கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”

This entry is part 1 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

 கருப்புப் பணத்தை கைப்பற்றுவதற்கு, அதன் தலையில் குறிவைத்து வெண்ணெய் அடித்திருக்கிறார். வெண்ணெய் உருகி கொக்கு கண்ணை மறைத்ததும், அதைப் பிடித்து கறிவைத்து எல்லோருக்கும் பரிமாறுவாராம் (அதாவது, வங்கிக் கணக்கில் தலா ரூ 15 லட்சம் போடுவாராம்).

satish-acharya-black-money-cartoonஇதைத்தான் “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்று கொண்டாடுகிறது தினமலர். ‘கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக சிரமங்களை சகித்துக் கொள்வதுதான் தேசபக்தர்களின் லட்சணம்’ என்று மோடியை பின்பற்றி அவரது பக்தர்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் கோஷ்டி கானம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மோடி நடத்திய “சர்ஜிகல் ஸ்டிரைக்”கைப் போன்றதுதான் இதுவும். அந்த “ஸ்டிரைக்”கில் பயங்கரமாக பாதிக்கப்பட்டதாக பில்ட்-அப் கொடுக்கப்பட்ட பாகிஸ்தான், “யாரை அடிச்சீங்க, எங்களுக்கு தெரியவேயில்லையே” என்று சொல்லி விட்டது. செப்டம்பர் 30-ம் தேதி நடத்தப்பட்ட மோடியின் எல்லை தாண்டிய “சர்ஜிக்கல் ஸ்டிரைக்”கைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக இருதரப்பிலிருந்தும் நடத்தப்படும் எல்லைதாண்டிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இது வரை 8 இந்திய படைவீரர்களும் 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட இந்திய வீரர் ஒருவரின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், காஷ்மீர் எல்லைப் புறத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு மாற்று இடங்களுக்கு போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

modi-surgical-strike-cartoonபாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி விட்டதாக மோடி அரசு ஒரு புறம் சவாலடித்துக் கொண்டிருக்க, அமெரிக்கா முதல் ரசியா, சீனா வரை இந்தியாவை சல்லிசாக விற்க முன் வந்துள்ள தரகர் மோடியின் மனம் குளிரும்படி சில அறிக்கை சிலம்பாட்டம் மட்டும் செய்து கொண்டு பாகிஸ்தானுடன் இராணுவ, அரசியல் உறவுகளை தொடர்கின்றன.

“சர்ஜிகல் ஸ்டிரைக்”கைக் கொண்டாடும் மோடியும் அவரது பக்த கோடிகளும் எந்த வித தடங்கலும் இல்லாமல் ஏ.சி அறை குளுகுளுப்பிலான வாழ்க்கையை தொடர்கின்றனர். இத்தனை உயிரிழப்பு குறித்த எந்த வித வருத்தமும் இல்லாமல் தீபாவளியை விமர்சையாக கொண்டாடினார்கள். ஒரு குண்டூசி குத்தல் கூட இல்லாமல் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே தேசபக்தியை தூக்கிப் பிடித்தது அந்த ஆர்.எஸ்.எஸ்- இந்துத்துவா கும்பல். “சர்ஜிகல் ஸ்டிரைக்” பற்றி கேள்வி எழுப்பியவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி “ராணுவத்துக்கே எதிராக பேசுகிறீர்களா?” என்று மிரட்டியது.

textile-shopsஇப்போது கருப்புப் பணம் பற்றிய விவாதத்திலும் இந்த நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பும் யாரையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகின்றன இந்துத்துவா-கார்ப்பரேட் சக்திகள்.

கையில் வார அல்லது மாதக் கூலியாக பெற்ற பணத்துடன் மளிகைக் கடையில் சாமான் வாங்க முடியாமல் நிற்கும் உழைக்கும் மக்களுக்கு, பேருந்தில் பயணிக்க முடியாமல் தவிக்கும் சில்லறை வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு தங்களது பங்குச் சந்தை முதலீட்டை கண்காணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் தேச பக்தி கால் தூசாகக் கூட உதவாது.

banks-closedகருப்புப் பணம் பற்றிய மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்” உழைக்கும் மக்களை குறிபார்த்து திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது, வங்கிகள், ஏ.டி.எம் நிறுவனங்களை தயார் நிலைக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் என்று மோடி மற்றும் அதிகார வர்க்கம் பல வாரங்களாக இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியில் மாதத்தின் 8-வது நாளில் (அதாவது 7-ம் தேதி சம்பளம் வாங்கிய கூலி பெறும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கையில் முதலாளிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்ட பிறகு), செவ்வாய்க் கிழமை (வாரக் கூலி வாங்கும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை பணத்தை ஒப்படைத்து விட்ட பிறகு) உழைக்கும் மக்கள் கையில் முதலாளிகளிடமிருந்து நேரடியாகவோ, ஏ.டி.எம்-லிருந்து எடுத்த பணமாகவோ 500, 1000 ரூபாய் நோட்டுகள் வந்து விட்ட நாள் பார்த்து தாக்குதலை நடத்தியிருக்கிறார். அதாவது, முதலாளிகளுக்கு குறைந்தபட்ச சிரமம் ஏற்பட வேண்டுமாம்.

அப்படி ஏ.டி.எம்-ல் பணம் இதுவரை எடுத்து விடாத உழைக்கும் மக்கள் அடுத்த 2 நாட்களுக்கு அல்லாட வேண்டும். சர்வதேச கடனட்டை, இணைய வர்த்தகம், காசோலை, மின்னணு பணப் பரிமாற்றம் போன்ற வசதிகளை வைத்திருக்கும் முதலாளி வர்க்கத்துக்கும், மோடியின் ஆதரவாளர்களான இந்துத்துவ-பணக்கார பிரிவினருக்கும் இந்த “சர்ஜிகல் ஸ்டிரைக்”கால் குறைந்தபட்ச தொந்தரவுகள்தான் ஏற்படப் போகின்றன.

atm-closed-2ஆனால், உழைக்கும் மக்கள் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு கையில் பணம் இல்லாமல் அல்லாடப் போகிறார்கள். கைவசம் மிஞ்சியிருக்கும் 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளை சிக்கனப்படுத்தி அவசிய செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மளிகைக் கடை, இறைச்சிக் கடை, பாத்திரக் கடை, துணிக்கடை, மின்னணு பொருட்கள் வியாபாரம் போன்ற ரூ 500 புழங்கும் வியாபாரங்கள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்படும்.

வங்கிகளுக்குச் சென்று அல்லது ஏ.டி.எம்-ல் செலவுக்குப் பணம் எடுக்க வரிசையில் நிற்க வேண்டும். அதனால் இழக்கப் போகும் ஒரு நாள் கூலியை மோடியா தரப்போகிறார்! பணத்தை மாற்றுவதற்கு வங்கிகளில் குவியும் மக்களுக்கு தேவையான அளவுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் வங்கிக் கிளைகள் திணறும். தவிப்பிலும், ஆத்திரத்திலும் தங்கள் பணத்தை பெறுவதற்கே மக்கள் போராட்டம், கிளர்ச்சிகள் நடத்த வேண்டியிருக்கும்.

ரிசர்வ் வங்கி புள்ளிவிபரத்தின் படி மார்ச் 31, 2016 அன்று சுற்றில் இருந்த மொத்தம் ரூ 16.42 லட்ச ரூபாய் மதிப்பில் ரூ 14.18 லட்சம் கோடி வரை (86%-க்கும் மேல்) 500 ரூ, 1000 ரூ நோட்டுகளால் ஆனவை. எண்ணிக்கையை பொறுத்தவரை, மொத்தம் 9026 கோடி கரன்சி நோட்டுகளில் 2,203 கோடி (24%) 500 ரூ, 1000 ரூ நோட்டுகள்.

1000rs-500rsபுழக்கத்தில் இருக்கும் மொத்தம் 2203 கோடி ரூ 500, ரூ 1000 நோட்டுகள் இந்த நோட்டுகள் அனைத்தையும் டிசம்பர் 30-க்குள் மாற்றிக் கொடுக்க வேண்டுமானால் (மொத்தம் 40 வேலை நாட்கள்), நாட்டில் உள்ள 79,735 வங்கிக் கிளைகள் (31.80 லட்சம் வேலை நாட்கள்) ஒவ்வொரு வங்கி வேலை நாளிலும் சராசரியாக தலா 6,927 நோட்டுகளை (ஒரு மணி நேரத்துக்கு 865 நோட்டுகள், ஒரு நிமிடத்துக்கு சுமார் 15 நோட்டுகள்) கையாள வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 5 காசாளர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு காசாளர் ஒரு நிமிடத்துக்கு 3 நோட்டுகளை வாங்கி அதற்கு இணையான புதிய நோட்டுகளை கொடுக்க வேண்டும். இடைவேளை விடாமல், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நோட்டுகளை வாங்கி எண்ணி, சரிபார்த்து, கணக்கில் பதிவு செய்து, புதிய நோட்டுகளை (உடனடியாகவோ, பின்னரோ) வழங்க வேண்டும்.

இத்துடன் சுமார் 1.54 லட்சம் தபால் நிலையங்களையும் சேர்த்தால், அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கிக் கிளைகளைப் போல பணத்தை கையாளும் வசதி இருப்பது போல் வைத்துக் கொண்டால், இந்த சுமை கணிசமாக குறைக்கப்படலாம். ஆனாலும், நடைமுறையில் டிசம்பர் 30-க்குள் இது எந்த அளவு சாத்தியமாகும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

modi-black-money-magic

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையும் இந்துத்துவா சக்திகளின் பிரச்சார வாய்க்கு அவல் போட மட்டுமே பயன்படுவதாகவும், உழைக்கும் மக்களுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்குவதாகவும், கருப்புப் பண முதலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் முடியப் போகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு கணக்கு, ரேஷன் அட்டை, பள்ளிக் குழந்தைகளின் பெயர் என அனைத்துடன் இணைப்பது, தூய்மை இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிரான “சர்ஜிகல் ஸ்டிரைக்” வரிசையில் இந்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையும் இந்துத்துவா சக்திகளின் பிரச்சார வாய்க்கு அவல் போட மட்டுமே பயன்படுவதாகவும், உழைக்கும் மக்களுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்குவதாகவும், கருப்புப் பண முதலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் முடியப் போகிறது.

முதலாளிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தில் ரொக்கமாக சுற்றுவது மிகச் சிறிய பகுதிதான். பெரும்பகுதி உள்நாட்டு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இயங்குகின்றன என்கின்றன பல ஆய்வுகள்.

modi-black-money

“குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கருப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் 3 சதவீதம்தான். 33 சதவீதம் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்.” (காவிக்கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் என்ற கட்டுரையிலிருந்து)

கருப்புப் பணத்தை ஒழிக்க 500 ரூ, 1000 ரூ நோட்டுகளை செல்லாது என அறிவித்திருப்பது குறித்து கார்ப்பரேட்டுகளின் ஊதுகுழலான எகனாமிக் டைம்ஸ் “கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டுவது என்ற நோக்கம் புனிதமானதுதான்… ஆனால், 500 ரூ, 1000 ரூ நோட்டுகளை செல்லாதவையாக ஆக்குவது, பெரும் அளவு இடைஞ்சல்களை உருவாக்கும்… சிறு வணிகர்களுக்கும், சிறு-நடுத்தர தொழில்களுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்தும்… 80% அதிகமான பரிமாற்றங்கள் ரொக்கப் பணத்தின் மூலம் நடக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பது பொருளாதார வாழ்வை சீர்குலைப்பதாகவும், அரசியல் எதிரிகளை பலவீனப்படுத்துவதாகவும் அமையுமே தவிர கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தப் போவதில்லை.” என்று சொல்லியிருக்கிறது.

 

ஆம். உ.பி தேர்தலில் வினியோகிப்பதற்காக பணத்தை குவித்து வைத்திருக்கும் எதிர்க் கட்சிகளுக்கு (குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி) செக் வைப்பதற்கு பா.ஜ.க-வுக்கும் மோடி கும்பலுக்கும் இது பயன்படலாம். ஆனால், பா.ஜ.க தேர்தலுக்கு முன்பு தனது தொடர்புகளை பயன்படுத்தி ரூ 2,000 நோட்டுகளையும், ரூ 500 நோட்டுகளையும் ஒதுக்கிக் கொண்டு விடும் என்பதுஉறுதி.

மேலும், ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, லஞ்ச ஊழல் மூலம் ஈட்டிய பணத்தை பதுக்கி வைத்திருக்கும் லோக்கல் திருடர்களை மிரட்டி திருட்டுப் பணத்தை கைப்பற்றுவதற்கும் ஆளும் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். கோடிக் கணக்கில் பணம் வைத்திருக்கும் மாஃபியா, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு வங்கிகளே முன் வந்து நேரடியாக பணப் பரிமாற்றம் செய்து கொடுத்து விடும்.

என்.டி.டி.வி தளத்தில் வெளியான Modi’s big gamble with banning Rs 500 and Rs 1000 notes என்ற கட்டுரையிலிருந்து சில கருத்துக்கள்

“சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ‘சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவை கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை கைப்பற்றி வந்து ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் தலா ரூ 15 லட்சம் போடப் போவதாக’ பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. பா.ஜ.க.வுக்கு மக்களில் பலர் அதை நம்பி வாக்களித்திருக்கின்றனர்.”

“இப்போது, ஊடகங்கள் மூலமாகவும், இணைய தளங்கள் மூலமாகவும், ‘இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து வருகிறது’, ‘பாகிஸ்தானும், சீனாவும் மிரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன’, ‘மே 2014-க்கு பிறகு ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டது’, ‘ஒட்டு மொத்தத்தில் “அச்சே தின்” இந்தியாவுக்கு வந்து விட்டது’ என்ற பிரச்சாரம் வேண்டுமானால் வேறு வழியில் விபரங்களை தெரிந்து கொள்ள முடியாத மக்கள் மத்தியில் ஓரளவுக்கு எடுபடலாம். ஆனால், வங்கிக் கணக்கில் இன்னும் ரூ 15 லட்சம் வந்து சேரவில்லை என்பது எத்தனை நூறு பேர் சேர்ந்து தொலைக்காட்சி விவாத மேடைகளிலும், இணைய தளங்களிலும் கூச்சலிட்டாலும் மறைக்க முடியாத யதார்த்தம்.”

கருப்புப் பணப் புழக்கத்தை தடுப்பது மோடி அரசின் நோக்கம் இல்லை என்பதற்கு சில ஆதாரங்கள்.

pachamuthu-bccl1. மருத்துவப் படிப்புக்கான இடம் கொடுப்பதற்கு ரூ 75 கோடி கணக்கில் காட்டாமல் வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைதான எஸ்.ஆர்.எம் முதலாளி பச்சமுத்துவையும் அவரைப் போன்ற கல்வி கொள்ளையர்களையும் விசாரித்து கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி புழங்கியது என்று கண்டுபிடிக்கவோ, சொத்துக்களை கைப்பற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு குலாவுகிறது மோடி அரசும் பா.ஜ.க-வும்.

2. யூனிடெக், டி.எல்.எஃப் தொடங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து கணக்கில் காட்டப்படாத பணத்தை கைப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

3. ரூ 5 கோடி இந்தியாவில் முறைகேடாக செலவிடப்பட்டது (லஞ்சம் கொடுக்க பயன்படுத்தப்பட்டது) என்று அதிகாரபூர்வமாக அமெரிக்காவில் அறிவித்திருக்கும் காக்னிசன்ட் நிறுவனம் மீது இது வரை ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை.

4. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நோட்டுகளை குவித்து வைத்து எண்ணிக் கொண்டிருந்த அ.தி.மு.க பெருந்தலை அன்புநாதனையும் அந்தக் கட்சியின் தலைவி ஜெயலலிதாவையும் கைது செய்து விசாரிக்கவில்லை. மாறாக, மருத்துவமனையில் படுத்திருக்கும் ஜெயலலிதா பெயரில் ஆட்சியைத் தொடர அந்த கும்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5. லண்டனில் குடியேறியிருக்கும் கார்ப்பரேட் கருப்புப் பண முதலைகளின் சின்னமான விஜய் மல்லையாவை கமாண்டோ படையினரை அனுப்பி “சர்ஜிகல் ஸ்டிரைக்” நடத்தி கைது செய்து வரவில்லை.

6. அதானி, அம்பானி, டாடா முதலான முதலாளிகளின் மொத்த சொத்து என்ன என்று ரெய்டு நடத்தி, அயல்நாட்டு வரியில்லா சொர்க்க தீவுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை கைப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

modi-adaniகூடுதலாக, இந்த நடவடிக்கை பற்றிய உரையில் கருப்புப் பணத்துடன் கள்ள நோட்டையும் இணைத்திருக்கிறார் மோடி. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் 500 ரூ, 1000 ரூ நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களாம். இப்படி வலை போடுவதன் மூலம் அந்த நோட்டுகளை ஒழித்து விடுவாராம்.

2014-ம் ஆண்டு ஜனவரி மாதம், “2005-க்கு முற்பட்ட நோட்டுகளை செல்லாமல் ஆக்கப்” போவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, “புதிய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தது. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த கள்ள நோட்டுகள் உலாவுகின்றன என்றால், மோடியின் நிர்வாகம் கையாலாகாதது, தன் கையாலாகத்தனத்தை மறைப்பதற்கு அடுத்தடுத்து வாய்ச்சவடால்களை அடித்து விட்டுக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி கள்ள நோட்டு அச்சிடும் தேச விரோத சக்திகள் தம் கைவசம் இருக்கும் சரக்கை எரித்து விட்டு புதிய பணத்தை புதிய வடிவமைப்பில் அச்சிட்டு ஓரிரு வாரத்தில் வழக்கம் போல பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அதைத் தடுக்க வக்கில்லாமல் மோடி அரசு அடுத்த சவடாலுக்கு தயாராகும்.

இந்த அரசும் அதன் பிரதமர் மோடியும், அவரது கட்சி பா.ஜ.க-வும் அந்தக் கட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-ம் கையாலாகாத, மக்கள் விரோத, பயங்கரவாத கொடூரர்கள் என்பதை இந்த விவகாரம் இன்னும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

உழைக்கும் மக்கள் அனைவரும், தம் வசம் இருக்கும் ரூ 500, ரூ 1000 நோட்டுக்களுக்கு உடனடியாக மாற்று பணத்தை தரும்படியும், அதுவரை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இலவசமாக அரசே வழங்கும் படியும் கோரிக்கை வைத்து போராட வேண்டும்.

– குமார்

(படங்கள் நன்றி : சதீஷ் ஆச்சார்யா, தினமலர், மற்றும் பிற இணையதளங்கள்)

 • அதிரடியாக 500, 1000 ரூபாய்களை முடக்கி மக்களை நிலைகுலைய வைத்து,
 • கருப்பு பணத்தை முடக்குவதாக நாடகமாடி, கருப்பு பண முதலைகளை காப்பாற்றும்

சர்வாதிகாரி மோடியை கண்டித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என்ற அமைப்பு சென்னை.பா.ஜ.க அலுவலகத்தை இன்று மாலை 4.30 மணிக்கு முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.

முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து போராடுவோம்!

Series Navigationடாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-surgical-strike-on-black-money-ta/

1 comment

  • ரகு on November 9, 2016 at 6:02 pm
  • Reply

  தங்கம் விலை உயர்ந்துள்ளதாம். நகைக்கடைகளை மொய்த்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் எப்படி பணத்தை மாற்றுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
லாபத்துக்கு படும் பாடு!

பிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். "ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா...

பச்சமுத்துவின் குற்றம் 75 கோடி மோசடி மட்டும்தானா?

எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஆர்.எம்-ல் மெடிக்கல் சீட் தருவதாகக் கூறி 111 பெற்றோர்களிடமிருந்து சுமார் ரூ 75 கோடி வாங்கி ஏமாற்றி விட்டதாக, வேந்தர் மூவீஸ்...

Close