மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழில் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நியாயமாக என்றைக்கும் நடந்து கொண்டதே இல்லை. தொழிலாளர் நலச்சட்டங்களை அவர்கள் மதித்ததாகச் சரித்திரமும் இல்லை. அரசும் கார்ப்பரேட் நலன் பேனுவதாக, அவர்கள் சார்பாக நின்று தொழிலாளர்களை ஒடுக்குவதாகவே செயல்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதன் பிறகு இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்வதுடன், புதிதாகக் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களும், அவர்கள் அமுல்படுத்திய திட்டங்களும் தொழிலாளர் விரோதமாகவும், கார்ப்பரேட்டுகள் அவர்களைச் சுரண்டுவதற்குச் சட்டப்பூர்வமாக வாய்ப்பளிப்பதாகவும் இருக்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது ஆலையினை நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்துவதற்கு பதிலாக அவர்களை விடக் குறைவான சம்பளம் வாங்கும், சட்டப்படி எவ்வித பாதுகாப்பும் இல்லாத, ஈ.எஸ்.ஐ., பி.எப், என எதுவும் வழங்கத் தேவையில்லாத கான்டிராக்ட் தொழிலாளர்களைக் கொண்டு நடத்துவதன் மூலம் தொழிலாளர்களைச் சுரண்டி வந்தனர். இது போதாதென்று, கார்ப்பரேட்டுகளுக்காக அவர்களின் நலன் காக்கும் மோடி அரசு கொண்டு வந்த திட்டம் தான் நீம் NEEM (National Employability Enhancement Mission). இதன்படி, Interns / apperentice என்ற பெயரில் சம்பளம் ஏதும் இல்லாமல் கல்வி உதவித்தொகை மட்டுமே பெறுகின்ற பயிற்சி மாணவர்கள் பணிக்கமர்த்தப்பட்டு, அவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் கொடுக்கப்படும். இவர்கள் தொழிலாளர் என்ற வரையரைக்குள்ளேயே வரமாட்டார்கள் என்பதால் தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் இவர்களுக்குப் பொருந்தாது. 3 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை இவர்களைப் பணிக்கமர்த்திக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியே துரத்தியடிக்கலாம். இவ்வாறு கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் கீழ் நிலையில் பயிற்சி மாணவர்களைக் கொண்டே ஒரு தொழிற்சாலையை நடத்திவிடலாம் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில், அவர்களை அடக்கி ஒடுக்குவதில் உள்ள இந்த கார்ப்பரேட், அரசு கூட்டணியை மேட்டூர் கெம்பிளாஸ்ட் தொழிலாளர் போராட்டம் நமக்கு தெளிவாக காட்டுகிறது.

மேட்டூரில் உள்ள சன்மார் குழுமத்திற்குச் சொந்தமான கெம்பிளாஸ்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் 94 ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆலை நிர்வாகம் தங்களைச் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆலைவாயிலில் போராடி வருகின்றனர்.

பி.வி.சி. பைப்புகளை உற்பத்தி செய்யும் கெம்பிளாஸ்ட் ஆலையில் 60 நிரந்தரத் தொழிலாளர்களும், நூறுக்கும் அதிகமான, கான்டிராக்ட் தொழிலாளர்களும், 110 இன்டெர்ன்களும், பணிபுரிகிறார்கள். பி.வி.சி. பைப் விற்பனையில் கோடிக் கணக்கில் லாபம் ஈட்டும் செம்பிளாஸ்ட் நிறுவனம் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தருவதில்லை. மிகவும் குறைவான சம்பளத்திற்கு, ஆண்டுக் கணக்கில் பணியாற்றும் கான்டிராக்ட் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்வதில்லை. அதற்குப் பதிலாக அவர்களை வெளியே துரத்தியடித்துவிட்டு நீம் திட்டத்தின் கீழ் பயிற்சி மாணவர்களைக் கொண்டு நிரப்பவும் முயற்சித்து வருகிறது. இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்திட தொழிற்சங்கம் அமைத்தவுடன், சங்க நிர்வாகிகளை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனைத் தங்களது போராட்டத்தின் மூலமாக தொழிலாளர்கள் முறியடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் கெம்பிளாஸ்ட் தொழிலாளர்களும் கலந்து கொண்டதை முகாந்திரமாக வைத்து 94 தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்துள்ளது. அவர்களை ஆலைக்குள் அனுமதிக்காமல் ஆலை வாயிலில் வைத்தே பணிநீக்க கடிதத்தைக் கொடுத்துள்ளது. மேலும் தொழிலாளர்களை மிரட்ட, பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பெயரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

பணிநீக்கத்தை எதிர்த்து தொழிலாளர்கள், தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டனர்.  ஆணையத்தில் நடந்த 4 சுற்றுப் பேச்சு வார்த்தையின் முடிவில் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கமர்த்தும்படி ஆணையம் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனைய நிர்வாகம் கழிவறைக் காகிதமாகக் குப்பையில் வீசிவிட்டது.

இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலைவாயிலில் போராடி வருகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து “தொழிலாளர் ஒற்றுமை” என்ற ஒரே ஆயுதத்தை நம்பித் தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/mettur-chemplast-plant-workers-protest/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மீன்பிடித் தொழிலாளர்கள் : துயரக் கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை

மறுகாலனியாக்கத்தின் பெயரால் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்கரை ஓரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சுத்திணறிச் சாவதுபோல...

கால்நடை வர்த்தகத் தடை, தொழிற்சங்கம் – வரலாறும் அரசியலும் : அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அரங்கக் கூட்டம் நாள் : சனிக்கிழமை ஜூன் 17, 2017 நேரம் : மாலை 4...

Close