மோடியின் மருத்துவக் காப்பீடு : கார்ப்பரேட்டுகளுக்கு கறி விருந்து

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

து அரசின் பொறுப்புணர்வைப் பற்றி திருக்குறளில் கூறப்பட்டிருப்பது. ஆனால், “இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என அனைத்து உரிமைகளும் கார்ப்பரேட்களுக்கே, இதை யாரேனும் எதிர்த்தால் அவர்களை ஒடுக்குதல் மட்டுமே அரசின் பொறுப்பு” என்று மோடியின் குரல் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதிதாக அறிமுகப் படுத்திய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகப் பெரும் பயன்களை பெற்றுத்தரும் என்று ஏழைத்தாயின் மகன் மோடி முழங்கினாலும் அதன் நோக்கம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் மிகப்பெரும் ‘ஈட்டலை’ (லாபத்தை) வழங்குவது தான்.

மருத்துவக் காப்பீடு திட்டம்

“இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என அனைத்து உரிமைகளும் கார்ப்பரேட்களுக்கே, இதை யாரேனும் எதிர்த்தால் அவர்களை ஒடுக்குதல் மட்டுமே அரசின் பொறுப்பு” என்று மோடியின் குரல் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 10 கோடி ஏழை மக்கள் இந்தத் திட்டத்தால் பயனைடையப் போவதாகவும், ஒரு குடும்பத்திற்கான காப்பீட்டுக் கட்டணமாக (Premium) ரூபாய் 1082 ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் படி ஒவ்வொரு குடும்பமும் ரூபாய் ஐந்து லட்சம் வரையிலான மருத்துவ செலவினங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதாகவும் முன்மொழியப்படுகிறது. “அரசு அறிவித்துள்ள காப்பீட்டு கட்டணம் ரூபாய்1082 மிகவும் குறைவாக இருப்பதாகவும், ரூபாய் 1765 ஒதுக்கினால தான் கட்டுப்படியாகும்” என்று CRISIL (Credit Rating Information Services of India Limited) தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதாவது, காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அரசு திட்டமிட்டதை விட சுமார் 50% அதிக கட்டணம் கொடுக்க வேண்டும் என்று முன் ஜாமீன் வாங்கியிருக்கிறது, முதலாளி வர்க்கம்.

அந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடக்கட்டும், ஆனால் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விசயங்கள் இன்னும் பல உள்ளன.

மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக பல ஆயிரம் கோடி ரூபாய்களை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிப்பதற்குப் பதில், அப்பணத்தைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை சிறப்பாக மேம்படுத்தலாமே என்ற கேள்விக்கு ஆளும் வர்க்க துதிபாடிகள் என்ன பதில் சொல்கின்றனர்? ’அரசு மருத்துவமனைகள் தரமற்றதாகவும், தனியார் மருத்துவமனைகள் மட்டுமே உயர்தரத்தை பேணுவதாகவும்’ அவர்கள் வாதிடுகிறார்கள். தனியாரின் தரம் பற்றிய லட்சணத்தை, சென்ற ஆண்டு தனது தாயாரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து பல லட்சம் கட்டணமாக அழுத பிறகும் அலட்சியத்தாலும், மோசடியாலும் அவர் நிலைமை மோசமாகி, யாருக்கும் தெரியாமல் அவரை ஒரு மருத்துவமனையில் வீசியெறிந்த அப்பல்லோ நிர்வாகத்தை ஹேமநாதன் என்பவர் அம்பலப்படுத்திய வீடியோவை நம்மில் பலர் பார்த்திருப்போம்.

இச்சம்பவம் ஒரு உதாரணம்தான், இது போன்ற பல விசயங்கள் வெளியில் தெரியாமல் கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகங்களால் சரிக்கட்டப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளை தரமாகவும், அனைத்து வசதிகளோடும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசுக்குத்தானே?

ஆனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் (எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன்) பற்றாக்குறையால் நோயாளிகள் நிலை ரணவேதனை தருவதாக உள்ளது. நண்பர் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, ஆயிரத்திற்கும் மேலான புறநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்திருக்கிறார். உழைக்கும் விவசாய ஏழை மக்களே அங்கு சிகிச்சைக்காக கிராமங்களில் இருந்து வந்திருந்தனர். ‘உடம்பு நோவுற்று அதை தீர்க்க இங்கு வந்தால், இவ்வளவு நேரம் காத்துகிடந்து மேலும் நொந்து போகும் நிலைதான் ஏற்படுகிறது, அதுக்கு வீட்டில் நோயுற்றே சாவுறதே மேல்’ என்று கூறியிருக்கின்றனர்.

அதே நேரம் ஒரு சில அரசு மருத்துவமனைகள் தனிப்பட்ட மருத்துவர்கள், நிர்வாகிகளின் அக்கறையாலும், முன்முயற்சியாலும் சிறப்பாக செயல்படுகின்றன. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 400 லிருந்து 500 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள், சிகிச்சை சிறப்பாக இருப்பதாகவே நோயாளிகள் கூறினார்கள். ’இந்த அரசு மருத்துவமனை இல்லையென்றால், நாங்கள் நோய் வாய்ப்பட்டு அல்லல்பட நேரிடும் அல்லது தனியார் மருத்துவமனைக்கு செலவு செய்து சம்பாத்தியத்தை எல்லாம் இழந்து கடன்படும் நிலை கட்டாயம் ஏற்படும். ஏனென்றால் நாங்கள் தினக்கூலிகள் தான், அன்றாடம் 200 அல்லது 300 ரூபாய் வரும்படி வருவதே பெரிய விசயம்’ என்றனர். மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள் என்பது அங்கு நாம் கண்ட காட்சி.

எனவே அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு சரியில்லையென்றால், அதற்கு பொறுப்பு நிர்வாகத்தை புறக்கணிக்கும் அதிகாரிகளும், நிதியை மடை மாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்தான். இந்நிலையில்தான் எலியை பிடிக்க முடியாமல் வீட்டை கொளுத்திய கதையாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது அரசு.

மக்களின் வரிப்பணம் அரசு மருத்துவமனைகளிலிருந்து திசை திருப்பப்பட்டு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ப்ரிமீயத் தொகைகளாக திருப்பி விடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கும், தனியார் மருந்து, மருத்துவ உபகரண நிறுவனங்களுக்கும் இத்திட்டமானது ‘பொன் முட்டையிடும் வாத்து’ போல அமைகிறது. அதில் ’கமிஷன் கட்டிங்’ எவ்வளவு தேறும் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு திரிவது தான் அமைச்சர் பெருமக்களின் வேலை, அதற்கு எடுப்பு வேலை பார்க்கத்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

மருத்துவக் காப்பீடு இல்லையென்றால் தனியார் மருத்துவமனை மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியாது என்ற சூழலை தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்தியுள்ளது.
”காப்பீட்டு அட்டை இருந்தால் அறுவை சிகிச்சையின் போது உள்ளே பொருத்துவதற்குத் தேவையான கருவிகளை காப்பீட்டுப் பணம் மூலம் உடனே வாங்கிவிடலாம். காப்பீட்டு அட்டை இல்லை என்றால், டெண்டர் விட்டு கருவிகள் வாங்க தாமதம் ஏற்படுகிறது. அதனால்தான் காப்பீட்டு அட்டை இல்லாத நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது’’ (தி இந்து, 17 ஜனவரி 2015) என்கிறது ஒரு செய்தி.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை பழக்கப்படுத்துவதன் மூலம், மருத்துவக் காப்பீடு என்பது அத்தியாவசிய ஒன்றாக உருவாக்குவது தான் கார்ப்பரேட் கால் நக்கி அரசுகளின் செயல்திட்டமாக உள்ளது. இன்று அரசே நமது வரிப்பணத்தை பிரீமியமாக கட்டுகிறது. எதிர்காலத்தில் மக்களே பிரீமியத் தொகையை கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் உருவாகும்.

உலக வல்லரசு என்று பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் விண்ணை முட்டுகின்றன. காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவ சேவை நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு கொள்ளை அடிப்பதற்காகவே மருத்துவத் துறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாத ஒரு ஏழை மனிதன் நோயுற்றால் அவன் நேராக கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டியது தான், வேறு வழியே இல்லை.

அமெரிக்கா என்ற பிரம்மாண்ட தேசத்தின் பக்கத்தில் தான் க்யூபா என்றொரு சிறிய நாடு உள்ளது, அங்கு மருத்துவ சிகிச்சை சமூக ரீதியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பொருளாதார பின்னடைவுகளை சந்தித்தாலும் இக்கொள்கையில் எவ்வித சமரசமின்றியே செய்து வருகிறது. இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது தொழிலாளர்களால் படைக்கப்பட்ட தேசமான சோவியத் யூனியன்தான். ஆம் முதல்முறையாக அனைவருக்குமான கல்வி, மருத்துவம், மற்றும் பல்வேறு அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கியதை சோவியத் யூனியனே சாதித்தது. அதைப்பார்த்தே பிற நாடுகளும் இவற்றை நடைமுறைப்படுத்தின.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு வருகிறது. உலகெங்கும் கால்பதித்து உண்டுகொழுத்து வீங்கி போய் நிற்கும் கார்ப்பரேட்களுக்கு மேலும் மேலும் சதையை இரையாக்குகின்றன அரசுகள். அந்தத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

நமக்குத் தேவை மருத்துவக் காப்பீடு அல்ல, மருத்துவ சிகிச்சை. அதை அரசு மருத்துவமனைகள் மூலமாக அனைவருக்கும் பொதுவாக, தேவைக்கேற்றபடி அரசே வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததோடு எதிர்நிலை சக்தியாகவும் மாறி நிற்கிறது.

எனவே, மக்களுக்கான மருத்துவ சேவையை தரமாக-இலவசமாக வழங்க தவறிய, தகுதியற்ற இந்த அரசமைப்பை தூக்கி எறிவோம். மருத்துவ சேவையை லாபத்திற்காக மாற்றியமைக்கும் தனியார் மயமாக்குவதை விரட்டியடிப்போம்.

இந்தப் பிரச்சினைக்கு அடி நாதமாக எது இருக்கிறது? எல்லா துறைகளிலும் தனியார் கார்ப்பரேட் ஏகபோகம், கார்ப்பரேட்டுகளின் நோக்கம் லாபம் லாபம், கொள்ளை லாபம் என்று விரிவுபடுத்திக் கொண்டே போவது. அரசு என்பது கார்ப்பரேட்டுகளின் புரோக்கராகவும் அடியாட்படையாகவும் இருந்து மக்களை சுரண்டி அடக்கி வருகிறது. இந்த முதலாளித்துவ கார்ப்பரேட் அரசை தூக்கி எறிந்து தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதுதான் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், வீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை உழைக்கும் மக்களுக்கு உறுதி செய்ய முடியும்.

– R. ராஜதுரை

புதிய தொழிலாளி செப்டம்பர் 2018

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/modi-medical-insurance-scheme-offering-to-corporates/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
செக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம்!

சரி... சம்பளமாவது சரியாகத் தருவார்களா என்றால், பிரதிமாதம் 10-ம் தேதி முதல் பீல்டு ஆபிசர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவராகக் கூப்பிட்டு கொடுத்தால்...

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு! – நோட்டிஸ்

கருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி...

Close