ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்!

நாகரீக மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று ஆடை. திருமணம், பண்டிகை என எதுவாக இருந்தாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது ஆடைதான். பெண்களோடு ஆடை எடுக்க போனால் நாள் கணக்காய் காத்திருக்க வேண்டுமென்று தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் ஒரு காட்சி வரும். ஆனால், அந்த ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களின் நிலைமை எந்தக் காட்சியிலும் வருவதில்லை.

தமிழகத்தின் கிராமங்கள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. விவசாயமோ, அதைச் சார்ந்த தொழில்களோ இல்லாததால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வேலை தேடி நகரங்ளுக்கு செல்லக் கூடிய நிலைதான் இருக்கிறது. சோறுடைத்த சோழநாட்டிலிருந்து வயிற்றுப் பிழைப்பிற்காக திருப்பூருக்கு சென்ற ஒரு இளம்பெண் சொல்கிறார்: “தண்ணி இல்ல, விவசாயம் இல்ல, இங்கிருந்து என்ன செய்ய? அதனாலதான் திருப்பூருக்கு வேலைக்கு போய்ட்டேன். அந்த தங்கறதுக்கு கம்பெனியிலேயே ஹாஸ்டல் தந்திருக்காங்க. ஆனா அதுக்கு வாடகை, கரண்ட் பில்லுனு பிடிச்சுக்கிட்டு தான் சம்பளம் தருவாங்க. ஹாஸ்டல்ல தங்கிருக்கிறதால நம்ம இஷ்டத்துக்கு வெளிய போக முடியாது. அதனால், அரிசி, சோப் இப்படி நமக்கு தேவையானதக் கூட நாங்க வேலை முடிஞ்சி வரும்போதே வாங்கிட்டு வந்துருவோம். ஹாஸ்டல்ல தங்கியிருக்கிறதால அவங்க கூப்பிடுற நேரத்துக்கெல்லாம் வேலைக்குப் போகணும். வீட்டுல இருக்கிறவங்கள பார்க்கணும்னு ஆசையா… ஏக்கமா.. இருக்கும். ஆனா அடிக்கடி லீவு போட்டு வர முடியாது. லீவு போட்டா சம்பளம் கிடையாது. அதனால் பொங்கலுக்கு மட்டும் ஊருக்கு வருவேன். இப்ப ஊருக்கு வந்ததுக்குக் கூட என் சம்பளத்துல தான் பிடிப்பாங்க.

“நான் எக்ஸ்போர்ட்ல ஹெல்ப்பரா இருக்கேன். +2 முடிச்சுட்டு மூணு வருசமா வேலை செய்யறேன். காலைல 9 மணிக்கு வந்தா சாயந்திரம் 6 மணிக்குதான் விடுவாங்க. நடுவுல டீக்கு 20 நிமிஷம், மதிய சாப்பாட்டுக்கு 30 நிமிஷம் கொடுப்பாங்க. இதுலதான் நாங்க பாத்ரூம் போகணும். பல கம்பெனிகளில் ஆண்கள் தான் சூப்பர்வைசர்களாக இருக்கின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தால் சூப்பர்வைசர் கேட்கின்ற கேள்விகள் ஆபாசமானவையாக இருக்கும். இதுக்கு பயந்துகிட்டு தண்ணி அதிகம் குடிக்காமல் இருப்போம். எனக்கு சம்பளம் 5500 ரூபாய்”

சுமங்கலி திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் உள்ள நெசவாலைகளில் செயல்பட்டு வருகின்ற சுமங்கலி திட்டத்துக்கு மாங்கல்ய திட்டம் என்றொரு பெயரும் உண்டு. ஏழ்மையில் இருக்கின்ற குடும்பத்திலுள்ள திருமணம் ஆகாத இளம்பெண்களை, குறிப்பாக 12 முதல் 15 வயதான சிறுமிகளை தேர்வு செய்கின்றனர். 3 வருடம் வேலை செய்து திருமண வயதை அடைந்த உடன் திருமணத்துக்கு தேவையான நகை, பாத்திரங்கள் போன்ற சீர்பொருட்களை ஆலை நிர்வாகம் அந்த பெண்ணுக்கு தந்து கல்யாணத்தை நடத்தி வைப்பதாக உறுதியளித்து, அவர்களை நெசவாலைக்குள்ளேயே தங்க வைத்து வேலையில் ஈடுபடுத்துவார்கள். வேலை செய்கின்ற காலத்துக்கு குறைவான சம்பளம் தருவார்கள். ஆனாலும் 3 வருடத்தை முடிக்கின்ற தருணத்தில் ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி அந்த பெண் தொழிலாளியை வேலையைவிட்டு விரட்டி விடுவார்கள். இந்த சுமங்கலி திட்டத்தால் ‘சுமங்கலி’ ஆன பெண்கள் சொற்பம். நடைபிணமான பெண்களே ஏராளம். பல நூறு புகார்களைத் தொடர்ந்து இந்த திட்டத்தை அரசு தடை செய்திருந்தாலும், நெசவாலையில் இலவசப் பயிற்சி போன்ற பல்வேறு பெயர்களில் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் திருப்பூர், திண்டுக்கல், பல்லடம், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பின்னிங் மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் 15 -18 வயதிற்குட்பட்ட பெண்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 743 ஸ்பின்னிங் மில்களில் 351 மில்களில் சுமங்கலித்திட்டம் நடைமுறையில் உள்ளது. 392 மில்களில் விடுதித் தொழிலாளர் முறை உள்ளது. ஸ்ரீ சண்முகவேல் மில்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை செய்யக் கூடிய பெண்களுக்கு செல்போன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. செல்போன் வைத்திருப்பவர்களின் போன் கால்களும் நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது என்று “நூலிழை அடிமைத்தனம்” என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்கிற பெண்கள் தங்களுடைய மூன்று  வருடத்தை முடிக்காமல் போனாலோ அல்லது வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் போனாலோ, நிறுவனம் கொடுக்க வேண்டிய பணமோ அல்லது அரை பவுன் தங்கமோ கிடைக்காது.

சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் 15-18 வயதிற்குட்பட்ட பெண்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர்

1977-ல் தமிழக அரசு, ஆலை வேலை வாய்ப்பு சட்டத்தில் உள்ள அப்ரண்டீஸ் காலத்தை 1 வருடத்திலிருந்து 3 வருடமாக நீட்டித்தது. இதன் விளைவுதான் சுமங்கலித் திட்டம் என்கிறார், கோவை மாவட்ட சமூக வளர்ச்சி மைய இயக்குநர் நாராயணசுவாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், கரூர் பகுதியில் ஜவுளி ஆலைகளில் இருக்கும் சூப்பர்வைசர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் காமவெறியால் பலியாகி, அங்கு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலோருக்கு எய்ட்ஸ்-ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழிலில் பெரும் பகுதியினர் பெண்கள்தான். இங்குதான் பெண் தொழிலாளர்கள் கூடுதல் அடக்குமுறைகளை சந்திக்கின்றனர். அதிக வேலைச்சுமை, குறைந்த கூலி, பாலியல் ரீதியான தொந்தரவுகள்… எந்த உரிமைகளும் அற்ற அடிமைகளாய்தான் பெண்கள் நடத்தப்படுகின்றனர். இந்த நிறுவனங்களில் வேலை செய்கின்ற பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து வரக்கூடாது. மஞசள் பூசக்கூடாது. இவையெல்லாம் துணிகளில் ஒட்டிக்கொண்டு கறைபடிந்து விட்டால், துணி வீணாகிவிடுமாம். துணி வீணாவது பற்றி கவலைப்படுகின்ற முதலாளிகளுக்கு, பெண்களது ஆரோக்கியம் வீணாவது பற்றி எப்போதாவது அக்கறை வந்ததுண்டா? நீண்ட நேரம் நிற்பதால் மூட்டு வலி. சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீரக கற்கள் உண்டாகி துயரம் தருவது, துணிகளில் படர்ந்திருக்கின்ற மெல்லிய நூலிழைகள் மற்றும் தூசுகளால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகள் என்று பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இத்தனை துயரங்கள் இருந்தாலும் குடும்பத்தின் தேவைக்காக ஓயாமல் தேய்கின்ற பெண் தொழிலாளர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற ஜென்மங்களை என்னவென்று சொல்வது? ஓவர்டைம் செய்ய வேண்டு்ம் என்று கட்டாயப்படுத்துவான், முதலாளி. ஆனால், இரட்டிப்பு சம்பளம் கிடையாது.  பீஸ் ரேட் வேலை என்று ஆசை காட்டுவார்கள். ஆனால், டேமேஜ் பீஸ் என்று சொல்லி நட்டத்தை தொழிலாளர்களது தலையில் கட்டுவார்கள். கட்டிங், டெய்லரிங், அயனிங், எம்மிங், பேக்கிங் என்று ஒவ்வொரு பிரிவையும் தனித்தனி காண்டிராக்ட்டுக்கு விட்டுவிடுவதால், தான் யாருக்காக வேலை செய்கிறோம் என்பது அந்த தொழிலாளிக்குத் தெரியாது. அற்பகூலி கொடுத்து தைக்கப்படுகின்ற சட்டைதான் பீட்டர் இங்கிலாந்து, கலர் பிளஸ் என்றெல்லாம் வெவ்வேறு பிராண்டுகளில் ரூ.5999/ரூ.6599 விலைவைத்து விற்கப்படுகிறது. இவர்களது சம்பளத்தில் பி.எப் பிடிப்பது நடந்தாலும் வரவு வைக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் முடியாது. பல பிராண்டு நிறுவனங்கள் அடிக்கடி காண்டிராக்ட்டை மாற்றி விடுவதால், பெரும்பாலான காண்ட்ராக்ட்டுகள் மூடப்படுகின்றன. அப்படி காண்டிராக்ட் மூடப்பட்டால் அவனிடம் இருக்கின்ற பி.எப் கணக்கு “அம்போ” தான். சில சமயம், மாதச்சம்பளம் தராமலேயே கம்பி நீட்டி விடுவார்கள். நியாயம் கேட்டால், “அந்த காண்டிராக்ட் முடிந்து விட்டது; அவன்கிட்ட போய் பேசிக்கோ.”  என்று போலீசை வைத்து விரட்டவும் செய்வார்கள். இந்த கம்பெனியில் தானே வேலை செய்தோம் என்றால், அதெல்லாம் பீஸ் ரேட்டு…காண்டிராக்ட்.. என்று சொல்லி துண்டித்து விடுகின்றன, ‘பிராண்ட்’ நிறுவனங்கள்.

போடுகின்ற சட்டை பிரமிக்க வைக்கிறது. ‘சூட்’டுகள் சூடு கிளப்புகின்றன. மொறுமொறுப்பான வெள்ளைச் சட்டையைப் போட்டாலே அண்ணனுக்கு கம்பீரம் தான். ராம்ராஜ் முதல் மினிஸ்டர் ஒயிட் வரை எல்லாமே பந்தாதான். ஆனால், நூலிழைகளின் ஊடாக வியர்வையையும், இரத்தத்தையும் கலந்திருக்கின்ற பெண் தொழிலாளர்கள் மீது சுரண்டல் ராஜ் நடக்கிறதே, அதற்கு விடிவு எப்போது?

நர்மதா

புதிய தொழிலாளி – ஜனவரி 2018

Permanent link to this article: http://new-democrats.com/ta/misery-of-women-workers-behind-branded-shirts/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
2019-ல் நாம் எதிர்கொள்வது என்ன – உரை வீடியோ

https://www.youtube.com/watch?v=MZOnZtR9gQ8 உரை : காசிராஜன் காணொளி ஆக்கம் : சரவணன்

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்கம் (கிரீஸ்) – இந்தியாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை

முதலாளித்துவ சூதாட்டத்திற்கு இரையாகி மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் கிரேக்க நாடு அதே சூதாட்டத்துக்குள் கண்ணை திறந்து கொண்டே போய் விழும்படி தூண்டும் நமது நாட்டின் முதலாளிகளையும்,...

Close