நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக MEPZ ஐ.டி ஊழியர்கள்

நெடுவாசல் – தமிழகத்தில் வாழும் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் மனதையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு சொல். அதாவது, தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும், மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவிர விவசாயிகள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தனிப்பட்ட குழுக்களிலும் தொடர்ந்து விவாதிக்கும் ஒரு பிரச்சனை நெடுவாசல் கிராம மக்களின் பிரச்சனை. அந்த கிராமத்தில் ஆழ்குழாய் பதித்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்த அக்கிராம மக்களின் போராட்டத்தை ஆதரித்த குரல்கள் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றன.

சென்னை தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் பணிபுரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவின் உறுப்பினர்கள் போராடும் நெடுவாசல் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், ஐ.டி துறையில் வேலை செய்யும் அனைவரிடமும் இந்தப் பிரச்சனையை விளக்கிச் சொல்லும் வகையிலும் மார்ச் 1-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலை வாயில் கூட்டம் நடத்துவதாகத் திட்டமிட்டனர்.

அதன் படி “நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்” “நெடுவாசலைக் காப்போம்”, “விவசாயத்தை மீட்போம், தமிழ்நாட்டைக் காப்போம்”, “ஹைட்ராகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்” என்ற முழக்கங்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டன. மெப்ஸ் வளாகத்திலும், அதற்கு அப்பாலும் உள்ள பல ஆயிரம் ஐ.டி ஊழியர்களின் வரவேற்பையும், ஆதரவையும் இந்தப் பிரச்சாரம் பெற்றது.

மார்ச் 1-ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மெப்ஸ் வளாகத்துக்குள் சி.டி.எஸ் அலுவகக் கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் ரவுண்டானாவின் ஒரு முனையில் ஐ.டி ஊழியர்கள் குழும ஆரம்பித்தனர். போராடும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தட்டிகளை ஏந்திக் கொண்டும், பதாகையை பிடித்துக் கொண்டும் நின்றிருந்தனர். அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்த தமது சக ஊழியர்களை தொலைபேசி மூலம் இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஆண், பெண் ஊழியர்கள் திரண்டு விட்டனர்.

மெப்ஸ் வளாகத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று வாசலில் கூடி பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. “அவங்களுக்கு என்னப்பா, நல்ல சம்பளம், சொகுசான வாழ்க்கை” என்று கருதும் வாகன ஓட்டிகளும், மெப்ஸ் வளாகத்தில் உள்ள மின்பொருள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் இந்த ஊர்வலத்தை வியப்புடன் பார்த்துச் சென்றார்கள்.

ஏற்கனவே, மெப்ஸ் வளாகத்தில் பணி புரிபவர்களும், பிற இடங்களில் பணி புரிபவர்கள் என்று வாசலில் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் ஐ.டி ஊழியர்கள் கூடியிருந்தனர். 6 மணி வரை ஆதரவு கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டிருந்ததால், செய்தியை இன்னும் பரப்பி பெரும் எண்ணிக்கையிலான ஐ.டி ஊழியர்களை திரட்டுவதற்கு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

மாலை 4.30 மணிக்கு தாம்பரம் மெப்ஸ் வளாகம் முன்பு சுறுசுறுப்பாக கடந்து போய்க் கொண்டிருந்த வாகனப் போக்குவரத்து, மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் இவர்களது கவனத்தை குவிக்கும் வகையில் சாலையோரமாக ஐ.டி ஊழியர்கள் திரண்டு நின்றனர்.

தட்டிகளையும், பதாகையையும் தூக்கிப் பிடித்த வண்ணம், “IT Stands with Neduvasal” “Save Neduvasal”, “Save Agriculture”, “Save Tamil Nadu”, “Stop Hydrocarbon extraction” என்று முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

“கடந்த 40 ஆண்டுகளாக கார்ப்பரேட் லாபத்துக்காக பசுமைப் புரட்சி என்ற பெயரில் விவசாயத்தில் இரசாயன உரங்கள் திணிக்கப்பட்டது; படிப்படியாக விவசாயம் சீர்குலைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து இயற்கை விவசாயத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து மறைந்த போராளியான வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாழ்க்கையை நாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். நாம் பணியாற்றும் ஐ.டி நிறுவனங்கள் இன்னும் சில ஆண்டுகளில் இங்கு அலுவலகங்களை மூடி விட்டு போய் விடலாம். நமக்கு ஆதாரமாக இருப்பது நமது நிலமும், விவசாயமும்தான். மனிதநாகரீகம் தோன்றிய முதலே விவசாயம் செய்து வந்த மண் தமிழக மண். இந்த மண்ணில் விவசாயத்தை படிப்படியாக அழித்து மீத்தேன் எடுக்கிறோம், ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம், இரும்புத் தாது எடுக்கிறோம் என்று சுடுகாட்டு பூமியாக மாற்றுவதுதான் இன்றைய முதலாளித்துவ லாப வேட்டையின் விளைவாக இருக்கும். இதை எதிர்த்து போராட வேண்டியதும், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் ஐ.டி ஊழியர்களான நமது கடமை”

இவ்வாறு விளக்கவுரை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, போலீஸ் தனது கடமையைச் செய்ய சைரன் முழங்க வந்து சேர்ந்தது. முந்தைய தினம்தான் வள்ளுவர் கோட்டத்தில் ஆதரவு தெரிவித்து போராடிய மாணவர்களை தாக்கிய, டைடல் பார்க்கில் நோட்டிஸ் கொடுத்த ஐ.டி ஊழியர்களை பிடித்து நோட்டிஸ்களை பறிமுதல் செய்த அதே போலீஸ், “என்ன இது எங்க கிட்ட தகவல் தெரிவிக்காம இப்படி கூட்டம் நடத்துறீங்களே? யாராவது வெளியிலிருந்து வந்து பிரச்சனை பண்ணினா என்ன ஆகும். எங்களுக்கு முறையா எழுதி தகவல் சொல்லியிருந்தா நாங்களே பாதுகாப்பு கொடுப்போமே.” என்று ‘அன்பாக’ பேசி ‘சட்ட ஒழுங்கை நிலைநாட்ட ‘ உடனடியாகக் கலைந்து போகும்படி வற்புறுத்தியது.

“ஐ.டி ஊழியர்களாகிய நாங்கள் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில்தான் கூடியிருக்கிறோம். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொது மக்களுக்கு தகவல்களை விளக்கும் வகையில் ஐ.டி சங்கத்தின் கூட்டமாக நடத்துகிறோம். இன்னும் சிறிது நேரம் உரைகளை முடித்து விட்டு கலைந்து செல்கிறோம்” என்று சொல்லி விட்டு கூட்டம் தொடர்ந்தது.

“விவசாயம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி இந்த ஆண்டு மிக மோசமடைந்திருக்கிறது. காவிரி நீர் மறுப்பு, பருவமழை 65% பொய்த்தது என்ற வகையில் விவசாயிகள் வாழ்வு நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் வளர்ச்சி, முன்னேற்றம் வரும் என்று பேசும் அரசியல்வாதிகள், வறட்சிக்கு முறையான நிவாரணம் அளித்து விவசாயிகளின் வாழ்வை மீட்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை. குறிப்பாக, நெடுவாசல் கிராமம் வளமான பகுதி, அங்கு தென்னை, வாழை பயிரிட்டு வரும் அந்த விவசாயிகள் மண் எங்களை வாழ வைத்தாலும், விளைபொருட்களுக்கு முறையான விலை கிடைக்காமல் நாங்கள் வறுமையில் உள்ளோம் என்று கூறுகிறார்கள். இதையும் சேர்த்துப் பார்க்கும் போது விவசாயிகளின் இன்றைய வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தாத அரசுகள், எதிர்காலத்துக்காக ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பது மக்களை மோசடி செய்வதாகும்.”

“ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் மற்ற துறையினரை விட இது போன்ற பிரச்சனைகளின் பின்னணி, அறிவியல் நுணுக்கங்கள், அரசு ஆவணங்கள் இவற்றை தேடிப் படித்து புரிந்து கொள்வதற்கான வசதியும், வாய்ப்பும், திறமையும் படைத்திருக்கிறார்கள். அனுபவ அடிப்படையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் கிராம மக்களுடன் இணைந்து ஐ.டி ஊழியர்கள் செயல்படுவது இந்த வகையிலும் முக்கியமாகிறது.”

இதற்குள் போலீஸ் பொறுமை இழந்து கலைந்து செல்லும்படி அவசரப்படுத்தவே, அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றிய இறுதி அறிவிப்புக்குப் பிறகு கலைந்து போவதாக முடிவு செய்யப்பட்டது.

“ஐ.டி துறை ஊழியர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிறையவே இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது. நாம் விவசாயிகளின் துயர் துடைக்க நம்மால் ஆன பணிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமும், தனிப்பட்ட நட்பு வட்டங்கள் மூலமாகவும் விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நிதி திரட்டுவது, பிரச்சாரம் செய்வது போன்ற சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் குழுவிலும், வாட்ஸ்-அப் குழுவிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோரை சேர்த்து ஒருங்கிணைப்போம்”.

அதன் பிறகு கலந்து கொண்ட அனைவரும் குழுக்களாக கூடி அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகள் பற்றி விவாதித்து முடிவு செய்தனர்.

  • போராடும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

  • நெடுவாசலைக் காப்போம் விவசாயத்தைக் காப்போம் தமிழகத்தைக் காப்போம்

  • ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்போம்

– மெப்ஸ் வளாகத்தில் பணிபுரியும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் சங்க உறுப்பினர்கள் அனுப்பிய செய்தி

ஐ.டி ஊழியர்கள் அனைவரும் தத்தமது அலுவலகங்கள் முன்பு ஐ.டி சங்கத்தின் ஆலை வாயில் கூட்டம் நடத்தி இது குறித்து சக ஊழியர்களுடன் விவாதிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். மெப்ஸ் வளாகத்தில் நடத்திய கூட்டத்தை ஒருங்கிணைத்த குழுவில் இணைந்து கொள்ளலாம், மேல் விபரங்களுக்கு பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள –
Karpaga Vinayagam, Organizer, NDLF IT Employees Wing
combatlayoff@gmail.com

9003198576

Permanent link to this article: http://new-democrats.com/ta/mepz-it-employees-in-solidarity-with-neduvasal-struggle/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத...

இந்திய ஜனநாயகம் பெருமையுடன் படைத்து வழங்கும் இந்துத்துவ பாசிசம் – அருந்ததி ராய்

நாமும் நமது சக மனிதர்களின் பார்வையிலிருக்கும் அருவருப்பை அடையாளம் கண்டுகொள்ள கற்றுக் கொள்வோம். எதைச் செய்தோமோ, எதைச் செய்யாமல் விட்டோமோ, எதை நடக்கவிட்டோமோ அதன் அவமானத்தினால் நாமும்...

Close