தமிழக விவசாயத்தை காக்க உறுதி கொள்ளும் மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள்

பிப்ரவரி மாதம் துவங்கி மார்ச் 10, 15-ம் தேதி வரை தொடர்ந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லையைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரவியது.

ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள் (கோப்புப் படம்)

போராடும் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெப்ஸ்-ல் ஐ.டி ஊழியர்கள் மார்ச் 1, 2017 அன்று களத்தில் இறங்கினார்கள். அங்கு வந்த காவல்துறை இங்கு அனுமதியில்லை, போராடக் கூடாது, கலைந்து செல்லுங்கள் என்று மிரட்டி நைச்சியமாக சக்கரையாக மாறி மாறி பேசி கூட்டத்தை கலைத்தது. காவல் நிலையம் வந்து அனுமதிக் கடிதம் தாருங்கள், அனுமதி தருகிறோம் என்றும் கூறினார்கள். ஆனால், அனுமதி கேட்டு சென்றபோது, கமிசனர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி வந்தால்தான் தாம் அனுமதி தரமுடியும் என்று கூறி விட்டார்கள்.

கமிசனர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை உடனடியாக எழுதிய அன்று இரவே, நெடுவாசலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனால் ஐ.டி ஊழியர்களும் அத்திட்டம் கைவிடப்பட்டு விடும், இனி சிக்கல் இல்லை என்று நினைத்தனர். ஆனால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகள், போராடி மக்கள் முதுகில் குத்திவிட்டு கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்து திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

மக்களை கொஞ்சம் கூட மதிக்காது முதுகில் குத்தும் அரசு ஒரு பக்கம் என்றால் ஒப்பந்தம் எடுத்துள்ள ஜெம் நிறுவனமோ 6 மாதத்தில் திட்டம் துவங்கப்படும் என்று திமிராக அறிவித்துள்ளது.

இதனால் வெகுண்ட ஐ.டி ஊழியர்கள் இது தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி ஏப்ரல் 3-ம் தேதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாலை 4 முதல் 5 மணி வரை அனைத்து ஐ.டி ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி 4 மணிக்கு சி.டி.எஸ் அலுவலக வாசலில் கூடினர், சிலர் தாமதமாக வந்து கலந்து கொண்டனர். வந்தவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பரவலாக பிரச்சாரம் செய்வது, அதற்கு உதவும் விதமாக கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த தகவல்களையும், கருத்துக்களையும் இணைத்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.

 1. “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டனர். குடும்பம் குடும்பமாக மெரீனா பீச்சுக்கு சென்றனர். அதில் நான் கலந்து கொள்ளவில்லை, இன்று வந்துள்ளேன். ஜல்லிக்கட்டை விட இது மிக மிக மிக முக்கியமானது. ஜல்லிக்கட்டு கூட்டத்தை விட இதற்குத்தான் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு மாணவர்கள், இளைஞர்கள் காவலாக நின்றனர் என்பதோடு காவல் துறை மற்றும் அரசும் ஓரளவிற்கு பாதுகாப்பு கொடுத்தது. அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்தத் திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்கும் பெருமளவு வருவாய் ஈட்டும் திட்டம். அதனால், அரசும் காவல் துறையும் ஒத்துழைப்பு தர மறுக்கிறது.”
 2. “‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு பூமிக்கு அடியில் ஆழமாக துளையிட்டு குழாய் இறக்குகிறார்கள். எனவே மேலை விவசாயம் பாதிக்காது, நீங்கள்தான் விபரம் தெரியாமல் தவறான தகவல்களை பரப்புகிறீர்கள்’ என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்கள். பூமிக்கு அடியில் எடுக்கும் திட்டம்தான் என்றாலும் பல ரசாயனங்களை உள்ளே செலுத்துவது, நிலத்தடி நீரை வெளியேற்றுவது, செலுத்தப்பட்ட ரசாயனக் கலவையை வெளியில் கொண்டு வந்து பாதுகாப்பது என்று பல பிரச்சனைகள் உள்ளன.”
  மேலும் மண் அடுக்குகள் குலைவு ஏற்படுவதால் என்ன நடக்கும் என்று விளக்கினார். அது டெல்டா பகுதியை சுடுகாடு போல கண் முன்னால் ஓடச் செய்தது.
 3. காவிரி நீர் மறுப்பதும், ஹைட்ரோகார்பன் எடுப்பதும் ஒருங்கிணைந்த கார்ப்பரேட் செயல்திட்டத்தின் பகுதிகள்தான் என்று தான் படித்த விபரங்களை விளக்கினார் ஒருவர்.
 4. “விவசாயம் அழியும் என்றால், இல்லை நீங்கள் விவசாயம் செயலாம் என்று கூறுவார்கள். அதற்கு உதாரணம் கூட சிலர் சொல்வார்கள். பணப்பயிர்கள் சிலவற்றை கூறி அதை விவசாயம் என்று சாதிப்பார்கள். ஆனால் அப்படி பொதுவாக விவசாயம் என்று பேசுவதை விட நெல் விளைச்சல் என்று குறிப்பாக பேச வேண்டும். நான் தஞ்சையைச் சேர்ந்தவள். எங்கள் பகுதி நெல்லுக்கு பெயர் போனது. இத்திட்டம் வந்தால் இனிமேல் நெல் வயலை பார்க்க முடியாது. இப்போதே சிலர் நமக்கு அரிசி ஆந்திராவில் இருந்து வருவதாகக் கூறி நமது மண்ணை உதாசீனப்படுத்துகின்றனர்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
 5. “ஆகாயத் தாமரை, குப்பைக் கழிவுகள், பாதாள சாக்கடை என பல வழிகளில் மீத்தேன் எடுக்க முடியும். “தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்” திரைப்படத்தில் சாக்கடையில் மீத்தேன் எடுக்கும் காட்சியை சுட்டிக்காட்டி பேசியவர் ஏன் அரசு இங்குதான் எடுப்பேன் என்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
 6. சிறுசேரி சிப்காட்

  விவசாயிகளுக்கு ஆதரவாக சிறுசேரி சிப்காட் முன்பு கூடிய ஐ.டி ஊழியர்கள் (கோப்புப் படம்)

  அடுத்து பேசிய பெண் ஒருவர், “வேறு எதையும் விட என் பிள்ளை நாளைக்கு வந்து என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேன். “நாட்டை இப்படி சீரழித்து வைத்துள்ளார்களே, இதை தட்டிக் கேட்காமல் நீங்கள் என்ன செய்தீர்கள்? வேடிக்கை பார்த்தீர்களா? வெட்கமாக இல்லையா உங்களுக்கு?’ என்றால் எவ்வளவு அவமானத்தோடு நாம் குறுகி நிற்க வேண்டியிருக்கும். அந்த அச்சமே என்னை இங்கு வந்து நிறுத்தியது” என்றார்.

 7. “நீர்நிலைகளை பராமரிக்கும் பொறுப்புடைய மாநில அரசு, அவற்றை அழித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து மத்திய அரசு டெல்டா விவசாயத்தை கொலை செய்கிறது. மேலும், பொருளாதார கொள்கைகள் மெல்ல மெல்ல விவசாயிகளை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வானிலிருந்து கொத்து குண்டுகளை போட்டு அழிக்கும் விதமாக இந்தத் திட்டங்களை அமல்படுத்துகிறது, மத்திய அரசு.
  விவசாயிகள் மரணத்துடன், விவசாய நிலங்களும் மரணிக்கும் மிக ஆபத்தை உடையது இந்தத் திட்டம். இன்றைக்கு நமது சென்னை சாலைகளை சுத்தம் செய்யும், சாலையின் தடுப்பு சுவர்களில் வர்ணம் பூசும் மக்கள், கட்டிட வேலைக்கும், உணவகங்களில் வேலை செய்யவும் வட நாட்டில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்களில் பலர் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை இடுவதற்காக வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, சாவின் எல்லையைத் தொட்டு விட்டு வந்தவர்கள்தான்.
  தமிழகம் மட்டும் ஹைட்ராகார்பன் திட்டத்தால் பாதிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 31 இடங்களில் இத்திட்டம் வரப்போகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமையுமே இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட வேண்டும். இதை வெறுமனே தமிழகத்தின் பிரச்சனையாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.
  சி.டி.எஸ்-ல் தற்போது 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி வருவதாக செய்தி வருகிறது. இந்த சட்ட விரோத வேலை பறிப்பும், ஹைட்ரோகார்பன் திட்டமும் வேறு வேறல்ல. இரண்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது. ‘என்ன ஆனாலும் சரி, மூலதனத்துக்கான லாபம் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்ற அடிப்படையிலான அரசின் மக்கள் விரோத கொள்கைகளும், கார்ப்பரேட்டுகளின் சட்ட விரோத நடவடிக்கைகளும்தான் இரண்டுக்கும் இருக்கும் பொதுவான விஷயம்.
  மக்கள் என்ன ஆனால் என்ன என்று மனிதத் தன்மையற்று சிந்திக்கும் கார்ப்பரேட்டுகள்தான் தங்களது லாபத்தை பெருக்க தற்போது ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் நமது நாட்டை சூறையாடப் போகிறார்கள். இங்கும் அனைத்தையும் சுரண்டிவிட்டு குப்பை போல போட்டு விட்டு வேறு இடத்தைத் தேடுவார்கள். பல ஆண்டுகள் நமது உழைப்பை கறந்து விட்டு, தமது தேவை முடிந்தவுடன் குப்பை காகிதம் போல தூக்கி எறிவதும் இதைப் போன்றதுதான்.
  “under performers” என்று பட்டம் சூட்டி வேலையை விட்டு நீக்கப்படும் இந்த “திறன் குறைந்த” ஊழியர்கள்தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தமது வாழ்க்கையை கொடுத்தவர்கள் என்பதை என்பதை மறந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதும் கார்ப்பரேட் லாப வேட்டை என்ற நோய்தான்.

5 மணி வரை என்று திட்டமிட்டிருந்தாலும் 5.30 மணி வரை கூட்டம் நீடித்தது. விவசாயிகள் தமது பிரச்சனைகளுக்காக போராடுவதைப் போல ஐ.டி ஊழியர்களும் சங்கமாக திரண்டு தமது நலனை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக பிரச்சனைகளுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்று இதன் மூலம் கற்றுக் கொள்ள முடிந்தது.

– மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள் அனுப்பிய செய்தி

Permanent link to this article: http://new-democrats.com/ta/mepz-it-employees-resolve-to-fight-for-safeguarding-tn-agriculture/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சமையல் தொழிலாளர்கள்

நமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும்...

ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?

NDLF IT Employees Wing என்பது அனைத்து பெரிய மற்றும் சிறிய நிர்வாகங்களின் பணிபுரியும் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் நலனுக்கான சங்கம் அதனால் அனைத்து...

Close