகளை அளிக்கும் அளவுக்கு இது நடந்தேரியது. இத்தகைய வேலை நிறுத்தங்கள் நடக்கும் வரை, முதலாளிகள் குருடர்களாகவே இருந்தனர்.

இந்தியாவிலும் பின்னி மில் முதல் டூபாண்ட், ப்ரிகால், ஸ்டெர்லைட், யூனியன் கார்பைடு போன்ற எண்ணற்ற நிறுவனங்களுக்கு எதிராக தீரமிகு போராட்டங்கள் நடந்தேரியது.

இன்று நாம் செய்ய வேண்டியதெல்லாம், தொழிலாளர்களாகிய நாம், நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவது, நிர்வாகத்தின் தவறான நடத்தைக்கு எதிராகவும், சுரண்டப்படுபவர்களின் கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடி அவர்களின் அனைத்து அதிகாரத்திலிருந்து முழு விடுதலை பெற , “தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டட்திற்கான சங்கமாக” ஒருங்கிணைய வேண்டும்

தொழிலாளர் ஒற்றுமைக்கென நாம் விநியோகிக்கும் சிறு துண்டு பிரசுரம் கூட முதலாளிகளையும் அவர்களது அடிவருடிகளையும் நடுநடுங்க வைக்கிறது. இது துண்டு பிரசுரத்தின் மிதான அவர்களது பயம் அல்ல. அவர்களது அடக்குமுறைக்கெதிரான, சுரண்டலுக்கெதிரான நமது ஒற்றுமையைக் கண்டதன் பயம்.

தொழிலாளர்கள் நமது அடிமைச் சங்கிலியை உடைக்கும் தருணம் இது. முதலாளித்துவமும் அரசாங்கமும் நம்மைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும் அடிமைத் தளைகளை தர்த்தெரியும் தருணம் இது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டிய தருணம் இது.

உலக வரலாற்றில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமாய்த் திரண்டு தமது பல்வேறு உரிமைகளை வென்றுள்ளனர். அதன் ஒரு முன்னோடிதான் “மே 1 , உலகத் தொழிலாளர் தினம்” தொழிலாளர்கள், தங்களை வலுவான தொழிற்சங்கத்தில் இணைத்து, பெரிய பெரிய ஜாம்பவான்களை மண்ணைக் கவ்வ வைத்த வரலாறு பல உண்டு. தொழிலாளர்களின் பிரம்மாண்ட ஊர்வலங்களும், பெரிய பெரிய பதாகைகளும், முதலாளித்துவத்திற்கெதிரான தங்களது போராட்ட வெற்றிகளை மேடைகளில் ஏறி முழங்குகின்றனர். இவையணைத்தும், தொழிலாளிவர்க்கத்தின் இறுதி லட்சியத்தின் வெற்றிக்கான முன்னோட்டமாகவே உள்ளது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் ஏற்பட்ட பயத்தில், எந்த ஒரு முதலாளியும், தொழிலாளர்களின் இந்த ஒரு நாள் விடுமுறையை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை. தொழிலாளிவர்க்கம் முதலாளிகளின் செவிப்பறையில் தமது தலையாய கோரிக்கையான – 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பதை மீண்டும் மீண்டும் அறந்து கூறுகிறது.

இதுதான் நமக்கான கோரிக்கையும். இதை போராடிப்பெறுவதற்கு முன்னர் அந்தக் காலத்திலும், நாம் இப்போது எப்படி அடிமைத்தளையில் இருக்கிறோமோ, அப்படிதான் அவர்களும்  எந்த உரிமைகளுமின்றி கொடுமையாக நசுக்கப்பட்டுக் கொண்டு இருந்தனர். இது ஏதோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்ததே.

ஆனால், கடினமான போராட்டம் மற்றும் கடும் தியாகங்கள் மூலம், தொழிலாளர்களின் பிரச்சினைகளின் ஊற்றுக்கண்களை ஒவ்வொன்றாக களைவதற்கான உரிமையை அவர்கள் தங்களுக்குள் வென்றுள்ளனர்.

மனிதனை மனிதன் சுரண்டும் இந்த சமூக அமைப்பை மாற்றி ஒரு சுரண்டலற்ற சமூகத்தைப் படைத்து தமது இறுதி இலட்சியத்தை அடைவதற்கு, உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.

தோழர்களே! நாம் சக்திவாய்ந்தவர்களாகவும் முழு மனதுடனும் ஒன்றிணைய‌ முற்படுவோம் என்றால், சாதி, மத, இன வேறுபாடின்றி, தொழிலாளி வர்க்கமாய் வலுவான ஓரணியில் திரண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படும் போது, நமது கைகள் ஓங்கும். நம்மைப் பீடித்துள்ள இந்த அசிங்கமான  அடிமைச்சங்கிலிகள் உடைத்து எறியப்படும்.

இந்த முதலாளிகளும் அவர்களுக்கு விசுவாசமாக வேலை செய்து கொண்டிருக்கும் இந்த சர்வாதிகார, கொடுங்கோண்மை அரசும், நமது “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தால்” துடைத்தெரியப்படும். அவர்கள் நம்முன் மண்டியிடுவர்.

”மே தினம்” இந்த தலைமுறையிடம் கோருவது வெரும் பொருளாதாரக் கோரிக்கைக்கான போராட்டத்தை மட்டும் அல்ல. உலகத் தொழிலாளர்களின், உழைக்கும் மக்களின் பரிபூரண விடுதலைக்கான அரசியல் போராட்டத்தையே.

இப்போது சொல்லுங்கள், மே தினம் யாருக்கானது.

”மகிழ்ச்சி என்றால் போராட்டம்” என்றார் மனித குல மாமேதை கார்ல் மார்க்ஸ்.

வாருங்கள்!!! சங்கமாய் ஒன்றிணைவோம்!!! மகிழ்ச்சியான மே தினத்தை அதற்குரிய அர்த்தத்தில் கொண்டாடுவோம். நமக்கான சமூகத்தைப் படைப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mayday11087-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கட்டாயப் பணிநீக்கம், தன்னிச்சையான வேலையிழப்புகள், பணியிடங்களில் நமது உரிமைகள் ஆகியவற்றுக்கா போராட நாம் சங்கமாக அணிதிரண்டிருக்கிறோம். இதே உணர்வோடும், ஒற்றுமையோடும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ்...

விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான...

Close