மோடியின் தூய்மை இந்தியா மோசடி – வாணியம்பாடியிலிருந்து ஒரு செருப்படி

செய்தி : உலகிலேயே அதிக மாசடைந்த 15-நகரங்களில் 14 இந்தியாவில் இடம் பெற்றுள்ளன என்று WHO வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 6-வது இடத்தில் உள்ளது.

கண்ணோட்டம்:

  • “ஸ்வச்ச பாரத்” என்று மோடியின் சவடாலை தொடர்ந்து, ‘நாட்டை சுத்தப்படுத்தி விடுகிறோம்’ என்று துடப்பத்தை தூக்கிக்கொண்டு மீடியாவில் போஸ் கொடுத்தவர்கள் எங்கே என்று தேடுங்கள்.
  • பாசிச மோடி கொண்டுவந்த “தூய்மை இந்தியா” திட்டத்தை விளம்பரப்படுத்த உட்பட துடப்பத்தை தூக்கிக்கொண்டு twitter-ல் போட்டோ போட்டு சொல்லிமாளாத அட்டகாசம் செய்தவர்கள் எங்கே என்று தேடுங்கள்.
  • அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதை பலமுறை எடுத்துக் கூறியும் உண்மை என்று கூப்பாடு போட்ட பா.ஜ.க அடிமைகளையும் தேடுங்கள்.
  • மோடி வெளிநாட்டு முதலாளிகளை இங்கே கொண்டுவந்து முதலீடு செய்ய வைத்து வேலைவாய்ப்பை பெருக்கிவிடுவார் என்று கூச்சல் போட்ட கூமுட்டைகளை தேடுங்கள்.

அவர்களிடம் கேளுங்கள், “தூய்மை இந்தியா” தொடங்கி 4 ஆண்டுகளில் எப்படி இந்திய நகரங்கள் மாசு பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன. முதலாளிகளுக்கு கால் கழுவி விடும் அரசின் கீழ் போது தெருவை எவ்வளவு பெருக்கினாலும், முதலாளிகள் வெளித்தள்ளும் கழிவு நாட்டை கழிவு மலையில் மூழ்கடிப்பதுதான் நடக்கும். அதுதான் மோடியின் ஆட்சியில் நடந்திருக்கிறது.

அவர்களுக்காக நான் பேசுகிறேன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டையில் கழிவு சேறு தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து மாசுபடுத்துவதற்காக துரத்தப்பட்ட தொழிற்சாலைகளை நம் நாட்டுக்குக் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பு வருமா? அல்லது இயற்கை அழிந்து நாசமாகுமா? வளர்ச்சி யாருக்கானதாக இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகளில் உற்பத்தி நடக்கும்போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிதான் நடக்க வேண்டும் ஏனென்றால் மக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழ்நிலைக்கோ பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் அதையெல்லாம் முதலாளிகள் கடைப்பிடிக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பதில். அவர்களது மேற்கத்திய கஸ்டமர்களும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நமது நாட்டின் மக்களோ சுற்றுப்புறச் சூழ்நிலைகளோ எந்தவித பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த முதலாளிக்கும், அவரது குடும்பத்திற்கும், அந்தப் பொருட்களை வாங்கும் ஐரோப்பிய நிறுவனத்துக்கும் எந்தவித ஆபத்தும் அதனால் ஏற்படபோவதில்லை.

தமது தொழிற்சாலை இயங்கும் பகுதியை பேரழிவுக்கு தள்ளி விட்டு, தான் சம்பாதித்த லாபத்தை வைத்து தாம் மட்டும் சுத்தமான பகுதியில் குடியேறும் அளவுக்கு கொடூரமானவர்கள் இந்த முதலாளிகள்.

இதை நம்ப முடியவில்லை என்றால் கடந்த 35 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமையை பற்றி சொல்கிறேன் அப்போது புரியும் உங்களுக்கு நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று.

வாணியம்பாடி பாலாறு கரையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் தோல்தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாய் இயங்கி வருகின்றன. அந்த தொழிற்சாலைகளில் அபாயகரமான, நச்சுப்படுத்தும் வேதிபொருள்களை பயன்படுத்துகிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கழிவுகளை சுத்திகரித்து, சுற்றுப் புற நீர்நிலைகளுக்கும் நிலத்துக்கு பாதிப்பு இல்லாத தூய நீராக வெளி விட வேண்டும். அதிலும் எஞ்சும் கழிவுகளை பாதுகாப்பாக கிடங்குகளில் வைத்து மக்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராமல் காக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?

தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகளை சுத்திகரிக்கவும், பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் செய்வதற்கு பணம் செலவாகும் என்று அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை ‘கவனித்து’ விட்டு ஆற்றிலும், கால்வாயிலும் திறந்து விட்டதால் அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர், காற்று, நிலம் மாசுபட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. விசவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது அன்றாட செய்தியாகியிருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களை இரசாயன பதப்படுத்தும் சூழலில் கொத்தடிமை போல பலமணி நேரம் வேலை வாங்கி அட்டையை போல ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள், முதலாளிகள்.
இதன் மூலம் தயாரித்த தோல் பொருட்களை ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கு விற்று ஈட்டிய லாபத்தில் காரில் பறக்கிறார்கள், தொழிற்சாலையில் இருந்து தொலைதூரத்தில் வீடு/பங்களா கட்டிக் கொள்கிறார்கள்.

இவர்கள் விதிமுறைகளை மீறி கழிவுநீரை வெளியேற்றியதால் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் சுமார் 10 கி.மீ சுற்று வட்டாரத்தில் தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு மாசுபட்டுள்ளது அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் கூட மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தோல் தொழிற்சாலை கழிவு நீர் ( உதாரணம் காட்ட)

அங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மையும் வேதிபொருட்களின் அளவும் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அந்தத் தண்ணீரை குடிப்பதாலும், அப்பகுதியில் வாழ்வதாலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு அப்பாவி மக்கள் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாய் நீரையும், நிலத்தையும், காற்றையும் பயன்படுத்தி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தவர்கள் இப்போது நீரையும் நிலத்தையும் காற்றையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றியதுதான் இந்த முதலாளிகளின் ‘தூய்மை இந்தியா’ கைங்கரியம்.

அந்தத் தொழிற்சாலைகள் எத்தனை பேருக்கு வேலை தந்திருக்கும் 100 லிருந்து 10,000பேருக்கு. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை இழந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இந்த உதாரணத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம், மோடியின் “தூய்மை இந்தியா” என்பது எவ்வளவு பெரிய மோசடி என்று. அபாயமான கழிவுகளை கொண்டு குவிக்கும் முதலாளிகளுக்கு எல்லா சலுகைகளையும் கொடுத்து விட்டு நாட்டின் மாசுபட்ட சூழலுக்கு உழைக்கும் மக்கள் மீது குற்றம் சாட்டுவதுதான் “தூய்மை இந்தியா”வின் நோக்கம்.

வேலைவாய்ப்பு தருகிறேன் என்று முதலீடு செய்யும் முதலாளிகள் முழுக்க லாபத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யும் வெறிநாயை போல மாறுகிறார்கள். அவர்கள் வெறிநாயாய் மக்களையும் இயற்கையும் அழிப்பதற்கு இதே “தூய்மை இந்தியா” மோடி அரசுதான் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கிறது.

இதே போன்ற சூழ்நிலைதான் திருப்பூரிலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலை கொண்டுவந்து வேலை வாய்ப்பை பெருக்குகிறேன் என்று கார்ப்பரேட்/பா.ஜ.க ஆட்சி நீடிக்குமானால் ஒட்டுமொத்த இந்தியாவையும் மாசுபடுத்தி, கலவரப்படுத்தி, அந்த அம்சங்களில் உலகத்தரத்தில் உயர்த்தி பலகோடி மக்களை கொன்று குவிப்பது உறுதி.

நமது நகரம் பட்டியலில் வரவில்லையே என்று பார்க்காதீர்கள். இதேநிலை நீடித்தால் விரைவில் அதிகமான மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் அனைத்து நகரங்களும் வந்துவிடும் அப்போது முதலாளிகள் வேறு இடத்திற்கு கம்பெனி கட்டுவதற்கு சென்று விடுவார்கள். பணமுள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும் பாதுகாப்பாக தப்பித்துக் கொள்வார்கள்.

மாசுபட்ட நிலத்திலும் நீரையும் காற்றையும் அனுபவித்து நோய்வாய்ப்பட்டு மக்கள் செத்து மடிவார்கள்.

இதை புரிந்துகொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவாய் இருக்கும் இந்த அரசையும் அடக்க நாம் ஒன்றிணைந்து போராடி வீழ்த்த வேண்டும்.

– சுகேந்திரன்

Reference

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-swacch-bharat-vaniyambadi-refutes/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்

"நரம்பு மண்டல நோய் இருப்பதாக தெரிய வந்த போதே எனது வாழ்வுக் காலம் முடிந்து விட்டதாக நினைத்தேன். அதற்கு பிறகு கிடைத்த ஒவ்வொரு  நாளும் போனஸ்தான்" என்று...

சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

"தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு"

Close